சினிமா
Published:Updated:

“அந்த கேங்ஸ்டர் நானேதான்!”

ராம் கோபால் வர்மா
பிரீமியம் ஸ்டோரி
News
ராம் கோபால் வர்மா

நான் யாரையும் அப்யூஸ் பண்ணியதில்லை. சினிமா ஆட்கள் யாரையாவது டீஸ் செய்திருப்பேன்.

எதைச் செய்தாலும் தடாலடி...அதுதான் ராம்கோபால் வர்மாவின் அதிரடி ஸ்டைல்! இந்தியா முழுவதும் அறிந்த நம்பர் 1 ‘கல்ட்’ இயக்குநர். அவரிடம் பேச சில கேள்விகள் என்னிடம் இருந்தன. அவருக்கே உரிய ஸ்டைலில் அதற்கான பதில்களும் அவர் வசமிருந்தன.

‘ஒவ்வொருமுறையும் ராம் கோபால் வர்மாவைத் திட்ட ஒரு காரணத்தை அவரே உருவாக்குவார். இதுக்கே இப்படின்னா அடுத்து இன்னும் அதிகமா திட்டணுமே என எல்லோரையும் குழப்புவதைப்போல அடுத்து ஒரு சம்பவம் பண்ணுவார்’ என்று உங்களைப் பற்றிச் சொல்வார்கள். எங்கு கற்றுக்கொண்டீர்கள் இந்த வித்தையை?

“தமிழ்ல அராத்துன்னு சொல்வாங்க இல்லையா? நீங்க மனசுல நினைக்கிறதை நான் பேசிடுறேன். ஒரு மாடலிடம் அவங்க அழகை வர்ணித்து என்னால் ஒளிவுமறைவின்றிப் பேசமுடிகிறது. கலாசாரம் அது இதுன்னு போலியா போட்டுக்கிட்ட வேலிகள் இல்லாம ஓப்பனா பேசணும்னு நினைக்கிறேன். எல்லாத்தையும்விட, நான் நடிக்கல. எனக்குப் பிடிச்ச மாதிரி வாழ்றேன். என் படங்களில் வரும் கேங்ஸ்டர் நானேதான்!”

“அந்த கேங்ஸ்டர் நானேதான்!”
“அந்த கேங்ஸ்டர் நானேதான்!”

இருந்தாலும் நடிகைகளோடு பொதுவெளியில் ரொமான்ஸ் பண்ணுவதும் பப்களில் குடிப்பதும் கொஞ்சம் ஓவர் இல்லையா?

“செக்ஸ் பற்றியும் நான் பார்க்கும் பார்ன் பற்றியும் பொதுவெளியில் பேசுவதை இதில் ஏன் விட்டுவிட்டீர்கள்? நான் முன்பே சொன்னதுபோல் என் வாழ்க்கையை நான் என் இஷ்டம்போல் வாழ்கிறேன். நான் யாரையும் அப்யூஸ் பண்ணியதில்லை. சினிமா ஆட்கள் யாரையாவது டீஸ் செய்திருப்பேன். ஆனால், என் கருத்தில் என்றும் பிறழ்ந்து பேசியதே இல்லை. ‘ஆர்ஜிவின்னா ரொம்ப உண்மையா நேர்மையா பேசக்கூடியவர்’னு என் ரசிகர்களுக்குத் தெரியும். என்னைத் திட்டுறவங்களைக் கவனிச்சீங்கன்னா உள்ளூர என் மேல பொறாமை கொண்டவங்களாத்தான் இருப்பாங்க. லேட்டஸ்ட்டா நான் ஒரு பப்பில் ஆட்டம்போட்டு ஒரு நடிகைக்கு முத்தமிடும் போட்டோவை நானே சோஷியல் மீடியாவில் போட்டு ஹேட்டர்ஸுக்கு ஒரு கோரிக்கை வைத்தேன். சிறப்பான கமென்ட் போடுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று. அப்படி வெறுப்பேற்றினால் என்மேல் கோபம் வரத்தானே செய்யும்? அடுத்தமுறை அதுக்கா திட்டினோம்னு நினைப்பாங்க பாருங்க..! என்னைப் பொறுத்தவரை மகிழ்ச்சியைக் கண்டடைய தனி வழி எதுவும் இல்லை. மகிழ்ச்சியே ஒரு வழிதான்! நாம மத்தவங்களுக்காக வாழ ஆரம்பிக்கிறப்போ நம்ம வாழ்க்கையில மகிழ்ச்சி விலகி ஓட ஆரம்பிச்சிரும். நான் மகிழ்ச்சியா வாழறேன்!”

“அந்த கேங்ஸ்டர் நானேதான்!”
“அந்த கேங்ஸ்டர் நானேதான்!”

உங்களுடைய ட்வீட்டுகள் சமயங்களில் சர்ச்சையைக் கிளப்பிவிடுகின்றனவே. சிலர் உங்களை கமென்ட்டுகளில் திட்டுவதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

“என்னுடைய கருத்தை இந்தச் சமூகத்தோடு பகிர்ந்துகொள்ள எனக்கு சோஷியல் மீடியா பயன்படுகிறது. நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுக் கடந்துவிடுவேன். யார் என்ன ரியாக்ட் செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதில்லை. அரிதினும் அரிதாக என் உதவியாளர் பார்த்துவிட்டு சில கமென்ட்டுகள் காட்டுவார். அதற்குப் பதில் சொல்வதுண்டு!”

நீங்கள் விவாகரத்தானவர் என்பதாலேயே 30 செகண்டில் போடும் ட்வீட்டில் ஆரம்பித்து பலமணி நேர விவாத நிகழ்ச்சி வரை திருமண பந்தத்துக்கு எதிராகப் பேசுவதெல்லாம் நியாயமா?

“நான் ஒளிவுமறைவின்றிப் பேசுகிறேன். அதையெல்லாம் தாண்டி உண்மையை எப்போது வேண்டுமானாலும் அனுபவத்திலிருந்து பேசலாம் அல்லவா? காதலைக் கொல்லும் சிறந்தவழி திருமணம். திருமணம் என்ற கான்செப்டே இங்கு ஆணுக்கோ பெண்ணுக்கோ விலங்காக மாறிவிடுகிறது. மேற்கத்திய நாடுகளில் இருக்கும் சுதந்திரம் இங்கு திருமண உறவில் இருப்பதில்லை. இந்தியாவில் சக்சஸ்ஃபுல் தம்பதிகள் என்று யாரைக் காட்டினாலும் அவர்களைத் தேர்ந்த நடிகர்கள் என்றுதான் சொல்வேன். அவர்களையும் காயப்படுத்தி, சுற்றி உள்ளவர்களையும் காயப்படுத்தி வாழ்வதைவிட, பிரிந்து அவரவர் வழியில் தனியாக வாழ்வது சமூகத்துக்கும் நல்லது என்பதே என் நிலைப்பாடு. அதனால்தான் பிரபலங்கள் விவாகரத்து அறிவிப்பு வரும்போது அதைப் பாராட்டுகிறேன். டைவர்ஸை நார்மலைஸ் செய்யும் இயக்கத்தின் பிராண்ட் அம்பாஸிடர்கள் அவர்கள். என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பதே தேவையற்றது. இந்தக் கருத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டியதில்லை. நான் என்னை மையப்படுத்தியே இதைச் சொல்கிறேன்!”

இப்போது வரும் ராம் கோபால் வர்மா படங்கள் முன்பு வந்த அவரின் படங்கள்போல் சிறப்பாக இல்லை என்று வரும் விமர்சனங்கள் பற்றி...

“யதார்த்த கேங்ஸ்டர் படங்களை ஆரம்பித்து வைத்து நிறைய வெரைட்டிகள் அதில் கொடுத்துவிட்டேன். த்ரில்லரிலும் கிளாமர் வரை எல்லாம் முயற்சி செய்தாகிவிட்டது. 1989-ல் ‘சிவா’-வில் (தமிழில் `உதயம்’) ஆரம்பித்து டி.வி, வெள்ளித்திரை என 87 படங்கள் என் கைவண்ணத்தில் வந்துவிட்டன. தெற்கிலிருந்து கிளம்பிப் போய் பாலிவுட்டிலும் ஹிட்கள் கொடுத்தாகிவிட்டது. இனி வித்தியாசமாய் முயற்சி செய்ய வேண்டிய காலகட்டத்திற்கு வந்துவிட்டேன். கொரோனாவுக்குப் பிறகு அடுத்த ரவுண்டுக்குத் தயாராகிவிட்டேன். ‘கொண்டா’ படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. முன்னாள் நக்சல்களாக இருந்து பிறகு அரசியலில் கால் பதித்த கொண்டா முரளி - கொண்டா சுரேகா தம்பதியின் கதைதான் அது. வாரங்கலில் தங்கி நீண்ட கள ஆய்வுக்குப்பின் ‘கொண்டா’வைப் படமாக்கியிருக்கிறேன். ஒரு வித்தியாசமான அனுபவமாக அந்தப் படம் இருக்கும்!”

“அந்த கேங்ஸ்டர் நானேதான்!”
“அந்த கேங்ஸ்டர் நானேதான்!”
“அந்த கேங்ஸ்டர் நானேதான்!”

அதென்ன பவன் கல்யாணோடு மட்டும் அப்படி ஒரு வம்பு?

“என்னுடைய ஆர்ஜிவி வேர்ல்டு சேனலுக்காக சற்றே பெரிய குறும்படமாக ‘பவர் ஸ்டார்’ படத்தை இயக்கி நடித்திருந்தேன். அவரைப்போல ஒருவரை வைத்து ஸ்பூப் செய்தது அவர் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. உண்மையில் எனக்கு பவன் கல்யாணை ரொம்பப் பிடிக்கும். அவரின் சினிமா பிடிக்கும்; ஆனால், அவரது அரசியல் என்ட்ரிதான் பிடிக்கவில்லை. அதைக் கிண்டல் செய்ததற்கு அலுவலகத்தைச் சிலர் தாக்கினார்கள். கொரோனா சமயத்தில் மருத்துவமனை போட்டோவை ட்விட்டரில் போட்டிருந்தார். நான் ‘ஆர்ட் டிபார்ட்மென்ட் சரியா வேலை செய்யலை’ என்ற டோனில் கலாய்த்திருந்தேன். அதற்கு என்னை ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். உண்மையில் நான் அதிக சம்பளம் வாங்கும் எல்லா ஹீரோக்களையுமே பொதுவெளியில் கலாய்க்கவே செய்கிறேன். நடிகர்களுடைய சம்பளத்தைக் குறைக்காமல் தியேட்டர் டிக்கெட் விலையைக் குறைப்பதெல்லாம் அரசின் ஏமாற்றுவேலை என்பேன்!”

அந்த தைரியம்தான் ராம்கோபால் வர்மா!