தொடர்கள்
சினிமா
Published:Updated:

“அன்புதான் வன்முறைக்கான ஊன்றுகோல்!”

மைக்கேல் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
மைக்கேல் படத்தில்...

என் படங்களில் ஹீரோயின் கேரக்டர் ரொம்ப உயிர்ப்போட இருக்கும். எனக்கு அழகு என்பது subjective தான். நீங்கள் நன்றாக கதாபாத்திரத்தை ஏற்று நடித்தால் நீங்கள் அழகுதான்.

‘`இந்த உலகத்தில் இரண்டு வகையான மனுஷங்க இருக்காங்க. நீச்சல் தெரியாதவனை தண்ணீரில் தள்ளிவிட்டுச் சிரிக்கிறவங்க ஒரு வகை. இன்னொரு வகை, நடக்கப் பழகினதும் தானே தண்ணீரில் விழுந்து நீச்சல் பழகுறவங்க. இதில் நம்ம ‘மைக்கேல்’ இரண்டாவது வகை. அவன் இந்த உலகத்தைப் பார்த்து பயப்படுகிறவனே இல்லை. பயமற்றவனே ‘மைக்கேல்.’

மனித உணர்வுகளை ஒவ்வொன்றாக மையப்படுத்தி படம் எடுக்கிறது எனக்குப் பிடிக்கும். அப்படித்தான் முதல் படத்தில் மனித மனதின் வக்கிரங்களைச் சொன்னேன். அடுத்து காதலில் உடமையாக்குதல் என்கிற விஷயத்தைக் கையாண்டேன். இந்தப் படம் பழி உணர்ச்சியைப் பத்திப் பேசுது. பழி உணர்ச்சி மனித குணங்களில் முதன்மையானது. ஜி.நாகராஜன் சொன்னது மாதிரி, மனிதன் என்பவன் மகத்தான சல்லிப் பயல். அவனுக்குப் பழி வாங்குவதில் சக்திக்கேற்ப ஒரு குரூரம், சந்தோஷம் இருக்கத்தான் செய்யுது. காலையில் ஒருத்தருக்கு வணக்கம் சொல்றேன். பதில் வணக்கம் சொல்லாமல் போறவருக்கு அடுத்த நாள் நாம் வணக்கம் சொல்வதில்லை. ஒருத்தருக்கு போன் பண்றேன். அவர் எடுக்கவே இல்லை. மறுபடியும் அவரே போன் பண்ணுனா, எடுக்கக் காலம் தாழ்த்துறோம். அந்த நுணுக்கத்திலிருந்து மனிதன் மனசு ஆரம்பிக்குது’’ - தெளிவாக பேசுகிறார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி. நம்பிக்கையூட்டும் இளம் இயக்குநர்.

“அன்புதான் வன்முறைக்கான ஊன்றுகோல்!”
“அன்புதான் வன்முறைக்கான ஊன்றுகோல்!”

``இந்த ‘மைக்கேல்’ எப்படி இருப்பான்?’’

‘‘ `நீ மன்னித்தால் கடவுள் ஆவாய்’ன்னு சொன்னால், ‘நான் மனுஷனாகவே இருந்துட்டுப்போறேன்’னு சொல்ற ஆள் மைக்கேல். முழுநீள நகைச்சுவைப் படம், முழுநீள குடும்பச் சித்திரம் என்று சொல்வது மாதிரி இது முழுநீள சண்டைப் படம். வெறும் ஆக்‌ஷன் மட்டுமே கிடையாது. சண்டைக்கான காரணங்கள் எல்லாமே ஒரு எமோஷனில் பின்னியிருக்கு. அன்புதான் வன்முறைக்கான ஊன்றுகோல். ஒருவர்மீது வைக்கும் மிகப்பெரிய அன்புதான் இன்னொருவரைப் பழி வாங்குவதற்கான வன்முறையாக மாறுது. இல்லைன்னா ஒருத்தர்மீது பழிவாங்குவதற்கு, அதற்கு முன்பு அவர்மீது வைத்த அன்புதான் காரணமாகுது. அன்பின் ஆதார குணங்களில் இருந்து வன்முறையைச் சொல்லும் படம்தான் ‘மைக்கேல்.’ ரத்தம், வெட்டு, குத்துக்கு பயப்படுகிறோம். மிருகத்தின் கண்களிலிருந்து பார்த்தால் அதற்கு சலிக்காதது ரத்தம்தான். முதல் தடவை பார்க்கிற ரத்தம் மட்டுமே பயம் கொடுக்குது. அதற்குப் பிறகு அதுவே பழகிப் போய் அதைத் தேடுது. மனிதன் மிருகமாக மாறுவதற்கான இடத்திற்குப் போவதைச் சொல்வது இந்தக் கதை.’’

“அன்புதான் வன்முறைக்கான ஊன்றுகோல்!”
“அன்புதான் வன்முறைக்கான ஊன்றுகோல்!”

``ஹீரோ சந்தீப் கிஷன் தோற்றமே அதிரடியாக இருக்கு!’’

‘‘நானும் சந்தீப்பும் லாக்டௌன் காலத்தில் பேசிட்டிருப்போம். என்னோட ‘இஸ்பேட் ராஜா...’வுக்கு அவர் பெரிய ரசிகர். திடீரென்று ‘ஏன் பிரதர், நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணலாமே’ன்னு கேட்டார். ‘நீங்க அடுத்த படம் என்னவா பண்ண விரும்புறீங்க’ன்னு கேட்டேன். ‘ஆக்‌ஷன்’னு சொன்னார் சந்தீப். அப்படி ஆரம்பித்ததுதான் இந்தப் படம். இந்தப் படமே அதற்கான நபர்களைத் தேடித் தேடிப் பிடிச்சது. அதற்கடுத்த முக்கியமான இடத்திற்கு கௌதம் மேனன் வர்றார். அப்புறமும் ஒரு முக்கியமான கேரக்டர் தேவைப்படுது. அந்த இடத்திற்கு ஒருத்தர் வந்தால் நம்மை அறியாமல் ‘ஆஹா’ன்னு சொல்லுவோம்ல, அப்படிப்பட்ட ஒருத்தர் தேவை. யுனிவர்சலாக ஒருத்தர் அப்படி வேணும். நான் சொன்னால் மறுக்காமல் நடிக்கக் கூடிய ‘விஜய் சேதுபதி’தான். அவர் 25 நிமிஷம் படத்தில் இருந்து அதகளம் பண்ணுவார். சந்தீப் கிஷன்கிட்ட, ‘நீங்க புரூஸ்லி மாதிரி வேணும்’னு சொன்னேன். ஆறு மாதத்தில் புரூஸ்லி மாதிரியே வந்தார். மலையிலிருந்து தூக்கிப் போடுவோம், தண்ணியில மூச்சடக்கி உட்கார்ந்திருக்கணும்னு, கரணம் தப்பினால் மரணம் என்ற மனநிலையில் தயாராகி வரணும். அதற்கும் தயாராகி வந்தார். அப்படியே இருந்தார்.

என் படங்களில் ஹீரோயின் கேரக்டர் ரொம்ப உயிர்ப்போட இருக்கும். எனக்கு அழகு என்பது subjective தான். நீங்கள் நன்றாக கதாபாத்திரத்தை ஏற்று நடித்தால் நீங்கள் அழகுதான். நீங்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் கதாபாத்திரத்தை சரியாகச் செய்யவில்லை என்றால் நீங்கள் அழகா தெரிய மாட்டீங்க. இதில் திவ்யான்கா கௌசிக் அருமையாக நடிச்சார். அவங்களுக்கு இதில் முக்கியமான இடம் இருக்கு.’’

ரஞ்சித் ஜெயக்கொடி
ரஞ்சித் ஜெயக்கொடி

``சந்தீப், கௌதம், விஜய் சேதுபதின்னு கூட்டணியே பலமா இருக்கே!’’

‘‘கௌதம் சாருக்கு இயல்பான திரைத் தோற்றம் இருக்கு. நாம் சொல்வதில் ஒரு கோடுகூடத் தாண்ட மாட்டார். ஒரு டைரக்டரா கடந்த 20 வருஷமாக சினிமாவுக்குள்ளே இருக்கார். நானோ இப்போதான் நாலாவது படம் பண்றேன். அவ்வளவு தோளோடு தோள் நின்று நண்பனாகப் பழகுகிறார். மூணு காலகட்டங்களில் நடக்கிற கதை. அதையும் ரசிச்சு தானே பண்றதாகச் சொன்னதோடு மட்டுமல்லாமல், எடுத்துச் செய்கிறார். ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் காசி இன்னொரு ஹீரோ மாதிரி. சண்டைக் காட்சிகள் வெகுவாகப் பேசப்படும். ரவிவர்மனின் அசோசியேட் கிரண் கௌஷிக்தான் கேமரா மேன். என்னோட நண்பன் சாம். சி.எஸ் இப்ப இந்தி வரைக்கும் போய்விட்டார். எடுத்த படத்தைத் தூக்கி அவர் கையில் கொடுத்திடுவேன். அப்படியே அழகுபடுத்தித் திருப்பித் தருவார் என்று நம்புறேன். சேதுபதிக்கு இணையாக வரலட்சுமி சரத்குமார் வர்றாங்க. அவங்களும் ஸ்கோர் பண்ண இடங்கள் இருக்கு.’’

“அன்புதான் வன்முறைக்கான ஊன்றுகோல்!”

``இலக்கியவாதியாகவும் இருக்கிறீர்கள்?’’

‘‘சின்ன வயதிலிருந்தே வாசிப்புப் பழக்கம் வந்துடுச்சு. ஒரு விஷயத்தை அணுக வாழ்க்கையில் பல கோணங்கள் இருக்கு. அதைத் தேர்ந்தெடுக்க எனக்கு வாசிப்புதான் உதவுது. சுயநலம் குறைஞ்சிருக்கு. அறம் சார்ந்து இயங்க எனக்கு வாசிப்பதுதான் பயன்படுது. சினிமா எடுக்கிறதுக்கு இல்லை, வாழ்க்கைக்கே! எனக்குப் படிக்கிறதுதான் பிரதானம். சினிமாவில் கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் ஆழத்திற்குப் போகவும் உதவுது. ராம் சார்கிட்டேதான் நான் உதவியாளராக இருந்தேன். அந்தப் பள்ளியில் படித்தாலே தானாக வாசிப்பு வந்திடும். எழுதவும் கத்துக்க முடிஞ்சது. ‘இதை வாசிடா’ன்னு சொல்வதற்கு ஒரு குருவும் இருக்கணும். அப்படியும் எனக்கு அமைஞ்சது. எவ்வளவு வேலை இருந்தாலும் பத்துப் பக்கம் படிச்சிட்டுப் படுத்தால்தான் எனக்கு அன்னைக்கு நாள் நல்லபடியாக முடிஞ்சது மாதிரி தெரியும்.’’