Published:Updated:

“ரெக்கை முளைச்சு பறக்கற பெண்களுக்கு பிரச்னை வருது!”

றெக்கை முளைத்தேன் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
றெக்கை முளைத்தேன் படத்தில்...

இதைக் குடும்பக் கதை, இளைஞர்களுக்கான படம், க்ரைம் த்ரில்லர்னு எல்லாமாவும் சொல்லலாம். ஆனா, வழக்கமான த்ரில்லர் படமா இருக்காது

சசிகுமாரின் ‘சுந்தர பாண்டியன்', ‘கொம்புவச்ச சிங்கம்டா' உதயநிதியின் ‘இது கதிர்வேலன் காதல்' படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன், இப்போது தன் கவனத்தை ஹீரோயின் சென்ட்ரிக் பக்கம் திருப்பியிருக்கிறார். தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் ‘றெக்கை முளைத்தேன்' என்ற படத்தைத் தயாரித்து, இயக்கியிருக்கிறார்.

றெக்கை முளைத்தேன் படத்தில்...
றெக்கை முளைத்தேன் படத்தில்...

``இதுவரை ஹீரோக்களை இயக்கின நீங்க, இப்ப கதாநாயகிக்கான படம் பண்ணியிருக்கறது ஏன்?’’

‘‘நாலு படங்கள் இயக்கின அனுபவத்துல, அடுத்து ஹீரோயின் சென்ட்ரிக்கும் பண்ணிடலாம்னு தோணுச்சு. ஒரு நல்ல கதையை ஒரு ஹீரோவுக்காகப் பண்ணுறப்ப, அந்தக் கதாநாயகனுக்கு ஏற்ப கதையை வளைக்க வேண்டியது வரும். பல இடங்கள்ல காம்ப்ரமைஸ் ஆக வேண்டியிருக்கும். அதனாலேயே கதாநாயகியை மையமாக் கொண்ட கதை பண்ணலாம்னு தோணுச்சு. வேறொரு தயாரிப்பாளர்கிட்ட போனா, நினைச்ச மாதிரி எடுக்க முடியாமப்போயிடும்னு தோணுச்சு. அதனால நானே தயாரிச்சிருக்கேன். நான் தயாரிப்பாளர் ஆகக் காரணம், சசிகுமார் சார். ‘நீங்க தயாரிப்பு நிறுவனம் தொடங்குங்க'ன்னு என்னை ஊக்குவிச்சதோடு ‘கொம்புவச்ச சிங்கம்டா' படத்தின் லைன் புரொட்யூசராகவும் என்னை உயர்த்தினார். என் அக்கா பங்கஜம் நினைவாக அவரது பெயரை என் பட நிறுவனத்துக்கு வச்சிருக்கேன்.''

``இதுவரை நீங்க இயக்கினது எல்லாமே குடும்பக் கதைகள்... இந்தப் படம் எப்படி?’’

‘‘இதைக் குடும்பக் கதை, இளைஞர்களுக்கான படம், க்ரைம் த்ரில்லர்னு எல்லாமாவும் சொல்லலாம். ஆனா, வழக்கமான த்ரில்லர் படமா இருக்காது; எல்லாருக்குமே எளிதில் கனெக்ட் ஆகக்கூடிய படமா பண்ணியிருக்கேன். பொதுவா பன்னிரண்டாவது வகுப்பு படிக்கும் வரையிலுமே பசங்க, அப்பா- அம்மா பார்வையிலேயே வளருவாங்க. அதிலும் குறிப்பா, பெண்கள். வீட்டுல அவங்கள தனியா எங்கேயும் அனுப்பி வைக்க மாட்டாங்க. சின்ன விஷயங்களுக்குக்கூட அக்கறை எடுத்து கவனிப்பாங்க. சிம்பிளா சொன்னா, ரொம்பவும் பாதுகாப்பாகவே வளர்த்திருப்பாங்க.

அந்தப் பொண்ணுங்க கல்லூரி போகும்போதுதான் புது உலகத்துக்குள் அடியெடுத்து வைப்பாங்க. பெரிய சுதந்திரம் கிடைக்கும். தனியா போய் வர முடியும், போன் பேசமுடியும், சீருடையில் இருந்து விடுதலை ஆகி, நினைச்ச ஆடைகளை அணிய முடியும். இப்படி றெக்கை முளைச்சுப் பறக்கற வயசு கல்லூரி வயசு. அப்படி சுதந்திரமாக பறக்க நினைக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னையையும், அவங்களுக்கு நேரும் சிக்கலையும் சொல்லியிருக்கேன். தன்யா ரவிச்சந்திரன் இதுல க்ரைம் பிரிவு போலீஸ் அதிகாரியா வர்றார். அவங்க தவிர, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன், ‘ஆடுகளம்' நரேன், போஸ் வெங்கட்னு தெரிந்த முகங்களோடு சுவாதீஷ், பிரபா, மெர்லின், நிதிஷான்னு நாலு புதுமுகங்களையும் அறிமுகப்படுத்துறேன். ‘கிடா' படத்துக்கு மியூசிக் பண்ணின தீசன், இசையமைச்சிருக்கார். என் படங்கள்ல தொடர்ந்து இருக்கற டான் போஸ்கோ, எடிட்டிங் பண்ணுறார். ‘மெட்ராஸ்', ‘காலா' படங்களின் ஒளிப்பதிவாளர் முரளி சார் உதவியாளர் கணேஷ் சந்தானத்தை ஒளிப்பதிவாளரா அறிமுகப்படுத்துறேன்.''

``இந்தக் கதைக்கு தன்யா பொருத்தமா இருப்பாங்கன்னு எப்படித் தோணுச்சு?’’

‘‘விஜய்சேதுபதியோட நடிச்ச ‘கருப்பன்'ல தன்யாவோட கதாபாத்திரம், ரொம்ப பொருத்தமானதாக அமைஞ்சிருந்தது. மெச்சூரிட்டியா நடிச்சிருந்தாங்க. தமிழும் நல்லா பேசுறாங்க. எல்லார் மனசிலும் ஒரு இமேஜுக்குள் இருக்கற ஒருத்தரை, வேறொரு கோணத்தில் கொண்டு வந்து, அதிலும் வெற்றியடைய வைக்கறதுதான் படைப்பாளியின் வெற்றி. அப்படி தன்யாவை போலீஸ் அதிகாரியா நடிக்க வச்சிருக்கேன். அவங்களும் கதாபாத்திரத்தை உள்வாங்கி அழகா நடிச்சிருக்காங்க.''

``இயக்குநராக இருந்து தயாரிப்பாளராகவும் ஆகிட்டீங்க... ஒரே சமயத்துல ரெண்டு பொறுப்பு... எப்படி சமாளிச்சீங்க?’’

‘‘இயக்குநராக ஐடியாவை யோசிச்சா போதும். ஆனா, அந்த ஐடியாவின் ஒவ்வொரு கட்டத்தையும் தயாரிப்பாளராகவும் நகர்த்திக் கொண்டு போறது பெரிய சுமைதான். நினைச்ச காட்சிகளை எடுக்கணும்னுதான் ஹீரோயின் சப்ஜெட் கதை பண்ணுறோம். செலவுகள் அதிகமாகுதுன்னு சமரசமாகாமலும் பண்ணியாகணும். இப்படி ரெண்டு குதிரையில் பயணிக்க வேண்டியதாகிடுச்சு. அதேசமயத்துல, நானே தயாரிப்பாளர் என்பதால முழுச் சுதந்திரத்தோடு வேலை செய்த திருப்தியும் இருக்கு.''