தொடர்கள்
சினிமா
Published:Updated:

“ஜி.வி-க்கு ‘வெற்றித் தமிழன்’னு பெயர் வைக்கப் போறேன்!”

இடி முழக்கம் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
இடி முழக்கம் படத்தில்...

ஒவ்வொருத்தர் வாழ்விலும் 20 வயதிலிருந்து 30 வயதிற்குள்ளே தான் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிற விஷயங்கள் நடக்கும். ஏதோ ஒரு ஆசை இருக்கும். எதையோ ஒரு தப்பைப் பண்ணச் சொல்லும். மனசு கிடந்து அல்லாடும்.

`` `இடி முழக்கம்' இளைஞர்களுக்கான படம். அவர்களுக்கு வேண்டிய உரையாடல்கள் இதிலிருக்கு! 2K கிட்ஸ்னு சொல்றாங்களே, அவர்களை இதில் கவனித்துப் பதிவு செய்திருக்கேன். வாழ்க்கையே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கும், புரிந்து கொள்ளாததற்கும் இடையில் போய்க்கிட்டிருக்கு. இதுக்குள்ளேதான் வஞ்சம், நட்பு, காதல், உறவு எல்லாமே வருது. புரிந்துகொள்ளாதபோது ஆத்திரமாக, துரோகமாக, வஞ்சகமாக குணக்கேடுகள் பெருகுது. அப்படி ஒரு குடும்பத்தில் சதியும் விதியும் புகுந்து ஆடுகிற ஊழிக் காத்துதான் ‘இடி முழக்கம்.' என் படம் பார்த்துவிட்டுப் போற ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கை மேல் நம்பிக்கை வரும். சக மனிதர்கள் மேலே இன்னும் அன்பு கூடும். ‘இடிமுழக்கம்' மனிதர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதன் அனுபவம் பற்றியும் பேசும்'' - தீர்க்கமாகப் பேசுகிறார் இயக்குநர் சீனு ராமசாமி. மனித உணர்வுகளின் வாசம் காட்டுபவர்.

“ஜி.வி-க்கு ‘வெற்றித் தமிழன்’னு பெயர் வைக்கப் போறேன்!”

`` படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டுறவர் சீனு ராமசாமி... ‘இடிமுழக்கம்’ எப்படி வந்திருக்கு?”

‘‘எப்பவும் சரியான வடிவத்தை எட்டக்கூடிய எளிமையான திரைக்கதையைக் கண்டடைந்துவிட முடியுமா என நினைப்பேன். அதுதான் நிறைய மக்களைப்போய் அடையும். சில நல்ல விஷயங்களைச் சொல்ல முயற்சி எடுத்துக்கொள்கிறேன். என் ஒருவனால் திரைப்படத்துறையை மாற்றியமைத்துவிட முடியாது எனத் தெரியும். அதற்காக முயற்சியையே விட்டுவிட மனசு தயாராக இல்லை.

அதனால்தான் ‘இடி முழக்கம்’ மாதிரியான படங்களை எடுக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஆண் பெண் உறவு சிடுக்குகள் நிரம்பிப் போயிட்டு இருக்கு. உயிரைக் கொடுத்துப் பழகிட்டு, பெண் ஏதோ ஒரு காரணத்தால் விலகிப் போனால், ஆசிட் ஊத்திவிடுகிறான். பெண்களும் இவர்கள் வாழ்வுக்குத் தேவைப்படலைன்னா விபரீதமான முடிவுக்கு வர்றாங்க. இங்கே பேச்சுவார்த்தை பொய்யாகிவிட்டது. இது க்ரைம் த்ரில்லர் ட்ராமாதான். ஆனால் என் பாணியில் இப்படி முதல் தடவையாக எடுக்கிறேன். உலக சினிமா மொழியில் உள்ளூர் சினிமாவாக எடுத்திருக்கேன்.

ஒவ்வொருத்தர் வாழ்விலும் 20 வயதிலிருந்து 30 வயதிற்குள்ளே தான் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிற விஷயங்கள் நடக்கும். ஏதோ ஒரு ஆசை இருக்கும். எதையோ ஒரு தப்பைப் பண்ணச் சொல்லும். மனசு கிடந்து அல்லாடும். பெண்கள், வாழ்க்கை, பணம்னு நிறைய மாற்றங்கள் நடக்கிற காலம். நமக்கு என்ன முடிவு எடுக்கலாம்னு தெரியாது. எதைப் புரிஞ்சிக்கிறது, எப்படிப் புரிஞ்சிக்கிறதுன்னு தெரியாது. இளைஞர்களின் அப்படிப்பட்ட காலத்தை ‘இடிமுழக்க'த்தில் எடுத்து வச்சிருக்கேன். உதவி செய்யப் போய் துயரத்திற்கு ஆளாகிற ஒரு நல்லவனின் கதையாகவும் இதைப் பார்க்கலாம்.''

“ஜி.வி-க்கு ‘வெற்றித் தமிழன்’னு பெயர் வைக்கப் போறேன்!”
“ஜி.வி-க்கு ‘வெற்றித் தமிழன்’னு பெயர் வைக்கப் போறேன்!”

``உங்களோட முதல் தடவையாக ஹீரோவாக ஜி.வி பிரகாஷ்...’’

‘‘ரொம்ப நாளாவே படம் செய்யணும்னு பேசிக்கிட்டு இருக்கோம். எங்க இரண்டு பேருக்கும் பேரன்புப் பரிமாற்றம் ஒன்று எப்போதும் இருந்துக்கிட்டே இருக்கும். அவரை இப்போது பார்க்கிற படங்களில் பல இடங்களில் ரசிக்கிறேன். தயாரிப்பாளர்களின், இயக்குநர்களின் கஷ்டம் புரிந்தவர். படப்பிடிப்பு இடைவேளைகளில் கூட டியூன்தான் போட்டுட்டிருக்கார். சினிமா தவிர எதிலும் கவனம் சிதற விடுவதே கிடையாது. நாம் மனசில் ஒண்ணு வைத்திருப்போம். அதை எளிதில் நடித்துவிட்டுப் போய்விடுகிறார். அவருக்கு நடிப்பு நல்ல பழக்கமாகிக் கைவந்துவிட்டது.

மாணவப் பருவத்திற்கு எளிமையான ஹீரோவாகக்கூட அவரை நடிக்க வச்சிடலாம். இப்படி ஒரு ஹீரோ இப்போ எனக்கு கண்ணுக்கு எட்டின வரைக்கும் தெரியலை. படம் பார்த்துட்டு உதயநிதி எனக்கு போன் செய்து `ஜி.வி.பிரகாஷுக்கு தேசிய விருது கிடைக்கும்’ என்றார். விஜய்சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்'னு நான் பெயர் வச்சது நிலைச்சது. இப்ப ஜி.வி-க்கு ‘வெற்றித் தமிழன்'னு பெயர் வைக்கப்போறேன். ‘மாமனிதன்' படத்தில் காயத்ரி நடிச்சாங்க. இதில் ஒரு நர்ஸ் கேரக்டர் அவருக்கு! இதை விடவும் யாரும் பொருந்திப்போக முடியாதபடிக்கு அதில் வந்தார். பத்து வருடங்களுக்குப் பிறகு சரண்யா பொன்வண்ணன் என் படத்தில் நடிக்கிறார். எனக்கு ஈரம் இல்லாத கதைகளைத் தொடவே முடியாது. பெண்களைப் போற்றாமல் என்னால் படம் எடுக்கவே முடியாது. ரொம்ப நாள் கழித்து என்.ஆர்.ரகுநந்தனும் என்னோடு இணைகிறார். வைரமுத்து என் படங்களில் இருப்பது தொடரும் நிகழ்வு. என்னோடு முதல் தடவையாக ஒளிப்பதிவாளர் அசோக்ராஜ் இணைகிறார். தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் சினிமாவைப் புரிந்துகொண்டிருக்கிற இயல்பு என் மனசுக்கு நெருக்கமானது.''

“ஜி.வி-க்கு ‘வெற்றித் தமிழன்’னு பெயர் வைக்கப் போறேன்!”
“ஜி.வி-க்கு ‘வெற்றித் தமிழன்’னு பெயர் வைக்கப் போறேன்!”
“ஜி.வி-க்கு ‘வெற்றித் தமிழன்’னு பெயர் வைக்கப் போறேன்!”

``மறுபடியும் உங்களின் ‘இடம் பொருள் ஏவல்’ வெளிச்சம் காண்கிறதே!’’

‘‘ஆமாம். சந்தோஷமா இருக்கேன். எஸ்.ராமகிருஷ்ணனின் உயிர்ப்புள்ள கதை. மூன்று வகையான கதாபாத்திரங்கள். இந்த மூன்று பேரும் சங்கமமாகிற இடம்தான் இந்தப்படம். விஷ்ணுவும், சேதுபதியும் என் பிள்ளைகள். நான் கோடு கிழித்தால் தாண்ட மாட்டார்கள். ரெண்டு பேரும் நல்ல பெயர் வாங்கப் போட்டி போடுவார்கள். சில காட்சிகளில் யார் பெஸ்ட்னு கணிக்கவே முடியாது. யுவனும் வைரமுத்துவும் இணைந்த படம்வேற! இயக்குநர் லிங்குசாமிக்கு இந்தப் படம் வெளிவருவது நல்ல திருப்பமாக இருக்கும்.''

“ஜி.வி-க்கு ‘வெற்றித் தமிழன்’னு பெயர் வைக்கப் போறேன்!”

``15 வருட சினிமா அனுபவம் என்ன சொல்லித் தருது?’’

‘‘என்னை வெளிப்படுத்துவது ஒரு வேள்வி மாதிரி தொடர்ந்துகிட்டே இருக்கு. யோசித்துப் பார்த்தால் என்னை உழைப்புதான் இந்த இடத்திற்குத் தூக்கிட்டு வந்திருக்கு. எல்லாத்தையும் தாண்டி மனிதநேயம் மட்டும்தான் வாழ்க்கைன்னு இப்போ புரியுது. வாழ்க்கை எவ்வளவு மாறினாலும் அடிப்படைப் பண்புகள் மாறிடக் கூடாதுன்னு நினைக்கிறேன். சினிமாவில் மூன்றாம் தர உணர்வுகளுக்குத் தீனி போடாமல் இருப்பதை கௌரவமாக நினைக்கிறேன். எப்பவும் பூட்டாத பூட்டுக்குச் சாவி தேடி அலைகிறவன்தான் கலைஞன். அந்த வகையில் நான் நம்பிக்கையின் நாற்காலியில் உட்கார்ந்திருக்கேன்.''