
எங்க ரெண்டு பேருக்கும் பேரன்புப் பரிமாற்றம் ஒண்ணு எப்போதும் இருந்துக்கிட்டே இருக்கும்
விஜய் சேதுபதி அடுத்த பாய்ச்சலுக்கு ரெடி. `மாமனிதன்’ வெளியீட்டுக்குக் காத்திருக்கிறது. அலுவலகத்தில் ஜன்னலின் வழியே சிலுசிலுக்கும் மழை பார்த்தபடி பேசுகிறார் இயக்குநர் சீனு ராமசாமி. மனித உணர்வுகளின் வாசம் காட்டுபவர்.
“14 வருஷங்களில் 8 படங்கள்தான் செய்திருக்கிறேன். என் படம் பார்த்துவிட்டு வெளியே போற ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை மேல் நம்பிக்கை வரும். சக மனுஷங்க மேலே இன்னும் அன்பு கூடும். ‘மாமனிதன்’ அப்படிப்பட்டவன்” தீர்க்கமாகப் பேசுகிறார் சீனுராமசாமி.

“ ‘மாமனிதன்’ எப்படி இருப்பான்?”
“ ‘தர்மதுரை’ மாபெரும் வெற்றிக்குப் பிறகு சேது எனக்குத் தந்த பரிசு ‘மாமனிதன்.’ யுவனும் இளையராஜா சாரும் இணைந்து இசைக்கும் படத்தை நீங்கள் இயக்க வேண்டும் என்றதும் அதே நாளில் யுவனும் அழைத்து ‘நீங்கள் செய்து தரணும்’ என்றதும் மறு வார்த்தையே இல்லாமல் சரி என்றேன். பிறகு யுவன் படம் எடுக்கத் தாமதமானதால் நாம் அடுத்து ஏதாவது செய்யலாம் என்றபோது, சேது ‘நான் யுவனுக்கு வாக்குக் கொடுத்திருக்கேன்’ என்றார். காத்திருந்துதான் படப்பிடிப்புக்குப் போனேன். ‘மாமனிதன்’ பாதி கற்பனை, பாதி நிஜம். நிகழவேண்டிய அனுபவங்களும் நிகழக்கூடாத அனுபவங்களும் சேர்ந்திருக்கு. இதோட அடிநாதம் தியாகம். ராதாகிருஷ்ணன்னு ஒரு ஆட்டோ டிரைவரைப் பத்தின கதை. ஆண்டிபட்டி, தேனி ஏரியாவில் ஆரம்பிச்சு கேரளா, காசின்னு பயணம் போகுது. மனிதாபிமானத்தோட உச்சம்தான் இந்த ராதாகிருஷ்ணன். இப்பதான் எல்லாமே மாறிக்கிட்டு இருக்கு. மனுஷங்க ரோட்டில் அடிபட்டுக் கிடந்தா ‘ஐயோ’ன்னு சொல்ல ஆள் இல்லாமல்போச்சு. ஆனால் எல்லோரும் அப்படிக் கிடையாது. ஒரு நல்ல படம், பார்க்கிற அனுபவத்தோடு மட்டும் முடிஞ்சிடக் கூடாது. அது பார்த்தவரின் மனதில் தொடர்ந்து வரணும். அப்படி அமைஞ்சிருக்கு இந்த ‘மாமனிதன்.’ ”



“உங்க கண்டுபிடிப்பு சேதுபதி இதில் எப்படி வந்திருக்கார்?”
“எங்க ரெண்டு பேருக்கும் பேரன்புப் பரிமாற்றம் ஒண்ணு எப்போதும் இருந்துக்கிட்டே இருக்கும். அவரை நிறைய இடங்களில் இந்தப் படத்தில் ரசிச்சேன். அதற்கான எல்லா இடங்களும் இதில் இருக்கு. விஜய் சேதுபதிக்கு மூணு கெட்டப். திருமணத்திற்கு முந்திய பருவம், இரண்டு குழந்தைக்குத் தந்தை, 20 வயதுப் பையனுக்குத் தந்தைன்னு ஒரு பயணம் இருக்கு. நாம் மனதில் ஒண்ணு வச்சிருப்போம். பல அம்சங்களைச் சுருக்கி, தேர்ந்தெடுத்து நாலுவரி டயலாக் வெச்சுருப்போம். அந்த உரையாடலே சுண்டக்காய்ச்சின மாதிரி இருக்கும். அதையெல்லாம் தாண்டி சேதுபதி எக்ஸ்பிரஷன் அருமையா இருக்கு. வார்த்தைகளை ஒதுக்கி வச்சுட்டு, பாவங்களில் விளையாடுகிற பக்குவத்திற்கு அழகா வந்து சேர்ந்திட்டார். அந்த நான்கு வரிகூட தேவையில்லைன்னு ஆகிப்போச்சு. சில ஹீரோக்கள் கிட்டே நாம் எதிர்பார்ப்பது இருமடங்காகும். சில சமயம் பல மடங்காகும். ஆனால் இவர்கிட்டே எதிர்பார்க்காத ஒண்ணு வருது. காயத்ரி, ஷாஜி, கஞ்சா கருப்பு, குருசோமசுந்தரம்னு நல்ல கேரக்டர்களில் இருக்கிறார்கள். முன்னாடி ஒருகாலத்தில் இயக்குநர் பரதன் வீட்டு வாசலில் வாய்ப்புக்காகக் காத்திருப்பேன். அப்போ எப்போதாவது தென்படுகிற லலிதா அம்மாவும் இதில் நடிக்கிறது எனக்கான கௌரவம்.”
“இளையராஜாவும் யுவனும் சேர்ந்து பாடல்கள், இசை என்றால் இரட்டை சந்தோஷம்தானே?”
“படப்பிடிப்புக்குப் பாடல்கள் வேண்டும் என்றதும் அப்பாவுக்கு அட்வான்ஸ் தராமல் பாடல்கள் கிடைக்காது என்றார் யுவன். அப்பா என்பதற்காக இசையை இலவசமாகப் பெறாமல் அவருக்கு உரிய கௌரவத்துடன் மரியாதை செய்ய நினைக்கும் யுவனின் தொழில் தர்மத்தை நினைத்து வியப்பாகிவிட்டது. பின்பு பாடல்களே இல்லாமல் படப்பிடிப்பு சென்று நடனப்பாட்டு வரை பாடல் இன்றிப் பாட்டெடுத்து வந்ததும் முழுப் படத்தையும் பாடலுக்கான காட்சிகளுடன் தந்தேன். ‘பாடல் வரிகள் எல்லாம் அப்பாவே தேர்வு செய்வார்... புரிஞ்சுக்கோங்க’ என்றார் யுவன். நானும் மகிழ்ச்சி என்றேன். அதனால் இளையராஜா என்ற மேதையின் கம்போசிங் மற்றும் ரீரெக்கார்டிங் இரண்டையும் தரிசிக்க எனக்கு வாய்ப்பில்லை. பா.விஜய்க்குத் தொடர்புகொண்டு பாடல் வரிகள் பற்றிக் கேட்டேன். அவர் தயங்கித் தயங்கிப் பேசினார். இயக்குநர் அமீரிடம் எனது ஆவலைச் சொன்னபோது அவர்தான் மூன்று பாடல்களின் வரிகளை வரவழைத்துக் கொடுத்தார். திரும்ப எடிட்டிங்கில்தான் பாடல்கள் கேட்டேன். படத்திற்கான பாடல்கள்தான் மகிழ்ச்சி. யுவனின் பிறந்த நாளில் தம்பி கருணாகரனைப் பார்த்தேன். அவர் ‘அண்ணே, உங்க படத்துல ஒரு பாட்டு எழுதியிருக்கேன்’ என்றார். நானும் எந்தப் படம் என்றேன். ‘மாமனிதன்’ என்றார். நான் வாழ்த்துகள் சொல்லிவிட்டு பிறந்தநாள் விருந்தில் கலந்துகொண்டேன். அப்புறம் ஒரு போட்டோ பார்த்தேன். ராஜா அவர்களோடு வெற்றிமாறன், விஜய் சேதுபதி இருந்து கம்போசிஸிங்கில் கலந்துகொண்ட நிகழ்ச்சி. நம் சீடனுக்காவது அந்த வாய்ப்பு கிட்டியதே என மகிழ்ந்தேன்.”




“உங்கள் சீடர் சேதுபதியின் மீது சில விமர்சனங்கள் இணையவெளியில் வந்தன...”
“சேதுவுக்கு என் கருத்துகளை ஒரு கடிதம் போல எழுதி வாட்ஸ் அப்பில் அனுப்பினேன். அதை நான் மீடியாவில் சொல்ல விரும்பவில்லை. சந்திப்புகள் எல்லாவற்றையும் சொல்ல அவசியமில்லை. ‘தென்மேற்கு பருவக்காற்று’ ஏப்ரல் சுடுவெயிலில் படப்பிடிப்பு வேகத்திற்கு அவன் ஈடுகொடுத்து நடிக்கும்போது இவன் எரித்தாலும் உயிர்பெறும் பீனிக்ஸ் பறவை என்று உணர்ந்துவிட்டேன். அவன் நெஞ்சுறுதி அத்தகையது. எல்லா நடிகர்களும் இப்படி ஓரிடத்தைக் கடக்கிறார்கள். சேதுவிற்கு அறிவுரை தருவோர் கூட அக்கறையோடு சொல்வது சேது மீது அவர்கள் கொண்ட அன்பினால்தான். ரஜினி, விஜய் படங்கள் தவிர மற்ற படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் சேதுவின் தர்மசிந்தனை எனக்குத் தெரியும். ஆனால் வியாபாரம் தர்மம் பார்க்காது. தனக்கான தனிக் கதாநாயகனாக ஒரு பலமான வியாபார நம்பிக்கையைச் சேது வருங்காலங்களில் பலப்படுத்துவான். தொழிலில் உழைத்து தானம் செய்யலாம். தொழிலையே தானம் செய்யக்கூடாது. ஆடுகிறவன் கால்களை தானமாகத் தரலாமா? நடந்தது எல்லாமே பாடம்தான். நாம் எடுத்துக்கிற விதத்திலிருக்கு. சேதுவிற்கு ‘மாமனிதன்’ படம் விருதோடு வெற்றியைப் பெற்றுத்தரும்!”