சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“என்னை எப்போ தம்பி ஹாலிவுட் கூட்டிட்டுப் போகப்போறே?”

செல்வராகவன்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்வராகவன்

கேட்கும் செல்வராகவன்

தனது இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’, ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ என இரண்டு படங்களின் அறிவிப்போடு 2021-ம் வருடத்தைத் தொடங்கியிருக்கிறார் செல்வராகவன். பத்து வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணைந்தது செல்வா ரசிகர்களுக்கு ‘ஜிலேபி’ செய்தி. மூன்றாவது குழந்தை பிறந்ததற்கு வாழ்த்துகள் சொல்லி ஆரம்பித்தேன்.

``2021 வருடமே உங்க படத்துடைய அறிவிப்புல இருந்துதான் ஆரம்பமாகியிருக்கு. இந்த வருடம் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?’’

“2021 கொரோனா இல்லாத காலமா மாறணும். புத்தாண்டு உறுதிமொழி எல்லாம் ஒண்ணுமில்லை. 2021-ல எல்லோரும் உயிரோட இருக்கணும் குமாரு.’’

`` ‘துள்ளுவதோ இளமை’ தனுஷ் - இப்போ நீங்க இயக்குற தனுஷ்... இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்குறீங்க?’’

“ரொம்ப சந்தோஷமாவும் நிறைய ஆர்வமாகவும் இருக்கேன். ‘துள்ளுவதோ இளமை’ படத்துல வொர்க் பண்ணின தனுஷ் 16 வயது இளைஞன்; இப்போ நான் வொர்க் பண்ற தனுஷ் மாபெரும் நடிகன். அண்ணனா எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. இயக்குநரா ரொம்ப சவாலா இருக்கு. இப்போ டிரெய்லர் ஷூட் பண்ணினோம். நான் முதல்முறை அவருடைய நடிப்பு, ரியாக்‌ஷன்களைப் பார்த்து வாயைத் திறந்து ‘நடிகன்டா’ன்னு சொன்னேன். ‘எப்போதான் என் நடிப்பு உங்களுக்குத் திருப்தியா இருக்கும்?’னு நிறைய முறை தனுஷ் என்கிட்டே கேட்டிருக்கார். ஆனா, இப்போ இந்தப் பேட்டி மூலமா தனுஷுக்குச் சொல்லிக்கிறேன், ‘எனக்கு ரொம்பத் திருப்தியா இருந்தது தனுஷ்.’ இவ்ளோ நாளா அவருக்கு நிறைய சவாலா இருக்கற கேரக்டர்களைச் செய்துகிட்டிருந்திருக்காரு. இந்தமுறை ஒரு இயக்குநரா இவ்வளவு பெரிய நடிகரை எப்படி இயக்கப்போறோம்ங்கற சவாலோட, நான் யோசிச்சு வேலை செஞ்சுகிட்டிருக்கேன்.”

“என்னை எப்போ தம்பி ஹாலிவுட் கூட்டிட்டுப் போகப்போறே?”

``செல்வராகவன் - தனுஷ் - யுவன் - அரவிந்த் கிருஷ்ணானு ‘புதுப்பேட்டை’ கூட்டணியில உருவாகுற படம் ‘புதுப்பேட்டை 2’ இல்லையாமே?’’

“ஆமாங்க. இது ‘புதுப்பேட்டை 2’ இல்லை. இந்தப் படத்துக்கும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்துக்கும் இடையில நிச்சயமா ‘புதுப்பேட்டை 2’ வெளியாகும். கொக்கி குமாரு வருவான்.”

“ ‘நானே வருவேன்’ படத்தில் வேறு யாருக்கு முக்கியமான கேரக்டர்?”

“அதுல ஜீப் ஒரு முக்கியமான கதாபாத்திரம். அதுக்கு ‘ஜீப்’னு பெயர் வைக்க வேண்டாம். நானே ஒரு நல்ல பெயரா வெச்சுட்டு சொல்றேன்.”

``தனுஷ் கேரக்டரில் என்ன ஸ்பெஷலை எதிர்பார்க்கலாம்?’’

“எல்லா நடிகர்களுக்கும் அடைமொழி இருக்கு. இந்தப் படத்துல இருந்து தனுஷுக்கு ஒரு அடைமொழி கொடுக்கலாம்னு இருக்கேன். இது ரொம்ப நாளா இருக்கிற எண்ணம்தான். நாங்க படம் பண்ணும்போதெல்லாம் என்கிட்ட ‘என் பேர்கூட போடமாட்டேங்குற. படத்துடைய டைட்டிலுக்கு முன்னாடி தனுஷ் நடிக்கும்னு போடேன்’னு வருத்தப்பட்டுக்கிட்டே இருப்பார். ‘அதென்ன தனுஷ் நடிக்கும்னு, அதான் நடிக்கிறியே... அப்புறம் எதுக்கு ‘தனுஷ் நடிக்கும்?’னு சொல்லிடுவேன். அதனால, நானே என் தம்பிக்கு அடைமொழி கொடுத்ததா இருக்கட்டும்னு அதுக்காக யோசிச்சுக்கிட்டே இருக்கேன். இந்தப் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் பாருங்க. இது தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமில்ல, தனுஷுக்கே ஸ்பெஷலா இருக்கும். ஒரு வேளை அவர் ‘இப்போ அடைமொழி வேண்டாம்’னு சொல்லிட்டார்னா. அவர் ஆசைப்பட்ட மாதிரி ‘தனுஷ் நடிக்கும்’னு போட்டுடுவேன்.”

``திடீர்னு ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்துக்கான அறிவிப்பைக் கொடுத்து உங்க ரசிகர்களை சர்ப்ரைஸ் பண்ணிட்டீங்களே?’’

“ ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ என் கனவு. எத்தனையோ கோடிக்கணக்கான ரசிகர்கள் எப்போ எப்போன்னு கேட்டுட்டு இருந்தாங்க. அவங்களுக்கு என்னால முடிஞ்ச பரிசைக் கொடுக்கணும்னுதான் நானும் தனுஷும் பேசி, இந்த அறிவிப்பைக் கொடுத்தோம்.”

`` ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ அறிவிப்பை ட்வீட் பண்றதுக்கு முன்னாடி நீங்களும் தனுஷும் என்ன பேசிக்கிட்டீங்க?’’

“இந்தப் படம் எங்களுக்கு எவ்ளோ சவாலா இருக்கும்னு நிறைய பேசினோம். இது ரொம்பக் கடினமான புராஜெக்ட். அந்தப் பொறுப்பை நம்ம ரெண்டு பேரும் எப்படி எடுத்துக்கணும்னு பேசினோம். 2024 ரிலீஸ்னா, அதுல எவ்ளோ வேலை இருக்கும்னு பாருங்க. ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்துக்கான அப்டேட் கேட்ட என் ரசிகர்களை இவ்வளவு நாள்கள் வெயிட் பண்ண வெச்சதுக்கு சாரி கேட்டுக்குறேன்.”

`` ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ல பார்த்திபன் கேரக்டரில்தான் தனுஷ் நடிக்கிறாரா?’’

“ ‘ஆயிரத்தில் ஒருவன்’ க்ளைமாக்ஸ், கார்த்தி அந்தப் பையனைத் தூக்கிட்டுப் போகும்போது ‘சோழன் பயணம் தொடரும்’னு முடியும். முதல் பாகத்துலேயே பார்த்திபன் கேரக்டர் இறந்திடுச்சு. இரண்டாம் பாகத்தில் கார்த்தி கேரக்டருக்கு வயசாகிடுச்சுனு பேசமுடியுமே தவிர வேற எதுவும் பேசமுடியாது. இப்போதைக்கு இளவரசனை அறிவிச்சிருக்கேன். போகப்போக அடுத்தடுத்த கேரக்டர்களையும் டெக்னிக்கல் டீமையும் அறிவிப்பேன்.”

`` ‘சாணி காயிதம்’ படத்துல நடிக்கிறீங்க. அந்த அனுபவம் எப்படியிருக்கு?’’

“ ‘சாணி காயிதம்’ மிகப்பெரிய ஸ்கிரிப்ட். அந்தக் கேரக்டரை நான் பண்ணுவேன்னு நம்பிய அருண் மாதேஸ்வரன், சித்தார்த் ரெண்டுபேருக்கும் கடமைப்பட்டி ருக்கேன். அவங்க என் மேல வெச்சிருக்கிற நம்பிக்கைக்கு என்னால முடிஞ்சதைப் பண்ணத் தயாரா இருக்கேன். கேமரா பின்னாடி நின்னு படத்தை இயக்குறது கடினம்னா, கேமரா முன்னாடி நின்னு நடிக்கிறது மிக மிக மிகக் கடினம்னு புரிஞ்சுக்கிட்டேன் தலைவா.”

``உங்க படங்கள் வெளியாகும்போது உங்களுடைய மனநிலை என்னவா இருக்கும்?’’

“வயித்துல 10,000 வாட் பாம் வெச்சுக்கிட்டிருந்தா எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும்.”

“என்னை எப்போ தம்பி ஹாலிவுட் கூட்டிட்டுப் போகப்போறே?”

``பேச்சுலரா இருக்கும்போது நீங்க இயக்கிய படங்களுக்கும், குடும்பம், குழந்தைன்னு வந்த பிறகு, நீங்க இயக்கிய படங்களுக்குமான வித்தியாசத்தை யோசிச்சிருக்கீங்களா?’’

“அப்படி நான் யோசிச்சதில்லை. நிச்சயமா குடும்பம்னு வரும்போது பொறுப்புகள் கூடத்தான் செய்யும். வயசாக வயசாகப் பக்குவம் அதிகமாகிட்டேதான் இருக்கும். அது நாம பண்ற படங்கள்ல வெளிப்படும். முதல் படம் பண்ணும்போது எனக்கு வயசு 22; இப்போ 44.”

``ஹாலிவுட்டுக்குப் போன தனுஷுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?’’

“எங்களையும் கூட்டிட்டுப் போனா நல்லாருக்கும். ஆனந்த விகடன் மூலமா நான் தனுஷ்கிட்ட கேட்கிறேன், ‘என்னை எப்போ தம்பி ஹாலிவுட் கூட்டிட்டுப் போகப்போறே?’ ”

``அப்படி நீங்க ஹாலிவுட் போயிட்டீங்கன்னா, உங்க படத்துடைய ஹீரோ யார்?’’

“தனுஷ்தான்.”

“என்னை எப்போ தம்பி ஹாலிவுட் கூட்டிட்டுப் போகப்போறே?”

``நீங்களா ஒரு கேரக்டரை வடிவமைச்சு எழுதுறது, உங்க வாழ்க்கையில நீங்க பார்த்த ஒரு கேரக்டரைப் படத்துக்குள்ள கொண்டு வர்றது... எது உங்களுக்கு சுவாரஸ்யம்?’’

“ஒரு கேரக்டரை உருவாக்குறோம்னா, அதுல மூன்று ‘P’ இருக்கான்னு பார்க்கணும். ‘Personal, Private, Professional’. இதை ஒரு கதாசிரியர் ஆழ்ந்து யோசிச்சு எழுதணும். உதாரணத்துக்கு, கொக்கி குமார் கதாபாத்திரத்தையே எடுத்துக்கலாம். பர்சனலா அவருடைய வாழ்க்கை, அவர் பண்ற தொழில்ல இருந்து பார்க்கும்போது அவருடைய வாழ்க்கை எப்படியிருக்கும், அவருக்குன்னு ஒரு ப்ரைவேட் வாழ்க்கை இருக்கு. அப்போ அவருடைய எண்ணம் எப்படியிருக்கும்? இப்படி ஒரு கேரக்டருக்குள்ள எல்லாத்தையும் கொண்டு வந்து திரையில நிறுத்தும்போது எல்லோருடைய மனசுலயும் இந்தக் கேள்விகள் வரும். இது சாதாரணமா வராது. அவ்ளோ யோசிக்கணும், பேசணும், எழுதணும். அப்படிப் பண்ணப் பண்ண ஒரு கட்டத்துல நாம எழுதுற கேரக்டர் நம்மகிட்ட பேசும். அதை நோட் பண்ணி வெச்சுக்கணும்.”

``நீங்க இதுவரைக்கும் வடிவமைச்சதிலேயே உங்க மனசுக்கு ரொம்ப நெருக்கமான கேரக்டர் எது?’’

“‘மயக்கம் என்ன’ கார்த்திக் சுவாமிநாதன். நான் என்னை ரொம்ப ஆழ்ந்து பார்க்குற கேரக்டர், ”

``படம் ஹிட், ப்ளாப், ப்ளாக்பஸ்டர், பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் இந்த மாதிரி விஷயங்கள்ல உங்களுக்கு ஆர்வம் இருக்கா?’’

“நிச்சயமா ஆர்வமிருக்கு. படங்கள் என்ன கலெக்ட் பண்ணுதுன்னு இதுவரைக்கும் பார்த்துக்கிட்டேதான் இருக்கேன். அதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நாம ஒரு வேலையை செஞ்சிருக்கோம். அது எவ்ளோ லாபம் தருது அப்படிங்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம். அதுக்குத்தானே வேலை செய்றோம். இன்னிக்கு வரை என் படங்கள் என்ன கலெக்ட் பண்ணுதுன்னு எனக்கு நல்லாத் தெரியும்.”

“என்னை எப்போ தம்பி ஹாலிவுட் கூட்டிட்டுப் போகப்போறே?”

``ஹீரோக்களுக்கு நிகரா ரசிகர்கள் உள்ள இயக்குநர் நீங்க. உங்க ரசிகர்கள் பத்திச் சொல்லுங்க?’’

“எனக்கு அவங்கதான் எல்லாம். என் அப்பா சினிமாவுல இருந்தாலும்கூட, முழுக்க முழுக்க ரசிகர்களால் உருவாக்கப்பட்டவன் நான். வறுமையின் உச்சக்கட்டத்தில் எடுக்கப்பட்ட படம், ‘துள்ளுவதோ இளமை’. ஒரு கட்டத்துல ‘தேனிக்கே போயிடலாம்’னு குடும்பமே நினைச்சதுண்டு. அந்தச் சமயத்துல என்கிட்ட, ‘நீ நம்ம குடும்பத்தைக் காப்பாத்துவியா’ன்னு அப்பா கேட்டார். அப்போ எனக்கு முதலீடா கொடுக்கப்பட்டவன்தான் தனுஷ். படம் ரிலீஸானவுடன், முதல் ஷோவுல ஒருத்தர் எழுந்து, ‘இதெல்லாம் சீக்கிரமே டிவியில வந்திடும்டா, பாத்துக்கலாம்’னு சொல்லியிருக்கார். அதைக் கேள்விப்பட்டவுடன் ரொம்ப வருத்தமாகித் தூங்கிட்டேன். மதியத்துக்கு மேல என்னை எழுப்பி, ‘தியேட்டர் ஃபுல்லாகுது’ன்னு சொன்னாங்க. உடனே தியேட்டருக்குப் போயிட்டேன். ரசிகர்களுடைய கைத்தட்டலையும் விசிலையும் பார்க்கும்போது அழுகை வந்திடுச்சு. அப்போதிலிருந்து இப்போ வரை அவங்க என்கூட இருக்காங்க. முழுக்க முழுக்க ரசிகர்களால் படைக்கப்பட்ட இயக்குநர் நான்.”

``உங்களுடைய படங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க. நீங்க யாருடைய ரசிகர்?’’

“எப்பவும் நான் எம்.ஜி.ஆர் ரசிகன்தான். இப்பவும் அப்பப்போ அவருடைய படங்கள் பார்க்கிறதுண்டு.”

``மற்ற மொழிகளில் ‘இவருடன் வொர்க் பண்ணணும்’னு நீங்க நினைக்கிற நடிகர்..?’’

“மோகன்லால் சார்கூட வொர்க் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. அது மலையாளப் படமாகவே இருந்தால் இன்னும் சூப்பரா இருக்கும்.”