கட்டுரைகள்
Published:Updated:

“ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் அரசியலுக்கு வரக்கூடாது!”

எஸ்.பி.ஜனநாதன்
News
எஸ்.பி.ஜனநாதன்

எனக்கு சுதந்திரப் போராட்டத்திலேயே ஒரு கேள்வி இருக்கு. இந்தியாவில் நடந்தது ஒப்பந்தமே தவிர சுதந்திரம் இல்லை.

“லாக்டௌன் மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுருச்சு... சம்பாதிச்ச காசைக்கூட எடுத்துச் செலவு பண்ணமுடியாத நிலை... நண்பர்கள் செய்ற உதவியாலதான் நாள்கள் ஓடுது.” எப்போதும் பூடகமில்லாமல், வெளிப் படையாக இயல்பாகப் பேசக்கூடியவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். உரையாடல் எங்கிருந்து தொடங்கினாலும் சினிமா, அரசியல், சமூகம், பொருளாதாரம், தத்துவம் எனப் பரந்துபட்ட எல்லைகளைத் தொட்டே நிறைவடையும்.

“ ‘புறம்போக்கு (எ) பொதுவுடைமை’க்குப் பிறகு அஞ்சு வருஷமா அமைதி... `லாபம்’ ஸ்கிரிப்டுக்காகத்தானா?”

“அப்படில்லாம் சொல்லமுடியாது... ஆனா, ஏதோவொரு விதத்துல அதுக்குள்ளதான் இருந்திருக்கேன். ஒவ்வொரு நாளும் ஒரு சின்ன செய்தி கிடைச்சுக்கிட்டே இருந்துச்சு. ஒவ்வொரு செய்தியும் அதிர்ச்சி தரக்கூடியதா இருக்கும். ‘இரண்டு வருஷத்துக்கு உணவுதானியம் கையிருப்பு’ன்னு ஒரு செய்தி வரும். மறுநாள், ‘தினமும் இருபது லட்சம் பேருக்கு இரவு உணவில்லை’ன்னு செய்தி வரும். இந்த முரண்பாட்டைப் பத்திப் பேசுறாங்களான்னு பாத்தா, சம்பந்தமே இல்லாம, ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரான்னு பேசிக்கிட்டிருக்காங்க. அவங்க பேசாததை நான் பேசுறேன். கிராமங்களில் உற்பத்தியாகுறது, வெறும் உணவுப்பொருள் மட்டும் கிடையாது. உலகத்துக்கான மூலப்பொருள். பீர், பிராந்தியில் ஆரம்பிச்சு குளிருக்குப் போர்த்திக்கிற ஜெர்க்கின்ல இருந்து காட்டன் வரைக்கும் நம்ம கிராமத்துலதான் தயாராகுது. நம்ம கிராமத்துல இருக்கிற மாடுங்கதான் சுவிட்சர்லாந்தில இருக்கிற ஒருத்தனுக்கு ஷூவாகப் போகுது. இந்த ஒரு வரியைச் சொல்றதுக்கு ஒரு சீன் பண்ண வேண்டியிருக்கு. இப்படிப் பார்த்துப் பார்த்துச் செஞ்சதாலதான் கொஞ்சம் காலதாமதம். ஆனா, இன்னும் கொஞ்சம் வேகமாப் பண்ணியி ருக்கலாம்னு இப்போ தோணுது.”

எஸ்.பி.ஜனநாதன்
எஸ்.பி.ஜனநாதன்

“விஜய் சேதுபதி எப்படி கதைக்குள்ள வந்தார்?”

“நான் டைரக்ட் பண்ணுன எந்த ஹீரோவுக்கும் முழுக்கதையையும் சொன்னதில்லை. ஏன்னா, எனக்கே முழுக்கதையும் தெரியாது. கதை தினமும் அப்டேட் ஆகிட்டே இருக்கும். இன்னைக்கு இருக்கிற விஷயம் படம் வரும்போது பழசாகிடும். அதனால எதையும் முடிவு பண்ணி வச்சுக்க மாட்டேன். இதைப் புரிஞ்சுக்கிட்டவங்கதான் என் படத்துல ஹீரோவா இருப்பாங்க. ஷாம், ஜீவா, ஜெயம் ரவி... எல்லாருமே அந்தப் புரிதலோடதான் வந்தாங்க. விஜய் சேதுபதியும் அப்படித்தான்.”

“ஜனநாதன் படத்துல ஸ்ருதிஹாசன்னு சொல்றப்பவே சின்ன ஆச்சர்யம் வருதே?”

‘`உண்மையைச் சொல்லணும்னா, ‘லாபம்’ படத்துக்கு நான் அவங்களை யோசிக்கவேயில்லை. புரொடியூசர் சொன்னார்னு சந்திச்சுக் கதை சொன்னேன். ஒத்துக்குவாங்களான்னு சந்தேகம் இருந்துச்சு. கதை கேட்டுட்டு ‘பண்ணுறேன்’னு சொல்லிட்டாங்க. படத்துல டான்ஸரா வர்றாங்க. ஹீரோவோட தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் பார்த்துட்டு லவ் பண்ணுவாங்க. ”

“டிரைலர்லயே வசனங்கள் தெறிக்குது. படத்துல நிறைய குறியீடுகள் இருக்கும் போலிருக்கே?”

“ஆமா... எனக்கு சுதந்திரப் போராட்டத்திலேயே ஒரு கேள்வி இருக்கு. இந்தியாவில் நடந்தது ஒப்பந்தமே தவிர சுதந்திரம் இல்லை. இதுதொடர்பா நேரடியா என் கருத்தை முன்வைக்கிறேன். இங்கே போடப்படும் ஒப்பந்தங்கள் எல்லாமே என்னையும் உங்களையும் மறைமுகமா பாதிக்குது. மிஷ்கின், ‘முகமூடி’ன்னு ஒரு படம் எடுத்தார். டைட்டில் வச்சது, டிசைன் பண்ணினதெல்லாம் மிஷ்கின்தான். சமீபத்துல முகமூடி-2 எடுக்க டிரை பண்ணினார். ஆனா, ‘அந்தப் படத்தோட உரிமை எங்ககிட்டல்ல இருக்கு’ன்னு யூடிவி சொல்றாங்க. ‘முகமூடி’யை உருவாக்கியது மிஷ்கின்தான். ஆனா அது இப்போ யூடிவியோட புராடக்டா மாறிடுச்சு. மிஷ்கின் ‘முகமூடி-2’ எடுக்கணும்னா இனி யூடிவிகிட்ட அனுமதி வாங்கினாதான் முடியும். அதுக்கும் ஒப்பந்தம் போடணும். இது ஒப்பந்தத்தின் அரசியலைப் புரிஞ்சுக்கிறதுக்கான சின்ன உதாரணம்.”

“விவசாயிகள் பிரச்னையைப் படமா எடுத்து சினிமாக்காரங்க லாபம் பார்த்திடறாங்கன்னு ஒரு குமுறல் இருக்கே?”

“என்னை மட்டும் வச்சு பதில் சொல்றேன். லாபம் சம்பாதிக்குறதுக்குன்னா என்னால வேற மாதிரி படங்கள் எடுக்கமுடியும். என் பூர்வீகம் தஞ்சை மாவட்டமா இருந்தாலும் சென்னையிலேயே வளர்ந்தவன். விவசாயத்தைப் பத்தி எதுவுமே தெரியாது. சின்ன வயசுல இருந்து நிறைய படங்கள் பாக்குறேன். சாதி, பங்காளிச்சண்டைன்னு நிறைய பிரச்னைகளை எடுக்கிறாங்க. விவசாயத்தைப் பத்தி ஒரு படமும் வரலே. விவசாயி கஷ்டப்படுறான்னு சில படங்கள் வந்துச்சு. சிலபேர் விவசாயிகளுக்கு அட்வைஸ் பண்ணுவாங்க. இதைத்தாண்டி பெரிசா எதுவும் பேசப்படலே. இப்போ நான் அதைச் செஞ்சிருக்கேன். காலையில இருந்து கரும்பு வெட்டுற விவசாயி, வேலை முடிச்சுட்டு உடம்பு வலியைப் போக்குறதுக்காக ஒரு குவார்டர் குடிக்கிறார். ஆனா, அது கரும்புல இருந்து எடுத்ததுன்னு அவருக்குத் தெரியலே. பருத்திக்கொட்டையில இருந்துதான் வனஸ்பதி வருதுன்னு ராஜபாளையத்துக்காரங்களுக்கே தெரியலே. உணவு மட்டுமல்ல... உலகத்துக்குமான எல்லா மூலப் பொருள்களும் கிராமத்துக்குள்ள இருந்துதான் வருது. ஆனா இதையெல்லாம் கொடுக்கிற விவசாயிக்கு என்ன கிடைக்குது? அந்தக் கேள்வியைத்தான் நான் இந்தப்படத்துல எழுப்புறேன்.”

எஸ்.பி.ஜனநாதன்
எஸ்.பி.ஜனநாதன்

“திரைப்படம் மூலமா மாற்றத்தை உருவாக்கமுடியும்னு நம்புறீங்களா?’’

“இப்போ எனக்கு அந்த நம்பிக்கை வந்திருக்கு. குவாண்டம் மெக்கானிக்ஸ் பத்திப் பேசுற யூடியூப் சேனலை நாலு லட்சம் பேர் பாலோ பண்ணுறாங்க. போனவாரம் போட்ட வீடியோவுல சின்ன மிஸ்டேக் இருக்குன்னு டிஸ்கஸ் பண்ணுறாங்க. அந்த அளவுக்கு அறிவு விரிஞ்சிருக்கு. சொல்றதைக் கேட்குறாங்க. கவனிக்கிறாங்க. நிச்சயம் மாற்றம் நடக்கும்.”

“கிரண்பேடி முதல் அண்ணாமலை வரை ஐ.பி.எஸ் அதிகாரிகளெல்லாம் அரசியலுக்கு வந்துக்கிட்டி ருக்காங்க... எப்படிப் பார்க்கிறீங்க?”

“நான் இதைக் கடுமையா எதிர்க்கிறவன். ராணுவத் தளபதியா இருந்த வி.கே.சிங் கடைசியா பி.ஜே.பி-யில சேந்துட்டார். நான் ஒரு முஸ்லிமா இருந்தா, நேத்துவரைக்கும் நான் அவரைப் பாத்ததுக்கும் இன்னைக்குப் பாக்குறதுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கும். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரியா வேலை செஞ்சவங்க அரசியலுக்கு வரக்கூடாது. அவங்க சமூகப்பணி செய்யணும்னா நேரடி அரசியலுக்கு வராம வேறமாதிரி செய்யலாம்.”

“பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்கள் எடுக்கக்கூடிய படங்களையும் சாதியப் படங்கள்னு முத்திரை குத்தப்படுறதை கம்யூனிச சிந்தனையாளரா எப்படிப் பார்க்கிறீங்க?”

‘`சமூகத்துல ஒரு இனம் ஒதுக்கப்படுறப்போ கேள்விகள் உருவாகும். கருப்பா இருக்குறவனை ஒதுக்குறப்போ, அந்தக் கூட்டத்துல இருக்குற ஒருத்தன்தானே முதல்ல குரல் கொடுப்பான். வெள்ளையா இருக்குறவன் வர மாட்டான். ஒடுக்கப்படுறவங்க சார்பா பேசுறது பெரிய விஷயம். இரஞ்சித்தும் சரி, மாரியும் சரி ரொம்ப சின்சியரா சினிமா எடுக்கிறவங்க.”

“ ‘வலதும் இல்லை, இடதும் இல்லை, மய்யம்’ன்னு கமல் சொல்றதையும், ரஜினி அரசியலுக்கு வரப்போறதா உலவும் பேச்சுகள் குறித்தும் உங்கள் கருத்து?”

‘`மய்யம்னு ஒண்ணு கிடையவே கிடையாது. இல்லாததைத் தேடுற வேலை எப்போதும் நடந்துகிட்டே இருக்கும். அதைத்தான் கமல் இப்போ செஞ்சுக்கிட்டு இருக்கார். ரஜினியைப் பொறுத்தவரை கண்டிப்பா அரசியலுக்கு வரமாட்டார். அவரைத் தேவையில்லாமல் இழுக்கிறாங்க. இங்கே நடந்துட்டு இருக்குற எல்லாமே சந்தைக்கான வணிகம். அவரோட குரலுக்கு வீச்சு அதிகம்கிறதால் அவரைப் பயன்படுத்திக்கப் பார்க்குறாங்க.”