கட்டுரைகள்
Published:Updated:

“இந்தத் தலைமுறையினருக்கு ‘பாபா’வை ரொம்பப் பிடிக்கும்!’’ - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா
பிரீமியம் ஸ்டோரி
News
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா

இந்தப் படத்துக்கு முன்னாடி ரஜினி சாரும் நானும் இணைந்து ‘பாட்ஷா'வைக் கொடுத்திருந்தோம். அதனால மறுபடியும் எங்க கூட்டணி என்றதும், ‘பாபா'வுக்கு அளவுக்கதிகமான எதிர்பார்ப்புகள் உண்டானது

``சமீபகாலமா ஃபேன்டஸி படங்கள் பெரிய வெற்றியடைஞ்சுக்கிட்டிருக்கு. ‘பிரம்மாஸ்திரா', ‘காந்தாரா'னு இந்தத் தலைமுறையினர் ஃபேன்டஸி படங்களை அதிகம் விரும்புறாங்க. ஆனா, எங்களோட ‘பாபா' இருபது வருஷத்துக்கு முன்னாடியே வெளியான ஃபேன்டஸி. அப்போ ஃபிலிம்ல பண்ணியிருந்தோம். இப்போ க்யூப் திரையிடல், டால்ஃபி சவுண்ட்ஸ்னு டெக்னாலஜி மாறினதால, நவீன தொழில்நுட்பத்துக்கு ‘பாபா'வைக் கொண்டு வந்துட்டோம். நீளத்தையும் குறைச்சு, விறுவிறுப்பைக் கூட்டியிருக்கோம். ரஜினி சார் வாய்ஸ் ஓவரையும் இப்போ சேர்த்திருக்கோம். ‘பாபா’வை ரீ-ரிலீஸ் பண்றோம் என்றதும், ஏ.ஆர்.ரஹ்மான் சாரே கூப்பிட்டுப் பேசினார். ‘மியூசிக்லேயும் நான் ஏதாவது பண்ணித் தரட்டுமா?'னு கேட்டிருக்கார். தேவைப்பட்டால் அதையும் பண்ணுவோம்.

மூணு வருஷத்துக்கு முன்னாடி ரஜினி சாரோட பிறந்தநாளன்னிக்கு ‘பாட்ஷா' டிஜிட்டல் வெர்ஷன் வந்தது. அதைப்போல இந்தப் பிறந்தநாளுக்கு இந்தப் படத்தைக் கொண்டு வர்றோம். முன்னாடி பார்த்தவங்களுக்கும் சரி, புதுசா இப்போ படம் பார்க்கறவங்களுக்கும் சரி இந்தப் படம் புத்தம் புதுசாத் தெரியும்.'' - நம்பிக்கையுடன் பேசுகிறார் சுரேஷ்கிருஷ்ணா. ரஜினிக்கு ‘பாட்ஷா', ‘அண்ணாமலை', கமலுக்கு ‘சத்யா', ‘ஆளவந்தான்' எனப் பல பெரிய ஹீரோக்களின் முக்கியமான படங்களை இயக்கியவர். அவருடன் பேசினோம்...

“இந்தத் தலைமுறையினருக்கு ‘பாபா’வை ரொம்பப் பிடிக்கும்!’’ - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா

``அந்தக் காலகட்டத்தில் ‘பாபா' வெற்றி பெறாமல் போனதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?’’

‘‘இந்தப் படத்துக்கு முன்னாடி ரஜினி சாரும் நானும் இணைந்து ‘பாட்ஷா'வைக் கொடுத்திருந்தோம். அதனால மறுபடியும் எங்க கூட்டணி என்றதும், ‘பாபா'வுக்கு அளவுக்கதிகமான எதிர்பார்ப்புகள் உண்டானது. மீடியாக்களும் தினம் ஒரு செய்தியா போட்டு எக்கச்சக்க ஹைப் ஏத்தினாங்க. தியேட்டர்கள்லேயும் அப்போ டிக்கெட் விலை அளவுக்கதிகமா கூடிப் போச்சு. இப்படிச் சில விஷயங்கள்னால அந்தச் சமயத்துல இந்தப் படம் சரியா போகாமல் இருந்திருக்கலாம். ஆனா, இந்தத் தலைமுறையினருக்கு ‘பாபா'வை ரொம்பப் பிடிக்கும். அவங்க இந்தப் படத்தை பார்த்திருக்க மாட்டாங்க. ஏன்னா யூடியூப், ஓடிடி-னு எதிலும் இந்தப் படம் இல்லை. அதனால படத்தை ரீ-ரிலீஸ் பண்ண விரும்பினோம்.''

``நீங்க கே.பாலசந்தரோட ‘தண்ணீர் தண்ணீர்', ‘அச்சமில்லை அச்சமில்லை' படங்கள்ல உதவி இயக்குநரா இருந்திருக்கீங்க. ஆனா உங்க முதல் படத்தை பக்கா ஆக்‌ஷனா எடுக்கணும்னு ஏன் உங்களுக்குத் தோணுச்சு?’’

‘‘பாலசந்தர் சார் படங்கள் மாதிரி அவரால்தான் எடுக்க முடியும். அவருக்கென ஒருவித ஆடியன்ஸ் இருக்காங்க. உதாரணமா, தீபாவளி அன்னிக்குப் பெரிய ஹீரோக்களின் பத்து படங்கள் வெளியாகியிருக்கும். அதுக்கு நடுவுல பாலசந்தர் சார் படமும் வந்திருக்கும். அதுல நடித்த நடிகர்கள் யாருனுகூடத் தெரியாமல் இருக்கும். ‘இயக்கம்:

கே.பாலசந்தர்'ங்கற பெயருக்காகவே ஓடின படங்கள் நிறைய இருந்தன. அவருக்கான ஆடியன்ஸை உருவாக்கிவைத்திருந்தார். அப்பேர்ப்பட்ட பல்கலைக்கழகத்துல நான் படிச்சுட்டு வந்ததே சந்தோஷம்தான். அவர்கிட்ட இருக்கறப்ப சினிமாவைக் கத்துக்கிட்டேன். நடிகர்கள்கிட்ட எப்படி வேலை வாங்கணும், ஒரு சீனை உருவாக்குறது எப்படி... இப்படியான விஷயங்களைக் கத்துக்கிட்டேன். அவர் எனக்கு குரு.

ஆனா, நான் பிறந்தது வளர்ந்ததெல்லாம் மும்பை. அங்கே அமிதாப் சாரோட ஆக்‌ஷன் படங்கள் பார்த்துத்தான் வளர்ந்தேன். அதனால என் மைண்ட்ல ஆக்‌ஷன் சிந்தனைகள்தான் எப்பவும் ஓடும். அப்படிப்பட்ட படங்களை அதிகமா இயக்கணும்னு விரும்புவேன். அதேசமயம் என்னோட திரைப் பயணத்துல ஆக்‌ஷன் படங்கள் மட்டும் பண்ணலை. ‘வீரா', ‘ஆஹா' மாதிரி எல்லா ஜானர்கள்லேயும் என்னால படங்கள் செய்ய முடிஞ்சுது.

“இந்தத் தலைமுறையினருக்கு ‘பாபா’வை ரொம்பப் பிடிக்கும்!’’ - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா

கமல் சாரோட ‘சத்யா'வை முடிச்சுட்டு தெலுங்கில் வெங்கடேஷைவெச்சு ‘பிரேமா'னு அழகான ஒரு லவ் ஃபிலிம் பண்ணினேன். பெரிய வெற்றியாச்சு. என்னோட ‘சத்யா' ஆக்‌ஷன் படம்கறதால பாலசந்தர் சார் அந்தப் படத்தை பார்க்கவே இல்லை. ஆனா, ‘பிரேமா'வைப் பார்த்துட்டு என்னை ரொம்பவே பாராட்டினார். ‘என் படம் பார்க்கற மாதிரி இருக்குதுடா சுரேஷ்'னு சந்தோஷப்பட்டார். அந்த வார்த்தைகள் எனக்குப் பெரிய ஆஸ்கர் விருது கிடைச்சது மாதிரி இருந்துச்சு. அதைப்போல இன்னொரு மறக்க முடியாத பாராட்டு, பாரதிராஜா சார்கிட்டருந்து கிடைச்சது. குட்லக் தியேட்டர்ல கமல் சாரும், பாரதிராஜா சாரும் ‘சத்யா'வைப் பார்த்தாங்க. நான் ஒரு ஓரமா நின்னுக்கிட்டு இருந்தேன். பாரதிராஜா சார் என்னைக் கூப்பிட்டு ‘இது உன் முதல் படம்னு என்னை நம்பச் சொல்றியா?'னு கேட்டு ஆச்சர்யப்பட்டார்.

இப்படி ஜாம்பவான்கள்கிட்ட இருந்தும் பாராட்டுகள் கிடைச்சிருக்கு. அவங்க ஆசிகள் இருக்கறதாலதான் ‘பாட்ஷா' மாதிரி மேஜிக்கும் நிகழ்ந்திருக்கு'' மகிழ்ச்சியோடு புன்னகைக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.