
சமூக மாற்றத்துக்கான விஷயங்களை ஒரு கமர்ஷியல் சினிமாவில் சொல்ல முடியும்கிறது என் நம்பிக்கை. ‘ராட்சசி'யில் அரசுப்பள்ளிகள் குறித்து அப்படித்தான் பேசியிருந்தேன்.
``ஒரு திரைப்படத்தால் சமூகத்தை உடனடியா மாத்திடமுடியும்னு சொல்ல மாட்டேன். ஆனா, அதனால் சமூகத்தில் நிறைய விவாதங்களை எழுப்ப முடியும்னு நம்பறேன். என் முதல் படம் ‘ராட்சசி' இந்தச் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் சந்தோஷம் தந்தது. சீரழிந்து கிடக்கும் அரசுப் பள்ளியைச் சீர்திருத்திய கதை அது. ‘ராட்சசி'யில் மென்மையான அரசியலைப் பேசியிருந்தேன். காதலையும் ரத்தத்தையும் தவிர்த்தேன். அதுல, ஒரு ப்ரேம்லகூட ரத்தம் காட்டிடக்கூடான்னு உறுதியா இருந்தேன். ஆனா, இப்ப அருள்நிதி சாரை வைத்து இயக்கியிருக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்', கிராமத்து ஆக்ஷன் கதை. வீரியமான அரசியலும் இருக்கு. ரம்மியமான காதலும் இருக்கு. தெறிக்கத் தெறிக்க ரத்தமும் இருக்கு. உணர்வுபூர்வமான மெசேஜும் இருக்கு!'' - உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் சை.கௌதமராஜ்.


``முதல் படத்தில் கல்வியில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் பற்றிப் பேசிய நீங்க இரண்டாவது படமே ஆக்ஷன் படமா போயிட்டீங்க..?’’
‘‘ஜோதிகா மேடத்தின் ‘ராட்சசி' முடிச்சதும், மறுபடியும் அவங்க நடிப்பிலேயே ‘பூங்குழலி எம்.பி.பி.எஸ்'னு ஒரு படம் பண்ண நினைச்சோம். அதுக்கான வேலைகளையும் ஆரம்பிச்சிட்டோம். அந்தச் சமயத்துலதான் கொரோனா முதல் லாக்டௌன் ஆரம்பிச்சிடுச்சு. அப்புறம், ராகவா லாரன்ஸ் சார்கிட்ட ஒரு கதை சொன்னேன். அது அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. உடனே ஆபீஸ் போட்டுக்கொடுத்துட்டார். அந்தக் கதை ரெடியாகி வரும் நேரத்தில்தான் ரெண்டாவது லாக்டௌன் வந்தது. அது முடிந்ததும் நாங்க படத்தை ஆரம்பிக்கலாம்னா லாரன்ஸ் சார் ‘ருத்ரன்', ‘சந்திரமுகி 2', ‘ஜிகர்தண்டா 2' படங்களுக்குப் போயிட்டார். இந்த இடைவெளியில் லாரன்ஸ் சார் சம்மதத்தோட அருள்நிதி சார்கிட்ட இந்தக் கதையைச் சொன்னேன். லாரன்ஸ் சாருக்கும் அருள்நிதியை ரொம்பப் பிடிக்கும்கிறதால, சந்தோஷமா அனுப்பி வச்சார். அருள் சார்கிட்டேயும் ‘நீங்க என் டைரக்டர் படம் பண்ணுறீங்க'ன்னு சொல்லி மகிழ்ந்தார்.’’


``முரட்டு மீசையுடன் விறைப்பா அருள்நிதியைப் பார்த்தாலே வித்தியாசம் தோணுதே?’’
‘‘அருள் சார்கிட்ட நான் கதை சொல்லும்போதே, அவர் ஒரு பக்காவான ஆக்ஷனும் அழகான எமோஷனலும் கலந்த ஒரு கதையைப் பண்ணணும்னு ரொம்ப வருஷமாவே காத்திருந்தார்னு புரிஞ்சது. நான் கதை சொல்லி முடிச்சதும் சந்தோஷப்பட்டார். ‘இப்படி ஒரு கதையைத்தான் எதிர்பார்த்தேன்'னு சொன்னார். படம் முடிஞ்ச பிறகு பார்த்துட்டு ‘என் கரியர்ல தி பெஸ்ட்டா இந்தப் படம் அமைஞ்சிருக்கும்'னு சொல்லி சந்தோஷப்பட்டார். அருள் சார் ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கிறார்னாலே, அது வித்தியாசமான விறுவிறுப்பான கதையாகத்தான் இருக்கும்னு நிரூபிச்சிருக்கார்.
சின்ன வயசில இருந்து நான் பார்த்து வளர்ந்த ராமநாதபுரம் பகுதி வெயில் மனிதர்களின் வாழ்க்கையைத்தான் இந்த முறை கையிலெடுத்திருக்கேன். இந்தப் படத்துக்காக அவர் ஒரு வருஷமா மீசை வளர்த்திருக்கார். இன்னும் இந்த கதையைப் பத்திச் சொல்றதா இருந்தா, ‘தேவர் மகன்', ‘அசுரன்', ‘பருத்திவீரன்' மாதிரியான படம்ன்னு சொல்லலாம். ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்க்கையில் நேரும் சதி, துரோகம், காதல், வன்மம்தான் கதை.


என் படங்கள்ல வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ‘உன் நியாயம், என் நியாயம்னு தனித்தனியா கிடையாது. நியாயம் ஒரே மாதிரிதான்'னு முனீஸ்காந்த் ஒரு இடத்துல சொல்லுவார். அப்படி இந்தப் படத்தின் கூர்மையான வசனங்கள் பேசப்படும். இதுல அருள்நிதி கேரக்டர் பெயர் மூர்க்கசாமி. அவர் காதலியா ‘சார்பட்டா பரம்பரை' துஷாரா விஜயன் நடிச்சிருக்காங்க. இவங்க ரெண்டு பேருக்குமான லவ் கெமிஸ்ட்ரி, இயல்பும் எதார்த்தமுமா அமைஞ்சிருக்கு.

படத்துல முக்கியமான கேரக்டரில் சந்தோஷ் பிரதாப் நடிச்சிருக்கார். முனீஷ்காந்த், சரத் லோஹிதாஸ்வா, ‘கன்னிமாடம்' சாயா தேவி, ‘யார்' கண்ணன், ராஜசிம்மன், சக்குபாண்டி என கிராமத்துக் கதாபாத்திரங்களுக்கு வலுச்சேர்க்கக்கூடிய ஆட்கள் இருக்காங்க. இதைத்தாண்டி கழுமரமும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரம். அது ஏன்னு படம் பார்க்கும்போது உங்களுக்குப் புது அனுபவமா இருக்கும். இமானின் இசையும், ‘பரியேறும் பெருமாள்' தரின் ஒளிப்பதிவும் இந்தப் படத்துக்கு பலம். ‘ஜிப்ஸி', ‘டாடா' படங்களைத் தயாரிச்ச அம்பேத்குமார் இந்தப் படத்தைத் தயாரிச்சிருக்கார்.
சமூக மாற்றத்துக்கான விஷயங்களை ஒரு கமர்ஷியல் சினிமாவில் சொல்ல முடியும்கிறது என் நம்பிக்கை. ‘ராட்சசி'யில் அரசுப்பள்ளிகள் குறித்து அப்படித்தான் பேசியிருந்தேன். இந்தப் படமும் ஒரு முக்கியமான அரசியல் பேசும் படம்தான். அதை நான் இந்த நேர்காணலில் சொல்றதைவிட படம் இன்னும் வலிமையாச் சொல்லும்னு நம்புறேன்.’’