Published:Updated:

`ஜெய் பீம்' வெளியாகி ஓராண்டு - "இந்தப் படத்தால் உண்டான மாற்றங்கள்...!"- த.செ.ஞானவேல் நெகிழ்ச்சி

ஜெய் பீம், த.செ.ஞானவேல்

"முதல்வர் படம் பார்த்தபின்பு, அரசு இயந்திரங்கள் இயங்க ஆரம்பித்தது ரொம்பப் பெரிய மாற்றம். பல ஆண்டுகளாக பட்டா இல்லாத மக்கள், சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் இருந்தவர்கள் என அத்தனை பேருக்கும் பட்டா, சாதிச் சான்றிதழ்கள் கிடைத்தன." - த.செ.ஞானவேல்

Published:Updated:

`ஜெய் பீம்' வெளியாகி ஓராண்டு - "இந்தப் படத்தால் உண்டான மாற்றங்கள்...!"- த.செ.ஞானவேல் நெகிழ்ச்சி

"முதல்வர் படம் பார்த்தபின்பு, அரசு இயந்திரங்கள் இயங்க ஆரம்பித்தது ரொம்பப் பெரிய மாற்றம். பல ஆண்டுகளாக பட்டா இல்லாத மக்கள், சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் இருந்தவர்கள் என அத்தனை பேருக்கும் பட்டா, சாதிச் சான்றிதழ்கள் கிடைத்தன." - த.செ.ஞானவேல்

ஜெய் பீம், த.செ.ஞானவேல்
விளிம்புநிலையில் தத்தளிக்கும் உயிர்களை இச்சமூகத்தோடு இறுக்கமாய் இணைக்கும் சட்டத்தின் தொப்புள்கொடியை நம்பிக்கையாய்ப் பற்றிக்கொள்ளும் கரமாகக் கொண்டாடப்பட்ட படம் `ஜெய் பீம்'. இப்போது ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. இப்படம் வெளியான பின் பழங்குடியினர் வாழ்க்கையில் படம் ஏற்படுத்திய தாக்கம் என்ன, அதன் இயக்குநர் த.செ.ஞானவேல் அடுத்து என்ன பண்ணவிருக்கிறார் என்பது குறித்தும் இயக்குநர் ஞானவேலிடம் பேசினேன்.
த. செ.ஞானவேல்
த. செ.ஞானவேல்

'ஜெய் பீம்' வெளியாகி ஓராண்டு நிறைவடைந்திருக்கிறதே..?

"'ஜெய்பீம்' படத்திற்குப் பின் பொறுப்பு கூடியிருக்கு. சின்ன எதிர்பார்ப்பு கூடியிருக்கு. அந்த எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல் நல்ல படம் பண்ணணும் என்கிற உந்துதல் அதிகமாகியிருக்கு. ஒரு நல்ல படம் அதுக்கான தேவைகளை அதுவே தேடிக்கும் என்பதுபோல, 'ஜெய் பீம்' டீம் அமைஞ்சது. உங்கள் குழந்தைகள் உங்கள் மூலமாக வந்தவர்கள்னு சொல்வாங்க. அது படைப்புக்குமே பொருந்தும். நான், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் மூவருமே, மீண்டும் மீண்டும் பேசிக்கிட்டது, 'நாம ஒரு கருவியாகத்தான் செயல்படுகிறோம்' என்பதுதான். அதை உணர்ந்துதான் வேலை செய்தோம். அதிலும் ஆர்ட் டைரக்டர் ஒரு கோர்ட் செட் அமைத்ததைவிட, எலி வளையை செட் போட ரொம்பவே மெனக்கெட்டார். கோர்ட் செட் எல்லார் கண்ணுக்கும் தெரிந்த விஷயம். ஆனா, எலி வளை என்பது கிராபிக்ஸாக இல்லாமல் உண்மையாகப் போட்டிருந்தோம். அது கதையோடு இயல்பான செட்டாக அமைஞ்சிடுச்சு. படத்துக்கு நிறைய விருதுகள் கிடைச்சது. ஆர்ட் டைரக்டருக்கும் விருது கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். இந்த ஒரு வருஷத்துல நான் அதிகமா எதிர்கொண்ட ஒரு விஷயம்... 'இதே மாதிரி ஒரு படம் பண்ணுங்க சார்'னு எல்லாருமே சொன்னாங்க. அதை கவனத்துல எடுத்துக்க விரும்புறேன்."

த.செ.ஞானவேல்
த.செ.ஞானவேல்

படம் வெளியான பின் அது பழங்குடியினர் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்னென்ன?

"இந்தப் படம் பண்றப்பவே, இது அரசின் கவனத்துக்குப் போனா அவங்க வாழ்க்கையில ஒரு மாற்றம் நடக்கும்னு நினைச்சோம். படம் ரெடியானதும், முதல்வர் படம் பார்த்துட்டு, கண் கலங்கியதோடு அன்று இரவே மிசா அடக்குமுறையால் அவர் கைதான சம்பவங்கள் நினைவுக்கு வந்ததையும் கடிதத்தின் மூலம் சொல்லியிருந்தார். முதல்வர் படம் பார்த்தபின்பு, அரசு இயந்திரங்கள் இயங்க ஆரம்பித்தது ரொம்பப் பெரிய மாற்றம். பல ஆண்டுகளாக பட்டா இல்லாத மக்கள், சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் இருந்தவர்கள் என அத்தனை பேருக்கும் பட்டா, சாதிச் சான்றிதழ்கள் கிடைத்தன. படத்தின் பாராட்டு விழாக்களுக்குச் சென்ற போதும், பழங்குடி இன மக்கள் என்னை நேர்ல வந்து வாழ்த்தினாங்க. இப்படி நல்ல விஷயம் நிறைய நடந்திருக்கு. அதைப் போல, இன்னமும் அந்த மக்கள் லாக்கப் வன்முறைக்கு ஆளாக்கப்படுறாங்க என்ற தகவலும் வருது."

அடுத்தும் சூர்யாவை இயக்கப்போகிறீர்கள்... ஜீவஜோதி கதையான 'தோசா கிங்'கை இயக்குகிறீர்கள் என்றெல்லாம் பேச்சு...

ஜெய்பீம் சூர்யா
ஜெய்பீம் சூர்யா

"ரெண்டுமே உண்மைதான். சூர்யா சார் படத்தை இயக்குவது 'ஜெய் பீம்' படத்திற்கு முன்பே முடிவான விஷயம். அவருக்கு ஒரு ஒன்லைன் சொல்லியிருந்தேன். அது பிடித்திருந்தது. 'ஜெய் பீம்' வந்த பிறகும் அந்தக் கதை அதே உயிரோட்டத்துடன் இருக்கிறதான்னு பார்க்கும்போது, அதையே பேலன்ஸ் பண்ணலாம் என்ற நம்பிக்கையும் இருக்கறதால, அந்தக் கதையை இயக்குகிறேன். சூர்யா சாரோட 2டி நிறுவனமே தயாரிக்கிறது. அடுத்த ஆண்டில் மார்ச் மாதத்தில் படப்பிடிப்புக்குக் கிளம்புகிறோம். நாம எந்த வேலையைச் செய்கிறோமோ அந்த வேலை, அதன் தேவையை உணர்த்தும். நம்ம மேல இருக்கற எதிர்பார்ப்புகளை சுமையா ஏத்திக்காமல் ஒர்க் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். இது தவிர 'தோசா கிங்' என்ற படத்தை இந்தியில் இயக்குகிறேன். ஜீவஜோதியின் வாழ்க்கை வரலாற்றை இந்திப் பட நிறுவனமான ஜங்லி நிறுவனத்தினர் முறைப்படி பேசி ரைட்ஸ் வாங்கி வைத்துள்ளனர். 'தோசா கிங்'கிற்கான வேலைகளும் போயிட்டிருக்கு."