சினிமா
தொடர்கள்
Published:Updated:

கல்வித்துறைக் குளறுபடிகளை கேள்வி கேட்கும் ‘வாத்தி!’

தனுஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
தனுஷ்

நாம் பரஸ்பரம் தொழில்நுட்பக் கலைஞர்களைப் பரிமாறிக்கிட்டுதான் இருக்கோம். கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் தெலுங்குப் படங்கள் சென்னையில்தானே தயாரானது.

`வாத்தி' படம் பற்றி இரண்டே வார்த்தையில் சொல்லணும்னா ‘இன்னொரு வெற்றி.' முழுக்கவே அந்த மூடுலதான் தினமும் ஸ்பாட்டுக்குப் போனேன். எனக்கு தனுஷ் சார் மீது பெரிய மரியாதை உண்டு. அவரை எப்படி வேண்டுமென்றாலும் செதுக்கிப் பார்க்கலாம். எல்லோருக்கும் அவரை வைத்து ஒரு படம் செய்யணும்னு ஆசை இருப்பதை எந்த இயக்குநரிடம் கேட்டாலும் சொல்வார்கள். ‘வாத்தி'யை ஒரு வழக்கமான கதையாக எடுத்துக்க முடியாது. ஒரு சுவாரஸ்யமான சினிமாவிற்கான பொறுப்பு இருக்கிறதை உணர்ந்து எடுத்த படம். ஒரு நடிகராக தனுஷும், ஒரு இயக்குநராக நானும் இணைந்து ஒரு நல்ல முயற்சியைச் செய்திருக்கோம்னு நம்புறேன்.

‘வாத்தி' பீரியட் படமாகவும் இருக்கிறது. தனுஷ் மாதிரி பெரிய நடிகரை வைத்துப் பண்ணும்போது நிறைய உழைப்பும் புத்திசாலித்தனமும் வேணும். உணர்வுபூர்வமாகவும் கதை சொல்லியாகணும். நம் மக்களின் மனோபாவம் ஆந்திராவாக இருந்தாலும் தமிழ்நாடாக இருந்தாலும் ஒண்ணுதான். தனுஷ் முழுசாக வெளிப்பட்டால் பல ஆச்சரியங்கள் கிடைக்கும். அதில் ‘வாத்தி'யும் ஒண்ணு'' - நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் வெங்கி அத்லூரி. ஆந்திராவின் கவனத்திற்குள்ளாகி தமிழிலும் கால் பதிக்க வருகிறார்.

கல்வித்துறைக் குளறுபடிகளை கேள்வி கேட்கும் ‘வாத்தி!’

``வகுப்பறை, மாணவர்கள்னு கதை போகும் போல தெரியுதே!’’

‘‘மேல்நாடுகளில் அரசுகள் மருத்துவத்தையும், கல்வியையும் அவங்க பொறுப்பில் எடுத்துக்குறாங்க. ஏன்னா அது இளைஞர்களின் வருங்காலம் சம்பந்தப்பட்டது. அதில் ஏதாவது தப்பு வந்ததுன்னா மொத்தமும் பாதிக்கும். மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானால், நாட்டின் எதிர்காலமும் பிரச்னைக்குள்ளாகும். அதைச் சரி செய்வது இன்னும் பெரிய வேலை. ‘வாத்தி', கல்வித்துறையில் நடக்கிற விஷயங்களைக் கேள்வி கேட்குது. ‘படிப்பைக் கோயில் பிரசாதம் மாதிரி கொடுங்க, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மாதிரி விற்காதீங்க'ன்னு கோபமாகச் சொல்லுது.

நம்ம நாட்டில் கல்வித்துறையில் அதிகப்படியான குளறுபடிகள் இருக்கு. பணம் இல்லைன்னா, கிடைக்கிற கல்வியின் தரமும் குறைஞ்சிடுது. அதிக பணம்னா, சிறப்பான கல்வி கைக்குக் கிடைக்குது. இதுதான் இப்போ டிரெண்ட். இதற்கான எல்லா நிலைகளையும் கேள்வி கேட்டு, அதற்கு என்ன பதில்னும் ‘வாத்தி' சொல்லுது.

இங்கே நல்லவனா, பொறுப்பா, தட்டிக்கேட்கிறவனாக ஒருத்தன் இருந்தால், அதுவே கேலிப் பொருளாகிடுச்சு. பொழைக்கத் தெரியாதவன்னு சொல்லி அந்த நல்ல குணத்தை ஒதுக்கி வச்சிடுறாங்க. எது நடந்தாலும் கவனிக்காதது மாதிரி திரும்பிப் பார்க்காமல் போயிட்டு இருக்கோம். சகல கல்யாண குணங்களும் நிரம்பியவனை சினிமாகூட நிராகரித்துவிட்டது. வல்லவனாக, பொறுப்பு உள்ளவனாக இருக்கிறவன் நொந்து, மனம் வெறுத்து, வெளியே வந்து ஆக்ரோஷப்பட்டால் எப்படியிருக்கும்? அப்படி இருப்பான் ‘வாத்தி.' ’’

``தனுஷ் எப்படி இதற்குள் வந்தார்?’’

‘‘அவரை மாதிரி பக்குவத்தில் இருக்கிற நடிகரை வைத்துப் படம் பண்ணணும்னு நிச்சயம் ஆசை இருக்கும். ஆனால் அது கைகூடுவது சாதாரண விஷயமில்லை. தமிழ்ப் படங்கள் மட்டுமன்றி, இந்தி, ஹாலிவுட் படங்களிலும் அவரைத் தேடுகிறார்கள். அவரால் எந்த கேரக்டருக்கும் முழுமையான வடிவம் தர முடிகிறது. இவ்வளவு சின்ன வயதில் தேசிய விருது வரைக்கும் வாங்கிவிட்டு அதற்கடுத்த கட்டத்திற்குப் பயணப்படுகிற இடத்தில் அவர் இருக்கார். எனக்கு இப்படி ஒரு படம் அவரோடு செய்யணும்னு ஆர்வம் இருந்தது. சில விஷயங்களை சில பேரை வச்சு சொன்னால்தான் அந்தச் செய்தி போய்ச் சேரும். நடிப்போட நுணுக்கமான எல்லையை தனுஷ் நெருங்கிக்கொண்டிருப்பது இந்தப் படத்தில் தனியாகத் தெரியும். தனுஷிடமிருந்து பாடி லாங்குவேஜ், சீற்றம் எல்லாம் பிரமாதமாக வந்திருக்கு. அவ்வளவு இயற்கையான நடிகனைக் கையாள்வது நம்ம அனுபவத்திற்கே பெரிய சவாலாக இருக்கு. பீரியட் படமாகவும் சொல்ல வேண்டியிருப்பதால் தனுஷின் கவனமும் அதில் நிறைய இருந்தது. அதை உணர்வுப்பூர்வமாகச் செய்திருக்கோம்.

கல்வித்துறையின் விஷயங்கள் போக, எல்லோரிடமும் போய்ச் சேர வேண்டிய வாழ்க்கையும் இதில் இருக்கு. இது தெலுங்கில் கூட ‘சார்' என்ற பெயரில் வருது. ஆக, இது மாநிலம், மொழி தாண்டின விஷயமாகவும் இருக்கு. காட்சிகளை நெறியாக அடுக்கிக் கொண்டு வரும்போது தனுஷ் அதில் நிலையாக நின்று, கொந்தளித்துச் சுழலும்போது அவ்வளவு பிரமாதமாகச் செய்தார். தன்னுடைய கண்கள்கூட எப்படி நடிக்கும் என்பதை அவரே அறிந்திருப்பதைப் பெரிய பலம்னு சொல்ல வேண்டும். நடிப்பில் அவரால் எதுவும் செய்ய முடியும். இன்னும் அவருக்கு நிறைய காலம் இருக்கிறது என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு இயக்குநரை சுதந்திரமாக இயங்கவிட்டுப் பார்க்கும் அவரது அன்பும் முக்கியமானது. சில படங்கள் நாம் பார்க்கிற திரையோடு முடிந்துவிடுவதில்லை. ‘வாத்தி’யும் அப்படியிருக்கும்.''

கல்வித்துறைக் குளறுபடிகளை கேள்வி கேட்கும் ‘வாத்தி!’

``தனுஷுடன் முதல் தடவையாக சம்யுக்தா மேனன் இணைகிறார்...’’

‘‘இந்தக் கதையில் நடிக்க வேண்டிய பக்குவம் அவருக்கு இருந்தது. தனுஷுடன் சேர்ந்து நடிக்கிறது சிரமமான வேலை. அவர் ஒன்றைச் சொல்லி முடித்துவிட்டு உடனடியாக அடுத்த எமோஷனுக்குப் போய்விடுவார். அதையும் சரியாகப் புரிந்துகொண்டு நடித்தார் சம்யுக்தா. சமுத்திரக்கனி இதில் வேற இடத்தில் வேற விதத்தில் இருக்கார். ‘நான் வெறும் பாத்திரம்தான். அதை இட்டு நிரப்புவது உங்கள் வேலை. நீங்கள் விரும்புவதைக் கொண்டு வந்து சேர்க்கிற வரைக்கும் என்னை விட்டுவிடாதீங்க'ன்னு அவர் அடிக்கடி சொல்வார். ஆனால் கேமராவுக்கு முன்னாடி வந்துவிட்டால் அவர் உணர்ந்து செயல்படுவார். கனி சாருக்குத் தெலுங்கிலும் பெரிய மரியாதை. அவருக்குன்னு தனி ஸ்டைல், தனி ஸ்டாம்ப் இருக்கு. அப்புறம் தணிகலபரணி, சாய்குமார்னு எல்லோரும் இருக்கிறார்கள்.''

``ஜி.வி. பிரகாஷ் கூட வேலை பார்த்தது எப்படியிருக்கு..?’’

‘‘அவர்கூட வேலை பார்க்கிறது இது முதல் தடவை. இன்னும் அவர்கூட ஒர்க் பண்ணணும்னு நினைக்கிறேன். எல்லா வேலைகளிலும் சரியாக இருக்கிறார். நடிப்பு, இசையமைப்புன்னு இழுத்துப் போட்டுட்டுச் செய்தாலும், எதிலும் தாமதமே இல்லை. செய்கிற வேலைகளும் அவ்வளவு சுத்தம். எனக்கு ஆச்சரியமாக இருக்கு. என்னோட பயணத்தில் ஒளிப்பதிவாளர் யுவராஜ் வந்தார். பீரியட் படத்திற்கான விஷயங்கள் தெரியணும். கொஞ்சம் மெனக்கெட வேணும். எதிலும் குறை வைக்காமல் எடுத்துக்கொடுத்தார்.''

கல்வித்துறைக் குளறுபடிகளை கேள்வி கேட்கும் ‘வாத்தி!’

``நிறைய தெலுங்கு டைரக்டர்கள் தமிழுக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள்...’’

‘‘நாம் பரஸ்பரம் தொழில்நுட்பக் கலைஞர்களைப் பரிமாறிக்கிட்டுதான் இருக்கோம். கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் தெலுங்குப் படங்கள் சென்னையில்தானே தயாரானது. இன்னைக்கு இருக்கிற பெரிய ஹீரோக்கள் அத்தனை பேரும் சென்னையில் படித்து வளர்ந்தவங்கதானே. எல்லோரும் எல்லாப் பக்கமும் வரட்டும். நல்ல படங்கள் செய்கிறதில் போட்டி வரட்டும். அதை ஆரோக்கியமாகக் கையாள்வோம்.

இப்ப நாங்க எல்லோரும் கொடுத்து வச்சவங்க. நாங்கள் தமிழில் எந்தப் புது முயற்சி வந்தாலும் விட்டு வைக்கறதில்லை, பார்த்து ரசிக்கிறோம். தெலுங்கு ‘புஷ்பா தமிழ்நாட்டிலும் பெரிய வெற்றி பெற்றது. ‘சங்கராபரணம்', ‘சாகர சங்கமம்' இப்ப ‘பாகுபலி' வரைக்கும் வரவேற்பு கொடுத்த இடம்தானே தமிழ்நாடு. நல்ல கதைகளும், சிறந்த ஸ்கிரிப்ட் ரைட்டர்களும் இரண்டு பக்கமும் ஜெயிச்சுட்டு தானே இருக்காங்க. நம்முடைய திறமையான இளைஞர்களை நாம் பரிமாறிக்குவோம். அதுதான் தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா இரண்டுக்குமே நல்லது. நான் மூணு படங்கள்தான் இயக்கியிருக்கேன். என்கிட்ட ஒரு திறமையைப் பார்த்து தனுஷ் சார் கூப்பிட்டு ஒரு படம் கொடுக்கிறார் பாருங்க, அது எவ்வளவு பெரிய கனிவு. ரெண்டு பக்கமும் விட்டுக்கொடுத்து, கலைஞர்களைத் தேடி எடுத்து, சேர்ந்து படங்கள் செய்வோம். இதுவுமே தமிழ் சினிமாவிற்கு நல்லதுதான்.''