வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள `விடுதலை' திரைப்படத்தின் முதல் பாகம் இந்த மாதம் 31ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர் வெற்றி மாறன், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, தயாரிப்பாளர் எல்ரெட் குமார், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசியிருந்தனர். `விடுதலை' படப்பிடிப்பின்போது விபத்தில் உயிரிழந்தவருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியிடப்பட்டது. இளையராஜா மற்றும் படக்குழுவினர் அனைவரும் மேடையில் ஏறிப் படத்தின் இசையை வெளியிட்டனர். பின்னர், நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய இயக்குநர் வெற்றி மாறன், படத்தின் மேக்கிங் குறித்தும் இளையராஜா, சூரி மற்றும் விஜய்சேதுபதி குறித்தும் பேசியிருந்தார்.

படத்தின் மேக்கிங் பற்றி பேசிய அவர், "இந்தப் படத்தை 4 கோடியில் பன்ணிடலாம் எனத் திட்டமிட்டு ஆரம்பிச்சேன். முதல் கட்டப் படப்பிடிப்பு 12 நாள் நடந்தது. அதை முடிச்சிட்டு வந்தப்போவே 4 கோடிக்குமேல ஆகிடுச்சு. வேற தயாரிப்பாளாராக இருந்திருந்தால் 'இந்தப் படம் வேண்டாம் பட்ஜெட் பெருசா போகுது, வேற எதாவது கதை பண்ணாலம்னு' தயாரிப்பாளர்கிட்டச் சொல்லியிருப்பேன். ஆனால், எல்ரெட் குமார் கிட்ட அப்படி நான் சொல்லல. அதற்குக் காரணம் தயாரிப்பாளருக்கு இப்படத்தின் மீது ஒரு பெரும் நம்பிக்கை இருந்தது. அவர்கிட்ட நான் கதை சொல்லும்போது ஒரு ரயில் விபத்து காட்சி இருக்குனு சொல்லியிருந்தேன்.

அதுக்கப்புறம் அதை எடுக்க அதிகமாக செலவாகும்னு அதைக் கைவிட்டுடேன். ஆனால், அவர் அதை ஞாபகம் வச்சிருந்து அந்த விபத்துக் காட்சியை ஏன் எடுக்கலனு ஆர்வமா கேட்டார். அதுக்கப்புறம் அந்த சீனை எடுக்கலாம்னு ப்ளான் பண்ணினோம். அதன் பட்ஜெட் இரண்டரை கோடினு நினைச்சோம். ஆனால், திட்டமிட்டதைவிட இரண்டு மடங்காக ஆகிவிட்டது. இது தயாரிப்பாளர் இப்படத்தின் மீது வைத்த நம்பிக்கையால்தான் சாத்தியமானது" என்றார். மேலும், "விடுதலை மாதிரியான படத்தில் நடிப்பது எளிதான விஷயமல்ல. சரியான அடிப்படை வசதிகள் இருக்காது. திடீரென மழை, பனி அடிக்கும், வெயில் அடிக்கும். சொகுசாக இருக்கப் பழகிய நடிகர்கள் இதில் நடிப்பது ரொம்ப கஷ்டம்" என்றார்.
இதையடுத்து சூரி பற்றி பேசிய அவர், " 'அசுரன்' படத்திற்குப் பிறகு சிம்பிளாக ஒரு படம் பண்ணலாம்னு நினைச்சேன். அதில் சூரி நடித்தால் சரியாக இருக்கும் என்று அவரிடம் பேசினேன். அது அப்படியே வளர்ந்து பெரிய படமா மாறிடுச்சு. சூரி எங்களுடன் ஒருவராக இருந்து வேலை செஞ்சார். நான் கலைஞர்கள் படும் கஷ்டங்கள் பத்தி சில நேரங்களில் யோசிக்க மாட்டேன். சுமார் ஒரு கி.மீ தூரத்திலிருந்து சூரியை ஓடி வரச் சொன்னேன். அவர் எதுவும் சொல்லாம ஓடி வருவார். ஒரே ஷாட் அது. பத்து முறைக்குமேல் அந்தக்காட்சியை எடுத்தாலும் சளைக்காமல் மீண்டும் மீண்டும் அங்கிருந்து ஓடி வந்தார். கடைசியா ஷாட் முடிஞ்சதும் ஷூ-வில் ஆணி குத்திக்கிட்டே இருக்குன்னு சொன்னார். அதையெல்லாம் தாங்கிக் கொண்டு அர்ப்பணிப்புடன் அவர் நடித்தால்தான் படம் தத்ரூபமாக வந்திருக்கு" என்றார்.

விஜய் சேதுபதி பற்றி பேசிய வெற்றி மாறான், " உண்மையில் விஜய் சேதுபதிக்கு 8 நாள் படப்பிடிப்பு என்று நம்பிதான் விஜய் சேதுபதியிடன் சொன்னேன். ஆனால், அந்த மலையில எப்படி படம் எடுக்கறதுன்னு எனக்குத் தெரியல. அதனால்தான் அவரின் காட்சிகளை எடுக்கறதுக்கு நீண்டநாள் ஆச்சு. 8 நாள் என்று கிட்டத்தட்ட 65 நாள்கள் விஜய் சேதுபதியை வச்சு படப்பிடிப்பு நடத்தினோம். அவரை நாங்க இப்பவும் வாத்தியார்ன்னு தான் சொல்றோம். அந்த அளவுக்கு வாத்தியார் கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போய்விட்டார் விஜய் சேதுபதி. இரண்டாம் பாகம் முழுக்க விஜய் சேதுபதிதான் வருவார்" என்றார். இறுதியாக, I'm not an intelligent person or a creative person. I have a very logical mind and i'm not scared of working hard. I owe all my success to balu mahendra sir and my assistants. என்றவர் அடுத்து விடுதலை 2 , அதன் பிறகு வாடிவாசல், வட சென்னை 2 எடுக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறினார்.