வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `விடுதலை'. இப்படத்தில் பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ஆடுகளம் நரேன், பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரப்போகிறது. முதல் பாகம் வரும் மார்ச் 31ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. 'விடுதலை' படப்பிடிப்பின் போது விபத்தில் உயிரிழந்தவருக்கு ஒரு நிமிட அமைதி அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியிடப்பட்டது. இளையராஜா மற்றும் படக்குழுவினர் அனைவரும் மேடையில் ஏறிப் படத்தின் இசையை வெளியிட்டனர்.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் வெற்றி மாறன், "இந்த 'விடுதலை' படத்தின் தொடக்கமே ராஜா சார்தான். ஒரு 45 நிமிடம் படத்தை எடுத்துட்டு வந்து ராஜா சார்கிட்ட காமிச்சேன். அதன் காட்சிகளைப் பார்த்துட்டு ராஜா சார் ட்யூன் பண்ணதுதான் 'வழி நெடுக காட்டுமல்லி' பாடல். இந்தப் பாடலை கம்போஸ் பண்ணும் போதே 'நான்தான் இதற்குப் பாட்டு எழுதுவேன்'ன்னு சொல்லிட்டுதான் ராஜா சார் இந்தப் பாட்ட எழுதினாங்க. அதன்பிறகு, 'பின்னணி இசை இருந்தால் காட்சிகள் எடுப்பதற்கு நல்லா இருக்கும்' என்று சொன்னேன். 'சரி, என்ன மாதிரியான இசை வேண்டும்?' என்று கேட்டார்.

என் மனதில் ஓர் உணர்ச்சி இருக்கு. அந்த உணர்ச்சிகளுக்கு ஒரு வார்த்தை சொல்றேன். அந்த வார்த்தையை அவர் உள்வாங்குகிறார். அதை வைத்து ஒரு இசையை உருவாக்குகிறார். என் மனதில் என்ன உணர்வோடு அந்த வார்த்தையைச் சொன்னேனோ அதே உணர்வு அந்த இசையைக் கேட்கும்போதும் எனக்குள் ஏற்பட்டது. என் உணர்வு ஒரு வார்த்தையாகி, அதை அவர் உள்வாங்கி ஒலியாய் கொடுக்கும் அந்தத் தருணம் எனக்குப் பெரிய அனுபவமாக இருந்தது. இளையராஜா சாரோட மியூசிக்கல் மைண்ட் எப்படி இருக்கும் என்பதைப் பக்கத்திலிருந்து பார்த்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவரின் சின்ன வயசு அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டது பெரிய படிப்பினையாக இருந்தது. அவர் என்னுடன் பேசிய அனைத்தையும் வைத்து நிறையக் கற்றுக் கொண்டேன்" என்று சிலாகித்துக் கூறினார்.
மேலும், ரசிகர்கள் 'தலைவா...தலைவா' என்று சத்தமிட பேச ஆரம்பித்த வெற்றிமாறன், "கொஞ்ச நாளுக்கு முன்னாடி பேட்டி ஒன்றில் 'சினிமா நடிகர்களை தலைவர்கள் என்று சொல்வது எனக்கு ஏற்புடையதாக இல்லை' என்று சொன்னேன். இயக்குநர்களுக்கும் அது பொருந்தும். எனவே தலைவா என்று சொல்லாதீர்கள்" என்று கூறியவர் படத்தில் பணியாற்றிய எல்லா தொழிலாளர்கள் பெயர்களையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.