
எம்.ஜி.ஆருக்கே இதுல அஞ்சு லுக் இருக்கும். அரவிந்த்சாமி சார் கதையை உள்வாங்க கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டார். வந்த பிறகு அவ்ளோ இன்வால்மென்ட்.
'இது எங்க ஏரியா’ என ஆண்களே கோலோச்சிய அரசியல் களத்தில் ஒற்றைப் பெண்ணாய் துணிச்சலாக இறங்கி, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் ஜெயலலிதா. அவரது வாழ்க்கையை ‘தலைவி’யாக இயக்கியிருக்கிறார் ஏ.எல்.விஜய். சினிமாவைத் தாண்டி அரசியல் வட்டாரத்திலும் எதிர்பார்ப்பை அள்ளியிருக்கும் இப்படத்துக்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த விஜய்யிடம் பேசினேன்.

``திடீர்னு பயோபிக் பக்கம் தாவிட்டீங்க. ஜெயலலிதாவின் பயோபிக் எடுக்க நினைச்சது ஏன்?’’
“எந்தத் திட்டமிடலும் இல்லாம தற்செயலா ஆரம்பிச்ச புராஜெக்ட். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்தப் படத்தோட தயாரிப்பாளர் விஷ்ணுவர்த்தன் இந்தூரி சார் என்னைக் கூப்பிட்டார். ‘ஜெயலலிதாம்மாவின் பயோபிக் படம் பண்ணுவோம்’னார். ஏற்கெனவே அவர் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், என்.டி.ஆர் ஆகியோரின் பயோபிக் படங்களைத் தயாரிச்சிருக்கார்.
ஒரு விஷயத்துல நான் உறுதியா இருந்தேன். ‘இது ரொம்பவும் சென்சிட்டிவான பயோபிக். ஜெயலலிதா டெல்லி வரை அறிமுகமான ஒரு அரசியல் தலைவர். அவங்க வாழ்க்கையைச் சொல்லும்போது கவனமா கையாளணும். அப்படிப் பண்றதுக்கு சாத்தியம் இல்லேனா, அந்த ஐடியாவைக் கைவிட்டுடலாம்’னு அவர்கிட்ட சொன்னேன்.
இந்த கண்டிஷனுக்குத் தயாரிப்பாளரும் சம்மதிச்சார். உடனடியா வேலைகளை ஆரம்பிச்சுட்டோம். கதை விவாதத்துல எங்களுடன் ‘பாகுபலி’ ரைட்டர் விஜயேந்திர பிரசாத் சார், அஜயன்பாலா, என்.குமார்னு பலரும் உட்கார்ந்து அலசி ஆராய்ந்து ஸ்கிரிப்ட்டை ரெடி செய்த பிறகே ஷூட் கிளம்பினோம்.”


``ஜெயலலிதாவின் வாழ்க்கையில் ஆச்சரியங்கள், துணிச்சல், சாதனைகள், மர்மங்கள்னு பல பக்கங்கள் இருக்கு. நீங்க எதைப் பத்திப் பேசியிருக்கீங்க..?’’
‘`ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திடுறேன் சார். இது அரசியல் படமல்ல. அரசியலுக்குள்ளும் நாங்க போகல. ஜெயாம்மான்னாலே இன்ஸ்பிரேஷனல் லேடி. பெண்களுக்கு அவங்க வாழ்க்கை உத்வேகம் அளிக்கக்கூடியது. ஆணாதிக்கம் மிகுந்த இந்த உலகத்துல ஒரு பெண் தனியா நின்னு நடிகையாகி, அரசியல்லேயும் குதிச்சு, ரெண்டுலயும் ஜெயிச்சிருக்கார்.
அவங்களோட சினிமா கரியரைப் பத்தி, சுவாரசியமான சம்பவங்கள் பத்திப் பேசியிருக்கோம். 1965-ம் ஆண்டில் வெளியான ‘வெண்ணிற ஆடை’ படத்துல ஜெயலலிதாம்மா அறிமுகமானாங்க. அங்கிருந்து ஆரம்பிக்குது கதை. முதல்முறையா அவங்க முதலமைச்சரா பதவி ஏற்கும் நிகழ்வு வரை, அதாவது 1991-ம் ஆண்டுக் காலகட்டம் வரை இருக்கும். இதை இந்தியா முழுமைக்குமான படமாதான் பண்ணியிருக்கோம். இந்தி, தெலுங்கிலும் ரிலீஸ் ஆகப்போகுது. ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத், எம்.ஜி.ஆரா அரவிந்த்சாமி சார், எம்.ஜி.ஆரின் மேனேஜராக சமுத்திரகனி சார் என்று கதைக்கான ஆட்கள் நிறைய பேர் இருக்காங்க. ஒவ்வொரு கேரக்டரையும் நம் கண்முன் கொண்டு வந்ததுல மேக்கப்மேன் பட்டணம் ரஷீத் சாருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கு. இந்தப் படத்தோட தூணே அவர்தான்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைச்சிருக்கார். அவருக்கும் எனக்குமான நட்பு எல்லாருக்குமே தெரியும். பத்துப் படங்களுக்கு மேல அவரோட ஒர்க் பண்றேன். இதுல ஆறு பாடல்களும், ஆர்.டி.பர்மன், எம்.எஸ்.வி. சார் ஸ்டைல்ல வந்திருக்கு. பின்னணி இசை மிகப்பெரிய ஹைலைட்டா வந்திருக்கு. அந்தந்தக் காலகட்டத்துக்கே கொண்டு போயிடுவார். விஷால் விட்டல் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். அவருக்கு இது ரெண்டாவது படம். சென்னை தவிர ஹைதராபாத், மைசூர்லேயும் படப்பிடிப்பு நடத்தியிருக்கோம்.”

``என்ன சொல்றாங்க கங்கனா ரணாவத்?’’
“ஒரு படத்துக்காகத் தங்களை முழுமையா ஒப்படைக்கற ஆர்ட்டிஸ்ட்கள் ரொம்பவே குறைவு. அதுல ஒருத்தர் கங்கனா மேடம். விஜயேந்திர பிரசாத் சார்தான் அவங்ககிட்ட கதை சொன்னாங்க. கங்கனா ரொம்பவும் ஸ்லிம். ஜெயாம்மா முகம் ரவுண்ட் ஃபேஸ். ஒருத்தர் மாதிரியே இன்னொருத்தருக்கும் இருக்கணும்னு எதிர்பார்க்க முடியாது. ஆனா, ஜெயாம்மா ரோல்ல நடிக்கும்போது அவங்க முகத்தைப் பதிய வைக்கணும் இல்லையா? அதுக்காக ஹாலிவுட் வரை மேக்கப் முயற்சி பண்ணினோம். டெஸ்ட் ஷூட் பண்ணினோம்.
16 வயசில இருந்து 45 வயசுவரைக்கும் உள்ள காலகட்டத்தைச் சொல்றதால, அதுக்கேத்த மாதிரி உடல் எடை குறையும், கூடும். கங்கனா அதை உணர்ந்து 17 கிலோ வெயிட்டை அதிகரிச்சாங்க. ரெண்டாவது பாதியில் இருந்துதான் ஷூட் தொடங்கினோம். அதன்பிறகு முதல் பாதிப் போர்ஷன் எடுக்க வேண்டியிருந்தது. அதிகரிச்ச உடல் எடையை அதுக்காக அப்படியே குறைச்சாங்க. தமிழுக்கென டியூஷன் வச்சு, என்கிட்ட டயலாக்கையெல்லாம் கேட்டு வாங்கி, ஸ்பாட்டுக்குத் தயாரா வந்து நிப்பாங்க. அவங்களுக்கு ஆறு லுக் இருக்கும். அத்தனையும் பர்பெக்ஷனா செய்தாங்க.”

``எம்.ஜி.ஆர் ரோலுக்கு அரவிந்த்சாமி சரியா பொருந்தியிருக்காரா?’’
“அந்த ரோல்ல நடிக்க எனக்கிருந்த ஒரே ஆப்ஷன் அரவிந்த்சாமி சார் மட்டும்தான். அவர்கிட்ட ஸ்கிரிப்ட்டைச் சொல்லலாம்னு பேசினா, ‘என்னால இதைப் பண்ணமுடியுமான்னு தெரியல... நோ’ன்னு சொல்லிட்டார். ‘ஸ்கிரிப்டைக் கேட்டுட்டு முடிவு பண்ணுங்க’ன்னு சொன்னேன். அப்புறம் கேட்டார். எம்.ஜி.ஆருக்கே இதுல அஞ்சு லுக் இருக்கும். அரவிந்த்சாமி சார் கதையை உள்வாங்க கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டார். வந்த பிறகு அவ்ளோ இன்வால்மென்ட். சின்னச் சின்ன மேனரிசங்களைக்கூட நுணுக்கமா பண்ணினார். மிட் நைட் ஆனாலும்கூட ரோலுக்கான ரெஃபரன்ஸ் எடுத்து அனுப்புவார். அவரோட சின்ஸியாரிட்டி அழகு. ஹேட்ஸ் ஆஃப் யூ சார். கங்கனா மேடத்துக்கும் அவருக்குமான கெமிஸ்ட்ரிதான் படம். ஒரு குருவுக்கும் தொண்டருக்குமான பிணைப்பு இயல்பா வந்திருக்கு.”


``ஜெயலலிதா ஹீரோயினா அறிமுகமானதுல இருந்து, முதல்வரானது வரை சொல்றீங்க... அதுல உங்களைக் கவர்ந்த போர்ஷன் எது?’’
“முதல் நாள் ஷூட் ஆரம்பிச்சதுல இருந்து பிரமிப்பான மனநிலையில்தான் இருந்தேன். படத்துக்கான ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ணும்போதே, புத்தகங்கள் நிறைய படிச்சேன். நம்மளோட சினிமா வரலாறும், அரசியல் வரலாறும் பத்தி அவ்ளோ டீட்டெயிலா படிக்க முடிஞ்சது. எந்த தேதியில் என்ன நடந்ததுன்னு என்னால இப்ப அக்குவேறா ஆணிவேறா சொல்ல முடியும். வலம்புரி ஜான், ஆர்.எம்.வீ, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று பலரும் புத்தகங்கள் எழுதியிருக்காங்க. ஒரே விஷயத்தைப் பல புத்தகங்கள்ல வெவ்வேறு விதமா சொல்லியிருப்பாங்க. அப்ப கொஞ்சம் குழப்பம் வரும். எது சரியானதுன்னு கணிக்கறது பெரிய சவாலா இருந்துச்சு. ஜெயாம்மா 16 வயசிலேயே முன்னணி நடிகை ஆகிட்டாங்க. எம்.ஜி.ஆரோடு மட்டும் 28 படங்கள் சேர்ந்து நடிச்சிருக்காங்க. ‘அடிமைப்பெண்’ல அவங்களுக்கு டபுள் ஆக்ஷன்னால அதுல நடிக்க அவங்க ரொம்ப சிரமப்பட்டாங்கன்னு படிச்சேன். எல்லாமே விரும்பி, சந்தோஷமா நடிச்சிருக்காங்க. இயற்கையாகவே அவங்க கிஃப்டட். அவங்களுக்கு நடிப்பு, டான்ஸ் எல்லாம் இயல்பா வரும். பிரமாதமான கிளாசிக்கல் டான்சர். ‘ஆயிரத்தில் ஒருவன்’ மிகப்பெரிய படம். இன்னொரு விஷயம், ஜெயலலிதா வாழ்க்கையில அவ்ளோ சம்பவங்கள் இருந்தன. எதை எடுக்கறது, எதைத் தவிர்க்கறதுங்கறது பெரிய சவாலா இருந்துச்சு.”
``கதையில மத்த கட்சித் தலைவர்களும் இருக்காங்க. அவங்கள எப்படிச் சித்திரிச்சிருக்கீங்க?’’
“மறுபடியும் சொல்றேன். இது ஒரு அரசியல் படம் கிடையாது. இந்தப் படம் யாரையும் தப்பு சொல்றதோ, குறை சொல்றதோ கிடையாது. ஒரு தனிப்பட்ட பெண்ணின் சாதனையைப் பேசும் படம் இது. இந்தப் படம் எடுக்கறதுக்கு முன்னாடியே கவனமா இருந்தோம். எல்லாருமே மரியாதைக்குரிய தலைவர்கள். யாரையுமே தப்பா காட்ட மாட்டோம்னு உறுதியா நின்னோம். எல்லாருமே மக்கள் மனசுல இன்னமும் வாழ்ந்திட்டு இருக்கறவங்க. அதனால சென்சிட்டிவா பண்ணியிருக்கோம். இது சரி, அது தவறுங்கற விஷயத்துக்குள்ளேயும் நாங்க போகல. ஹீரோ, வில்லன் என்கிற விஷயத்துக்குள்ளும் போகல.”