சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“மத்த மொழிப்படம் பார்க்கவே மாட்டேன்!”

பாபுதமிழ், வே.ஜெ.கோபிநாத்
பிரீமியம் ஸ்டோரி
News
பாபுதமிழ், வே.ஜெ.கோபிநாத்

எல்லாத் தமிழ்ப்படத்தையும் பார்த்துட்டு, ஏதாவது ஒரு இங்கிலிஷ் படத்தப் பார்த்து காப்பியடிச்சதுன்னு சொல்லுவாங்க.

ந்தப் படத்துக்கு அதைச் சொல்ல முடியாது. ஏன்னா நாங்க தமிழைத் தவிர வேற எந்த மொழிப் படமும் பார்த்ததில்லை” எனக் கலகலப்பாக நம்முடன் உரையாடலைத் தொடங்கினர், அண்மையில் வெளியாகி மக்களின் வரவேற்பைப் பெற்ற ‘ஜீவி’ திரைப்படத்தின் இயக்குநர் வே.ஜெ.கோபிநாத்தும் திரைக்கதை ஆசிரியர் பாபுதமிழும்.

“மூணு வருஷமா இந்தக் கதையை நிறைய ஹீரோக்கள் கிட்ட சொல்லியிருக்கேன். எல்லாருக்கும் கதை பிடிச்சது. ஆனா, வெவ்வேறு காரணத்தால நடக்காமப்போயிடுச்சு. இப்போ இவ்வளவு பெரிய வரவேற்பு” என்று சொல்லும்போதே கோபிநாத் வார்த்தைகளில் உற்சாக ஊற்று.

“மத்த மொழிப்படம் பார்க்கவே மாட்டேன்!”

“படம் எடுக்கும்போதே இப்படியொரு வரவேற்பு கிடைக்கும்னு நினைச்சிங்களா?”

“எனக்கு, கடைசி நிமிடம் வரை ஒரு பதற்றம் இருந்தது. ஆனா. இவருக்குச் சுத்தமா இல்ல. அவ்வளவு நம்பிக்கை இருந்தது” என கோபிநாத் கூற, “ஆமா. என் கதை மேல எனக்கு அத்தனை நம்பிக்கை இருந்தது. நான் இந்தக் கதையை எந்த மனநிலையில எழுதினேனோ, அதைச் சரியாப் பிரதிபலிச்சு இவர் இயக்கும்போதே எனக்குப் பெரிய நம்பிக்கை வந்திடுச்சு” என பாபு கூறினார். மேலும் தொடர்ந்த கோபி, “நான் படம் வெளியாகுறதுக்கு ஒரு வாரம் முன்னாடிவரை எடிட்டிங், சவுண்டு மிக்ஸ்னு பல ஏரியாவுல நிறைய திருத்தம் பண்ணிக்கிட்டே இருந்தேன். இவருதான் போதும், படம் நல்லாதான் வந்திருக்குன்னு நிறுத்தினார்” என்றார்.

“இப்போ தமிழ் சினிமாத் துறையில, நிறைய கதைத்திருட்டுக் குற்றச்சாட்டெல்லாம் வருது. கதை, திரைக்கதை ஆசிரியர்களுக்கு சரியான அங்கீகாரம் தரப்படுறதில்லைன்னு சொல்றாங்க. ஆனா, நீங்க உங்க திரைக்கதை ஆசிரியரைப் போற இடத்துக்கெல்லாம் கூட்டிக்கிட்டே போறீங்களே?”

கோபி: “இந்தக் கேள்விய, பலர் என்கிட்ட கேக்கிறாங்க. ஆனா, ஏன் கேக்கிறாங்கன்னுதான் தெரியல. இவரும் நானும் பத்து வருஷமா நண்பர்கள். இத்தன வருஷத்துல நான் எவ்வளவு உழைச்சிருக்கேனோ, அதுக்கு நிகரா இவரும் உழைச்சிருக்கார். அந்த உழைப்புக்கு நான் கிரெடிட் கொடுத்துத்தானே ஆகணும்? இன்னொருத்தரோட வேலைய என்னோடதுன்னு சொல்லி, சம்பாதிச்சு சாப்பிடவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.”

“ `8 தோட்டாக்கள்’ இயக்குநர் ஸ்ரீகணேஷ், வெற்றியோட நடிப்பை, அவரோட படத்துல யாரும் பாராட்டல, ஆனா உங்க படத்துல பாராட்டுறாங்கன்னு சொல்லி முகநூல்ல பதிவு எழுதினார். அப்படி வெற்றிக்கு என்ன மாதிரியான பயிற்சி கொடுத்தீங்க?”

“மத்த மொழிப்படம் பார்க்கவே மாட்டேன்!”

கோபி: “நாங்க முதல்ல எடுத்த முடிவு, கண்டிப்பா வெற்றியை அவரோட முதல் படத்துல பார்த்த மாதிரி இதுல பாக்கக் கூடாதுன்னுதான். ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடிக்கிறதுதான் ரொம்ப கஷ்டம். அதுக்குத்தான் நிறைய உழைச்சிருந்தார் வெற்றி. எங்க படத்தோட ஆடிஷனே அரைநாள்தான் நடந்தது. இதுல உள்ள வெற்றி முழுக்க முழுக்க வேற வெற்றி.”

“பொதுவா ஒரு படத்துல ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்து றாங்கன்னா, அந்தப் புத்தகம் அதுக்குப்பிறகு நல்ல வியாபாரமாகும். பா.இரஞ்சித், சமுத்திரக்கனி, தியாகராஜன் குமாரராஜா மாதிரி பல இயக்குநர்கள் நல்ல புத்தகங்களைத் திரையில் காட்டியிருக்காங்க. ஆனா உங்க படத்துல காட்டுன எந்தப் புத்தகமும் ஒரு புகழ் பெற்ற புத்தகமா இல்லையே?”

பாபு: “காரணம் ஒண்ணுமில்ல. அப்படியெல்லாம் புத்தகமே இதுவர எழுதப்படலை. எல்லாமே நான் கதைக்காக சேர்த்ததுதான். இதுக்காகவே வடிவமைத்த அட்டைமட்டும்தான். எனக்கு வாசிப்புப் பழக்கம் சுத்தமா கிடையாது. ஆனா பா. இரஞ்சித், சமுத்திரக்கனி மாதிரி இயக்குநர்கள் எல்லாம் அவங்க படத்துல ஒரு புத்தகத்தைக் காட்டுறாங்கன்னா, அவங்க அதைப் படிச்சிட்டு அதோட ஆழமான கருத்தை உணர்ந்து எடுக்குறாங்க. நான்தான் ஒண்ணுமே படிக்க மாட்டேனே.”

“மற்ற மொழிப் படம், புத்தகம், இப்படி எதுவும் இல்லாம, எப்படி படைப்பாளி ஆக முடிஞ்சது?”

பாபு: “நான் மற்ற மொழிப் படம்தான் பார்க்கமாட்டேன். ஆனா, தமிழ் சினிமாவா பார்த்து ஊறிப்போனவன். பாலசந்தர், பாக்யராஜ் மாதிரி இயக்குநர்களோட படங்கள் எல்லாமே எனக்கு அத்துப்படி. அதைப் பார்த்துதான் நான் சினிமாவே கத்துக்கிட்டேன். என் தம்பி எல்லா மொழிப் படமும் பார்ப்பான். ‘த்ருஷ்யம்’ வந்தப்போ அவன் என்கிட்ட வந்து நீ இந்தப் படத்த கண்டிப்பா பார்க்கணும்னு ரொம்ப வற்புறுத்தினான். அதான் கமல் சார் ‘பாபநாசம்’ நடிக்கிறாருல்ல. நான் அதையே பார்த்துக்குறேன்னு சொன்னேன். இப்போவும் ‘அர்ஜுன் ரெட்டி’ படம் பார்க்கச் சொன்னாங்க. நான் ‘ஆதித்யா வர்மா’ பார்த்துக்குறேன்னு சொல்லுறேன். நான் சுயம்புவா இருக்க விரும்புறேன். இன்னொருத்தர் எழுதிய புத்தகத்தைப் படிச்சா, அவருடைய கருத்தின் தாக்கம் எனக்கு வந்திடும். அதை நான் விரும்பல.”

கோபி: “உலக சினிமா எடுக்க, உலக சினிமா பார்க்கணும்னு அவசியமில்ல. நம்ம ஊருல, நம்ம மொழியில நல்ல படங்கள் நிறைய வருது. அதெல்லாம் பார்த்தே நல்ல சினிமா கத்துக்கலாம்.”

“பொதுவா ஹீரோன்னா ரொம்ப நல்லவன், மக்களுக்கு நல்லது பண்ணுறவன், அப்படி இப்படின்னு தூய்மைப்படுத்தப்பட்ட ஒரு பாத்திரப் படைப்பா இருக்கும். ‘ஜீவி’ படத்தோட ஹீரோ இவ்வளவு குறைகளோட, குற்றங்களோட இருக்கக் காரணம் என்ன?”

பாபு: “ஒருவேளை என்னோட எழுத்துமுறையா இருக்கலாம். ஏன்னா நான் எழுதியிருக்குற வேற மூணு கதைகளும் இப்படித்தான் இருக்கு. எனக்கு மனிதர்களோட கிரே பக்கங்கள் ரொம்பப் பிடிக்கும். அதுக்குக் காரணம், நான் கண்டிப்பா முழுக் கறுப்பும் இல்ல, வெள்ளையுமில்ல, கிரேதான். அந்தக் கேரக்டர்தான் என் பாத்திரங்கள்கிட்ட தெரியுது.”

“சிவப்பு லைட், பச்ச லைட், கலர் பேலட்டுன்னு, படத்தோட டெக்னீஷியன்ஸ ரொம்ப வேலை வாங்கியிருப்பீங்கபோல?”

கோபி: “வேலை வாங்கினேன்னு சொன்னா சரியிருக்காது. இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு கூட்டுமுயற்சி. நீங்க சொல்லுற கலர் லைட்டிங், ஹீரோ வீடு, கலர் எல்லாம் ஒளிப்பதிவாளர் முடிவு பண்ணினது. இதுதான் சீன், இதுதான் கேரக்டர்களோட மூட், அப்படின்னு சொன்னா, இதெல்லாம் வேணும்னு அவர் சொன்னார். அதை நாங்க செஞ்சோம். அதேபோல, படம் பண்ணினா, கண்டிப்பா பிரவீன் சார்தான் எடிட்டர்னு எப்பவோ முடிவு பண்ணினேன். அவர்கிட்டதான் என்னோட கதையைக் கொடுத்தா அது நான் நினைச்ச மாதிரிவெளியாகும்னு நம்பினேன். இயக்குநருக்கான சுதந்திரம் தரக்கூடிய ஒரு படத்தொகுப்பாளர். உங்களுக்குப் படம் பார்க்கும்போதே தெரியும். இதுமட்டுமில்ல. ஒலிக்கலவை, ஆர்ட் டிப்பார்ட்மென்ட்டுன்னு எல்லாருமே அவ்வளவு உழைச்சிருக்காங்க.”