
இயற்கையும் இறைவனும்தான் காரணமாக இருக்கலாம். என்னால் தாமதம் நேர்வதில்லை. ‘இருட்டு' படத்தின் அவுட் லைனை நாலு நாட்களில் முடித்தேன். திரைக்கதையில் என் பங்கை எப்போதும் நிறைவாகவும், விரைவாகவும் செய்திருக்கிறேன்
“ஆக்ஷன் என்ற வரையறைக்குள்ள வர்ற படம்தான் ‘தலைநகரம் 2'. ஆனால் ரியலிசமா செய்திருக்கேன். பொதுவாக ஆக்ஷன் படங்களை அப்படிக் கையாள மாட்டாங்க. நான் அப்படி முயற்சி செய்து பார்த்திருக்கேன். சினிமாவில் பார்க்கிற மாதிரி கேங்ஸ்டர்களோ, தாதாக்களோ நிஜத்தில் இல்லை. சரசரன்னு பத்து இருபது பேரோட காரில் வந்து இறங்குகிறவர்களையே பார்த்துப் பழகிட்டோம். ஆனால் நிஜத்தில் டான் இங்கே சாதாரண புல்லட்டில் போய் வந்துட்டு, டீக்கடையில் தேநீர் அருந்துவான். அவனுக்குப் பின்னாடி எந்நேரமும் கூட்டமாக அடியாட்கள் நிற்க மாட்டாங்க. தேவைப்படும்போது வருவாங்க. ஒரு தாதாவின் வாழ்க்கையைப் பத்தி இதில் சொல்லியிருக்கேன். ஒவ்வொரு தாதாவிற்கும் ஒரு ஸ்டைல், செயல்படுகிற விதம்னு இருக்கும். அதில் சில விஷயங்களை அவங்க உலகத்திலிருந்து எடுத்து வடிவமைச்சு ‘தலைநகரம் 2' வந்திருக்கு. நிச்சயம் மனம் கவரும்னு உறுதியளிக்கிறேன்'' - தீர்மானமாகப் பேசுகிறார் வி.இசட்.துரை. தமிழ் சினிமாவில் கடந்த 23 வருடங்களாக நிலைபெற்றிருக்கும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர்.
‘‘முந்தைய ‘தலைநகர'த்தின் தொடர்ச்சியா இது?’’
‘‘அப்படிச் சொல்ல முடியாது. ‘தலைநகரம்' படத்திலிருந்து அந்தத் தலைப்பையும், ‘ரைட்' என்கிற சுந்தர்.சியின் கேரக்டரையும் கையில் எடுத்திருக்கேன். எனக்கு ஒரு தீவிரமான கேங்ஸ்டர் தேவைப்பட்டார். ஏற்கெனவே ‘ரைட்' கேரக்டர் பிரபலமானது. அதிலிருந்து தொடர்ந்து கதையை அமைச்சுக்கிட்டேன். அவங்க தனி மனுஷங்கதான். ஆனால் சமயங்களில் அரசாங்கம் போல இருக்காங்க. அவங்க வெட்டுறது, குத்துறது எல்லாம் பகைக்காகவோ, சினேகிதத்திற்கோ, கெத்துக்காகவோ இப்படி பல விதங்களில் இருக்கு. வெறும் பணத்திற்காக மட்டுமேன்னு சொல்லிட முடியாது. சமயங்களில் அவங்களுக்கு அது ஹீரோயிசம் மாதிரிகூட படுது. இன்னொருத்தரோட பயம் தன்னோட பலம் என்பதில் சந்தோஷமாகிடறாங்க. வெட்டுறது, குத்துறதில்கூட ஸ்டைல் வச்சிருக்காங்க. அப்படிப்பட்ட ஒருத்தனை தெளிவாக முழு நீள ஆக்ஷனில் கொண்டு வரப் பார்த்திருக்கேன்.''

‘‘சுந்தர்.சி வேற ஒரு வடிவத்தில் இருக்கார்...’’
‘‘இப்படி அவர் முழு ஆக்ஷன் படத்தில் நடிச்சதேயில்லை. சுந்தர் சாரின் ஸ்பெஷல் என்னன்னா ரொம்ப ஃபிளக்ஸிபிள். அவரை வச்சு ஒரு கிரியேட்டர் நினைச்சதைச் செய்து பார்க்க முடியும். உருவம், நடை, உடைன்னு நிறைய மாத்திக்கிட்டார். அந்த உயரத்திற்கும் கம்பீரத்துக்கும் ஆக்ஷன் கைவந்தது. ‘என் படத்திற்குக்கூட இவ்வளவு தூரம் நான் ஒர்க் பண்ணினதில்லை’ என்று சொன்னார். நான் என்ன ஃபீல் பண்ணுறேன் என்பதை அவர் சிறப்பாக வெளியே கொண்டு வந்தார். அது எனக்கும் அவருக்கும் ரசிகர்களுக்கும் புதுமையாகவும் அசலாகவும் இருக்கும். அவருடைய இத்தனை வருட அனுபவம் இயல்பாகக் கை கொடுப்பதை என் கண்களால் பார்த்தேன். அவரது வயசுக்கும் ஆளுமைக்கும் ஏற்ற மாதிரி அழகான விஷயங்களை இதிலிருந்து ஆரம்பிச்சு அவர் இன்னும் செய்யலாம். அவருடைய அக்கறையை நான் திரும்பத் திரும்பக் குறிப்பிடும்போது அதில் பொருள் இருப்பதாக நினைக்கிறேன்.''
‘‘ஹீரோயின்கள் இரண்டு பேர் இருக்காங்க போல...’’
‘‘பாலக் லால்வானி, ஐரான்னு இரண்டு பேர். இதுதான் கதைன்னு முடிவான வேகத்தில் அதுக்கான எல்லா ஆர்ட்டிஸ்ட்களையும் முடிவு பண்ணிட்டேன். பாலக், ஐரா இரண்டு பேரின் கேரக்டரும் முக்கியமானது. இப்போ படம் ரெடியான நேரத்தில் என் தேர்வு சரிதான்னு தோணுது. அந்த கேரக்டர்களை வேற யார் செய்திருந்தாலும் நல்லா செய்திருக்க முடியுமாங்கிற அளவுக்கு பல இடங்களில் இருக்கு. தம்பி ராமையா தத்துவம் பேசுகிற ஒரு இஸ்லாமியர் கேரக்டரில் வருகிறார். நாலு வில்லன்களைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கேன். ஒளிப்பதிவை கிருஷ்ணசாமியும், இசையை ஜிப்ரானும் கையாண்டிருக்கிறார்கள். இது ஜிப்ரானிற்கு முக்கியமான படமாக இருக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். படம் பார்த்தவர்கள் அதையே என்னிடம் சொல்கிறார்கள்.''
‘‘கலாபூர்வமான படங்களில் தெரிய வந்திருக்கிறீர்கள். ஆனால் இடைவெளி வந்துவிடுகிறதே!’’
‘‘இயற்கையும் இறைவனும்தான் காரணமாக இருக்கலாம். என்னால் தாமதம் நேர்வதில்லை. ‘இருட்டு' படத்தின் அவுட் லைனை நாலு நாட்களில் முடித்தேன். திரைக்கதையில் என் பங்கை எப்போதும் நிறைவாகவும், விரைவாகவும் செய்திருக்கிறேன். நாவலாசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் எப்போதும் ஆச்சரியப்படுவார். படிக்கும்போதே சினிமாவிற்கு வந்தேன். ‘முகவரி' அவ்வளவு இளமையில் எடுத்ததுதான். யாரிடமும் உதவியாளராகப் பணிபுரிந்ததில்லை. மானசீகமான குருக்களாக மணிரத்னம், பாசில், மகேந்திரன், ராம்கோபால் வர்மாவை முன் வைத்துதான் சினிமாவை எடுக்கிறேன்.
இதுவரை ஒன்பது படங்கள் எடுத்திருக்கிறேன். ‘6 மெழுகுவர்த்திகள்', ‘நேபாளி' என இன்னும் பொருளில், ஸ்டைலில் பேசப்படுகிற படங்கள் இருக்கின்றன. எனக்கு சினிமாதான் சார் லைஃப்! 23 வருடங்களாக இந்த சினிமா என்னை அரவணைத்துக்கொண்டே இருக்கிறது. விடிய விடிய சினிமாவைப் பத்திப் பேசிட்டிருந்தாலே போதும், அதுவே பெரிய சந்தோஷம்னு சின்ன வயதிலிருந்து வாழ்றவன் நான். இத்தனை கோடி மக்களை இம்ப்ரஸ் பண்ணுற ஒரு பெரிய மீடியத்தில் இருக்கோம் என்பதுதான் சந்தோஷம். அடுத்து ‘தொட்டி ஜெயா-2, இருக்கு. சிம்புதான் நடிப்பார். ஏற்பாடுகள் முழுசா போயிட்டிருக்கு.''
தலைநகரம் 2 -ஆல்பம்
தலைநகரம் 2 படத்தில்...‘‘இத்தனை வருட அனுபவத்தில் நீங்கள் பெற்றது என்ன? செய்தது என்ன?’’
‘‘எந்தக் கலையாக இருந்தாலும் அதில் முடிந்த அளவு உண்மைய சொல்லணும்னு நினைப்பேன். நம்மோட உண்மை இன்னொருத்தருக்குப் பொய்யாக இருக்கலாம். இரண்டு பேரும் பொய்யாக இருந்தால் அது படைப்பாக முடியாது. 23 வருஷங்களில் ஒன்பது படங்கள்தான் செய்திருக்கேன். என் படம் பார்த்துட்டு வெளியே போற ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கை மேல் நம்பிக்கை வரும். சக மனிதர்கள் மேலே இன்னும் அன்பு கூடும். ஒண்ணு சொல்லட்டுமா... எனக்கு சினிமா தவிர வேற எந்த வேலையும் தெரியாது சார்!''