
இது சின்ன பட்ஜெட் படம்தான். ஆனா, தொழில்நுட்ப விஷயத்துல அருமையான ஆட்கள் இருக்கணும்னு நினைச்சேன். ‘தனி ஒருவன்' ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் ஒளிப்பதிவு செய்திருக்கார்.
``எங்க வீட்டுல பெண்களின் ஆதிக்கம் அதிகம். வீட்டுல எந்த ஒரு முடிவு எடுக்கறதா இருந்தாலும் அம்மா, சித்தி, அக்கான்னு அத்தனை பெண்களும் சேர்ந்தே எடுப்பாங்க. அது சரியான முடிவாகவும் இருக்கும். அப்படி ஒரு சூழலில் வளர்ந்ததால என் இன்ஸ்பிரேஷன் அவங்கதான். நான்கு பெண்களின் வெவ்வேறு விதமான வாழ்க்கைதான் இந்தப் படம். ஆனா, பெண்ணியப் பார்வையோடு நாங்க பேசல. அந்தக் கண்ணகி, நியாயத்தை நிலைநாட்ட மதுரையை எரிச்சாங்க. ஆனா எங்க ‘கண்ணகி', இந்தச் சமூகத்தில் புரையோடிக் கிடக்கற பிற்போக்குத்தனத்தை எரிக்கப் போறா. பெண்களின் உலகத்தை அவங்க பார்வையில் இருந்து சொல்லியிருக்கேன். அதனாலதான் மகளிர் தினம் அன்னிக்கு `கண்ணகி’ படத்தைக் கொண்டு வர்றோம்'' - திருப்தியாகப் பேசுகிறார், அறிமுக இயக்குநரான யஷ்வந்த் கிஷோர். இயக்குநர் மோகன் ராஜாவின் பட்டறையிலிருந்து வந்தவர் இவர்.


‘‘நான்கு பெண்கள்... நான்கு வாழ்க்கை... இது ஆந்தாலஜியா?’’
‘‘இல்ல. இது ஹைபர் லிங் ஜானர். ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் தொடர்பு இருக்காது. வெவ்வேறு கதைகள், வெவ்வேறு காலகட்டங்கள், அத்தனை பேரும் ஒரு விஷயத்தில் இணைகிறார்கள். அப்படி என்ன விஷயம் அது என்பதை உணர்வு பூர்வமா சொல்லியிருக்கேன். இந்தச் சமூகத்தில் நம்மைச் சுத்தி இருக்கும் பெண்கள்தான் இந்தக் கதையின் நாயகிகள். திருமணத்திற்குத் தயாராகும் ஒரு பெண் (அம்மு அபிராமி), விவாகரத்து ஆன ஒரு பெண் (வித்யா பிரதீப்), ‘கல்யாணமே ஒரு குப்பை' என நினைக்கற ஒரு பெண் (ஷாலின் சோயா), ஒரு கர்ப்பிணிப்பெண் (கீர்த்தி பாண்டியன்) என நான்கு பெண்களின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறேன். இவங்க தவிர, மயில்சாமி, மௌனிகா என கதைக்கு வலுவான நடிகர்கள் இருக்காங்க. யாருமே டப்பிங் பேசலை. எல்லாமே லைவ் ரெக்கார்டிங். அதைப் போல மேக்கப்பையும் கவனமாகத் தவிர்த்தோம்.''

‘‘தொழில்நுட்ப டீமும் வலுவா இருக்கே?’’
‘‘இது சின்ன பட்ஜெட் படம்தான். ஆனா, தொழில்நுட்ப விஷயத்துல அருமையான ஆட்கள் இருக்கணும்னு நினைச்சேன். ‘தனி ஒருவன்' ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் ஒளிப்பதிவு செய்திருக்கார். இந்தக் கதை தோணும்போதே, ‘இவர்தான் இசையமைக்கணும்'னு ஒருத்தர் மனசுல வந்து நின்னார். மலையாள இசையமைப்பாளர் ஷான் ரகுமான். கதைக்குத் தயாரிப்பாளர் கிடைக்கறதுக்கு முன்னாடியே ஷான் ரகுமானின் நம்பரை வாங்கிப் பேசி, கொச்சிக்கே போய் அவர்கிட்ட கதையைச் சொன்னேன். அவ்ளோ சந்தோஷமா வந்து இசையமைச்சிருக்கார். என் நண்பர் சரத், எடிட்டிங்கை கவனிச்சிருக்கார். என் முதல் படமே கமர்ஷியல் கதை இல்லை. தயாரிப்பாளர்கள் கணேஷ் சாரும், தனுஷ் சாரும் அவ்ளோ சுதந்திரம் கொடுத்தாங்க. அதிலும் கணேஷ் சார், ‘மராத்திப் படமான ‘சாய்ராட்' மாதிரி கதை இருந்தால் சொல்லுங்க'ன்னார். சென்னை, கோவை, பொள்ளாச்சி, வயநாடுன்னு படமாக்கினோம்.''
‘‘யூடியூபரா இருந்து இயக்குநர் ஆகியிருக்கீங்க... மோகன் ராஜாகிட்ட சேர்ந்தது எப்படி?’’
‘‘சொந்த ஊர் கோவை. சிவில் இன்ஜினீயரிங் முடிச்சிருக்கேன். காலேஜ் முடிச்சதும் என் கருத்துகளைச் சொல்ல யூடியூப்ல ‘ஸ்டுப்பிட் காமன் மேன்'னு ஒரு சேனல் ஆரம்பிச்சேன். என் வீடியோக்கள் பார்த்துட்டு பா.இரஞ்சித் சார், லோகேஷ் கனகராஜ் சார்னு நிறைய பேர் கூப்பிட்டுப் பேசியிருக்காங்க. ஆனா, என் சேனல் பார்த்துட்டு ‘நீ என்கிட்ட அசிஸ்டென்ட் ஆகிடுறீயா?'ன்னு கேட்டவர் மோகன் ராஜா சார்தான். அவர்கிட்ட கடைசி உதவி இயக்குநரா ‘வேலைக்காரன்' படத்துல ஒர்க் பண்ணினேன். ஸ்பாட்டுல ஒரு விஷயம் தோணினால், அவ்ளோ என்கரேஜ் பண்ணுவார். அனிருத்கிட்ட கம்போஸிங், எடிட்டிங்னு எல்லா இடங்களுக்கும் உதவியாளர்களையும் அழைச்சிட்டு போவார். அதனாலதான் ஒரு படம் ஒர்க் பண்ணின அனுபவமே ‘உனக்குள்ளும் ஒரு இயக்குநர் இருக்கார்'னு நம்பிக்கையை விதைச்சது. அவர் என் அக்மார்க் குரு.
சினிமா எடுக்கணும்னு தோணினதும், ஒரு விஷயத்தை மனசுல நிறுத்திக்கிட்டேன். இங்கே ராஜமௌலி சாரின் பிரமாண்டமான படம்னாலும் சரி, ரொம்பவே சின்ன பட்ஜெட் படம்னாலும் சரி, ஆடியன்ஸுக்கான டிக்கெட் கட்டணம் ஒண்ணுதான். நமக்காக அவ்ளோ காசு செலவழிக்கறவங்களுக்காக ஒரு பொறுப்புணர்வோடு இந்தப் படத்தைப் பண்ணியிருக்கேன்.''