கட்டுரைகள்
Published:Updated:

“கமலிடம் சொன்ன அந்த வார்த்தைகள்... ரஜினி வாங்கிக்கொண்ட சம்பளம்!”

பாரதிராஜா - கௌதம் மேனன்.
பிரீமியம் ஸ்டோரி
News
பாரதிராஜா - கௌதம் மேனன்.

டைரக்டர் ஆறு மாசமாவது அந்த கேரக்டரோடு வாழ்ந்திருப்பான். அதில் அவன் நம்மைக் கொண்டு செலுத்துறான். அப்பப் போய் நீங்கதான் பெரிய ஆளுன்னு நினைச்சால் நீங்க அவுட்.

விகடன் சார்பாக பாரதிராஜாவைச் சந்திக்க வேண்டும் என்றவுடனே ‘எஸ்' என்று ஒற்றைச் சொல்லில் ஓகே சொன்னார் இயக்குநர் கௌதம் மேனன். உங்கள் வீட்டிற்கு கௌதம் வருகிறார் என்றதும் ‘ஆஹா... வரட்டும்' என்று சம்மதம் கிடைத்தது இயக்குநர் பாரதிராஜாவிடம். காரிலிருந்து கரம் கூப்பியபடி பணிவோடு இறங்கினார் கௌதம். ‘வாய்யா... முதல் தடவையாக வீட்டுக்கு வந்திருக்கீங்க. ஒரு மடக்கு காபி குடிச்சிட்டுப் பேசலாம்' என்று கெளதமின் கைகளைப் பற்றிக்கொண்டார் பாரதிராஜா. நரைத்த தாடியில் நுரைக்கும் அனுபவம். பேச்சில் தெறிக்கும் பக்குவம். தமிழ் சினிமாவின் பெரிய மனிதரோடு இளைஞர்களின் அடையாளமாய் கௌதம் நடத்திய உரையாடல் நீள்கிறது. இருவரும் ஆத்மார்த்தமாய்ப் பேசிக்கொண்டதில் நமக்கு வாய்த்தது ஒரு புதையல் எடுக்கும் பரவசமே!

‘‘கௌதம்... உங்களுக்கு நான் பெரிய ஃபேன்! ரொமான்டிக்காக இருப்பேன்னு என்னைச் சொல்வாங்க. ஆனால் என்னையும் அனாயாசமாகக் கடந்து போனவர் நீங்க. உங்களை மாதிரி ஒரு காதல் படம் எடுக்கலைன்னு வருத்தமாக இருக்கு’’ - முகத்தில் புன்னகையைப் படரவிட்டார் பாரதிராஜா.

கௌதம் மேனன் -பாரதிராஜா
கௌதம் மேனன் -பாரதிராஜா

‘‘சார்... மூணு பேர்கிட்ட வேலை பார்க்க ஆசைப்பட்டிருக்கேன். இன்ஜினீயரிங் முடிச்சிட்டு மணி சார், கமல் சார், உங்க ஆபீஸ்னு வரிசையாக வந்துட்டுத்தான் போவேன். உங்ககிட்டே வொர்க் பண்ண முடியலை. படங்களைப் பார்த்துதான் உங்களை அறிய முடிஞ்சிருக்கு. ஆனால் இப்போ ‘கருமேகங்கள் கலைகின்றன' படத்தில் உங்ககூட நடிப்பேன்னு நினைச்சுப் பார்க்கவே இல்லை. அது நடந்துவிட்டது. சேர்ந்து நடிக்கும்போதுதான் உங்க நடிப்பு அவ்வளவு புரிஞ்சது. இத்தனை பேரை வேலை வாங்கியதோட அனுபவம் அப்படியே எனக்குக் கிடைச்சது. நிச்சயம் உங்களுக்கு இதில் இன்னும் பெயர் கிடைக்கும். அதோடு சேர்த்து எனக்கும் கிடைச்சால் சந்தோஷப்படுவேன். பாலசந்தர், பாலு மகேந்திரா, மகேந்திரன், பாரதிராஜான்னு யாரும் யாருடைய இடத்தையும் பிடிக்க முடியலை. ‘திருச்சிற்றம்பலம்' படத்தில் உங்களைப் பார்த்துட்டு, ‘யாருப்பா இந்த நடிகர்'னு என் பையன் ஆச்சர்யத்தோடு கேட்டான். ‘அவர் நடிகர் மட்டுமில்லை, தமிழ் சினிமாவோட பெரிய லெஜெண்ட்'னு சொன்னேன். இப்ப இருக்கிறவங்க வரைக்கும் உங்களால் வர முடியுது. நீங்க என்ன நினைக்கிறீங்க?’’ என்றார் கௌதம்.

‘‘பெரிய கனவுகளோடு தேனியிலிருந்து வந்தேன். ஸ்கூல் படிக்கும்போது டிராமாவில் நான்தான் நடிச்சுப் பெயர் வாங்குவேன். நடிகன் ஆகணும்னு ஆரம்பத்திலேயே நினைச்சிருக்கேன். அப்பதான் இளையராஜா பழக்கம் வருது. இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன்னு சேர்ந்தே திரிவோம். என் நாடகங்களுக்கு ராஜா மியூசிக் போட்டான். சின்னப்பையனா இருந்துக்கிட்டு அவன் திறமை எனக்குப் பிரமிப்பு ஏற்படுத்துச்சு. மெட்ராஸுக்கு வந்து முயற்சி பண்ணிக்கிட்டு, பெட்ரோல் பங்க்ல வேலை பார்த்திட்டு இருந்தவனோடு பங்கு போட ராஜாவும் அண்ணன் தம்பியோடு வந்து இறங்கிட்டான். அப்புறம் இயக்குநராகி பெயர் வந்து, நிவாஸ் என்னை ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் நடிக்க வச்சான். அப்புறம் மணிரத்னம் ‘ஆய்த எழுத்து' படத்தில் மறுபடியும் கொண்டு வந்து நிறுத்தினார். இப்ப தங்கர்பச்சானுடைய ‘கருமேகங்கள் கலைகின்றன' படம் வரைக்கும் வந்து நிக்கிறேன். நடிச்சு முடிச்சதும் யோசிப்பேன். ஒவ்வொரு கேரக்டரோடும் வாழ்றது எவ்வளவு பெரிய விஷயம். ஒரு பாரதிராஜாவாக இருந்துக்கிட்டு பல பிறப்பாக நடக்கிற வேலை இது’’ எனச் சொல்லி இன்னும் கலகலப்பானார் பாரதிராஜா.

‘‘நீங்க நடிகரா இன்னொரு இயக்குநர்கிட்ட வேலை செய்றது எப்படியிருக்கு?” இடைமறித்தார் கௌதம்.

‘‘டைரக்டர் ஆறு மாசமாவது அந்த கேரக்டரோடு வாழ்ந்திருப்பான். அதில் அவன் நம்மைக் கொண்டு செலுத்துறான். அப்பப் போய் நீங்கதான் பெரிய ஆளுன்னு நினைச்சால் நீங்க அவுட். அவன் சொல்றதைத்தான் நாம கேட்கணும். அதுதான் நியாயம். தங்கரோட இந்தக் கதை சொல்லும்போதே ரொம்பப் பிடிச்சது. அவனுக்கு கேன்ஸ் வரைக்கும் இந்தப் படத்தைக் கொண்டுபோய் நிறுத்தணும்னு ஆசையிருக்கு. அவனோட கனவு அழகா இருக்கு. அதுக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்’’ என்றவரிடம், ‘‘சார், எங்கே எப்போ பேசினாலும் இளையராஜா பெயர் உங்க உரையாடலில் வந்திடுதே!’’ என்றார் கௌதம்.

‘‘அவன் இல்லாமல் நானில்லை. என்னையும் அவன் அப்படித்தான் நினைப்பான். அவன்கூட எட்டு வருஷம் பேசலை. அப்பவும் அவனை நினைக்காமல் தூங்கினதில்லை. அவனுக்காகவே சிந்திச்சு காட்சிகளை உருவாக்கி இசைக்கு இடம் கொடுத்திருக்கேன். ‘உன்னோட படம் உண்டாக்கின உணர்வுதான் என்னை நல்ல இசையமைக்கத் தூண்டுது’ன்னு என்கிட்ட சொல்லியிருக்கான். சின்ன வயதில் அவனுக்கு புல்லாங்குழல் வாங்கக் காசிருக்காது. ஆத்துக்குப் போய் நாணல் தட்டையை எடுத்திட்டு வந்து நெருப்பில் வாட்டி, அதில் ஓட்டை போட்டு வாசிப்பான். ‘கமல், ரஜினிக்கெல்லாம் நீ வாசிச்சிருக்கலாம். எனக்கு வாசித்ததுதான்டா முதல் வாசிப்பு'ன்னு சொல்வேன். வெள்ளையா சிரிப்பான். அப்ப பத்து வயசுப் பையனாக கங்கை அமரன் பாட்டு எழுதுவான். அதெல்லாம் நான் கண்டு உணர்ந்த அழகு. இங்கே யாருக்காவது கிடைச்சிருக்குமா?’’ சொல்லும்போதே தேனிக்குச் சென்றுவிடுகிறார் பாரதிராஜா.

‘‘ ‘ஐ லவ் லவ்'னு ‘பொன்னியின் செல்வன்’ பங்க்ஷனில் சொன்னீங்களே!’’

பாரதிராஜா - கௌதம் மேனன்
பாரதிராஜா - கௌதம் மேனன்

‘‘ஆமா. காதல்தான்யா எல்லாம் தரும். உங்களுக்குக் காதல் பத்திச் சொல்லணுமா, நீயே காதல் மன்னனாச்சே! லவ் இல்லாமல் நல்ல படைப்புகளைக் கொடுக்க முடியாது. பழைய காதலை என்னால சொல்லி முடியாது. ஊர்ப்பக்கம் அக்காவோடு காரில் வந்துக்கிட்டு இருக்கேன். பூக்கடையில் ஒரு அம்மா நிக்குது. பின்தலை மட்டுமே தெரியுது. ‘அக்கா, அவளா இருக்குமா?'ன்னு பெயரைச் சொல்லிக் கேட்கிறேன். சொல்லி முடிக்கிறதுக்குள்ளே திரும்புறா. அவளேதான். இத்தனை வருஷம் கழிச்சு எனக்குத் தெரியுது. பார்த்த மாத்திரத்தில் ‘சின்னசாமி வந்தியாப்பா'ங்கிற மாதிரி ஆழமா பார்க்கிறா. எப்படி அடையாளம் காணுறது நடந்தது, அதிர்ந்துபோயிட்டேன். இது ஞாபகசக்தியில் சேர்த்தியா, அல்லது எப்போதுமே நான் அவளுடைய எண்ணத்தில் இருந்துகொண்டிருக்கிறேன் என்று அர்த்தமா! எனக்குத் தெரியலை. இந்தத் தருணம் இருக்கிறதே... அதுதான் எனக்கு முக்கியம். இதுதான் என்னை வழிநடத்துது. வாழ்க்கை உங்களை எந்த எல்லைக்கும் கொண்டு போகலாம். ஆனா அத்தனை பேரும் அன்புக்காக அலையுறதுதான் நீதி.

‘வீட்டுக்குப் போனேன். நீங்க வந்திருக்கீங்கன்னு சொன்னாங்க. என் பேத்திக்குக் கல்யாணம் வெச்சிருக்கேன். அவசியம் வரணும்'னு பத்திரிகையை நீட்டினா. அப்போ ‘வீட்டுக்கு வந்து காபி சாப்பிட்டுட்டுப் போ'ன்னு அக்கா கூப்பிட்டது. வந்து, அவளே சமையல் கட்டுக்குப் போய் காபி போட்டுட்டு வந்து என் ஆத்தாவுக்கும் எனக்கும் கொடுத்தா. அந்த இடம் இருக்கே... அதுதான் லவ். சுவர் முழுக்க அவள் பெயரை பைத்தியம் பிடிச்ச மாதிரி எழுதி வச்சிருக்கேன். லவ் லவ்வாகவே இருக்கணும். தண்டவாளம் மாதிரி போய்க்கிட்டே இருக்கணும். எனக்குக் கிடைக்காதான்னு ஏங்கிக்கிட்டே இருக்கணும். எப்ப கிடைச்சதோ அப்ப காதல் முடிஞ்சிடும். லவ் சேரவே கூடாது. அதை நெஞ்சில் மட்டும் வச்சுக்கணும். இந்தக் காதலுக்குப் பின்னாடி உங்களுக்கு எதுவும் இல்லையா என்று கேட்கலாம். இருக்கு. அது இணக்கம், இஷ்டம், பிடிக்கும், ஐயோ என்ன அழகு என்ற வகையில் போய்ச் சேரும்’’ - திரும்ப காதல் பருவத்திற்கு, பால்யத்திற்குத் திரும்புகிறார் பாரதிராஜா.

‘‘இவ்வளவு கதைகளை கிராமத்திலிருந்து வரும்போதே கொண்டு வந்தீங்களா’’ என்ற கெளதமின் கேள்விக்கு, ‘‘இல்லை. நாலு படங்கள்தான் என் கதை. மத்ததெல்லாம் ரைட்டர்ஸ் கிட்டே வாங்கினது. எனக்காக ஆர்.செல்வராஜ், ரத்தினகுமார், கலைமணி அருமையா கொடுத்திருக்காங்க. இவங்கதான் என் சொத்து. கிராமத்தை வச்சு எடுக்கிறதைச் சொல்றீங்க. அது என் மண்... வேர்... தளம்! இதெல்லாம் நான் பார்த்த கிராமம்! வஞ்சனையில்லாத மனசும், வாஞ்சையோடு பழகுறதும் இந்த மக்கள்கிட்டே இருக்கு. அவங்களுக்குக் கனவுகள் இல்லை. பொழுது விடிய வயலில் குனிந்தால், பொழுது சாயும் வரை நிமிர முடியாது. ‘பூவைப் பறிச்சாதான் வாடணும்னு இல்லை, செடியில் விட்டுவச்சாலே வாடிடும்’னு பாக்யராஜ் எழுதினதை மக்கள் நான் சொல்லியதாகவே நினைச்சுப் பாராட்டினாங்க. எழுத்தாளர்களைக் கபளீகரம் செய்துவிட்டேன்னு சொல்லணும். என்னோட பிரபலம் அப்படியொரு இடத்தைக் கொடுத்தது’’ என்றதும், அடுத்த கேள்வியை ஆர்வமாகக் கேட்கிறார் கெளதம் மேனன்.

‘‘உறவுகளைப் பத்தி நிறைய பேசியிருக்கீங்க..?’’

‘‘ஆமா. ஆத்தா பெரிய விஷயம். அவளைக் கூட்டிப் போய் ஜனாதிபதி கிட்டே விருது வாங்க வச்சேன். ஊர்ல பங்களா, போக வர கார் கொடுத்தேன். இதெல்லாம் அவளுக்கு முக்கியமாக இருந்ததில்லை. ‘நான் சாகும்போது கூட இரு'ன்னா. ஒருநாள் ‘ஆத்தா... ஷூட்டிங் போறேன்'னு சொல்லிட்டுக் கிளம்பினேன். ‘நல்லா இரு மகனே'ன்னு கும்பிட்டுச் சொன்னா. அதுதான் அவகிட்டே கேட்ட கடைசி வார்த்தை. இன்னமும் நான் இருக்கக் காரணம், இந்தத் தொழிலை நேசிக்கிறதுதான். என் பொண்டாட்டி பிள்ளைகளைவிட இந்தத் தொழில்தான் என்னை ஆட்கொள்ளுது. அதுவே என்னை இயக்குது. 45 வருஷத்திற்கு மேலே இங்கே இருக்கேன். இந்த சினிமாவுக்கு ஏதோ செஞ்சிருக்கேன். ஒருத்தன் காசு சம்பாதிக்கிறது மட்டுமே வெற்றி ஆகிடாது. வறுமையை ஜெயிக்கிறது வேற, வாழ்க்கையை ஜெயிக்கிறது வேற. சொல்லப்போனா... ஏன் ஜெயிக்கணும், அதுக்குப் பதில் சந்தோஷமா வாழ்ந்துடலாமே?!’’

பாரதிராஜா - கௌதம் மேனன்.
பாரதிராஜா - கௌதம் மேனன்.

‘‘நீங்க நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கீங்க. பெரிய இயக்குநரான பிறகு அந்த நம்பிக்கை வருதா? இல்ல, இந்தக் கதைக்கு இவங்கதான் சரின்னு தைரியமா எடுத்த முடிவா?’’ என்று கெளதம் கேட்க, புன்னகைத்தபடி பதில் சொன்னார் பாரதிராஜா. ‘‘யாரை வேணாலும் நடிக்க வெச்சிடலாம்னு எனக்கொரு தெனாவட்டு உண்டு’’ என்றதும், ‘‘தெனாவட்டுக்கும் தன்னம்பிக்கைக்கும் வித்தியாசம் இருக்கே சார்'' என்றார் கெளதம். ‘‘ஆமாய்யா, தன்னம்பிக்கைதான். அதுதான் சரியான வார்த்தை. ‘கிழக்கே போகும் ரயில்' படத்துல நடிக்க ஒரு நடிகையை கமிட் பண்ணியிருந்தேன். அவங்க பெரிய நடிகையுடைய தங்கை. ஷூட்டிங் லொகேஷன் போன பிறகு வரலைன்னு சொல்லிட்டா. எம்.ஜி.ஆர் கான்ட்ராக்ட் போட்டிருக்கார்னு சொல்லிட்டாங்க. ரொம்ப அப்செட்டாகிடுச்சு. கேமராமேனைக் கூப்பிட்டு, ‘வா, கேரளா போகலாம். தெருவுல நடந்து போற பொண்ணுகூட அழகா இருப்பா. நம்ம ஹீரோயினை அங்க பார்த்துக்கலாம்' னு சொன்னேன். அப்புறம் மெட்ராஸுக்கு வந்தோம். ஒரு டான்ஸர் என்கிட்ட அவங்க தங்கைக்கு சான்ஸ் கேட்டாங்க. அப்போ அவங்க பேக்ல இருந்து ஒரு போட்டோ கீழே விழுந்தது. அந்தப் போட்டோவுல இருக்கறது யார்னு கேட்டேன். ‘இது ஒரு சிலோன்காரப் பொண்ணு. லண்டன் போய்ப் படிக்கிறதுக்காக வந்திருக்கு சார்'னு சொன்னாங்க. அந்தப் பொண்ணோட சிரிப்பும் காதோரம் இருக்கும் முடியும் பிடிச்சிருந்தது. இந்தப் பொண்ணைப் பார்க்கணும்னு கேட்டு அவங்க வீட்டுக்குப் போனேன். ‘நாம இங்கிலீஷ்லதான் பேசணும்டா'ன்னு என் அசிஸ்டென்ட்கிட்ட சொல்லிட்டு ‘எக்ஸ்க்யூஸ் மீ'ன்னேன். அந்தப் பொண்ணு என்னைப் பார்த்ததும் உள்ள ஓடிடுச்சு. அவங்க அம்மாவுக்கு நான் யாருன்னு தெரிஞ்சது. அவங்ககிட்ட பேசும்போதுதான், இவங்க யார் பொண்ணுன்னு தெரிய வந்தது. நடிக்கக் கேட்டேன். அந்தப் பொண்ணுக்கு விருப்பமில்லை. அவங்க அம்மா சொல்லி ஒருவழியா ஓகே சொல்லுச்சு. அதுதான் ராதிகா. என் டீம்ல யாருக்கும் ராதிகாவை ஹீரோயினா நடிக்க வைக்க உடன்பாடில்லை. ஆனா, எனக்கு நம்பிக்கை இருந்தது. நான் சொன்னேன்னு வேற வழியில்லாமல் எல்லோரும் சரின்னு சொன்னாங்க. ஒரு வாரம் கழிச்சு, ராதிகாதான் சரியான சாய்ஸ்னு டீம்ல ஒத்துக்கிட்டாங்க. கார்த்திக், ராதான்னு எல்லோரையும் ஒரு நம்பிக்கையிலதான் நடிக்க வெச்சேன். என் கணக்கு மிஸ்ஸானதில்லை.’’

‘‘வில்லனா நடிச்சுக்கிட்டிருந்த சத்யராஜ் சாரை எப்படி ஹீரோவா யோசிச்சீங்க?'’ என்றார் கெளதம். ‘‘எனக்கென்னவோ அந்த கேரக்டருக்கு சத்யராஜ் சரியா இருப்பான்னு தோணுச்சு. ஷூட்டிங்ல க்ளிசரின் கொடுக்கும்போது, ‘சார் நான் வில்லன் சார். எனக்கு க்ளிசரின் கொடுக்குறீங்க?'ன்னு கேட்டான். ‘போட்டுட்டு நடிய்யா'ன்னேன். படம் சக்சஸான பிறகு, என் கால்ல விழுந்து ‘என் வாழ்க்கையில இப்படியொரு விஷயம் நடக்கும்னு நினைக்கலை சார்'னு எமோஷனலாகிட்டான். எல்லோருக்குள்ளயும் நடிகன் இருக்கான். அதை எப்படி வெளியே எடுத்துட்டு வர்றோங்கிறதுலதான் இருக்கு. இன்னைக்கு எல்லோரும் பெரிய இடத்துல இருக்காங்க. அதே விஸ்வாசத்தோடு இருக்காங்க. ரொம்ப நல்ல மனுஷங்க’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

‘‘மறுபடியும் கமல் சார், ரஜினி சாருக்குப் படம் பண்ணுறதுக்கான சந்தர்ப்பம் அமையலையா சார்?’’ என்று கௌதம் கேட்க, ‘‘நாங்க ‘ஒரு கைதியின் டைரி' படம் பண்ணிட்டு இருக்கும்போது எனக்கும் கமலுக்கும் சின்ன மனக்கசப்பு வந்திடுச்சு. ரொம்ப கோவம் வந்து, படத்தின் கடைசி ஷாட் எடுத்து முடிச்சவுடன், ‘This is the last time you are standing in front of my camera'ன்னு சொல்லிட்டேன். ரொம்ப வருஷம் பேசிக்கலை. அப்புறம் மறுபடியும் நல்ல நண்பர்களாகிட்டோம். அது வேற கதை. ரஜினிக்குப் படம் பண்ணச் சொல்லி, சிலரை அனுப்பியிருக்கேன். ஆனா ரஜினி, நான் இயக்கினா நடிக்கிறேன், இல்லைனா இல்லைன்னு சொல்லிட்டார். `கொடி பறக்குது’ சமயத்துல ரஜினிக்கு 30 லட்ச ரூபாய் சம்பளம். ‘உங்க சம்பளம் அதிகமாச்சே, எப்படி’ன்னு கேட்டேன். என் பாக்கெட்ல இருந்து 5 ரூபாய் எடுத்து, ‘இப்போ இது போதும். படத்தை முடிச்சுட்டு எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்'னு சொன்னார். படம் முடிஞ்சது. 30 லட்ச ரூபாயை எடுத்து வெச்சேன். அதுல 20 லட்சம் மட்டும் எடுத்துக்கிட்டார். நல்ல மனுஷன் சார் ரஜினி. அதுக்குப் பிறகு, அவருக்கு சப்ஜெக்ட் அமையலை. இன்னைக்குக்கூட, ரஜினியையும் கமலையும் வெச்சுப் படம் பண்ண ஆசைதான்...’’ பாரதிராஜாவின் முகத்தில் இன்னும் மீதமிருக்கிறது ஆர்வம்.

இன்றைய சினிமா, இளம் இயக்குநர்கள் பற்றிய பேச்சு வர, ‘‘எல்லாப் படங்களையும் பார்த்திடுவேன். டெக்னிக்கலாகவும் கதை சொல்ற விதத்துலயும் ரொம்ப அட்வான்ஸா இருக்காங்க. ஆனா, சப்ஜெக்ட் ரொம்ப டிரையா இருக்கு. சமீபமா, ‘அயோத்தி' ரொம்பப் பிடிச்சிருந்தது. இந்த மாதிரி இளைஞர்களை வரவேற்கிறேன். மெட்டீரியல் இல்லையேங்கிற கவலை இருக்கு. அதை நான் சொன்னால் கோவம் வந்திடும்’’ என்ற பாரதிராஜாவை இடைமறித்த கெளதம், ‘‘நல்ல படம்னா உங்களைப் பொறுத்தவரை எது?'’ என்று கேட்டார். ‘‘நான் ஓர் இயக்குநரா, கதாசிரியராதான் படம் பார்ப்பேன். படம் போகிற போக்கில் நான் இயக்குநர், கதாசிரியர் அப்படிங்கிறதையெல்லாம் மறந்துட்டு வாயைப் பிளந்து படம் பார்க்க வைத்தால், அது நல்ல படம்’’ என எளிய விளக்கம் தருகிறார் இயக்குநர் இமயம்.

‘‘உங்களுக்குக் கனவுப் படம்னு ஏதாவது இருக்கா அல்லது அதை எடுத்துட்டீங்களா?’’ - ‘‘கனவுப் படம் இதுதான்னு சொன்னா வாழ்க்கை முடிஞ்சிடும் சார். என் கனவுகளுக்கு எல்லையே இல்லை. போய்க்கிட்டே இருக்கணும். இதோ இன்னைக்கு உங்களோடு நடிக்கிறேன். நாளைக்கு அடுத்த தலைமுறையோட! மனுஷன் இருக்கிற வரைக்கும் பிடிச்சதைச் செஞ்சு, பயணிச்சுக்கிட்டே இருக்கணும், நான் அப்படித்தான்!’’

‘‘நீங்க அடுத்து ஒரு படம் இயக்கப்போறீங்கன்னு கேள்விப்பட்டேன். எப்போ சார்?’’ என்றார் கெளதம். ‘‘ஆமா. கதையெல்லாம் எழுதி முடிச்சுட்டேன். ‘தாய்மெய்'னு பெயர் வெச்சு. சீக்கிரம் ஷூட்டிங் போறேன். இயக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து நடிக்கணும். குறிப்பா, உங்க இயக்கத்துல ஒரு படம் நடிக்கணும் கெளதம்’’ என்றார் பாரதிராஜா.

‘‘நிச்சயமா சார். உங்க படங்கள் பார்த்துதான் நாங்க வளர்ந்தோம். இப்போ நீங்க நடிக்கிறதையும் ரசிக்கிறோம். தொடர்ந்து நீங்க நடிக்கணும் சார்’’ என்ற கெளதமிடம் ‘‘எனக்கும் ரொம்ப சந்தோஷம் உங்ககூட உரையாடினது. இருக்கிற வரைக்கும் உங்களோடு போட்டி போட்டு ஓடி வந்துக்கிட்டே இருப்பேன். எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் வித்தையைக் காட்டி ஜெயிச்சுக்கிட்டே இருப்பேன்’’ என பாரதிராஜா சேலஞ்ச் பண்ண,, ‘ஐ அம் வெயிட்டிங் சார்!’ என தம்ஸ் அப் காட்டுகிறார் கெளதம் மேனன்.

அடுத்தடுத்த வேலைகள் காத்திருக்க, மனமின்றி விடைபெற்றார்கள்.