சினிமா
தொடர்கள்
Published:Updated:

அடுத்த தமிழ்ப்படம் எப்போ?

காயத்ரி, புஷ்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
காயத்ரி, புஷ்கர்

சினிமாவுக்குக் கதை பண்றமாதிரியே ஓ.டி.டி-க்குப் பண்ண முடியாது. அதுக்கேத்த மாதிரியான மாற்றங்கள் செய்யணும்.

“இந்த சீன் வரைக்கும் நீ எழுது, அப்புறம் நான் எழுதுறேன்னு எப்போதும் சொன்னதில்ல. ரெண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து பேசிக்கிட்டு எழுதுவோம். முதல்ல ஒரு கதை வரும். அதிலிருந்து பல லேயர்களை உருவாக்கிச் சேர்ப்போம்...” - ‘சுழல்’ வெப்சீரிஸ் மூலம் பேசுபொருளாகியிருக்கும் இயக்குநர் புஷ்கர் மற்றும் காயத்ரி பேச ஆரம்பித்தனர்.

“ ‘சுழல்’ வெப் சீரிஸ் ஸ்கிரிப்ட்டை எழுத எத்தனை நாள் ஆனதுன்னு கேட்டா, முதல்ல, படமா எடுக்கதான் எழுதினோம். அப்புறம், ரெண்டு மணி நேரத்துல எடுக்குற கதை இல்லன்னு தெரிஞ்சது. அதனால், அப்படியே எழுதிய வரைக்கும் ஸ்க்ரிப்ட் பேப்பரை வெச்சிட்டோம். நாங்க ஸ்க்ரிப்ட் எழுதுன நேரத்துல எந்தவொரு ஓ.டி.டி நிறுவனமும் இங்கே வரல. ‘விக்ரம் வேதா’ ரிலீஸான நேரத்துல அமேசான் பிரைம்ல இருந்து போன் வந்தது. ‘இதுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்’னு ஸ்கிரிப்ட் பேப்பரைத் தூசி தட்டி எடுத்தோம். முழு ஸ்கிரிப்ட்டும் எழுதி முடிக்க ஒன்றரை வருஷம் ஆகிருச்சு.

சீரிஸ்ல, பார்த்திபன் பண்ணுன சண்முகம் கேரக்டர் வேறொருத்தர் பண்ற மாதிரி இருந்தது. ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி அஞ்சு நாள் இருந்தப்பதான் பார்த்திபன் சார்னு முடிவாச்சு. இப்போ ‘சுழல்’ சீரிஸைப் பார்க்கிறப்போ பார்த்திபன் சாரைத் தவிர வேற யாரையும் சண்முகம் கேரக்டர்ல பொருத்திப் பார்க்க முடியலை. அதேமாதிரிதான் ஸ்ரேயா ரெட்டி கேரக்டரும். எங்க முதல் படமான ‘ஓரம் போ’ படத்திலேயே ஸ்ரேயாவை நடிக்க வைக்க முயற்சி பண்ணினோம். அப்போ அது அமையலை. சுழலில் சரியான வாய்ப்பு அமைஞ்சது. ஸ்ரேயாவும் அசத்திட்டாங்க.

அடுத்த தமிழ்ப்படம் எப்போ?

ஸ்கிரிப்ட் எழுதிக்கிட்டிருக்குறப்போ ஒரு பாயின்ட்ல அப்படியே நின்னுட்டோம். ஸ்கிரிப்ட் எதை நோக்கிப் போகுதுன்னு தெரியும். கேரக்டர் என்ன பண்ணுவாங்கன்னும் தெரியும். ஆனா, ஏதோ ஒண்ணு மிஸ் ஆனது. அப்போ கார்ல போயிட்டு இருந்தப்போ பக்கத்து ஊர்ல மயானக்கொள்ளை திருவிழா நடக்குதுன்னு டிரைவர் சொன்னார். இதைத்தானே தேடிக்கிட்டு இருந்தோம்னு உடனே போய்ப் பார்த்தோம். அதுக்கப்புறம் ஸ்கிரிப்ட் ஸ்ட்ராங்க் ஆகிடுச்சு” என்றவர்களிடம் “உங்களுக்கு எதில் வேலை பார்க்க அதிகம் பிடிக்குது, சினிமாவா, வெப் சீரிஸா?’’ என்றேன்.

“கண்டிப்பா ரெண்டும்தான்” என்றனர் ஒருமித்த குரலில்.

“வெப்சீரிஸுக்காக நிறைய படிக்க வேண்டியிருந்தது. நிறைய ஃபீல்ட் ஒர்க், ரிசர்ச் பண்ண வேண்டியிருந்தது. ஒவ்வொரு எபிசோடும் 55 பக்கங்கள் இருக்கும். முதல்ல ஸ்க்ரிப்ட் எழுதுனப்போ டைரக்‌ஷன் பண்ற ஐடியால இருந்தோம். ஆனா, எங்களுக்குச் சில கமிட்மென்ட் இருந்ததால் டைரக்‌ஷன் பண்ணல. அப்போ, அமேசானில் இருந்து ‘ஸ்கிரிப்ட் அழுத்தமா இருக்கு. வேற யாராவது பண்ணலாம்’னு சொன்னாங்க. எங்களுக்கு மனசே கேட்கல. நம்ம குழந்தையை மத்தவங்களுக்குக் கொடுக்கிற மாதிரி ஃபீல் பண்ணிக்கிட்டே கொடுத்தோம். அதுக்கு அப்புறம் யோசிச்சுப் பார்த்தோம். நம்ம கிரியேட்டிங் லைனைக் கெடுக்காம பிரம்மா, அனுசரண் இயக்கியிருக்காங்க. இவங்க ரெண்டு பேருடைய படங்கள் பார்த்திருக்கோம். படங்கள் வழியாதான் தெரியுமே தவிர பழக்கம் கிடையாது. ஆனா, எந்த ஒரு ஈகோவும் இல்லாம ரெண்டு பேருமே வொர்க் பண்ணுனாங்க. 90 நாள்கள் ஷூட்டிங் நடந்தது.”

அடுத்த தமிழ்ப்படம் எப்போ?

``ஒரு சினிமா இயக்குநர் ஓ.டி.டி தளத்துக்கு ஏற்றமாதிரி எப்படிச் செயல்படணும்?’’

“சினிமாவுக்குக் கதை பண்றமாதிரியே ஓ.டி.டி-க்குப் பண்ண முடியாது. அதுக்கேத்த மாதிரியான மாற்றங்கள் செய்யணும். நேரம், கதை, பாத்திரங்கள் எல்லாமே ரெண்டு மூணு சினிமாவுக்கான விஷயங்கள் ஓ.டி.டி-க்கு வேண்டும். ‘சுழல்’ பொறுத்தவரைக்கும் அமேசன் பிரைம் முழுக்க முழுக்க சப்போர்ட் பண்ணுனாங்க.”

``இந்தி விக்ரம் வேதா அனுபவம் எப்படி இருந்தது?’’

“ஹ்ரித்திக் ரோஷன், சயீப் அலிகான் ரெண்டு பேருமே அருமையான மனிதர்கள். இந்தில நாங்க புதிய இயக்குநராக இருந்தாலும் எங்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்தாங்க. ஸ்பாட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி முழுக்க ரெடியாகிட்டு வருவாங்க. ரொம்ப புரொபஷனலா இருப்பாங்க. எல்லா டெக்னீஷியனும் முழு ஸ்கிரிப்ட் படிச்சிருப்பாங்க. நாம டீடெய்ல் மறந்துட்டாலும் சரியா எடுத்துக் கொடுப்பாங்க. மொழி எப்போதும் பிரச்னையா இருந்ததில்லை. யார் நடிக்கப் போறாங்கன்னு பிக்ஸ் பண்ண மட்டும்தான் கஷ்டப்பட்டோம். மத்தபடி ஹ்ரித்திக் அண்ட் சயீப் ரொம்ப கூல்.”

அடுத்த தமிழ்ப்படம் எப்போ?

`` `விக்ரம் வேதா'வுக்குப் பிறகு நேரடியாகத் தமிழ்ப் படம் எப்போது எதிர்பார்க்கலாம்?’’

“இந்திப் படம் ரிலீஸுக்குப் பிறகுதான் அடுத்த புராஜெக்ட் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். செப்டம்பர்ல ரிலீஸ்னு பிக்ஸ் பண்ணியிருக்கோம். அதுக்கு அப்புறம்தான் யோசிக்கணும்.”

``தொடர்ந்து வெப் சீரிஸ் பண்ற ஐடியா இருக்கா?’’

“ `சுழல்' சீரிஸ் 2 வரும். தவிர, இயக்குநர் ஆண்ட்ரூ வெப் சீரிஸ் எடுத்திருக்கார். அதை நாங்கதான் தயாரிச்சிருக்கோம். எஸ்.ஜே.சூர்யா சார் நடிச்சிருக்கார். `வதந்தி’ன்னு பேர் வெச்சிருக்கோம். தவிர, புரொடக்‌ஷன் கம்பெனியா நிறைய சீரிஸ் பண்ணலாம்னு இருக்கோம்.”