சினிமா
தொடர்கள்
Published:Updated:

கதை கேட்கும் கதாநாயகர்கள்!

கதை கேட்கும் கதாநாயகர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கதை கேட்கும் கதாநாயகர்கள்!

நான் விஜய் சாருக்கு முதல் படம் பண்ணும் போது புது இயக்குநர். அறிமுக இயக்குநர் ஒருத்தர் பெரிய ஹீரோவைப் பிடிச்சுக் கதை சொல்றது என்பது மிகப்பெரிய பிராசஸ்

ரஜினி, கமலில் இருந்து கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் ஒரு படத்திற்கான கதையை எப்படிக் கேட்கிறார்கள்? அவர்களை இயக்கிய பிரபல இயக்குநர்களிடமே கேட்கலாமே!

ரஜினிக்கு ‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’, ‘வீரா’ கமலுக்கு ‘சத்யா’ என மெகா ஹிட் படங்களை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா...

‘`என்னோட ரெண்டாவது படமா தெலுங்குல ‘பிரேமா’ பண்ணினேன். அது பவுண்டட் ஸ்கிரிப்ட் தான். அந்த ஸ்கிரிப்ட்டில் ஒன்லைன் ஆர்டர்ஸ் இருக்கும். டயலாக் இருக்கும். ஆனா, ரஜினி சார், கமல் சார் படங்கள்னா அது வேற ரகம். உதாரணமா ‘சத்யா’, ‘அண்ணாமலை’ ரெண்டுமே இந்திப் படத்தோட ரீமேக். ஆனா, ரெண்டிலும் அடிப்படையான விஷயத்தை மட்டுமே எடுத்திருப்போம். கதை விஷயத்தைப் பொறுத்தவரை ரஜினி, கமல் ரெண்டு பேருமே நிறைய இன்புட்ஸ் கொடுப்பாங்க. ‘பாபா’ ரஜினி சாரோட கதை. ‘பாட்ஷா’ ஒரு அடித்தளம் வச்சு, மாறி மாறி டெவலப் செய்து, இம்ப்ரூவ் ஆன கதை. ஸோ, ஒரு ஹீரோவுக்கெனக் கதை சொல்லி அவங்ககிட்ட ஓகே வாங்கின பிராசஸ் எல்லாம் இந்தப் படங்களுக்கு அமையல. ரஜினி சாருக்கும், கமல் சாருக்கும் கதை சொன்னாக் கூட, இதான் ஃபைனல் ஸ்கிரிப்ட்னு லாக்கே பண்ண மாட்டோம். நிறைய மாற்றங்கள் நடக்கும். ஒவ்வொரு நகர்விலும் பேசிட்டே இருப்போம். கதையைச் செதுக்கிக்கிட்டே இருப்போம். ஒன்லைன் ஆர்டரா ஸ்கிரிப்ட் இருக்காது.

கதை கேட்கும் கதாநாயகர்கள்!
கதை கேட்கும் கதாநாயகர்கள்!

டயலாக் எல்லாம் ரெடி பண்ணி பவுண்டட் ஸ்கிரிப்ட் மாஸ் ஹீரோக்கள் விஷயத்துல இருக்காது. ஒரு படம் உருவாகுறதுக்கு முன்னாடி, ஒரு ஐடியா இருக்கும். அது அப்படியே டெவலப் ஆகும். ஸ்பாட்லேயும் புது விஷயங்கள் அதுல சேர்ந்திட்டே இருக்கும்.

வருஷக்கணக்கா சிலர் ஸ்கிரிப்ட் எழுதுவாங்க. ஆனா ஸ்கிரிப்ட் இல்லாமல் வெறுமனே ஒரு ஐடியாவை வச்சு, நாங்க ட்ராவல் பண்ணியிருக்கோம். ‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’ ‘வீரா’ எல்லாமே சக்சஸ்னால எங்க காம்பினேஷன் க்ளிக் ஆச்சு’’ என வெளிப்படையாகப் பேசினார் சுரேஷ்கிருஷ்ணா.

விஜய்யின் ‘துள்ளாத மனமும் துள்ளும்’, அஜித்தின் ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’ படங்களை இயக்கிய எழில், கேள்வியை முன்வைத்ததும் பழைய நினைவுகளில் மூழ்கிப்போகிறார்.

‘‘நான் விஜய் சாருக்கு முதல் படம் பண்ணும் போது புது இயக்குநர். அறிமுக இயக்குநர் ஒருத்தர் பெரிய ஹீரோவைப் பிடிச்சுக் கதை சொல்றது என்பது மிகப்பெரிய பிராசஸ். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ கதையை ஸ்கிரிப்ட்டா முடிச்சு, ஆர்.பி.சௌத்ரி சார்கிட்ட குடுத்தேன். அவருக்குக் கதை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. விஜய் சாருக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கும்னு அவரும் சொன்னார். சூப்பர்குட்ல விஜய் சார் ‘பூவே உனக்காக’ பண்ணியிருக்கார். அதனால விஜய் சார்கிட்ட ‘இந்தக் கதையைக் கேளுங்க விஜய். உங்களுக்குப் பொருத்தமான ஸ்கிரிப்ட்’னு சொல்லி, அவர்கிட்ட கதை சொல்ல டைம் வாங்கிக் கொடுத்தார்.

கதை கேட்கும் கதாநாயகர்கள்!
கதை கேட்கும் கதாநாயகர்கள்!

சாலிகிராமத்தில் உள்ள விஜய் சார் வீட்லதான் அவரைச் சந்திச்சேன். வீட்டு மாடியில அங்கே ஒரு தனி அறையில்தான் அவர் கதை கேட்பார். அது அவருக்கு சென்டிமென்ட்டான ரூம்னு அப்ப சொல்வாங்க (இப்ப அவர் அடையாறில் உள்ள அலுவலகத்தில் கதை கேட்கிறார்). எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஒரு தியானக் கூடம்போல சூழல் நிலவும். ரொம்ப கவனமா கேட்பார். கதையில் வரும் ஒவ்வொரு கேரக்டர் பத்தியும், தெளிவாக் கேட்டுத் தெரிஞ்சுப்பார். ஆரம்பத்துல ஃபைட் எதுவும் இல்லாமதான் ரெடி பண்ணியிருந்தேன். ‘ஃபைட் இல்லியே ஜி’ன்னார். அப்புறம் அதையும் சேர்த்துக்கிட்டேன்.

அஜித் சார் நிறைய ரெஃபரன்ஸ் கொடுப்பார். அப்ப அவர் ஆதித்யா ஹோட்டல்ல ரூம் போட்டிருந்தார். ‘பெண்ணின் மனதைத் தொட்டு’ கதையைச் சொன்னேன். அது அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதையே அவர் பண்றேன்னு ஆர்வமானார். ஆனா, தயாரிப்புத் தரப்புக்கு அது ஒத்துவரல. அஜித் சார் ரொம்ப ஷார்ப். ரெண்டு கதையைக் கேட்டார். உடனே முடிவையும் சொல்லிட்டார். ‘ராஜா’க்கு பதில் வேறொரு கதையைச் சொன்னேன். அஜித் சார் அதைக் கேட்டுட்டு, ‘கொஞ்சம் சுமாரா இருக்கு ஜி’னு சொல்லிட்டார். ‘ராஜா’ ஸ்கிரிப்ட் புரொட்யூசருக்கும் பிடிச்சிடுச்சு. விஜய், அஜித் ரெண்டு பேருக்குமே ஒரு ஒற்றுமை. ஸ்பாட்டுல கூட ‘அதை அப்படிப் பண்ணிக்கலாமா, இப்படிப் பண்ணிக்கலாமா?’ன்னு கேட்பாங்க. அதனாலதான் இந்த உச்சம் தொட்டிருக்காங்க” என்கிறார் எழில்.

கதை கேட்கும் கதாநாயகர்கள்!
கதை கேட்கும் கதாநாயகர்கள்!

இயக்குநர் எச்.வினோத் அனுபவமோ வேறு. ‘`இந்தத் தலைமுறை இயக்குநர்கள் பலரும் கதை சொல்றதில்ல. பக்காவான பவுண்டட் ஸ்கிரிப்ட் ஆக ரெடி செய்து ஹீரோக்களிடமோ அல்லது தயாரிப்பு நிறுவனத்திடமோ கொடுத்துவிடுகிறார்கள். ஒரு சீக்ரெட் சொல்றேன். எனக்குக் கதை அவ்ளோவா சொல்ல வராது” என்று தன்னடக்கத்தோடு ஆரம்பிக்கிறார்.

“என் முதல் படத்த முடிச்சதும் கார்த்தி சாருக்கு ஒரு கதை ரெடி பண்ணினேன். அந்த ஸ்கிரிப்ட்டை ‘தீரன்’ தயாரிப்பாளர்கள்கிட்ட கொடுத்தேன். அவங்க படிச்சிட்டு ஒருசில கரெக்‌ஷன்ஸ் சொன்னாங்க. அப்புறம் அதை கேரிஅவுட் பண்ணினதும், கார்த்திக் சார் முழு ஸ்கிரிப்ட்டையும் படிச்சார். ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடிதான் ஹீரோவையே நேர்ல சந்திச்சேன்.

அஜித் சாருக்கு நம்ம மேல நம்பிக்கை வந்தாப் போதும், நாம சொல்ற லைனை நம்பி, நமக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திடுவார். ‘நேர் கொண்ட பார்வை’ ரீமேக் கதைனால, நான் கதை சொல்லல. அந்தப் படத்துல என் உழைப்பை நேர்ல பார்த்த அஜித் சார், என்மீது நம்பிக்கை வச்சார், ‘வலிமை’ உருவாச்சு” என்கிறார் வினோத்.

கதை கேட்கும் கதாநாயகர்கள்!
கதை கேட்கும் கதாநாயகர்கள்!

சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ் என சில ஹீரோக்கள் பவுண்டட் ஸ்கிரிப்ட்டில் பெரும் நம்பிக்கை வைக்கிறார்கள். ஒரு சின்ன முடிச்சு, கதையாக உருவாகி, அதில் ஆயிரம் திருத்தங்கள், இம்ரூவ்மென்ட் என்றான பிறகு பக்கா ஸ்கிரிப்ட் ஆக மாறுகிறது. அதன்பிறகு உள்ள ஸ்கிரிப்ட்டிற்கு இவர்கள் முழுச் சுதந்திரமும் நம்பிக்கையும் வைக்கிறார்கள். உதாரணமாக `கர்ணன்’ கதையை மாரி செல்வராஜ், பக்கா பவுண்டட் ஸ்கிரிப்ட் ஆகத்தான் கொடுத்திருக்கிறார். அதை முழுவதுமாகப் படித்த பின்னரே, அந்தக் கதையில் நடித்தார் தனுஷ். ஆனால், வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குநர்கள் ஒரு ஒன்லைன் சொல்வார்கள். அந்த புராஜெக்ட் உடனே டேக் ஆஃப் ஆகிவிடும்.

விக்ரம், சூர்யா, கார்த்தி மூவரும் அறிமுக இயக்குநர்களிடம் கதை கேட்பதில்லை. ஒரு ஹிட் கொடுத்த இயக்குநர்களோ அல்லது நல்ல படம் கொடுத்த இயக்குநர்களோ மட்டுமே அவர்களை அப்ரோச் பண்ண முடியும். முந்தைய சில படங்கள் கொடுத்த அனுபவத்தினால் அவர்கள் இந்த முடிவுக்கு வந்தார்கள் என்கிறார்கள். விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோர் கதை கேட்பதெற்கென தங்கள் அலுவலகத்தில் நேரம் ஒதுக்கிக் கதை கேட்கிறார்கள். கதை கேட்டு முடித்த பின்னர், ‘இந்த ஜானர்ல படம் பண்ணிட்டேன். வேற ஜானர் இருந்தா சொல்லுங்க’ என்றோ, `ஸ்கிரிப்ட்ல இந்தந்த இடங்கள்ல மாற்றங்கள் பண்ணினா, நல்லா இருக்கும். அதைப் பண்ணிட்டு வந்து பாருங்க’ என்றோ உடனடியாக ரிசல்ட்டையும் சொல்லிவிடுவார்கள். விஜய்சேதுபதி, ஜீவா, ஆர்யா போன்றவர்கள் தன்னை அணுகும் இயக்குநர்கள், புதியவர்கள் அனைவருக்கும் செவி கொடுக்கிறார்கள். படப்பிடிப்பு இல்லாத ஒரு நாளில் அந்த இயக்குநரை அழைத்துக் கதை கேட்கிறார்கள். கதை கேட்க ஆரம்பித்த இருபது நிமிஷத்துக்குள் அந்தக் கதை அவர்களை உள்ளிழுத்தால்... அந்தக் கதையை கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்கள்.

கதை கேட்கும் கதாநாயகர்கள்!
கதை கேட்கும் கதாநாயகர்கள்!
கதை கேட்கும் கதாநாயகர்கள்!

தமிழ் சினிமாவில் கோலோச்சிய மூத்த இயக்குநர் ஒருவர் ஆஃப் த ரெக்கார்டாகப் பகிர்ந்த விஷயம் இது...

‘`இண்டஸ்ட்ரிக்கு வலுவான சினிமாப் பின்னணிக் குடும்பத்திலிருந்து வந்த பல ஹீரோக்களுக்கும் அவர்களின் ஆரம்பக்காலத்தில் அவர்களின் அப்பாக்கள்தான் கதைகள் கேட்டிருக்கிறார்கள். அப்பாக்களுக்குக் கதை பிடித்தால் மட்டுமே, பல மாத ஃபாலோ அப்களுக்குப் பின்னர் அது அடுத்த கட்டத்துக்கு மூவ் ஆகும். தயாரிப்பாளர்கள் கை ஓங்கியிருந்த காலகட்டம் அது. ஏவிஎம், சூப்பர்குட், ஜெமினி, வாஹினி ஜாம்பவான் தயாரிப்பாளர்கள் வரிசையாகப் படங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது சினிமா மாறிவிட்டது. அது ஹீரோக்களின் கைகளுக்குப் போய்விட்டது. ஏனென்றால், நேற்று வந்த ஹீரோகூட, இன்று சொந்த பேனர், சொந்தத் தயாரிப்பில் இறங்குகின்றார். இதைக் குறையாகச் சொல்லவில்லை. ஓர் இயக்குநர் ஒரு கதையை உருவாக்கிவிட்டால் அப்போது எந்தக் கம்பெனிக்கு வேண்டுமானாலும் கதையைச் சொல்லி, ஓகே வாங்கிவிடலாம். ஆனால், இப்போது அப்படியில்லை. ஹீரோவே தயாரிப்பாளர் என்ற இரட்டைக் குதிரைச் சவாரி செய்வதால் அவர்களுக்கான கதை இருந்தால் மட்டுமே ஓர் இயக்குநர் அந்த ஹீரோவை அப்ரோச் செய்ய முடியும்.

கதை கேட்கும் விஷயத்தில் இவ்வளவு `அம்மாடியோவ்’ இருக்கும்போது ஒரு படத்தைப் பார்க்கும்போது ‘கதையே இல்லை’ என்று சிலர் புலம்புவதையும் மறுப்பதற்கில்லை” எனச் சொன்ன அந்த மூத்த இயக்குநர், இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்.

‘`ஒரு சில ஹீரோக்கள் அறிமுக இயக்குநர்களிடம் கதை கேட்பதற்கு முன்னர் அவர்களின் ஜாதகத்தையும் வாங்கிக்கொண்டு அந்த புராஜெக்ட் க்ளிக் ஆகுமா என்றும் பார்க்கிறார்கள்” என்கிறார் அதிர்ச்சி பொங்க!

இது ‘கதை’க்குள் கதை.