சினிமா
பேட்டிகள்
Published:Updated:

“அடுத்த வெற்றிக்குக் காத்துக்கிட்டிருக்கோம்!”

இயக்குநர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
இயக்குநர்கள்

நான் ரொம்பப் பெரிய ரிஸ்க் எடுத்தேன். ஏன்னா நிறைய படங்கள் நடிச்சிட்டிருக்கேன். சாப்பாட்டுக்கே வழியில்லாமல்கூடப் போயிடும்.

கொரோனா காலத்தில் ஒட்டுமொத்தத் தமிழ் சினிமாவும் முடங்கிப்போனாலும் சில படங்கள் வெளியாகிக் கவனம் ஈர்த்தன. அந்தப் படங்களின் இயக்குநர்கள் `க/பெ.ரணசிங்கம்’ விருமாண்டி, ‘லாக்கப்’ எஸ்.ஜி.சார்லஸ், ‘காவல்துறை உங்கள் நண்பன்’ ஆர்.டி.எம்., `கன்னிமாடம்’ போஸ்வெங்கட், ‘அந்தகாரம்’ விக்னராஜன் ஆகியோர் சந்திக்க... அப்புறம் என்ன, இப்பவே ஆரம்பிச்சிடுச்சு தீபாவளி!

அத்தனை பேரையும் வேட்டி சட்டையில் வரச் சொன்னேன். போஸ் வெங்கட், விக்னராஜனைத் தவிர, மற்ற மூவரும் நம்மை ஏற இறங்க லுக் விட்டுவிட்டு ‘சரி, ஒரு கை பார்த்துடலாம்’ என்ற முடிவுக்கு வந்தனர். ‘`நாங்க வேட்டி கட்டினதே இல்ல. ஏன்னா, அதுக்கான வாய்ப்பு அமைஞ்சதில்ல. உதவி இயக்குநராக இருந்த காலத்துல வேட்டி கட்டுறதைப் பத்தி நினைச்சே பார்க்க முடியாது. இயக்குநர் ஆன போது ஸ்பாட்டுக்கு வேட்டி சரிபட்டு வராது. அப்புறம், எப்படி வேட்டி கட்டியிருக்க முடியும். வேட்டி கட்டுறதே மறந்திடுச்சு” - விருமாண்டி, ஆர்.டி.எம்., எஸ்.ஜி.சார்லஸ் என மூவரும் கோரஸாகச் சொல்ல, ‘`நல்லவேள, நம்மள வேட்டி கட்டச் சொல்லல...” என நமது ஒளி ஓவியர் கே.ராஜசேகரன் மைண்ட் வாய்ஸ் என நினைத்து சத்தமாகச் சொல்லிவிட... அத்தனை பேரும் அதிர அதிர சிரிப்பு.

‘`வேட்டி வேட்டி வேட்டிகட்டு... சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு...’’ எனக் கூட்டத்தில் யாரோ முணுமுணுத்தது வருண பகவானுக்குக் கேட்டிருக்கும்போல... சடசடவெனக் கொட்ட ஆரம்பித்த மழை, நான் ஸ்டாப் கொண்டாட்டமாக நீடிக்க, ‘`இது பேட்டி கொடுக்கறதுக்கான க்ளைமேட்டா தெரியல...’’ என போஸ்வெங்கட் பொடி வைத்து டைமிங் அடிக்க... ஆர்.டி.எம் க்ளுக்கெனச் சிரித்து விட்டார். உடனே சுதாரித்த போஸ், ‘`அட, நீங்க வேற... டீ குடிக்கற க்ளைமேட்னு சொல்ல வந்தேன்’’ என சமாளிப்பிகேஷனைப் போட்டார். மழையும் பேச்சும் போட்டி போட்டு ஆரம்பித்தன.

போஸ் வெங்கட், விருமாண்டி, ஆர்.டி.எம்., சார்லஸ், விக்னராஜன்
போஸ் வெங்கட், விருமாண்டி, ஆர்.டி.எம்., சார்லஸ், விக்னராஜன்

‘`நாங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊர்ல பிறந்து வளர்ந்தாலும், சென்னைதான் வாழ வச்ச, வாழ வைக்கும் ஊர். இங்கே நாங்க பழகின எல்லாருமே மாமன், மச்சான், அண்ணன், தம்பின்னு ஒண்ணுக்கொண்ணா ஆகிட்டோம்’’ - என விருமாண்டி ஆரம்பித்து வைக்க, அனைவரும் அதை ஆமோதித்தார்கள்.

‘`பிறந்து வளர்ந்தது சென்னை. நான் உதவி இயக்குநரா இருந்த காலத்துல மத்த துறைகளை விட, ஆர்ட் டிபார்ட் மென்ட்லதான் கவனம் செலுத்துவேன். ஏன்னா, சினிமாங்கறது ஒரு ஃப்ரேம்ல அடங்குற விஷயம். அந்த ஃப்ரேமுக்குள் என்ன விஷயங்கள் இருக்கணும், எதைத் தவிர்க்கணும்னு கத்துக் கிட்டேன். நான் தனியா படம் பண்ணணும்னு நினைக்கும்போது, என்னை ஆர்ட் டைரக்டரா பண்ணக் கூப்பிட்டவங்க அதிகம். ஆனா, டைரக்‌ஷன் என்பதில் தெளிவா இருந்தேன். ‘லாக்கப்’ விகடன் விமர்சனத்துலகூட, ‘திரைக்கதையைப் பக்காவா செதுக்கியிருந்தார்’னு என்னைப் பாராட்டினாங்க. என்னோட பலமும் அதான். ஏன்னா, த்ரில்லர், ஹாரர் ரெண்டுக்குமே ஃபார்முலா எளிது. ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அதுக்கான விஷயங்களைப் பண்ணினா போதும். ஆனா, திரைக்கதைதான் அதை விறுவிறுப்பாக்கும்’’ என்றார் எஸ்.ஜி.சார்லஸ்.

திக் தருணங்களை இருட்டின் அதிகாரத்தோடு சொன்னவர் ‘அந்தகாரம்’ விக்னராஜன். ``சென்னைதான் என் ஊர். இதுக்கு முன்னாடி ஒரு படம் ஆரம்பிச்சேன். ஆனா, அதுக்கான விஷயங்கள் தொடரல. அந்த டைம்லதான் சூப்பர் நேச்சுரல் சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான கரு கிடைச்சது. எங்க அம்மாதான் படத்தின் தயாரிப்பாளர். ஏன்னா, இப்படி ஒரு கதையை மத்தவங்க தயாரிக்க முன்வருவாங்களான்னு தெரியாததால நாங்களே தயாரிச்சோம். தெரிஞ்சவங்க, நட்பு வட்டத்துல பணம் வாங்கி, ஒரு கட்டத்துல குடியிருக்கற வீட்டையும் அடமானம் வச்சு, தயாரிச்சேன். நினைச்சதைக் கொடுக்க முடிஞ்ச திருப்தியும், எல்லாருமே இப்பவும் படத்தைக் கொண்டாடுறதும் சந்தோஷமா இருக்கு’’ என்கிறார் விக்னராஜன்.

“அடுத்த வெற்றிக்குக் காத்துக்கிட்டிருக்கோம்!”

இது விருமாண்டி டர்ன். `‘நான் உசிலம்பட்டி கருமாத்தூர்லதான் பிறந்தேன். சின்ன வயசில இருந்தே 20 வருஷமா சினிமாவுலதான் இருந்தேன். இயக்குநர் செல்வா சார் கிட்டயும், ‘அறம்’, ‘ஐரா’ படங்கள்லயும் இணை இயக்குநரா வேலை பார்த்திருக்கேன். ‘க/பெ.ரணசிங்கம்’ கதை விவாதத்தின்போது வந்திருந்த ‘டோரோ’ தாஸ் ராமசாமி என்னைத் தயாரிப்பாளர் ராஜேஷ் சார்கிட்ட அறிமுகப்படுத்தி வச்சார். ‘உடனே படப்பிடிப்பு கிளம்பிடலாம் விருமாண்டி’னு சொன்னார். அதே வேகத்துல படத்தையும் முடிச்சோம். ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய்சேதுபதின்னு பெரிய ஸ்டார்ஸ்னால, ஒரு அறிமுக இயக்குநருக்கான படபடப்பு இருந்துச்சு. அந்த டென்ஷனை அவங்க எளிதாக்கிட்டாங்க. படம் முழுவதும் ஊர்மக்கள் நிறைஞ்சு இருக்கணும்ங்கிறதனால, எனக்கு ஊர்மக்கள் கொடுத்த ஒத்துழைப்பையும் மறக்க முடியாது’’ என விருமாண்டி சொல்லிமுடித்ததும், போஸ் தொங்கினார்...

‘`நான் ரொம்பப் பெரிய ரிஸ்க் எடுத்தேன். ஏன்னா நிறைய படங்கள் நடிச்சிட்டிருக்கேன். சாப்பாட்டுக்கே வழியில்லாமல்கூடப் போயிடும். இங்கே இருக்கற நாலு இயக்குநர்கூட என்னை நடிக்கக் கூப்பிடாமல் போய்டுவாங்களோங்கிற மாதிரி பெரிய ரிஸ்க் எடுத்தேன். ஆனா, இயக்குநர் ஆகணும்னுதான் அறந்தாங்கியில இருந்து கிளம்பி வந்தேன். நடிகராகிட்டேன். சீரியல்கள்ல பிஸியானேன். 2010லேயே ஒரு படம் ஆரம்பிச்சேன். நாலஞ்சு லட்சம் காலியானதுதான் மிச்சம். எல்லாருமே உதவி இயக்குநர்களா இருந்து வந்திருப்பாங்க. ஆனா, நான் அதுகூட கிடையாது. 84 படங்கள் நடிச்சிருக்கேன். அதில் அத்தனையும் நான் உதவி இயக்குநராகத்தான் வேலை செஞ்சதா நினைச்சுக்கிட்டேன். ராம் கார்த்திக்கும் நானும் ஒரு படத்துல சேர்ந்து நடிக்கும்போது, அவர்கிட்ட இந்தக் கதையைச் சொன்னேன். அவர்தான் ‘கன்னிமாடம்’ தயாரிப்பாளரை அறிமுகப்படுத்தி வச்சார். 18 நாள்ல பாடல்களோடு சேர்த்து படத்தை முடிச்சிட்டேன். நான் நிறைய படங்கள்ல நடிச்ச அனுபவத்தால, ஒரு படத்தோட ஷூட் போயிட்டிருக்கும்போது அது எங்கே நிற்கும், எதனால தேங்கப்போகுது என்கிற அனுபவம் இருந்ததால, என் படத்தை இழுத்துப்பிடிச்சு முடிச்சது பெரிய சாதனை’’ எனப் பெருமூச்சுடன் சொல்லி முடித்துவிட்டு, ஆர்.டி.எம்மின் தோளைத் தொட்டார்.

“அடுத்த வெற்றிக்குக் காத்துக்கிட்டிருக்கோம்!”

‘`எல்லார் மாதிரிதான் நானும் போராட்டங்களைச் சந்திச்சேன். என் ரியல் பெயர் வேறன்னாலும், சினிமாவுக்காக ஆர்.டி.எம் ஆச்சு. 2013-ல ஒரு படம் தொடங்கி, பாதியில நின்னுடுச்சு. அந்தப் படத்துல நடிச்சவர்தான் சுரேஷ் ரவி. அதன்பிறகு 40 லட்சத்துல ஆரம்பிச்ச படம்தான் ‘காவல்துறை உங்கள் நண்பன்.’ சுரேஷ் ரவியே இதில் நடிச்சார், ரிலீஸுக்கு முன்னாடி படத்தைப் பார்த்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இதை வாங்கத் தயங்கினாங்க. ‘இப்படியொரு படத்துக்கு சென்ஸாரே கிடைக்காது’ன்னுகூடச் சொன்னாங்க. நிறைய பிரச்னைகளைத் தாண்டிதான் சென்ஸார் கிடைச்சது. மைம்கோபியோட கேரக்டருக்கு சைமா விருது கிடைச்சது. கடைசியில வெற்றிமாறன் சார் பேனர்ல வெளியானது பலமாகிடுச்சு’’ என்கிறார் ஆர்.டி.எம். ‘`எனக்கு ரெண்டு இடங்களுக்கு பிரச்னை வந்துச்சு’’ என விருமாண்டியும், ‘`எனக்கு ஒரே ஒரு டயலாக்கைத் தூக்கினா ‘யு’ தர்றேன்னாங்க’’ என சார்லஸும் சென்ஸார் அனுபங்களைப் பகிர்ந்தார்கள். அனைவரின் பேச்சும் ஓ.டி.டி-க்குத் தாவியது.

“அடுத்த வெற்றிக்குக் காத்துக்கிட்டிருக்கோம்!”

‘`ஜீ டி.வி-ல நைட் 12 மணிக்கு ‘லாக்கப்’ வெளியாகப்போகுது. ஆனா, 11.50க்கு என் முழுப்படத்தையும் டெலிகிராம்ல எனக்கு அனுப்புறாங்க. வேதனையா இருந்துச்சு. என் படத்தை தியேட்டருக்கான சவுண்ட் எஃபெக்ட்ஸோடு, அதுக்கான விஷுவலோடு ரெடி பண்ணினேன், அது ஓ.டி.டி-யில் வெளியானதால இப்ப வரை என் படத்தைப் பார்க்கல. வைபவ் சார்கூட என்கிட்ட, ‘உங்க குடும்பம், சொந்த பந்தங்களுக்காக தியேட்டர்ல ஒரு ஷோ ரெடி பண்ணுறேன்’னு சொன்னார். நான் வேணாம்னு சொல்லிட்டேன். ஒரு இயக்குநரா என் பெயரை தியேட்டர்ல பார்க்கவே விரும்பினேன். என் படம் ரிலீஸுக்கு ஒரு போஸ்டர்கூட ஒட்டல. எந்த பப்ளிசிட்டியும் பண்ணல. மவுத் டாக்னாலதான் எனக்கு வரவேற்பு கிடைச்சது’’ என வருத்தம் தோய்ந்த குரலில் சார்லஸ் சொல்லவும்... விருமாண்டி தொடர்ந்தார். ‘`பப்ளிசிட்டி விஷயத்துல நான் பாக்யசாலி. ‘ரணசிங்கம்’ ஓ.டி.டி-யில் வெளியானாலும் தியேட்டருக்கான பப்ளிசிட்டியை எங்க தயாரிப்பாளர் கொடுத்தார். ஆனா என்ன, என் சொந்தபந்தங்கள் வசிக்கற ஊர்ல நெட் வசதியும் இல்ல. ஓ.டி.டி-யும் இல்ல. அதனால எங்க ஊர்ல திரைகட்டி நான் என் மக்களுக்கு என் படத்தைப் போட்டுக் காண்பிச்சேன்’’ என விருமாண்டி சொன்னதும், அத்தனை பேரும் கைத்தட்டி ஆனந்தமானார்கள்.

“அடுத்த வெற்றிக்குக் காத்துக்கிட்டிருக்கோம்!”

‘` `காவல் துறை உங்கள் நண்பன்’ வெளியானதும் ஃபேஸ்புக்கில் ஒருத்தர் என்னையும், படத்தையும் திட்டோ திட்டெனத் திட்டிப் பதிவிட்டிருந்தார். அதைப் படிச்சுப் பார்த்ததும், அவர் படம் பார்க்கலைன்னு புரிஞ்சது. ஏன்னா, டைட்டிலைப் பார்த்துட்டு, நான் காவல்துறைக்கு ஜிங்ஜாக் போட்டிருக்கேன்னு நினைச்சிட்டிருந்தார். அதன்பிறகு உண்மை உணர்ந்திருப்பார்னு நினைக்கறேன்’’ என்கிறார் ஆர்.டி.எம்.

போஸும் தன் கருத்தைத் சொன்னார். ‘`சின்ன வயசில கிராமத்துல இருக்கும்போது டூரிங் தியேட்டர்ல தெலுங்கு டப்பிங் படங்கள திரைக்கு முன்னாடி சீட்ல உட்கார்ந்து பாத்திருக்கேன். அதுல ஹீரோ காலை லாங்ஷாட்ல காட்டி, தரையை ஓங்கி மிதிக்கவும், தரை அதிரும். தூசி பறக்கும். அந்த மாஸ் சீன்ல உணர்ச்சி வசப்பட்டு முன் சீட்ல இருந்து விசில் பறக்கும். அப்ப நமக்கு ஹீரோ யார்னுகூடத் தெரியாது. அப்படி படங்கள் பார்த்துட்டு, இப்ப அதே சீனை டி.வி-ல, மொபைல்ல பார்க்கும்போது காலும் தெரிய மாடேங்குது, தூசியும் தெரிய மாட்டேங்குது. ‘கன்னிமாடம்’ படத்தை தேசிய விருதுக்கு அனுப்பியிருக்கேன். அதோட ரிசல்ட் வந்த பிறகு ஓ.டி.டி-யில் வெளியிடலாம்னு தயாரிப்பாளர் நினைச்சிருக்கார்’’ என்ற போஸ், தொடர்ந்தார். ‘`லாக்டௌன் மட்டும் இல்லேன்னா, இங்க இருக்கற ஒவ்வொருத்தரும் அடுத்தடுத்த ஓட்டம் ஓடி, இப்ப குறைஞ்சது ரெண்டு படங்களாவது முடிச்சிருப்போம். ஒன்றரை வருஷமா ரொட்டீன் வாழ்க்கை இல்லாமல்போனதுல, எங்க கரியரும் வேகமெடுக்கல’’ என்றதும், அத்தனை பேரும் ஒரே ரியாக்‌ஷனில் ‘ஆமாம்’ காட்டினார்கள்.

“அடுத்த வெற்றிக்குக் காத்துக்கிட்டிருக்கோம்!”

விருமாண்டி, அடுத்து சசிகுமாரை வைத்து இயக்கி வருகிறார். ‘`எளிய மனிதர்கள் பக்கம் இருந்து அவங்களுக்காகக் குரல் கொடுக்கற விஷயங்களைச் சொல்லவே நான் விரும்புறேன். ‘ரணசிங்கம்’ பார்த்த அத்தனை பேரும் ‘இதோட அடுத்த பார்ட் எப்போ வரும்?’னு கேட்குறாங்க. சசிகுமார் படத்தை முடிச்சதும் ‘ரணசிங்கம் 2’ தொடங்கும். இதை விகடன் மூலமா அறிவிக்கறேன்’’ எனப் பெருமிதமாகச் சொன்னார் விருமாண்டி.

‘`ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர் என்பதில் நான் உறுதியா இருக்கேன்’’ என ஆர்.டி.எம் சொல்ல, ‘`எனக்கு அப்படி ஐடியா இல்ல. கதை என்ன தோணுதோ, அந்த ஜானரைக் கையிலெடுக்க விரும்புறேன்’’ என்கிறார் விக்னராஜன். போஸ்வெங்கட்டும் அடுத்து ஒரு படம் இயக்கத் தயாராகிவருகிறார். சார்லஸுக்கும் கதை ரெடி!

“அடுத்த வெற்றிக்குக் காத்துக்கிட்டிருக்கோம்!”

‘`கடந்த வருஷம், லாக் டௌனால விருது விழாக்கள் நடைபெறல. இந்த வருஷம் விகடன் விருது விழாவுக்காக நாங்க வெயிட் பண்றோம்’’ என ஒட்டுமொத்தமாக தம்ஸ் அப் காட்டி, புன்னகைத்தார்கள்.

ஒருவருக்கொருவர் படங்களைத் தவிர, முன்பின் அறிமுக மில்லாமல் வந்தார்கள். இந்தச் சந்திப்பிற்குப் பின் விடைபெறும்போது நன்கறிந்த நண்பர்களாகத் திரும்பிச் சென்றது மகிழனுபவம்.