``உங்க கவுரவத்த பொம்பளைங்க காலுக்கு மத்தியில் ஏன் தேடுறீங்க?’’ - ஆணாதிக்கத்தை அறையும் ‘அயலி’

- கமலி பன்னீர்செல்வம்
வெப் சீரிஸ் என்றாலே ஆங்கில வெப் சீரிஸ் அல்லது கொரியன் வெப் சீரிஸ் தான் என்று கூறும் 2கே கிட்ஸ்யையும் தமிழ் வெப் சீரிஸ் நோக்கி நகர்த்தி இருக்கிறது `அயலி’. பெண் கல்வி மறுக்கப்படுவதையும், பல நூற்றாண்டுகளாக பாசம், அன்பு, மதம், கலாசாரம், கடவுள் நம்பிக்கை, தீட்டு என போற்றியும் இகழ்ந் தும் பெண்ணை இறுகக் கட்டி மூச்சுத் திணற வைத்திருக்கும், வைத்துக்கொண்டிருக்கும் மைய இழையை `அயலி’ போகிற போக்கில் வெளிச்சமிட்டு காண்பிப்பதுடன், ஆங்காங்கு பெண் கல்வி ஒடுக்குதலுக்குப் பின் இருக்கும் பிற்போக்குத்தனங்களை சத்தமில்லாமல் அறுத்துச் செல்கிறது.
மிக முக்கியமான பேசு பொருளாக இருக்க வேண்டிய பெண் கல்வி ஒடுக்குமுறையையும், எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் கண்டுகொள்ளாமல் நடந்து கொண்டிருக்கும் குழந்தை திரு மணத்தையும் பற்றி பலரும் வாய் திறப்பதில்லை. கொஞ்சம் இடறி னாலும் டாகுமென்டரியாக மாறி விடுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்ட பெண் கல்வி ஒடுக்கப்படுதலை, சுவாரஸ்யமாக அனைவரும் ரசித்துப் பார்க்கும்படி கதை அமைத்த இயக்குநர் முத்துக்குமாருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

பதினான்காம் நூற்றாண்டில் ஒரு குக்கிராமத்தில் கதை தொடங்குகிறது. ஓர் ஆணும் பெண்ணும் காதலித்து ஓடிப்போக, அதனால் தெய்வ குற்றமாகி அந்தக் கிராம தெய்வமான அயலி ஊரை எரித்து, மழை பொழியாது, பஞ்சம் ஏற்படுத்தி வாட்டி வதைக்கிறாள். மக்கள் பஞ்சம் பிழைக்க வேறு ஊர் செல்கிறார்கள்.
அந்த ஊரில் அயலி அம்மனை வைத்து வழிபாடு செய்வதுடன், வழி வழியாக சில பழக்க வழக்கங்களை கடும் கட்டுப்பாட்டுடன் பின்பற்றுகின்றனர். அதில் ஒன்று, பெண் வயதுக்கு வந்தவுடன் படிப்பை நிறுத்தி திருமணம் செய்து வைப்பது. பல நூற்றாண்டு களாக இது தொடர, அதனால் அந்தக் கிராம பெண்கள் படும் துயரங்கள், அவர்களின் வாழ்வியலை `தீட்டு’ என்ற ஒன்று எப்படி ஆட்டிவைக்கிறது, அயலி அம்மனை மைய மாக வைத்து பெண்கள் எவ்வாறு பயமுறுத்தி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை மிகைப் படுத்தல் துளியுமின்றி மிக இயல்பாக இயக்குநர் சித்திரித்திருக்கிறார்
நாயகியான தமிழ்ச்செல்வியின் (அபி நட்சத்திரா) படிக்கும் ஆசை, அதற்கு வரும் முட்டுக்கட்டை, அவள் அதை ஒவ்வொரு முறையும் எப்படிக் கடக்கிறாள், `ஐயோ அந்தப் பெண் மாட்டிக்கொள்ளக் கூடாதே' என நம்மையும் அவளோடு சேர்ந்து பதை பதைக்க வைத்து இருக்கிறார்கள் படக் குழுவினர். நெஞ்சில் தைக்கும்படியான கூர்மையான வசனங்கள், கண்ணுக்கு விருந் தளிக்கும் பச்சை பசேல் அழகான கிராமம் (ஒளிப்பதிவு - ராம்ஜி), மண் மணம் கமழும் மாந்தர்கள், காதுகளை அதிரவைக்காத கதையோடு இயைந்த இசை (இசை - ரேவா), க்ரைம் கதைக்கு ஈடாக அடுத்து என்ன நடக்கும் என்ற சஸ்பென்ஸ் என அயலி குழு வினர் அனைவரும் சேர்ந்து இந்த வெப் சீரிஸுக்கு மெருகூட்டி இருக்கின்றனர்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் கதாபாத்தி ரங்களைப் பொறுத்தவரை முதன்மை கதா பாத்திரமான தமிழ்ச்செல்வி மட்டுமன்றி, அவளின் தோழிகளாக வரும் மைதிலி, கயல் அவர்களின் தாயார்கள், பாட்டி என அத் தனை கதாபாத்திரங்களும் நம் வாழ்வியலில் நாம் சந்தித்த, சந்தித்துக்கொண்டிருக்கும் பெண்கள்தான். அதனாலேயே அயலி தொடர் நம்மை அதனுடன் பிணைத்து வைக் கிறது. அதில் வரும் பெண் கதாபாத்திரங் களுடன் பெண்களுக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருப்பதுதான் இத்தொடரின் கூடுதல் பலம்.
பெண் குழந்தைகள் கல்வியின்பால் எழும் அம்மாக்களின் பயம், பதற்றம் எல்லாம் ஆண் களால் அவர்களுக்குள் ஆழமாக விதைக்கப் பட்டவை என்பதை உணராமலேயே இப் போதும் தங்கள் மகள்களுக்கு கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்த பயத்தை தான் அயலியில் கயலின் அம்மா, மைதிலியின் அம்மா என பல அம்மாக்கள் கண்முன் நிறுத்தியிருக்கிறார்கள்.
கோயிலுக்குள் புகுந்து கொண்டு வெளியே வர மறுக்கும் கயலிடம் அவர் அம்மா உரை யாடும் காட்சியில்தான் எவ்வளவு ஆழமும் கணமும் செறிந்துள்ளது. `மா.. நீ இந்த அயலி சாமிக்கு பயப்படுறியா? இல்லை ஊருக்கு பயப்படுறியா?’ என கயல் கேட்கும் கேள்விக்கு ‘இரண்டுக்கும்தான்டி’ என்று அம்மா சொல் லும் பதிலில் தெறிக்கும் நடுக்கம், காலகாலமாக நாம் மறைத்து வரும் உண்மைகளை உடைத்து வெளிப் படுத்துகிறது.

கோயில் உள்ளே போனால் எல்லாம் மாறிவிடும் என்று நம்பிக் கையோடு பேசும் தமிழ்ச்செல்வி யிடம் அவளின் தோழி மைதிலி, ``சின்ன பிள்ளையாவே இருக்கியே... நாம கோயிலுக்கு உள்ள போற அன்னிக்கு அவங்க கடவுளையே தூக்கி தூர வீசிடுவாங்க. அவங் களுக்கு கடவுள் முக்கியம் இல்லை, நாம் அடங்கி இருக்கணும். அதற் காக எது வேணாலும் செய்வாங்க’’ என்ற வரிகளில் பொதிந்திருக்கும் உண்மை முகத்தில் அறைகிறது. கடவுளின் பெயரை கொண்டு எப்படி பெண்களை பயமுறுத்தி, அடிமைப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை வார்த்தைகள் வழி யாகவே பார்வையாளர்களுக்குக் கடத்தி அதிரச் செய்திருக்கின்றனர். பல பெண்கள் கேட்க நினைக்கும் வார்த்தையை மைதிலியின் அம்மா, ‘உங்க கவுரவத்த என்ன ......க்கு பொம்பளைங்க காலுக்கு மத்தியில் தேடுறீங்க’ என்று கேட்கும்போது மனம் எவ்வளவு ஆசுவாசமடை கிறது.
வில்லன் கூறும், `உங்க நல்லதுக்கு தானே சொல்றோம்’ என்ற வசன மும், மைதிலியின் அம்மா கூறும், `உன் நல்லதுக்கு தானே சொல்றேன் கண்ணு’ என்னும் வசனம் ஒன்றுதான் எனும் போதும், தன் கையை மீறி சென்று விடுவாளோ என்ற ஆணின் வன்மத்தையும், பெண்களாகிய தங்கள் வாழ்க்கையே ஆணுக்காக சமரசம் செய்து கொள்வதுதான் என்று நம்ப வைக்கப்பட்ட பெண்ணின் அப்பாவித்தனத்துக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டையும் புரிந்துகொள்ள முடியாமல் பல மைதிலிகள் தலையாட்டி தங்கள் வாழ்க் கையைத் தொலைத்துக்கொண்டு இருப்பது இப்போதும் தொடர்வதை மறுக்க முடியுமா?

இன்றும் பல இடங்களில் ‘`பெண் குழந்தை படிச்சு என்ன ஆகப்போகுது, படிச்சிருந்தா பத்து பவுன் குறைச்ச லாவா மாப்பிள்ளை வீட்ல கேட்கப்போறாங்க... அதுக்கு எதுக்கு செலவு பண்ணிப் படிக்க வைக்கணும், படிக்க வச்சு வேலைக்கு அனுப்பினாலும் நமக்கா சம்பாதிச்சுக் கொடுக்கப் போகுது’’ என கூறிக் கொண்டு தானே இருக் கிறார்கள். இப்போது படித்து வேலைக்குப் போகும் பெண்கள்தான் திருமண மார்க்கெட்டில் விலை போகிறார்கள் என்பதற்காக படிக்க வைத்து வேலைக்கு அனுப்பும் விகிதம் சற்றே அதிகரித்துள்ளது. அதுவும்கூட பல பெண்கள் படித்து நல்ல வேலைக்குச் சென்றாலும், திருமணம் முடிந்தவுடன் வேலையை விட்டுவிட வேண்டும், குழந்தை பிறந்தவுடன் வேலையை விட்டு விட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் திருமணங்கள் நடந்து கொண்டுதானே இருக்கின்றன. பெண் படித்தாலே வீட்டுக்கு அடங்க மாட்டாள், திமிராகத்தான் இருப்பாள் என்று தமிழ் சினிமாக்கள் பொதுபுத்தியில் பதிய வைத் துள்ள கசடுகளை முற்றிலும் அகற்ற முடியா விட்டாலும் `அயலி’ போன்ற தொடர்கள் அந்த பொதுபுத்தியை உடைக்கும் முயற்சியில் ஒரு மைல் கல் என்றே கூறலாம்.
க்ளைமாக்ஸ்… அந்தத் தலைமையாசிரியர், ஊருக்குள் பைக்கில் பறந்துவந்துசென்ற காவல் அதிகாரி, பாராட்டு விழாவுக்கு வந்துசென்ற மாவட்ட ஆட்சியர் எல்லாம் வருவார்கள் என்று வழக்கம்போல எதிர்பார்த்தால் அதை யும் அடித்துநொறுக்குகிறாள் ‘அயலி’. ஆணாதிக்க பிற் போக்கு புத்தியை, மூடநம்பிக்கைகளைச் சாடியதுடன், அதை அனைத்துத் தரப்பினரும் (இப்போதும்கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் போக, மீதமிருப்பவர்கள்) ஏற்றுக் கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தியிருப்பதில் நூற்றுக்கு நூறு வெற்றியடைந்திருக்கிறாள் ‘அயலி’.
பெண்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அயலி தெள்ளத் தெளிவாக முன்வைத்து இருக்கிறது. அயலி குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
அரசாங்கத்துக்கு ஒரு வேண்டுகோள்… இன்னும் பெரும்பான்மை மக்களுக்கும் சென்று சேரும்வகையில் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும், அரசாங்க செல வில் திரையிட்டுக் காட்டலாம்.
தமிழ்ச்செல்விகள் இன்னும் பெருகட்டும்.