லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

அயோத்தி... மதவாதத்தைத் தோற்கடிக்கும் மனிதாபிமானம்!

அயோத்தி படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
அயோத்தி படத்தில்...

‘உன்ன... ஆஸ்பத்தியிரில இறக்கி விட்டுத்தானே வரச் சொன்னேன்’ என்று டிரைவர் நண்பன் கேட்க... ‘அந்தப் பொண்ணையும் பையனையும் பார்த்தா... அப்படியே விட்டுட்டு வரத்தோணலடா’ என்று சசிகுமார் உடையும் காட்சி, அனைவரையும் உடைத்துப்போடுகிறது.

முரட்டுத்தனமும் ஆணாதிக்கமும்தான் வாழ்க்கை என்றே வாழ்ந்து கொண்டிருக்கும், ‘இதுதான் நம்ம கலாசாரம்’ என்கிற பெயரில் வாழ்வதற்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கும் எண்ணற்ற ஆண்களுக்கு சவுக்கடி கொடுக்கும் படமாக சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது `அயோத்தி’.

கதை, வட இந்தியாவில் ஆரம்பிக்கிறது. ஆணாதிக்கம் இன்னமும் தம்பிடி அளவுக்குக்கூட குறையாதவையாகத்தான் இருக்கின்றன வடமாநிலங்கள் பலவற்றிலும். அதிலும் குறிப்பிட்ட சில மதங்களில் அடிப்படைவாதிகள் அநியாயத்துக்குக் கோலோச்சி வருவதால், பெண்களை ஒரு புழு அளவுக்குக்கூட மதிக்கத் தெரியாத ஆண்வர்க்கம், அங்கே தொடர்ந்து உயிர்ப்புடனேயே இருக்கிறது (நம் ஊரிலும் இல்லாமலில்லை... சதவிகித அடிப்படையில் இங்கே குறைவு). அப்படியோர் அடிப்படை வாதி, ஆணாதிக்கவாதிதான் படத்தின் நாயகன்.

அயோத்தி படத்தில்...
அயோத்தி படத்தில்...

அயோத்தியின் சரயு நதிக்கரை... வேண்டுதலுக்காக ஆற்றில் மிதக்கவிடப்படும் தீபத்தை விற்பனை செய்யும் தொழில் செய்கிறார் கணவர். அவருடைய காலடி ஓசை காற்றில் கலந்து வரும் நொடியிலேயே... மனைவி, மகள் மற்றும் மகன் என மொத்தக் குடும்பமும் நடுநடுங்கி... ஒடுங்கிக் கூனிக் குறுகிவிடுகிறது. ‘நீங்களெல்லாம் ஏறெடுத்துக்கூடப் பார்ப்ப தற்குத் தகுதியற்றவர்கள்’ என்பதுபோலத்தான் குடும்பத்தாரை நடத்துகிறார். எதற்கெடுத்தாலும் கை ஓங்குவது, பாத்திரங் களைத் தூக்கி வீசுவது, `பான்பராக்’ போட்டுத் துப்புவது என்று பல்வேறு குடும்பங்களிலும் நடமாடிக்கொண்டிருக்கும் கணவர்களைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்.

திடீரென ஒரு நாள், ‘ராமேஸ்வரத்துக்குத் தீர்த்த யாத்திரை போகிறோம்’ என்று ரயில் டிக்கெட்டை அவர் கொடுக்க... ஆச்சர்யத்தில் திகைக்கிறது குடும்பம். ரயிலேற வேண்டிய நாள்... வழக்கம்போல அதிகாரத்தைச் செலுத்தும் கணவன், பல மணி நேரத்துக்கும் முன்னதாகவே தயாராகி நிற்க, மனைவி பதறுகிறார். உடை மாற்றுவதற்குக்கூட உரிய நேரத்தைக் கொடுக்கமால் படுத்தி எடுக்கும் பல கணவன்மார்கள் கண்முன்னே வந்து போகிறார்கள். அதற்கும் அடி விழுகிறது.

விடிந்தால் தீபாவளி... மதுரையில் இறங்கி, சூரிய உதயத்துக்கு முன்பாக ராமேஸ்வரம் செல்வதற்காக டாக்ஸியைப் பிடிக்கிறார். அவசரமாகக் கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்கிறார் மகள். மிரட்டி காருக்குள் ஏற வைக்கிறார். வண்டியில் ஏறி அமர்ந்த நிமிடம் முதல் டிரைவருடன் மோதல். ‘இந்தி தெரி யாதா?’ என்று ஆரம்பித்து பலவிதங்களிலும் படுத்தி எடுக்கிறார். வேகமாக ஓட்ட வற்புறுத்துகிறார். மனைவி, மகள் மற்றும் மகன் மூவரும் பின்சீட்டில் உயிரைக் கையில் பிடித்தபடி உட்கார்ந்திருக்க... கவலையே இல்லாமல் பான்பராக்கைப் போட்டு காரின் ரிவர்வியூ கண்ணாடியில் துப்புகிறார்.

அயோத்தி படத்தில்...
அயோத்தி படத்தில்...

ஒருகட்டத்தில் காருக்குள் வைத்தே டிரைவரை அடிக்கப் பாய, தாறுமாறாக ஓடி விபத்தில் சிக்குகிறது கார். மனைவி கோமா நிலைக்குச் செல்ல, மற்றவர்கள் காயங்களுடன் தப்பிக்கிறார்கள்.

அந்த நிலையிலும், ‘டிரைவர்தான் காரணம்’ என்று சண்டையிடுகிறார். கும்மிருட்டு நேரம், ஆள் நடமாட்டமே இல்லாத பகுதி, மொழி தெரியாத ஊர்... இப்போதும்கூட திருந்தாத அப்பாவை கண்களாலேயே எரிக்கும் மகள், கதிகலங்கி நிற்கிறாள்.

ஆம்புலன்ஸ் மூலம் அனைவரையும் ராமநாதபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்கும் டிரைவர், மதுரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றால்தான் பிழைக்கவைக்க முடியும் என்கிற நிலையில், உதவிக்காக ராமேஸ்வரத்திலிருக்கும் தன் நண்பனை (சசிகுமார்) அழைக்கிறார். மதுரைக்குக் கொண்டு செல்ல வென்டிலேட்டர் வைத்த ஆம்புலன்ஸ் வாடகைக்குத்தான் கிடைக்கிறது. ஆனால், டிரைவர் இல்லை. வேறு வழியே இல்லாமல் தானே ஓட்டுகிறார் சசிகுமார்.

வழியிலேயே வலிப்பு வந்து இறந்து போகிறார் மனைவி. ‘உடலை போஸ்ட் மார்ட்டம் செய்யாமல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதுதான் எங்கள் மத வழக்கம்’ என்று வாதிடுகிறான் கணவன். ஆனால், எதிர்ப்புத் தெரிவித்து சண்டை பிடிக்கிறார் உடனிருக்கும் மருத்துவ ஊழியர். விமான நிலையத்தில் போய் பேசிக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் சமாதானம் செய்கிறார் சசிகுமார். அப்போதும் சண்டையிடும் ஊழியரை ஓங்கி அறையும் சசிகுமார், அவரை விட்டுவிட்டு ஆம்புலன்ஸை விமான நிலையத்துக்கு விரட்டுகிறார்.

அயோத்தி படத்தில்...
அயோத்தி படத்தில்...

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், டெத் சர்டிபிகேட் உள்பட ஏழுவிதமான சான் றிதழ்கள் இருந்தால்தான் அனுப்ப முடியும். அதுவும் நான்கைந்து மணி நேரத்தில் தேவை. இல்லையென்றால் அடுத்த ஃப்ளைட் மூன்று நாள்களுக்குப் பிறகுதான்.

ஆம்புலன்ஸை அரசு மருத்துவமனைக்குத் திருப்புகிறார். வழியில் மொத்த பேரையும் காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்று உட்காரவைக்கிறது போலீஸ் - மருத்துவ ஊழியரைத் தாக்கியதற்காக!

மொத்த தியேட்டரும் நிமிர்ந்து உட் காருகிறது... மருத்துவக்கல்லூரியின் டீன் வீடு, உடலைப்பதப்படுத்தும் (எம்பாமிங் டீம்), சவப்பெட்டியைத் தரும் நபர் உள்பட ஏழு சான்றிதழ்கள் மற்றும் விமானத்தில் செல் வதற்கான டிக்கெட், அதற்குத் தேவையான ஒரு லட்சம் ரூபாய் என்று அனைத்தையும் தேடி சசிகுமார் பரபரப்புடன் ஓட... நாமும் கூடவே ஓட ஆரம்பித்துவிடுகிறோம். வழக்கமாகவே அரசு இயந்திரம் எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. அதிலும் அது தீபாவளி நாள் என்பதால்... நமக்கு நம்பிக்கையே இல்லை. ஆனால், சசிகுமாருக்கு இருக்கிறது.

‘உன்ன... ஆஸ்பத்தியிரில இறக்கி விட்டுத்தானே வரச் சொன்னேன்’ என்று டிரைவர் நண்பன் கேட்க... ‘அந்தப் பொண்ணையும் பையனையும் பார்த்தா... அப்படியே விட்டுட்டு வரத்தோணலடா’ என்று சசிகுமார் உடையும் காட்சி, அனைவரையும் உடைத்துப்போடுகிறது. சட்டங்கள், விதிமுறைகள் எதையும் மதிக்காமல், சம்பிரதாயங்களை மட்டுமே மதிக்கும் அப்பா, அந்தச் சூழ்நிலையிலும், ‘போஸ்ட் மார்ட்டம் செய்து கூறுபோட்டால்... என் மனைவியின் ஆத்மா எப்படி சாந்தி அடையும்?’ என்று சண்டை பிடிக்க... பொறுமையிழக்கும் மகள்... அப்பாவை ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டு... ‘சாந்தியா... அம்மாவுக்கா...’ என்று பொங்கியெழும் காட்சி... கண்களைக் கசியவைக்கிறது.

கடைசியாக, சசிகுமாரின் பெயரை கணவன் கேட்க... அதற்கு அவர் சொல்லும் பதில்... கணவனை மொத்தமாக உலுக்கி யெடுக்கிறது. மகளும் மகனும் நெகிழ்ச்சியின் உச்சத்தில் நிற்கிறார்கள்.

பாத்ரூம் செல்வது, எந்தப் புடவை கட்டுவது என்கிற ஆலோசனை, ராமேஸ்வரத் தீர்த்தம், சவப்பெட்டியை வாடகைக்குவிடும் போஸ் வெங்கட் பேசும் வசனம், கலங்கடிக்கும் ஏர்போர்ட் காட்சிகள் என ஒவ்வொன்றும் கடைசி வரை காரணங்களுடன் பின்னப் பட்டிருப்பது, கைதட்டல்களை அள்ளுகிறது.

அயோத்தி படத்தில்...
அயோத்தி படத்தில்...

மகனாக வரும் குட்டிப்பையன் - அத்வைத், மகள் - ப்ரீத்தி அஸ்ராணி, அம்மா - அஞ்சு அஸ்ராணி, அப்பா - யாஷ்பால் சர்மா, சசிகுமார் என்று படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது படத்துக்கு பெரிய ப்ளஸ்.

அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்திக்கு ஒரு சல்யூட்!

சான்றிதழ்கள் கிடைத்தனவா? பணம் புரட்டப்பட்டதா? விமான டிக்கெட் கிடைத் ததா? உடல் ஊருக்கு அனுப்பப்பட்டதா?

கண்ணீரை வரவழைக்கும் க்ளைமாக்ஸ் வரை படத்தைத் தியேட்டரில் பார்ப்பதுதான், இத்தகைய முயற்சிக்கு நாம் செய்யும் மரியாதை!