ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

‘பொம்பள அடிச்சாலும் வலிக்கும்!’ - ஓங்கி ஒலிக்குது... ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே’

‘பொம்பள அடிச்சாலும் வலிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
News
‘பொம்பள அடிச்சாலும் வலிக்கும்!

புகுந்தவீடு, பிறந்தவீடு இரண்டுமே கரித்துக் கொட்டுகிறது. வீட்டைவிட்டே வெளியேறி, வொர்க்கிங் உமன் ஹாஸ்டலில் சேர்கிறார். டைவர்ஸ் கேட்டு நீதிமன்றப் படியேறுகிறான் ராஜேஷ்.

மலையாளத்தில் வெளியாகும் பெரும்பாலான படங்கள், பாடங்களாகத்தான் இருக்கும். குறிப்பாக, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அர்த்தபூர்வமாக பேசும் படங்கள், அங்கே அடுத்தடுத்து வெளியாகி கவனத்தை ஈர்க்கும். அந்த வரிசையில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது, கடந்த அக்டோபர் மாத இறுதியில் பெரியதிரையில் வெளியிடப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன் ஓடிடி தளத்திலும் வெளியாகியிருக்கும் ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே!’ விபின் தாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் தர்ஷனா ராஜேந்திரன், பேசில் ஜோசப், அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கல்லூரிப் படிப்பை முடித்தே ஆக வேண்டும் என்கிற தவத்தில் இருக்கிறார் ஜெயா. ஆனால், பல குடும்பங்களிலும் இருப்பதுபோலவே பெண் எதற்காகப் படிக்க வேண்டும் என்கிற அடிப்படை வாதக் கொள்கை கொண்டவர்களாக இருக்கும் அப்பா, அம்மா, தாய்மாமன் என்று அனைவரும் தடையாக இருக் கிறார்கள். அதுமட்டுமல்ல, சின்ன வயதிலிருந்தே ஆண் பிள்ளைதான் உசத்தி என்கிற மனப்பாங்கோடு, மகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மகளை கொஞ்சம் அழுத்தியே வளர்க்கிறார்கள்.

‘பொம்பள அடிச்சாலும் வலிக்கும்!’ - ஓங்கி ஒலிக்குது... ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே’

வழக்கம்போல, ‘ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்துட்டோம்னா... நாங்க நிம்மதியா கண்ண மூடிடுவோம்’ என்பது போல ஒரு மாப்பிள்ளையைத் தேடிப்பிடித்து தள்ளிவிடுகிறார்கள். அந்த நிமிடத்திலிருந்து பெரும்பாலான பெண்களின் நிம்மதி தொலைந்துபோவது குறித்து, இத்தகைய அப்பா, அம்மாக்கள் மற்றும் சுற்றம்சூழல் எதுவுமே கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டுவிடுவார்கள். ‘அட்ஜஸ்ட் பண் ணிக்கோ’ என்பதுதான் அவர்கள் தரும் அதிக பட்ச ஆதரவாக இருக்கும். கணவன் - மனைவிக்குள் பிரச்னை வந்தால்... பெண் மீது மட்டுமே அனைத்துக் குற்றங்களையும் சுமத்தி, அவளை காலங்காலமாக அழுத்தியே வைத்துக் கொண்டிருக்கும் அவலமிக்க சமூகமாயிற்றே...

‘புகுந்தவீட்டில் என்ன நடந்தாலும் சகித்துக் கொண்டு வாழ்ந்தே ஆகவேண்டும்’ என்று காலங்காலமாக கற்பிக்கப்பட்டிருப்பதால், அதிலிருந்து துளி விலகினாலும், பிறந்த வீட்டினரே தம்பெண்ணைக் கொல்லக்கூடத் தயங்குவதில்லை. ‘இது உன்னோட பொறந்தவீடு. வரலாம் போகலாம். அதுக்காக இங்கவே இருந்துடக் கூடாது. கல்லானாலும் கணவன், புல்லானா லும் புருஷன்’, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று கண்டகண்ட கற்பிதங்களைச் சொல்லிச் சொல்லியே ஒடுக்கப்படுகிறார்கள் பெண்கள்.

பெண் பார்க்கும்படலத்தின்போது, ‘பி.எஸ்ஸி வரைக்கும் படிக்கட்டுமே!’ என்று மிகவும் ‘பெருந்தன்மை’யோடு மாப்பிள்ளை ராஜேஷ் அனுமதிக்கிறார். அதை நம்பி, அவருக்கு வாக்கப்படுகிறார் ஜெயா.

புகுந்த வீட்டில் நுழைந்த பிறகுதான் தெரி கிறது, வழக்கம்போல வண்டவாளம் தண்டவாளமெல்லாம். எதற்கெடுத்தாலும் மூக்குநுனியில் கோபத்தை வைத்துக் கொண்டி ருக்கும் கணவன் ராஜேஷ், கைநீட்டுவதையே வழக்கமாக வைத்திருக்கிறான். எந்தப் பொருளாக இருந்தாலும் தூக்கிப்போட்டு உடைப்பது. பெண் என்றால், வீட்டுக்குள்ளேயே அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என இந்திய சராசரி கணவனா கவே வலம் வருகிறான்.

வெளியிலும்கூட அப்படித்தான்... கோழிப் பண்ணைதான் ராஜேஷுக்குத் தொழில். விலைகுறைவாக இவன் கோழிகளை விற்பதால், வீதிக்கு வந்துவிடும் பக்கத்து கோழிப்பண்ணைக்காரர், வயதான சூழலில் மேற்கொண்டு நடத்தமுடியாது என்று சொல்லி, ராஜேஷிடமே விலைக்குக் கொடுப்பதாகக் கூறுகிறார். ஆனால், அதை ஏற்க மறுப்பதோடு, வயதுக்குக்கூட மரியாதை கொடுக்காமல் நக்கல் செய்கிறான், ஜெயாவின் கண்முன்பாகவே. பண்ணையில் வேலை பார்ப்பவர் களிடமும் மூர்க்கமாகவேதான் நடந்துகொள்கிறான். அம்மா, தங்கை என குடும்பத்தாரிடமும் அப்படியே!

‘பி.எஸ்ஸி படிக்கலாம்’ என்கிற கனவு தகர்ந்ததோடு மட்டுமல்லாமல், தினம்தினம் அடிவாங்கியே சாகவேண்டிய நிலை ஜெயாவுக்கு. இங்கேதான் ட்விஸ்ட்... ஒருநாள், திடீரென்று ‘குங்ஃபூ பாண்டா’ போல எகிறி ஒரே உதை, எழுந்திருக்கவே முடியாத நிலைக்குச் செல்கிறான் ராஜேஷ்.

சோஷியல் மீடியா வீடியோக்களைப் பார்த்துப் பார்த்து புகுந்தவீட்டுக்கு விதம்விதமாக சமைத்துப்போட்டுக் கொண்டிருந்த ஜெயா, ஒரு கட்டத்தில் வீடியோக்களைப் பார்த்தே கராத்தே கற்றுக் கொண்டுவிடுகிறார்.

`எப்படி... இப்படி' என்று யோசிக்கும் ராஜேஷ், சின்ன வயதில் தான் கற்றுக்கொண்ட அந்த கராத்தேவை வைத்து, மீண்டும் ஜெயாவுடன் மோதுகிறான். பெரியம்மா மகன் சொன்ன யோசனைப்படி, ரகசியமாக அதை வீடியோ வாகவும் எடுக்கிறான். வீடே ரணகளமாகிறது. ஒரு பொருள் இல்லாமல் உடைந்து நொறுங்குகிறது. கடைசியில் தானும் நொறுங்கி விழு கிறான் ராஜேஷ். அதன் பிறகு, அண்ணனிடம் விவாதிக்கிறான். அவர் ஓர் ஐடியா வைக் கொடுக்க, அதைச் செயல் படுத்தி மொத்த மாக ஜெயாவை முடக்கிப்போடத் திட்டமிடுகிறான் ராஜேஷ். வழக்கமான அதே பழைய டெக்னிக்தான். ‘ஒரு குழந்தையைக் கொடுத்துவிட்டால்... அதன்பிறகு அடங்கி ஒடுங்கித்தானே ஆக வேண்டும். குழந்தை வளர்ப்பிலேயே கவனம் செல்வதால், வேறு எதிலும் கவனம் திரும்பாது. ‘பொட்டச்சி’ என்று சொல்லிச் சொல்லியே அடக்கி ஆளலாம்’ என்பதுதான் திட்டம். நயவஞ்சகமாகப் பேசி, மெள்ள ஜெயாவின் மனதைக் கரைத்து, அதைச் சாதிக்கிறான். அதன்பிறகு, தன் வாயாலேயே அந்தத் திட்டத்தை அவன் உளறிவைக்க, உஷ்ணம் உச்சிக்கு எகிறுகிறது ஜெயாவுக்கு. அடுத்த நிமிடமே அவள் மயங்கிக் கீழே விழ, கர்ப்பம் கலைந்துவிடுகிறது.

புகுந்தவீடு, பிறந்தவீடு இரண்டுமே கரித்துக் கொட்டுகிறது. வீட்டைவிட்டே வெளியேறி, வொர்க்கிங் உமன் ஹாஸ்டலில் சேர்கிறார். டைவர்ஸ் கேட்டு நீதிமன்றப் படியேறுகிறான் ராஜேஷ். இதற்கிடையில், அவன் அடிவாங்கும் வீடியோ எப்படியோ வெளியில் கசிந்து வைரலாகிறது. இப்படி அவள் அடித்ததையே காரணமாகச் சொல்லி, டைவர்ஸ் வாங்கி விடலாம் என்று நம்பிக்கை கொடுக்கிறார் வழக்கறிஞர். ஆனால், நீதிமன்றத்தில் எல்லாமே தலைகீழாகிவிடுகிறது.

நீதிபதி ஒரு பெண்ணாக இருந்தும், ஆரம்பத் தில் ஜெயாவுக்கு எதிராகவே பேசுகிறார். ‘பாவம், பார்த்தாலே பரிதாபமா இருக்கானே பையன். இந்தப் பொண்ணுங்களே இப்படித் தான்’ என்று ஓப்பன் நீதிமன்றத்தில் கமென்ட் அடிக்கிறார். ஆனால், நீதிமன்றக் காட்சி படு பரபரப்பாக முன்னேற முன்னேற, நீதிபதி யின் கேள்விகளால் டென்ஷனாகும் ராஜேஷ் ஒருகட்டத்தில் தன் உண்மை முகத்தை வெளிப் படுத்தி, நீதிபதியையே அதிர வைக்கிறான்.

‘நான் அவளுக்கு சுதந்திரம் கொடுத்திருக் கேன்’ என்று ராஜேஷ் சொல்ல, கோபத்தின் உச்சிக்கே செல்லும் நீதிபதி, ‘ஓ... நீ சுதந்திரம் கொடுத்திருக்கியோ?’ என்று உஷ்ணத்தை வெளிப்படுத்துவதோடு... பெண்களுக்குத் தேவை நீதி, சமத்துவம், பெண் சுதந்திரம் இந்த மூன்றும்தான் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறார்.

‘பொம்பள அடிச்சாலும் வலிக்கும்!’ - ஓங்கி ஒலிக்குது... ‘ஜெய ஜெய ஜெய ஜெயஹே’

விவகாரத்து வழக்கு என்னவானது, ஜெயா வின் எதிர்காலம் என்னவாக வடிவெடுக்கிறது என்பதுதான் க்ளைமாக்ஸ்... வெகு இயல்பான க்ளைமாக்ஸ். தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் கலாசாரம், வாழ்க்கை முறை, உணவு முறை என்று எதிலும் பெரிதாக வித்தியாசம் இல்லை என்பதால், கேளரக்காட்சிகள் அப்படியே தமிழ் மண்ணுக்கும் அச்சு அசலாக பொருந்திப் போகின்றன.

படம் முழுக்கவே இழையோடும் காமெடி யான கதை நகர்த்தல், நன்றாகவே கைகொடுக் கிறது. வசனங்கள் எல்லாம் செம பஞ்ச். ‘அடிக்கறது ஈஸி... திரும்ப வாங்கறது எவ்வளவு கஷ்டம்னு தெரியுதா?' என்று அண்ணனிடம் தங்கை கேட்பது... ‘தங்கை குண்டாக இருப்பதற்கு காரணம்... உணவா, ஹார்மோன் பிரச்னையா என்பதே தெரியாமல் சோத்து மூட்டை என்று கிண்டல் செய்யும் அண்ணன்’ என்று ஜெயா சாடுவது என படம் நெடுகவே காமொடியும் குத்தலும் கலந்த வசனங்கள் பட்டையைக் கிளப்புகின்றன.

பெண்கள் என்றால், தவறே செய்ய மாட்டார்கள் என்பதில்லை. சில பெண்கள் தவறிழைக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அத்தகைய தவறுகளைச் செய்யும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், பெண் செய்யும் தவறுகள் மட்டுமே பூதாகரப்படுத்தப் பட்டு, ‘ஆம்பள அப்படித்தான் இருப்பான்’ என்கிற கற்பிதம்தான் தப்பானது. அதற்கு எதிராகப் பேசித்தானே ஆக வேண்டும்.

இன்னும் ஓங்கி ஓங்கி ஒலிக்கட்டும் பெண் களை வதைக்கும் கற்பிதங்களுக்கு எதிராக `ஜெய ஜெய ஜெய ஜெயஹே’!