விருது, ஒரு திரைப்படத்தின் இறுதி இலக்குமல்ல, ஒரே அங்கீகாரமுமல்ல. ஆனால், கலைஞர்களையும் அவர்களின் படைப்புகளையும் அரவணைத்து, ஆதரித்து, அங்கீகரிக்க வேண்டியது ஓர் அரசின் கடமை.

சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளாக இருக்கட்டும், தற்போது ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் 'கல்லி பாய்' படமாக இருக்கட்டும், எப்போதுமே இங்கே அங்கீகாரம் ஒருதலைபட்சமாக இருக்கிறது என்ற பொதுக்கருத்தில் அடங்கிவிடுகிறது இந்தியத் திரைத்துறை.
தமிழின் 'வடசென்னை', 'சூப்பர் டீலக்ஸ்', 'ஒத்த செருப்பு', இந்தியின் 'கல்லி பாய்', 'ஆர்ட்டிக்கிள் 15', 'பதாய் ஹோ', 'அந்தாதுன்', தெலுங்கின் 'டியர் காம்ரேட்' உட்பட 28 திரைப்படங்கள் ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா அமைப்புக்கு அனுப்பப்பட்டன. மத்திய அரசின் அதிகாரத்துக்குள் செயல்படும் இந்த அமைப்புதான் ஒவ்வோர் ஆண்டும் ஆஸ்கருக்கு அனுப்பப்படும் இந்தியப் படத்தைத் தேர்வு செய்யும். அப்படித் தேர்வாகும் படம், சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற பிரிவில் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படும். இப்படி எல்லா நாடுகளும் பரித்துரைக்கும் தத்தம் படங்களில் 15 படங்கள் ஆஸ்கருக்கு இறுதியாக நாமினேட் செய்யப்படும். அந்தப் பிரிவுக்காக இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்தியப் படம்தான் 'கல்லி பாய்.'

ஹிப் ஹாப் கலாசாரத்தைப் பற்றிய கதையம்சத்துடன் ஜோயா அக்தர் இயக்கிய படம் கல்லி பாய். முழுக்க முழுக்க மேற்கத்திய இசைவடிவமாக இருந்தாலும், அடிமைத்தனத்தின் விளைவாக சுரக்கும் வியர்வையும், வடியும் ரத்தமும் ஈரமாக்கிய அத்தனை நிலங்களிலும் ஹிப்ஹாப்பின் வேர்கள் பரவும் என்பதுதான் இயற்கை அந்த இசைவடிவத்துக்கு விதித்த பண்பு.
அப்படி ஒடுக்கப்பட்ட சமூகம் குடியேறிக் குழுமியிருக்கும் உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியிலிருந்து, ஹிப்ஹாப் வேர்விட்டு வரத் துடிக்கும் ஒரு தெருப் பாடகனின் கதையை எவ்வளவு உண்மைத் தன்மையோடு பதிவு செய்ய முடியுமோ அவ்வளவு இயல்பாக 'கல்லி பாய்' படத்தில் பதிவு செய்திருப்பார் இயக்குநர் ஜோயா அக்தர். அந்தப் படத்துக்கு ஒரு தேசிய விருதுகூட கிடைக்கவில்லை என்பதே குற்றச்சாட்டாக பல இந்தி கலைஞர்களால் எழுப்பப்பட்டது.

கூரிய ஒளிப்பதிவு, அதைவிட சீரிய வசனங்கள் என 'கல்லி பாய்' படத்தை மெச்சிப் புகழ வேண்டும் என்றாலே தனியாக ஒரு கட்டுரை எழுதலாம். இப்படி ஒரு படம் வெளியானால், அது உலக அளவில் கவனம் பெறவில்லை என்றால்தான் அதற்கு அதிர்ச்சி ஆக வேண்டியிருக்கும்.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் குரலாக இருந்த கதையும் நேர்த்தியான படமாக்கலும் கொண்ட படமாக இருந்தாலும், அதனுடன் போட்டியிட்ட பிற இந்தியப் படங்களையெல்லாம் வைத்து 'கல்லி பாய்' படத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் மீண்டும் அந்த ஒருதலைபட்ச சிக்கல் குறித்து பேசவேண்டிய சூழல் உருவாகிறது.

1957 முதல் இப்போது வரை 'தெய்வமகன்', 'நாயகன்', 'தேவர்மகன்', 'குருதிப்புனல்', 'அஞ்சலி', 'இந்தியன்', 'ஜீன்ஸ்', 'ஹே ராம்', 'விசாரணை' என இதுவரை ஒன்பது முறை தமிழ்ப் படங்கள் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதேபோல மலையாளம் மற்றும் தெலுங்கில் மிகச் சொற்பமான அளவிலேயே படங்கள் தேர்வாகியுள்ளன. கன்னடத்திலிருந்து ஒருப் படம்கூட இதுவரை தேர்வானதில்லை. இந்தியின் ஆதிக்கமே ஆஸ்கரில் மேலோங்கி இருந்துள்ளது. இன்றும் இருக்கிறது.
'கல்லி பாய்' படத்தைப் பொறுத்தவரையில் ஒரு தனிமனிதனின் போராட்டமும் அவன் கனவுகளை நோக்கிய பயணமும் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால், மும்பையின் தாராவி பகுதியில் நடக்கும் இந்தக் கதையில் எந்த அளவுக்கு ஹிப்ஹாப் குறித்த வரலாற்றுத் தரவுகள் இடம்பெற்றுள்ளன என்பதுதான் கேள்வி. தாராவி பகுதியைச் 'சோட்டா தமிழ்நாடு' என்றே அழைக்கிறது வடஇந்தியா. குட்டித் தமிழ்நாடு என்று அழைக்கும் அளவுக்குத் தமிழர்கள் நிறைந்த பகுதி அது. இதைக் 'காலா' படத்தில் பதிவு செய்திருப்பார் பா.இரஞ்சித். அங்கு வசிக்கும் 10 லட்சம் பேரில் பெருபான்மையானவர்கள் தமிழர்கள்தாம்.

சாதி, மதம், மொழி என மூன்று வடிவங்களிலுமே ஒடுக்கு முறையைச் சந்தித்த தமிழர்களே தாராவியில் ஹிப்ஹாப் கலாசாரத்தை அறிமுகப்படுத்தி, அந்த வாழ்க்கைமுறையை பெருமளவில் பரவலாக்கியும் உள்ளனர். இந்தப் படத்தின் ஹீரோ கதாபாத்திரமான ஹிப்ஹாப் பாடகன் முராத், இந்தி மொழி பேசும் இளைஞனாக இருப்பதெல்லாம் இது பாலிவுட் படம் என்பதால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், படத்தில் எங்குமே தமிழர்களைக் குறித்த குறியீடுகள் இல்லாமல் இருந்தது கொஞ்சம் இந்திப்படுத்துதலாகிவிட்டது. படத்தில் காட்டப்படும் எந்த ராப்பிங் அணியும் தமிழ் பேசாதது மேலும் ஒரு ஏமாற்றம்.
'கல்லி பாய்' எந்த அளவுக்கு அதன் மையக்கருவை ஆழமாக அலசியுள்ளது என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. தாராவி இளைஞர்கள் சந்திக்கும் பிரதான பிரச்னையான சாதிய அடக்குமுறை குறித்தோ மதம் சார்ந்த அடக்குமுறை குறித்தோ இந்தப் படம் எதுவும் பேசவில்லை என்பது கவனமாகப் பார்க்க வேண்டிய ஒரு அம்சம். தன் குடும்பமும் பொருளாதாரப் பின்னணியும் மட்டுமே அவன் சாதிப்பதற்குத் தடையாக இருப்பதாக இந்தப் படம் சித்திரித்திருக்கும். மேலும், சிறுவர்களை போதை மருந்து கடத்தலில் ஈடுபடுத்தும் ஒரு கதாபாத்திரத்தையும் இந்தப் படம் இறுதியில் நியாயப்படுத்தியிருக்கும்.

நீளத்திலும் அகலத்திலும் இந்தப் படம் அதன் கதாநாயகன் சந்திக்கும் சிக்கல்களைக் காட்சிப்படுத்திய அளவுக்கு ஆழத்தில் காட்சிப்படுத்தவில்லை என்பதே இந்தப் படத்தின் அடிப்படைச் சிக்கல். இதைத் தாண்டி இந்தப் படம் '8 மைல்' என்ற 2002-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படத்தின் தழுவல் என்றும், அதற்கும் இதற்கும் பலக் காட்சிகளிலும், கதாபாத்திர வடிவமைப்பில் ஒற்றுமை இருக்கிறது என்றும் பல திரைப்பட விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதே போட்டியிலிருந்த மற்ற படங்களான, 'வடசென்னை', 'ஆர்ட்டிக்கிள் 15', 'சூப்பர் டீலக்ஸ்' மற்றும் மலையாளப்படமான 'உயரே' போன்ற படங்களில் இந்த ஆழம் நன்றாகவே இருக்கும். ஒரு நிலம், அதைச் சார்ந்திருக்கும் மக்கள், அவர்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகள் என அதன் திரைக்கதையின் மையப் பிரச்னை குறித்த தெளிவான கண்ணோட்டத்தை 'ஆர்ட்டிக்கிள் 15'-ம், 'வடசென்னை'யும் சொன்ன அளவுக்கு 'கல்லி பாய்' சொல்லவில்லை என்பதே உண்மை. 'சூப்பர் டீலக்ஸ்', 'உயரே', 'அந்தாதுன்' போன்ற படங்களில் இருந்த அளவுக்குக் கதாபாத்திர வடிவமைப்பும் 'கல்லி பாய்' படத்தில் இருக்காது. சில கதாபாத்திரங்களைக் குறித்த தெளிவான வர்ணனை 'கல்லி பாயி'ல் காணமுடியாது. இப்படி 'கல்லி பாயி'ல் இருக்கும் சிக்கல்கள் மட்டுமன்றி, இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்படும் படத்தேர்வில் இருக்கும் சிக்கல்கள், அவற்றை ஆஸ்கர் கமிட்டி அணுகும்விதம் போன்றவையும் தற்போது பேசுபொருளாகியிருக்கின்றன.

ஏற்கெனவே, ஆஸ்கர் கமிட்டியில் இருப்பவர்கள் இந்தியப் படங்களைப் பெரிதாக மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல இயக்குநர்களால் எழுப்பப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருப்பவர்களைப் பொறுத்தவரை இந்தியப் படங்கள் எல்லாமே இந்திப் படங்கள்தாம். அதைத் தாண்டி இங்கே இத்தனை மொழிகளில் படங்கள் எடுக்கப்படுவது அவர்களுக்குத் தெரியாது என்ற ஒரு கருத்தும் இருந்துவருகிறது. அதனால் "அதிக பாலிவுட்தனத்துடன் இருக்கும் என்ற முன்முடிவோடே இந்தியப் படங்கள் கையாளப்படுகின்றன" என வெற்றிமாறன் தன் 'விசாரணை' படம் நாமினேட் ஆகாததற்கு முக்கிய காரணம் என்று சொல்லியிருந்தார்.
விருது கமிட்டியில் கிட்டத்தட்ட 9,000 உறுப்பினர்கள் உலகெங்கிலும் பரவிக்கிடக்கிறார்கள். அவர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படும். அவர்களுக்குத் தங்கள் படங்களைப் போட்டுக்காட்டுவதே ஒரு படக்குழுவுக்குப் பெரிய பணியாக இருக்கும். அந்தச் சிக்கல்களையெல்லாம் ஒரு திரைக்கதையாக்கி இயக்குநர் சலிம் அஹமத் மலையாளத்தில் 'அண்டு தி ஆஸ்கார் கோஸ் டூ' என்ற படத்தை இயக்கியிருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன், தன்னுடைய 'ஆடமிண்டே மகன் அபு' என்ற படத்தை ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்களுக்குத் திரையிட அவர் மேற்கொண்ட முயற்சிகள், கடந்து வந்த கஷ்டங்கள், அதனால் விளைந்த தோல்வியைப் படமாக்கியிருந்தார்.
வேடிக்கை என்னவென்றால் 'அண்டு தி ஆஸ்கார் கோஸ் டூ' திரைப்படம் இந்த ஆண்டு ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டு, இந்திய அளவில்கூட தேர்வாகவில்லை. ஒருவேளை இந்தப் படம் இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டிருந்தால் விருது வாங்கியிருக்குமோ இல்லையோ, இந்தி அல்லாத மற்ற மொழி இயக்குநர்கள்படும் சிக்கலையாவது ஆஸ்கர் கமிட்டியில் உள்ளவர்களுக்கு உணர்த்தியிருக்கும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 20 மொழிகளில் திரைப்படங்கள் உருவாகின்றன என்றாலும் வெளியுலகத்துக்கு பாலிவுட் சினிமாவே இந்திய சினிமாவின் ஒற்றை அடையாளமாக இருக்கிறது. பல நல்ல படைப்புகள் ஓரங்கட்டப்பட்டு சில குறிப்பிட்ட படங்களே உலக அங்கீகாரம் பெறுவது மென்மேலும் பாலிவுட்தனத்தையே மற்ற மொழிப் படங்கள் மீதும் பூசுகின்றது.