சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

டான் - சினிமா விமர்சனம்

டான் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
டான் - சினிமா விமர்சனம்

அனிருத் கைபட்டால் படம் அடுத்த லெவலுக்குச் செல்லும் என்பதற்கு டானும் ஒரு சாட்சி.

கடைசி பெஞ்ச் முன்னாள் மாணவர்கள் தங்கள் கல்லூரிக் கால கலாட்டாக்களைப் புரட்டிப் பார்க்கும் டைரிக்குறிப்புகளே இந்த ‘டான்.’

சிவகார்த்திகேயனுக்கும் அவர் அப்பா சமுத்திரக்கனிக்கும் சிறுவயதிலிருந்தே ஆகாது. பொறியியல் கல்லூரியில் சேர்க்கப்படும் சிவாவின் ஆசை எல்லாம் தன் தனித்திறமையைக் கண்டடைந்து அந்தத் துறையில் பெரிய ஆளாக வரவேண்டும் என்பதுதான். அதனால் படிப்பில் பெரிதாக கவனம் செலுத்தாமல் கல்லூரியில் சுற்றிவர, இவருக்கும் பேராசிரியர் எஸ்.ஜே சூர்யாவுக்கும் முட்டிக்கொள்கிறது. நாம் எல்லாரும் கடந்துவந்த ஆசிரியர் - மாணவர் ஈகோ சண்டையாய் அது உருவெடுக்க, அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

கல்லூரிக்கால சட்டையை இப்போது போட்டுப் பார்த்து அது பொருந்தினால் மனதுக்குள் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி தொற்றுமே, அப்படி இருக்கிறது கல்லூரிக்கால சிவகார்த்திகேயனைப் பார்க்க. உறுத்தாத நடிப்பின் வழியே டான் வேடத்திற்குப் பொருந்திப்போகிறார். காமெடி ஏரியாவிலும் ட்ரேட்மார்க் சிவா. என்ன, ஸ்கூல் வேடம்தான் பொருந்தாத சட்டையாகிவிட்டது.

பிரியங்கா மோகன் - ஹீரோ என்ன செய்தாலும் கடைசியாய் மன்னித்து அவரைச் சுற்றிச் சுற்றி வரும் அதே காதலி ரோல்.

டான் - சினிமா விமர்சனம்

மிகை நடிப்பிற்கும் குறை நடிப்பிற்கும் நடுவே சரியாய் நூல் பிடித்து பேலன்ஸ் செய்து ஹை டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெறுகிறார் எஸ்.ஜே சூர்யா. க்ளைமேக்ஸுக்கு முன்பாய் ஹீரோவோடு தன் அறையில் அவர் உரையாடும் காட்சி நெகிழ்ச்சி. இதற்கு முன்னரும் சமுத்திரக்கனியை இப்படிப் பார்த்திருந்தாலும் இரண்டாம்பாதியில் மனிதர் கலங்க வைக்கிறார். காமெடிக்கென ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தும் அந்த ஏரியாவில் சிவகார்த்திகேயன் மட்டுமே பாஸ்!

அனிருத் கைபட்டால் படம் அடுத்த லெவலுக்குச் செல்லும் என்பதற்கு டானும் ஒரு சாட்சி. பாடல்கள், பின்னணி இசை என இசை வழியே தேவையான இளமையை, உணர்ச்சிகளைப் புகுத்தியிருக்கிறார். துடைத்தெடுத்த கண்ணாடி போல பளீரென இருக்கிறது பாஸ்கரனின் ஒளிப்பதிவு.

கடந்த பத்தாண்டுகளில் பொறியியல் படித்தவர்கள், அவர்களின் பெற்றோர்கள் என பெரும்பான்மையானவர்கள் தங்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளுமாறு படம் எடுத்தவகையில் அறிமுக இயக்குநர் சிபிக்கு வெற்றியே. முதல் பாதியில் கொஞ்சம் தடுமாறினாலும் இரண்டாம் பாதியின் எமோஷனல் காட்சிகளால் அதை சாமர்த்தியமாய் சரிக்கட்டியும்விடுகிறார்.

பார்த்துப் பழகிய யூகிக்க முடிந்த காட்சியமைப்புகள், ‘இதெல்லாம் எந்த காலேஜ்ல நடக்கும்?’ என நினைக்கவைக்கும் லாஜிக் மீறல்கள் ஆகியவையும் பரீட்சை எழுத நிற்கும் மாணவர்கள் போல வரிசைகட்டி நிற்கின்றன. கூடவே மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்று ஆளுக்கு ஒரு அட்வைஸைச் சொல்வோமே என்று மெசேஜ்களை அள்ளித் தெளிப்பதால் நம் இன்பாக்ஸ் ஸ்டோரேஜ் தள்ளாடுகிறது.

என்றாலும், போரடிக்காமல் மாணவர்கள், குடும்பங்கள் என எல்லாரும் தம்ஸ் அப் காட்டுவதால் தப்பிக்கிறார் இந்த ‘டான்.’