
காலேஜில் எப்போதுமே அராத்து பண்றதுக்குன்னு ஒரு கூட்டம் இருக்கும். ஜாலியா சிரிச்சுப் பேசி, மத்தவங்களைக் கலாய்ச்சு எப்பவுமே அட்ராசிட்டி பண்ணிட்டுத் திரிவாங்க.
‘டான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே அவ்வளவு வசீகரிக்கிறது. தமிழ் சினிமாவின் வியாபாரத்தில் இன்று சிவகார்த்திகேயனுக்கு அதிமுக்கிய இடம். அறிமுக இயக்குநராகவும் முதல் படமாகவும் ‘டான்’ அமைய, சந்தோஷத்தில் இருக்கிறார் சிபி சக்ரவர்த்தி. இயக்குநர் அட்லியின் சீடர்.
“சிவில் இன்ஜினீயரிங் படிச்சேன். ஆனா எனக்கு சினிமாமேலதான் ஆர்வம். அதனால் குறும்படங்கள் இயக்க ஆரம்பிச்சேன். ஒரு குறும்படத்துக்கு பாலுமகேந்திரா சார் கையால் விருது கிடைச்சது. அப்புறம் அட்லி சார்கிட்டே நாலு வருஷம் உதவி இயக்குநரா இருந்தேன். இப்போ பண்ணிக்கிட்டிருக்கும் ‘டான்’ படத்தின் ஒரு சின்னப் பகுதியை ஒரு பைலட் எடுத்து ‘மெர்சல்’ படத்தின்போது விஜய் சார்கிட்ட காண்பிச்சேன். ‘டேய், சூப்பராக இருக்குடா’ன்னு தட்டிக் கொடுத்தார். அந்த ஊக்கம்தான், ‘இனி தனியாகப் படம் பண்ணலாம்’னு நம்பிக்கை தந்துச்சு. சிவகார்த்திகேயன் சார்கிட்ட கதை சொன்னேன். அவர் பல சந்தேகங்கள் கேட்டுத் தெளிவானதும் நடிக்க சம்மதிச்சார். அவர் வந்ததும் இது பெரிய படமாகிடுச்சு” உற்சாகத்துடன் பேச ஆரம்பிக்கிறார் சிபிசக்கரவர்த்தி.
‘டான்' தலைப்பைப் பார்த்ததும் பக்கா ஆக்ஷன் படம்னு தோணுதே?
“அப்படித்தான் எல்லாரும் நினைப்பாங்க. ஆனா இந்தப் படத்தில் ஆக்ஷனும் இருக்குமே தவிர, முழுநீள ஆக்ஷன் படமில்லை.
காலேஜில் எப்போதுமே அராத்து பண்றதுக்குன்னு ஒரு கூட்டம் இருக்கும். ஜாலியா சிரிச்சுப் பேசி, மத்தவங்களைக் கலாய்ச்சு எப்பவுமே அட்ராசிட்டி பண்ணிட்டுத் திரிவாங்க. அப்படியொரு அராத்துப் பையன்தான் சிவகார்த்திகேயன். ‘டான்’ தலைப்பைப் பார்த்ததும் கேங்வார், துப்பாக்கி, தோட்டா, ரத்தம்னு நினைச்சீங்கன்னா நினைப்பை மாத்திக்கங்க. சிவகார்த்திகேயன் இதில் ஒரு செல்ல டான்.
தமிழில் ஒரு ஜாலியான காலேஜ் படம் வந்து ரொம்ப நாளாச்சு. காலேஜ் படங்களைப் பார்க்கும்போதே எல்லாரும் அவங்கவங்க காலேஜ் நாள்கள் ஞாபகத்துக்குள்ள போயிடுவாங்க. அப்படி எல்லாருடைய மலரும் நினைவுகளைத் தூண்டிவிடற மாதிரி பல காட்சிகள் இருக்கு. சிவகார்த்திகேயன் சார் காலேஜ் ஸ்டூடன்டா அப்படியே பொருந்திப்போயிருக்கார். அவர் காலேஜ் ஸ்டூடன்டா நடிக்கும் முதல் படம் இதுதான். அதனால் அவரும் உற்சாகமா நடிச்சார். நிச்சயம் அவர் ரசிகர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். காலேஜ் வாழ்க்கையில் ஆரம்பிச்சு முப்பது வயசு வரையிலான வாழ்க்கைதான் படத்தின் கதை.
சிவகார்த்திகேயன் சாரே தயாரிப்பாளரா அமைஞ்சதும் பெரிய விஷயம். அவரது ‘டாக்டர்’ படம் பெரும் வெற்றியை அடைஞ்சிருக்கு. நூறு கோடி கலெக்ஷனைத் தொட்டாலும் என்னைக்கும் போல இயல்பா இருக்கார். எனக்கு அத்தனை வசதியும் செய்துகொடுத்து படம் நல்லா வருவதற்கு ரொம்ப சப்போர்ட் பண்ணினார். படத்தில் ஒரு முக்கியமான காட்சி இருக்கு. ரொம்ப சென்சிட்டிவான இடம். ‘இன்னைக்கு எத்தனை டேக் போனாலும் பரவாயில்லை, அதை சரியாகக் கொண்டு வந்திடணும்’னு ஸ்பாட்டுக்குப் போனேன். அதை அப்படியே உள்வாங்கி ஒரே டேக்கில் ஓகே பண்ணினார். நிச்சயம் அந்தக் காட்சி ‘விகடன்’ விமர்சனத்தில் இடம்பெறும், பாருங்க.”
எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காளி வெங்கட், ராதாரவி, சிங்கம்புலின்னு நட்சத்திரப் பட்டாளமே இருக்கே?’’
“இவங்களுக்கு எல்லாம் ரொம்ப ஸ்ட்ராங் கேரக்டர்கள். ஸ்கிரிப்டை எழுதும்போதே யார் யார் என்னென்ன கேரக்டருக்குப் பொருந்துவாங்கன்னு மனசில் வெச்சுதான் எழுதினேன். எல்லாருமே நடிக்க வருவாங்களான்னு தெரியாது. ஆனால் வந்தால் நல்லா இருக்கும்னு நினைச்சேன். சூரி சிவகார்த்திகேயனுடன் நிறைய படங்களில் நடிச்சிருந்தாலும் இது வழக்கமான சிவகார்த்திகேயன் - சூரி காம்போ இல்லை. கதைக்குப் பெரிய அளவில் சப்போர்ட் பண்ணும் கேரக்டர் சூரி சாருக்கு. சிவாங்கி கேரக்டர் கடைசியில்தான் உருவானது. அதுவும் முக்கியமான கேரக்டர்.
சமுத்திரக்கனி சார் அப்படியே பாசிட்டிவ் எனர்ஜி. அவ்வளவு உற்சாகமாகப் படம் உருவாக ஆர்வமாக இருப்பார். கூட இருக்கிறவங்க நடிப்பும் நல்லா இருக்கணும்கிற அக்கறை கொண்டவர்கள் சிவகார்த்தி சாரும் கனி சாரும். நடிக்கிற எல்லோருக்கும் கெட்டப்பில் சின்னச்சின்ன வேறுபாடு காட்டியிருக்கேன். பால சரவணன், காளி வெங்கட் எல்லாம் பைலட் தயாரிக்கும்போதே துணையாக இருந்தவர்கள். என்னைப் பொருத்தவரை ஒரு நடிகனோட முதல் சந்தோஷம் என்ன தெரியுமா? சவால்ல ஜெயிக்கிறது! ஒரு கேரக்டர்ல நுழைஞ்சு அதை அப்படியே 100% எடுத்துட்டு வந்திட்டால் அதுதான் சந்தோஷத்தின் உச்சம். அந்த மகிழ்ச்சியை தான் அனுபவிச்சுட்டே இருக்கணும்ங்கிற இடத்திற்கு எஸ்.கே வந்திட்டார். இந்தப்படம் சம்திங் ஸ்பெஷல். தேங்க்ஸ் டு எஸ்.கே!”
டாக்டருக்குப் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன். ஏன்?
“ஆரம்பத்திலேயே பிரியங்காவைத்தான் நான் சொன்னேன். ‘டாக்டரி’ல் அவங்கதான் ஹீரோயின்னு சொன்னார். ஆனால் இந்தப் படத்திற்கும் ‘டாக்டர்’ பட பிரியங்கா கேரக்டருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
ரொம்ப நல்லா நடிக்கிறாங்க. தமிழ் தெரிஞ்ச பொண்ணு வேற. அதனால் ஈஸியா புரிஞ்சு வசனம் பேசுறாங்க. எஸ்.கே, பிரியங்கா, சூரி, எஸ்.ஜே.சூர்யா, கனி சார் எல்லாம் சேர்ந்தால் ஷூட்டிங் ஸ்பாட்டே கலகலன்னு ஆகிடும்.”
வழக்கம்போல் சிவகார்த்திகேயன் படத்துக்கு அனிருத் மியூசிக். எப்படி வந்திருக்கு?
“ஆரம்பிக்கும்போதே எனக்கு அனிருத் வேணும்னு சொன்னேன். எஸ்.கே கதையைக் கேட்டுட்டு இந்தப் படத்திற்கு அனிருத்தான் சரின்னு முடிவுக்கு வந்திட்டார். பாடல்கள் நல்லா வந்திருக்கு.
சிவகார்த்திகேயன் ஒரு டூயட் பாட்டு எழுதியிருக்கார். பாஸ்கரன்தான் கேமராமேன். போட்டோ ஃபிரேம் மாதிரி நிறைய அழகான காட்சிகள் படத்தில் இருக்கும்.”
படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கிறாராமே?
“அந்த ரகசியம் உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா? கௌரவ வேடம். அவர் இருந்தால் ரொம்ப சரியாக இருக்கும்னு நினைச்சேன். இதில் நடிப்பீங்களான்னு காட்சியைச் சொன்னதும் அவருக்குப் பிடிச்சுப்போச்சு. நடிச்சுக்கொடுத்தார்.”
‘டாக்டர்’ படத்திற்குப் பிறகு இன்னும் பெரிய எதிர்பார்ப்பு சிவகார்த்திகேயனுக்கு. அந்தப் பதற்றம் உங்களுக்கு இருக்கா?
“கண்டிப்பா இல்ல. நம்ம கையில் இல்லாத விஷயத்தை நினைச்சு நாம எப்பவும் பதற்றப் படவோ, கவலைப்படவோ கூடாது. படம் பண்ற வேலை மட்டும்தான் என் கையில் இருக்கு. படத்தோட ரிசல்ட் மக்கள் கையில் இருக்கு. அதை அவங்க பார்த்துப்பாங்க.
சினிமாவை நல்லபடியாகச் செய்யணும், நம்ம பங்கைச் செய்யறதோட படத்தின் மொத்த அம்சமும் கூடி வரணும்னு மட்டும்தான் எஸ்.கே நினைக்கிறார். ரொம்பவும் படிப்படியாக இந்தப் பெரிய இடத்துக்கு வந்தவர் என்பதால் அவரிடம் தெளிவும் நிதானமும் இருக்கு. என் முதல் படமே சிவகார்த்திகேயன் சார் படமா இருக்கிறதும் லைகா நிறுவனம் தயாரிப்பில் பங்கு பெறுவதும் சந்தோஷமான விஷயங்கள்.”