
தேவையற்ற காட்சிகள் எதுவுமின்றி, இரண்டு மணிநேரத்துக்கும் குறைவாக ஓடும் ஒரு பரபர பயணக் கதையைக் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர் கின்ஸ்லின்
டாக்ஸி ஓட்டுநரான ஒரு பெண்ணின் காரில், கொலை செய்யும் கூலிப்படை ஒன்று ஏறினால் அந்தப் பயணம் எப்படியிருக்கும் என்பதே இந்த ‘டிரைவர் ஜமுனா.'
அப்பாவின் மறைவுக்குப் பிறகு அவரின் டாக்ஸி டிரைவர் வேலையைக் கையிலெடுக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். வீட்டை விட்டு ஓடிவிட்ட தம்பி, நோய்வாய்ப்பட்ட அம்மா என இருக்கும் அவரின் வாழ்வில் ஒரு பரபர திருப்பம். அரசியல்வாதி ஆடுகளம் நரேனைக் கொல்ல வரும் மூன்று பேர் கொண்ட கூலிப்படை கும்பல் இவரின் காரில் பயணிகளாக ஏறுகிறது. இதை அறிந்து போலீஸ் பின்னாலேயே துரத்த, ஐஸ்வர்யா ராஜேஷ் என்ன செய்தார் என்பதே படத்தின் கதை.

கேப் டிரைவர் ஜமுனாவாக ஐஸ்வர்யா ராஜேஷ். தன் குடும்பப் பிரச்னைகளின் மொத்த சோகத்தின் பிரதிபலிப்பைக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். ஆனால், பேசும் அனைத்து வசனங்களுக்கும் ஒரே மாடுலேஷன், விதவிதமான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய காட்சிகளுக்கும் ஒரே முகபாவம் என நிறைய செயற்கைத்தனங்களும் எட்டிப் பார்க்கின்றன. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டுக்குப் பிறகான வசனங்களில் மட்டும் தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கூலிப்படையைச் சேர்ந்த அந்த மூவருக்கும் மூன்று விதமான கேரக்டர் ஸ்கெட்ச். அதில் போதையில் இருக்கும் வில்லனாக வரும் ஸ்ரீனியின் நடிப்பு மட்டும் மிரட்டல் ரகம். காமெடிக்கு எனச் சேர்க்கப்பட்ட சக பயணியான அபிஷேக் பெரிதாகச் சிரிப்பை வரவைக்கவில்லை. அரசியல்வாதியாக ஆடுகளம் நரேன் தன் வித்தியாசமான அறிமுகத்தால் ஈர்த்தாலும் பின்னர் அவரும் சாதாரண அரசியல் வில்லனாகிப்போவது சறுக்கல். அவரின் மகனாக வரும் ‘பிக் பாஸ்' மணிகண்டனுக்குப் பெரிய வேலை இல்லை.
தேவையற்ற காட்சிகள் எதுவுமின்றி, இரண்டு மணிநேரத்துக்கும் குறைவாக ஓடும் ஒரு பரபர பயணக் கதையைக் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர் கின்ஸ்லின். இறுதியில் அவர் வைத்திருக்கும் அந்த ட்விஸ்ட் ஒரு அதிரடி சர்ப்ரைஸ். ஆனால், இப்படியொரு சேஸிங்கில் போலீஸ் இவ்வளவு மெத்தனமாகவா செயல்படும்? என்னதான் ஓய்வுபெற்ற ஐஜி-யின் மிரட்டல் என்றாலும் அவர் போடும் திட்டங்களில் எந்தவித லாஜிக்கும் இல்லை, தீவிரத்தன்மையும் இல்லை. அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் வரை, நாம் நினைத்தது மட்டுமே திரையில் நடக்கிறது.

பரந்து விரிந்த நெடுஞ்சாலையில் சீறும் காரின் பயணத்தை உயிர்ப்புடன் காட்சிப்படுத்தியிருக்கும் கோகுல் பினாயின் கேமராவுக்குப் பக்கபலமாக இருக்கிறது ராமரின் படத்தொகுப்பு. பரபரப்புக்குத் தேவையான பின்னணி இசையை இடைவெளியின்றி சற்று ஓவர்டோஸாகவே நிரப்பியிருக்கிறார் ஜிப்ரான்.
பலமான ட்விஸ்ட் ஒன்றை மட்டுமே நம்பி கதையை நகர்த்தாமல், சற்று லாஜிக் என்னும் ஸ்பீடுபிரேக்கர்களையும் கவனித்திருந்தால் ‘டிரைவர் ஜமுனா’வுக்கு நாமும் நல்ல ஸ்டார் ரேட்டிங் கொடுத்திருக்கலாம்.