
“ ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் ரிலீஸாகுறதுக்கு முன்னாடியும், அதுக்கப்புறமும் என்கிட்ட கதை சொல்ல வரவங்க, ‘உங்க டப்ஸ்மாஷ் பார்த்தேன்.
ரொம்ப நல்லா இருந்துச்சு. உங்களுக்கு ஒரு ஸ்கிரிப்ட் வெச்சிருக்கேன்’னுதான் ஆரம்பிப்பாங்க. இப்போ என்னோட முதல் தெலுங்கு `ஜிகர்தண்டா’ ரீமேக் ரிலீஸானதுக்கு அப்புறம்தான், ‘அந்தத் தெலுங்குப் படத்தில் நல்லாப் பண்ணியிருக்கீங்க; உங்களுக்கு ஒரு கதை வெச்சிருக்கேன்’னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ - தேனி சிலுசிலு காற்றில் `எம்.ஜி.ஆர் மகன்’ பட ஷூட்டிங்கில் இருந்த மிருணாளினியிடம் பேசினேன்.

“எனக்கு ’ஜிகர்தண்டா’ படம் ரொம்பவே பிடிக்கும். அதோட தெலுங்கு வெர்ஷனில் நடிக்கப் போறோம்னு தெரிஞ்சதும் செம ஹேப்பியாகிட்டேன். தமிழ் வெர்ஷனில் ஹீரோயின் கேரக்டர், ஜாலியா இருக்காது. ஆனால், தெலுங்கில் ரொம்பத் துறுதுறுன்னு இருக்கிற மாதிரி மாத்திட்டாங்க.

அதுமட்டுமல்ல, அந்தப் படத்தில் என் லுக்கைப் பார்த்துட்டு, ‘என்னுடைய பட ஹீரோயினும் இதே லுக்கில்தான் இருக்கணும். நீங்க இந்தப் படத்துக்கு சரியா இருப்பீங்க’ன்னு என்னை கமிட் பண்ணினார் இயக்குநர் பொன்ராம். இதுலயும் ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கிற பொண்ணு கேரக்டர்தான். எல்லா ஊர்லேயும் ஒரு வாயாடி இருப்பாள்ல; அதே மாதிரியான ரோல்தான். இதுக்கு முன்னாடி நான் நடிச்ச ரெண்டு படத்தோடு, இந்தப் படத்தை கம்பேர் பண்ணினால், இத்தனை பெரிய நடிகர்களோடு நான் நடிச்சதே இல்லை. சத்யராஜ், சசிக்குமார், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலின்னு இந்தப் படத்தில் எல்லாரும் சீனியர் நடிகர்கள். அவங்க இருக்கிற படத்துல நானும் இருக்கேன்; அவங்களோடு சேர்ந்து நடிச்சிருக்கேன்னு நினைக்கும்போதே பெருமையா இருக்கு.

இந்த கேங்ல நானும் சரண்யா மேடமும் மட்டும்தான் பெண்கள். எந்த ஒரு சீனா இருந்தாலும், அதைப் பண்றதுக்கு முன்னாடி எனக்கு நிறைய டிப்ஸ் கொடுப்பாங்க. சத்யராஜ் சாருக்கு நான் டப்ஸ்மாஷ் பண்ணுன பொண்ணு, `சூப்பர் டீலக்ஸ்’ல நடிச்சிருக்கேன்னு எதுவும் தெரியாது. புது ஹீரோயின்னு நினைச்சிருக்கார். முதல் ரெண்டு நாள் ஷூட் முடிஞ்சதுக்கு அப்புறம், அடுத்த நாள் ஷூட்ல எனக்கு லைட்டா மயக்கம் வந்துடுச்சு. உடனே பதறிப்போயிட்டார். `எப்பா... அந்தப் பொண்ணை உடனே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போங்கப்பா’ன்னு சொன்னார். அன்னைக்கு நானும் அவரும் சேர்ந்து நடிக்க வேண்டிய சீனோட ஷூட்தான். இருந்தாலும் என்னை ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டார். அடுத்த நாள்ல இருந்து, என் உடல்நிலையைப் பற்றி விசாரிச்சிட்டே இருப்பார். சசிக்குமார் சார் ரொம்ப கூல். ஜாலியா பேசுவார்; அப்பப்போ லைட்டா கலாய்ப்பார். அவர் ஒரு இயக்குநராகவும் இருக்கிறதால, தன்னோட சேர்ந்து நடிக்கிற நடிகைக்கும் சரியான ஸ்பேஸ் கொடுத்து நடிக்கிறார். சமுத்திரக்கனி சார், படங்களில்தான் பயங்கர சீரியஸா பேசுறார். நேர்ல எல்லாரையும் கலாய்ச்சுத் தள்ளிடுவார். சிங்கம்புலி சார்தான் எங்க செட்டோட என்டர்டெய்னர்.

`சூப்பர் டீலக்ஸ்’ படம் பண்ணும்போது, டைரக்டர் தியாகராஜன் குமாரராஜா சார் செட்ல இருந்தார்னா, எல்லாருமே பயங்கர சீரியஸா வேலை பார்ப்போம். அவர் செட்டை விட்டுப் போயிட்டார்னா, க்ளாஸ் ரூம்ல இருந்து டீச்சர் போன மாதிரி, நாங்க எல்லாரும் கத்துவோம். அப்படி ஒரு செட்ல வொர்க் பண்ணிட்டு, இப்போ பொன்ராம் சாரோட செட்ல இருக்கும்போது, வேற மாதிரி இருக்கு. பொன்ராம் சாரும் எங்களோடு சேர்ந்து, ஜாலியா பேசிட்டிருப்பார்” என்கிறார் உற்சாகமாக.