
குழந்தைத் திருமணத்தை நியாயப்படுத்தும் வகையில் பாரதிராஜா வசனம் பேசுவதற்குக் கண்டனங்கள்
ஊரின் பெரிய தலைக்கட்டு பாரதிராஜாவின் குடும்பத்தை ஆபத்திலிருந்து காக்கும் ஆதிசிவமே இந்த ‘ஈஸ்வரன்’.
பழனியில் விஐபிக்களுக்கு ஸ்பெஷல் தரிசனம் பார்க்க ஏற்பாடு செய்யும் சிம்பு, மகன்களும் மகளும் வெளியூரில் வசிக்க தனிமையில் தவிக்கும் ஊர்ப் பெரியவரான பாரதிராஜாவைப் பாசத்துடன் பார்த்துக்கொள்கிறார். கொரோனா லாக்டௌன் காரணமாகச் சொந்தமெல்லாம் ஒன்றுகூட, குடும்பத்தில் ஓர் உயிருக்கு ஆபத்து என ஜோசியம் சொல்கிறது. பிறகென்ன, சிம்பு எப்படி ஈஸ்வரனாய் அந்தக் குடும்பத்தைக் காக்கிறார் என்பதைக் காதல், காமெடி, பன்ச் வசனங்கள், கொஞ்சம் ஆக்ஷன் எனக் கலந்துகட்டி சொல்கிறது மீதிக்கதை.

பத்து வருடங்களுக்கு முன்னர் பார்த்த அதே ‘ஸ்லிம்’ சிம்பு. துள்ளல் உடல்மொழி, கலாய் வசனங்கள், சென்டிமென்ட்டில் ஸ்கோரிங் என சூப்பர் எனர்ஜியுடன் கம்பேக் கொடுத்திருக்கிறார். ஆனால், பன்ச் டயலாக், விரல் வித்தை காட்டி வெறுப்பேற்றுவதைத் தவிர்க்கலாமே சிம்பு? பேரப்பிள்ளைகளைக் கொஞ்ச ஏங்கும் தாத்தாவாக, ஊர்ப் பெரியவராக சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார் பாரதிராஜா. படத்தில் நந்திதா, நிதி அகர்வால் என்று இரண்டு ஹீரோயின்கள்... இருக்கிறார்கள். பாலசரவணன் காமெடி பக்கா. முனிஷ்காந்த் காமெடியும் வில்லத்தனமும் கலந்த பாத்திரத்தில் கச்சிதம். இளவயது பாரதிராஜாவாக மனோஜ் பாரதிராஜா சிறப்பான சாய்ஸ்! வினோதினி, ஸ்டன்ட் சிவா, ஹரீஷ் உத்தமன், அருள்தாஸ் என பெரிய பட்டாளத்தின் நடிப்பு ‘மோசமில்லை’ ரகம். இரண்டே காட்சிகள் வந்தாலும் காளிவெங்கட் அசத்தல்!
ஒளிப்பதிவில் திருவின் தனி முத்திரை தெரியவில்லை என்றாலும் பாம்பு பிடிக்கும் காட்சியிலும், க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். ஆண்டனியின் படத்தொகுப்பு பக்கபலம். தமனின் இசையில் பாடல்கள் ஈர்க்கின்றன.
மாஸ் பில்டப், காமெடி, சென்டிமென்ட், காதல் என நகர்கிறது முதல்பாதி. ஆனால், இரண்டாம் பாதி இஷ்டத்துக்கு அலைபாய்கிறது. பழிவாங்குவதற்காக சிறையில் இருந்து வெளியேவரும் வில்லன், க்ளைமாக்ஸ் வரை ஆணியே பிடுங்கக் காணோம்! இடையில் கொரோனா காமெடி, பாம்பு பிடிப்பது என்று நோக்கமே இல்லாத காட்சிகள்.
குழந்தைத் திருமணத்தை நியாயப்படுத்தும் வகையில் பாரதிராஜா வசனம் பேசுவதற்குக் கண்டனங்கள். கூட்டுக்குடும்ப ஒற்றுமை, மச்சானின் வில்லத்தனம், பெரியசாமி ஐயாவுக்கு ஈஸ்வரன் என்ன உறவு என்ற ‘உண்மை’ என்று பல படங்களில் பார்த்து சலித்த காட்சிகளைக் கொண்டு பெரியசாமியைக் காக்கும் ஈஸ்வரன், ரொம்பப் பழைய சாமி!