Published:Updated:

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு: ‘ரெண்டு தாய்க்கொரு பிள்ளை' - எமோஷனல் டிராமாவில் ராஜா செய்த மேஜிக்!

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

இந்த எமோஷனல் டிராமாவை, மிகையில்லாத தன்மையுடன் இயல்பாகக் கையாண்டிருந்தார் ஃபாசில். ஓர் உருக்கமான க்ளைமாக்ஸூடன் படத்தை நிறைவு செய்திருந்தார்.

Published:Updated:

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு: ‘ரெண்டு தாய்க்கொரு பிள்ளை' - எமோஷனல் டிராமாவில் ராஜா செய்த மேஜிக்!

இந்த எமோஷனல் டிராமாவை, மிகையில்லாத தன்மையுடன் இயல்பாகக் கையாண்டிருந்தார் ஃபாசில். ஓர் உருக்கமான க்ளைமாக்ஸூடன் படத்தை நிறைவு செய்திருந்தார்.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
இயக்குநர் ஃபாசிலின் திரைப்படங்கள் உணர்ச்சிகரம் நிரம்பிய நாடகமாகவும், கண்ணியம் குறையாத நகைச்சுவையுடனும் இருக்கும். மலையாளத்தில் அவர் இயக்கிய ஏராளமான திரைப்படங்களில் சிலவற்றை, அவரே தமிழில் சிறப்பாக ரீமேக் செய்துள்ளார். அந்த வரிசையில் ஒரு மறக்க முடியாத ஃபேமிலி டிராமா – ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’.

அரசர் சாலமோனின் முன்பாக ஒரு விநோதமான வழக்கு வந்தது. ஒரு குழந்தைக்கு உரிமை கோரி இரு தாய்கள் வந்தனர். இருவருமே அது ‘தங்கள் குழந்தைதான்’ என்று அழுது புரண்டு சாதித்தனர். நீண்ட நேரம் விசாரணை நடந்தும் இருவருமே தங்களின் உரிமையை விட்டுக் கொடுக்கவில்லை. சாலமோன் ஆழமாகச் சிந்தனை செய்து விட்டு ஒரு விபரீதமான தீர்ப்பை அளித்தார். ‘குழந்தையை இரண்டாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்’ என்பதுதான் அந்தத் தீர்ப்பு. இதைக் கேட்டதும் ‘என்ன நடக்கிறதோ, நடக்கட்டும்’ என்ற பாவனையில் ஒரு தாய் நின்றிருந்தாள். இன்னொரு தாயோ பதறி “அவளே குழந்தையை வைத்துக் கொள்ளட்டும்" என்றாள். 'பதற்றம் அடைந்தவள்தான் உண்மையான தாய்’ என்று தீர்ப்பு சொன்ன சாலமோன், அவளிடம் குழந்தையை ஒப்படைத்தார்.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
சிறுவயதில் படித்த இந்தக் கதை உங்களுக்குப் பசுமையாக நினைவில் இருக்கும். ஆனால் ஒரு குழந்தையின் மீது இரு பெண்களுமே உண்மையான அன்பும் பாசமும் கொண்டு உரிமை கொண்டாடினால் என்னவாகும்? அதுதான் ‘என் பொம்முகுட்டி அம்மாவுக்கு’ படத்தின் ஒன்லைன்.

‘ரெண்டு தாய்க்கொரு பிள்ளை, என்று வாழ்ந்திடும் முல்லை’

வினோத் - லட்சுமி தம்பதியினருக்கு ஓர் அழகான மகள். பாசமும் அன்பும் நிறைந்திருக்கும் குடும்பம். ஆனால் இவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையில் ஒரு துயரம் குறுக்கிடுகிறது. ஒரு பிறந்த நாள் விழாவிற்குக் கலந்துகொள்ளச் செல்லும் போது நீரில் மூழ்கி மகள் இறந்து விடுகிறாள். நான்கு வருடங்கள் கடந்தாலும் தங்களின் மகள் இறந்த துக்கத்திலிருந்து பெற்றோரால் வெளிவர முடியவில்லை. குறிப்பாகத் தாயால் மகளின் நினைவிலிருந்து மீளவே முடியவில்லை. வீட்டுக்குள் சிறைப்படுத்திக் கொண்டு தையல்மெஷினுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கிறாள்.

ஓர் அநாதை இல்லத்திற்கு நன்கொடை வழங்கச் செல்கிறான் வினோத். இவனுடைய பின்னணியை அறியும் பாதிரியார், ‘ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வரும்’ என்று பரிந்துரைக்கிறார். ஆனால் தாய்க்கு அதில் உடன்பாடில்லை. இறந்து போன மகளுக்கு ஈடு செய்ய எவராலும் முடியாது என்று பிடிவாதமாக மறுக்கிறாள். என்றாலும் அநாதை இல்லத்தில் உள்ள ஒரு சுட்டிப் பெண்ணைப் பார்த்ததும் அவளது மனம் மாறுகிறது. மகளாகத் தத்தெடுக்கிறாள். வினோத்தின் குடும்பத்தில் அதுவரை காணாமல் போயிருந்த மகிழ்ச்சி மீண்டும் திரும்புகிறது. தத்தெடுத்த பெண்ணை தன் மகளுக்கு ஈடான அன்புடனும் பாசத்துடனும் வளர்க்கிறார்கள்.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

ஆனால் இந்த மகிழ்ச்சியிலும் ஓர் இடையூறு நேர்கிறது. தத்து மகளின் உண்மையான அம்மா யாரென்று தெரியவருகிறது. மனம் நலம் குன்றியிருக்கும் அவளுக்கு, தன்னுடைய மகள் கிடைத்துவிட்டால் உடல்நலம் சரியாகி விடலாம் என்கிற நிலைமை. பாசத்துடன் வளர்த்த மகளைத் திருப்பித் தர வேண்டிய சூழல். இரு தரப்பின் பாசப் போராட்டம் காரணமாக நெருக்கடி அதிகமாகிறது.

வினோத்தும் லட்சுமியும் என்ன செய்தார்கள், குழந்தையைத் திருப்பித் தந்தார்களா, மறுத்தார்களா... இந்த எமோஷனல் டிராமாவின் முடிவை அறிய நீங்கள் படத்தைப் பார்த்தாக வேண்டும்.

பாசமிகு பெற்றோராக சத்யராஜ் மற்றும் சுஹாசினி

வினோத்தாக சத்யராஜ். அவர் குணச்சித்திர பாத்திரங்களில் மிகவும் திறமையாகப் பிரகாசித்த படங்களுள் ஒன்றாக ‘என் பொம்முக்குட்டி அம்மா’வை நிச்சயம் சொல்லலாம். அப்படியொரு இயல்பான நடிப்பு. மனைவியின் மீது அன்பைப் பொழியும் பாசமிகு கணவனின் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். அநாதை இல்லத்திலிருந்து ‘விருட்’டென கிளம்பி வந்து விடும் மனைவியிடம் “நீ படிச்சவதானே... இத்தனை அநாகரிகமாகவா நடந்துக்கறது?” என்று கோபித்துக் கொள்வதும், “இதுவரைக்கும் உன்னைக் கைநீட்டி அடிச்சதில்ல. சாரி!” என்று மனமார வருந்துவதும், குழந்தையைக் கேட்டு வரும் நபரிடம் முதலில் மிதமாகவும் பிறகு கோபமாகவும் மல்லுக்கட்டுவதும், பிறகு இறுதியில் ஒரு முடிவிற்கு வருவதும் என ஒரு பாசமிகு தந்தையின் பாத்திரத்தை அருமையாகக் கையாண்டுள்ளார். சிறுமியிடம் குழந்தையாகவே மாறி இவர் பேசும் காட்சிகள், தந்தை – மகள் பாசத்தைக் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகின்றன.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

இரண்டு பிரதான ஆண் பாத்திரங்கள் இருந்தாலும் இந்தப் படம் அடிப்படையில் இரு பெண்களுக்கிடையில் நடக்கும் பாசப் போராட்டம்தான். இன்னொரு பெண் கேரக்ட்டர் வரும் காட்சிகள் குறைவுதான். எனவே படம் முழுவதும் சுஹாசினியின் ராஜாங்கம்தான். தனது பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அதைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். இறந்துபோன மகளின் நினைவிலிருந்து மீள முடியாமல் தவிப்பதும், “நீங்களும் அந்த ஃபாதரும் சேர்ந்து ஆடின டிராமா நல்லாவே இல்ல” என்று கணவனிடம் வெடிப்பதும், சுட்டிப் பெண்ணின் குறும்புத்தனத்தைப் பார்த்துத் தத்தெடுக்க முடிவு செய்து பாசத்தைக் கொட்டுவதும், மகளை இழக்க நேருமோ என்கிற சூழலில் கடுமையான முகத்தைக் காட்டுவதும் என ‘லட்சுமி’ பாத்திரத்தில் ஒரு தாயாகவே வாழ்ந்திருக்கிறார் சுஹாசினி.

‘அலெக்ஸ்’ ஆக இயல்பாக நடித்திருந்த ரகுவரன்!

வில்லனாக இருந்து ஹீரோவாக உயர்ந்தவர் சத்யராஜ். ஆனால் ரகுவரன் இதற்கு நேரெதிர். ஹீரோவாக இருந்து பிறகு சிறந்த வில்லனாகப் பிரகாசித்தவர். ‘அலெக்ஸ்’ என்கிற பாத்திரத்தில் சர்ப்ரைஸ் என்ட்ரி தரும் இவர், ஆரம்பத்தில் பிள்ளையைக் கடத்தும் கடத்தல்காரன் போலவே திகிலான பின்னணி இசையுடன் அறிமுகமாவார். ஆனால் இந்தப் பாசப் போராட்டத்தில் இவரும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறார் என்பதை பிறகு அறிய நேரும் போது நெகிழ்வு ஏற்படுகிறது. "வினோத்... ப்ளீஸ்... ரெண்டே நிமிஷம்தான்!" என்று கெஞ்சுவதும், தனது பின்னணியை இயல்பான தொனியில் சத்யராஜிடம் விவரிப்பதும் எனத் தனது பாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

ஃபாதர் ஜோசப் எப்ஸ்டினாக ஒரு சுவாரஸ்யமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் எம்.எஸ்.திருப்புனித்துரா. ஒரு விளையாட்டுச் சிறுவன் போல அங்கியின் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆப்பிளைக் கடித்துத் தின்னும் அறிமுகக் காட்சியிலேயே இவரது ஜாலியான கேரக்ட்டர் புரிந்து விடுகிறது. சிறுவர்களோடு சரிக்குச் சமமாக வளையம் ஆடித் தோற்று விடும் காட்சி மென்நகைச்சுவையைக் கொண்டது. “வினோத்... தெய்வம் ஒண்ணை எடுத்தா ஒண்ணு கொடுக்கும்ன்னு சொல்லுவாங்க... ஒரு பொண்ணு நகையைக் கழட்டிக் கொடுக்கறது அத்தனை நல்லதில்ல” என்று தத்தெடுப்பதற்காக சத்யராஜைச் சம்மதிக்க வைக்கும் காட்சிகள் அத்தனையும் அருமையானவை. “நீங்க இனிமே இங்க வரவேணாம் ஃபாதர்!” என்று சுஹாசினி சொல்கிற போது ஃபாதரின் முகத்தில் தெரியும் சங்கடமான சிரிப்பு நம்மையும் நெகிழ வைக்கிறது. கடல் அலையை நோக்கி இவர் வேக வேகமாக நடைபோடும் காட்சி மறக்க முடியாததொன்று!

குழந்தை நட்சத்திரம் – ஹீரோயின் – டைரக்டர்!

கீத்து மோகன்தாஸ் குழந்தை நட்சத்திரமாக ஏற்கெனவே சில மலையாளத் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தின் மூலம்தான் தமிழிற்கு அறிமுகமானார். பிறகு சில வருடங்கள் கழித்து, 2003-ல் மாதவனுக்கு ஜோடியாக ‘நள தமயந்தி’ படத்தில் நடித்தார். அதன் பிறகு விருதுத் திரைப்படங்களை இயக்கும் அளவிற்கு உயர்ந்தார். இவர் இயக்கிய ‘Liar's Dice’ என்கிற இந்தித் திரைப்படம், இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றதோடு, ஆஸ்கர் விருதின் வாசலையும் தொட்டுத் திரும்பியது.

பிரதான நடிகர்களைத் தாண்டி, இந்தத் திரைப்படத்தின் முக்கிய சுவாரசியமே ‘டீனு’வாக நடித்த கீத்து மோகன்தாஸ்தான். சாயம் கரைந்த பாவாடைச் சட்டையுடன், அநாதை இல்லம் முழுக்க பட்டாம்பூச்சி போல இவர் ஓடித் திரியும் ஆரம்பக் காட்சியே அத்தனை அற்புதமாக இருக்கிறது. “சட்டி, பானைல சோறு பொங்கி வைச்சு.. மூணு தடவை கூப்பிட்டாதான் பொம்முகுட்டி அம்மா சாப்பிட வரும்” என்று குழந்தையின் மொழியில் இவர் சொல்வதே அத்தனை அழகு. கடல் போல விரியும் அகலமான விழிகள் இவருடைய முகபாவங்களை இன்னமும் சுவாரசியமாக்கி விடுகின்றன.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

குழந்தையின் உண்மையான தாயாக, மனநலம் குன்றிய பாத்திரத்தில் ரேகா சில காட்சிகளில் நடித்திருந்தார். ‘இதுதான் என் குழந்தை’ என்று அடையாளம் கண்டுபிடித்து அழும் காட்சியில் நெகிழ வைத்து விடுகிறார். உரையாடலை எந்தப் பக்கம் நகர்த்தினாலும் அதைச் சாப்பாட்டோடு இணைக்கும் உணவுப் பிரியனாக ஜனகராஜ் ஒரு சிறிய காட்சியில் வந்து சிரிக்க வைத்திருந்தார்.

இந்த எமோஷனல் டிராமாவை, மிகையில்லாத தன்மையுடன் இயல்பாகக் கையாண்டிருந்தார் ஃபாசில். ஓர் உருக்கமான க்ளைமாக்ஸூடன் படத்தை நிறைவு செய்திருந்தார். மலையாளத்தில் பெரிய வெற்றியைப் பெற்ற இந்தத் திரைப்படத்தை, தமிழில் மறு உருவாக்கம் செய்தது ‘பாவலர் கிரியேஷன்ஸ்’. இளையராஜாவின் குடும்ப தயாரிப்பு. எனவே பல அற்புதமான பாடல்களும் பின்னணி இசையும் தமிழ் வடிவத்திற்குப் பக்க பலமாக அமைந்திருந்தன.

‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ!’

‘கண்ணே... நவமணியே... உன்னைக் காணாமல் கண்ணுறங்குமோ’ என்று டைட்டில் கார்டில் இளையராஜா பாடிய உருக்கமான பாடலே படத்தின் பல இடங்களில் பின்னணி இசையாக வந்து நெகிழ்வூட்டுகிறது. ‘உயிரே... உயிரின் ஒளியே’, ‘குயிலே... குயிலே குயிலக்கா...’, ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராராரோ...’ என்பது போன்ற இனிமையான பாடல்கள் படத்திற்குக் கூடுதல் சுவையைச் சேர்த்திருந்தன.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

சத்யராஜூம் ரகுவரனும் குழந்தைக்காக அடித்துக் கொள்வதைப் பார்த்து சிறுமி பயந்து அழ, சமாதானப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும் பாடல் சுவாரஸ்யமானது. சத்யராஜை அழைத்துச் செல்வதற்காக ரகுவரன் மைதானத்தில் காத்திருக்கும் ஒரு காட்சியின் பின்னணியில் ‘காலெல்லாம் நோகுதடி’ என்று இளையராஜாவின் குரலில் வரும் சிறிய பாடல், ஒரு குயிலின் சோகத்திற்கு இணையானது.

காட்சிகள், வசனங்களைத் தாண்டி பின்னணி இசையின் மூலம் திரைக்கதையை அற்புதமாக நகர்த்திச் சென்றிருந்தார் இளையராஜா. தன்னைத் தேடும் சுஹாசினியின் முந்தானையைச் சிறுமி பிடித்து இழுக்கும் காட்சியில் வரும் குழலோசை, குழந்தையின் அறை முழுவதும் பொம்மைகளாலும் விளையாட்டுச் சாமான்களாலும் நிறைந்திருப்பதை ஃபாதிரியார் திகைப்புடன் பார்க்கும் காட்சியில் வரும் இசை, சுஹாசினியை முதன் முதலில் ‘அம்மா’ என்று குழந்தை அழைக்கும் போது ஒலிக்கும் வீணையின் மீட்டல் என்று படம் முழுவதும் இசை ராஜாங்கத்தை ஏற்படுத்தியிருந்தார் இளையராஜா.

‘Ente Mamattukkuttiyammakku’ என்கிற தலைப்பில் 1983-ல் வெளியான மலையாள வடிவத்தில் சத்யராஜ் பாத்திரத்தில் பரத் கோபியும், சுஹாசினி பாத்திரத்தில் சங்கீதா நாயக்கும், ரகுவரன் பாத்திரத்தில் மோகன்லாலும், ரேகா பாத்திரத்தில் பூர்ணிமா ஜெயராமும் நடித்திருந்தார்கள். குறிப்பாக கீத்து மோகன்தாஸின் பாத்திரத்தில் ‘பேபி’ ஷாலினி நடித்து அசத்தியிருந்தார். அவர் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தின் மூலம்தான் பிரபலமான குழந்தை நட்சத்திரமானார்.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
ஃபாசிலின் திறமையான இயக்கம், இளையராஜாவின் அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை, சத்யராஜ், சுஹாசினி, ரகுவரன், கீத்து மோகன்தாஸ் ஆகியோரின் சிறப்பான நடிப்பு போன்ற காரணங்களுக்காக இந்த எமோஷனல் டிராமாவை இன்றும் கூட பார்த்து ரசிக்கலாம்.