Published:Updated:

`அந்த தாலி விஷயத்திற்கு எல்லாருமே தயங்கினார்கள்!' - ̀சின்னத்தம்பி' பி. வாசு #AppExclusive

1991ல் சின்னத்தம்பி தெலுங்கு, கன்னடம் ரீ-மேக்கில் வாசு அளித்த சுவாரஸ்யப் பதிவு இது!

Published:Updated:

`அந்த தாலி விஷயத்திற்கு எல்லாருமே தயங்கினார்கள்!' - ̀சின்னத்தம்பி' பி. வாசு #AppExclusive

1991ல் சின்னத்தம்பி தெலுங்கு, கன்னடம் ரீ-மேக்கில் வாசு அளித்த சுவாரஸ்யப் பதிவு இது!

அறுபது வருட கலெக்ஷன் ரெக்கார்டை முறியடித்துத் திரையுலகத்தினரைப் பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கிறது, ‘சின்னதம்பி’! 

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் 'சின்னதம்பி' மாதிரி கதை வேண்டும் என்று பேயாய் அலைகிறார்கள். தெலுங்கு, கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் இன்று ரீ-மேக் ஆகிக்கொண்டிருக்கிறது இந்தப் படம்! 

படத்தின் இயக்குநரான பி.வாசுவை ஓட்டல் 'அம்பாஸ்டர் பல்லவா'வில் 'ரிக்ஷா மாமா’ ஷூட்டிங்கில் சந்தித்தோம். 

P.Vasu
P.Vasu

" ‘சின்னதம்பி’ படம் இந்த அளவுக்கு வசூலில் சாதனை படைக்கும் என்று நினைத்தீர்களா? இந்த வெற்றிக்கான காரணங்களாக எதை நினைக்கிறீர்கள்?" 

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்தப் படம் இந்த அளவுக்குப் போகும் என்று நான் உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை. சொல்லப்போனால், எல்லோருமே ஒருவிதப் பயத்துடன்தான் இருந்தார்கள். காரணம், கதையின் மையக்கரு - தாலி விஷயம்... 

ஹீரோவுக்குத் தாலி என்றாலே என்னவென்றே தெரியாது. அந்த அளவுக்கு வெகுளித்தனமான காரெக்டர். அதை ஒரு தாயத்து மாதிரி நினைத்துதான் ஹீரோயின் சொல்படி அவள் கழுத்தில் கட்டுகிறான். இதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று எங்களுக்குள் ஒருவித டென்ஷன் இருந்தது. ஒரு விதத்தில் பார்த்தால், இதுதான் படத்தின் மிகப் பெரிய பலம்.... 

அதே சமயம் மிகப் பெரிய பலவீனமும்கூட... முதலில் இந்த விஷயத்தைக் கொஞ்சம் ஹெவியாய்தான் சொல்ல நினைத்தேன். ஆனால், அது எடுபடாமல் போய்விடுமோ என்றுதான் கொஞ்சம் காமெடியாக அந்த விஷயத்தைச் சொன்னேன். படம் வளருகையில் பிரபு, தயாரிப்பாளர் உட்பட எல்லோருமே ‘வேணாமே... கதையை மாத்திடலாமே!’ என்றார்கள். பிரபுவோடு நான் நெருக்கமானவன் என்கிற முறையில் அவரிடம், ‘படம் ஒடுமா, ஓடாதா என்பது பற்றி 'நீங்க கவலைப்படாதீங்க... என்மீது நம்பிக்கை வெச்சு நடிங்க!” என்றேன். இப்போதும் பிரபு பயப்படுகிறார் - ‘ஐயோ... இப்படிப் பிய்த்துக்கொண்டு ஒடுகிறதே... அடுத்து இதைவிட அதிகமாய் மக்கள் எதிர்பார்ப்பார்களே!' என்று. (சிரிக்கிறார்...) மற்றபடி படத்தின் வெற்றியைப் பொறுத்தவரையில் தெளிவாய்த் திரைக்கதை அமைத்திருந்த விதம், ஆர்ட்டிஸ்டுகளின் ஒத்துழைப்பு. குறிப்பாக, பிரபு உயிரைக் கொடுத்து நடித்திருந்தார். பொதுவாக வில்லனுக்குப் பாசம், ஆசை. கண்ணீர் வரக்கூடாது என்பதுதான் விதி! ஆனால், அதை மாற்றி ராதாரவியை நடிக்க வைத்திருந்தேன். ப்ளஸ் குஷ்பு! இதுமட்டுமின்றி முக்கியமாய்க் கதைக்குப் பொருந்தி விடுவது போல இளையராஜா போட்ட ட்யூன்கள்... இதுதான் வெற்றியின் ரகசியம்! போதுமா... 

சமீபகாலமாக நீங்கள் எடுத்த படங்களில் 'அதிகாரி நீங்கலாக ‘வேலை கிடைச்சிடுச்சு', 'நடிகன்’, ‘சின்னதம்பி', தெலுங்கில் 'அசெம்பிளி ரெளடி"... என்று எல்லாமே வெற்றிப் படங்கள்! சினிமாவில் ஃபார்முலா என்கிறார்களே... அந்த ரகசியம் உங்களுக்குத் தெரிந்துவிட்டதா? 

என்னைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானது ஸ்கிரிப்ட்தான்! அதை ஒழுங்காகச் செய்துவிட்டால் போதும். 
இரண்டாவது - ஒரு டைரக்டருக்கு ஈகோவே இருக்கக்கூடாது. தயாரிப்பாளர் சொல்லும் யோசனையா இருந்தாலும் சரி அல்லது யூனிட் பையன் சொல்றதா இருந்தாலும், நல்லா இருக்கிற பட்சத்திலே ஏத்துக்கற மனப்பக்குவம் டைரக்டருக்கு வேணும். எனக்குத்தான் எல்லாம் தெரியும்கற உணர்வே இருக்கக்கூடாது. சாம்பிளுக்குச் சொல்றேன்... 'சின்னதம்பி’ படத்துல க்ளைமாக்ஸே வேற மாதிரி வெச்சிருந்தேன். பிரபு ஒரு தாலியை எடுத்துக்கிட்டு அவரோட விதவைத் தாயான மனோரமாகிட்டே போய் 'இனி நீ எல்லா விசேஷத்திலும் கலந்துக்கலாம். இதை நீ கட்டிக்க'ன்னு கொடுப்பார். மனோரமா அதிர்ந்து போவாங்க. ஒரு மகனே தனது தாய்க்குத் தாலி தர்ற கொடுமையை - அதுவும் புரிஞ்சுக்காம தர்ற கொடுமையை எண்ணி அழுவாங்க! பிரபுவுக்கும் புரிய வைப்பாங்க. டப்பிங் தியேட்டர்ல இருக்கற ரிக்கார்டிஸ்ட், மைக்கைப் பொருத்தற அசிஸ்டெண்ட்ஸ், காபி கொண்டுவந்து தர்ற பையன்... இவங்ககிட்டே எப்படியிருக்குன்னு கேட்டேன். முகத்துக்கு நேரா பதில் வந்தது - ‘தாங்க முடியலை'ன்னு! 'ஏன்?’னு கேட்டேன். 'என்ன சார், மகனே விதவை அம்மாகிட்டே தாலி கட்டிக்கன்னு சொல்றதைப் பண்பாடு, கலாசாரத்துல ஊறிவந்த நம்மளாலே எப்படி சார் ஏத்துக்க முடியும்?’னாங்க. அதனாலே இம்மீடியட்டா அந்த ஸீனைத் துக்கியெறிஞ்சுட்டு 'ரீ-ஷூட்' பண்ணேன். 

P.Vasu
P.Vasu

இருபதாம் நூற்றாண்டில் எவ்வளவோ முன்னேறிய நிலையில் இருக்கிறோம். புதுமை வேண்டும் என்று சொல்கிற நீங்கள், ‘சின்னதம்பி’ படத்தில் விதவைக்கு மறுமணம் செய்வது மிகப் பெரிய பாவம் என்ற டைப்பில் க்ளைமாக்ஸ் அமைத்திருக்கிறீர்களே?! 

நான் விதவை மறுமணத்துக்கு எதிரானவன் அல்ல. தவிர, ஒரு பெண்ணுக்கு அவள் இஷ்டப்படுபவனோடுதான் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் எனக்கு மறுக்க முடியாத கொள்கை உண்டு. கணவன் இறந்த பிறகு பூவும் பொட்டும் தனக்குத் தேவையில்லை என்று முடிவு செய்து அதன்படியே வாழ்ந்து வரும் மனோரமாவுக்கு, அவள் விரும்பத்தகாத நிலையில் வில்லன்களால் ஒரு கொடூரமான மறுமணம் நடக்கிறது. மறுமணம் செய்து கொள்வது என்பது விதவையின் உரிமை என்றால், வலுக்கட்டாயமாக அந்த விதவை விரும்பாத மறுமணத்தைச் செய்விப்பது அந்தப் பெண்ணின் உரிமையைத் தகர்த்தெறியும் செயல் இல்லையா..? இதைத்தான் க்ளைமாக்ஸில் ஆவேசமாகச் சொல்லியிருக்கிறேனே தவிர, ‘விதவை மறுமணம் தகாது’ என்ற அர்த்தத்தில் அல்ல... 

உங்களுடைய முதல் படமான ‘பன்னீர் புஷ்பங்கள்’ வெளியானபோது பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன் வரிசையில் ஒரு வித்தியாசமான இயக்குதர் புறப்படலாம் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்குக் கொடுத்தீர்கள். ஆனால், ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் வத்த நீங்கள் முற்றிலும் மாறிவிட்டிர்கள்! இந்தப் பாதை மாறலுக்கு, உங்களுக்கு ஏற்பட்ட இடைவெளியைக் காரணமாகச் சொல்லலாமா? 

‘பன்னீர் புஷ்பங்கள்' படம் வெளியானபோது, பத்திரிகைகள் அனைத்துமே ஒருமனதாக எங்களைப் பாராட்டியது. படமும் நன்றாக ஓடியது. அடுத்து எடுத்த 'மெல்லப் பேசுங்கள்', 'மதுமலர்' ஆகிய இரண்டு படங்களும் சரியாகப் போகவில்லை. படங்கள் ஓடாததால், மக்கள் ரசிக்கத் தெரியவில்லை என்று அவர்கள் மீது குற்றம்சாட்ட விரும்பவில்லை. மக்கள் புத்திசாலிகளாகத்தான் இருக்கிறார்கள். சரியாகப் பார்த்துதான் தீர்ப்பளிக்கிறார்கள். அதனால் படம் ஓடவில்லை என்றால், சம்பந்தப்பட்ட படத்தில்தான் தவறு இருக்கிறது என்று சொல்வேன். 

வரிசையாய் அடுத்தடுத்த தோல்விகளால் எனக்கும் சந்தானபாரதிக்கும் யாரும் படம் தர முன்வரவில்லை. வீட்டிலேயே அடைபட்டுக்கிடந்தோம். நேரத்தைப் போக்க வேண்டுமென்பதற்காக நான், சந்தானபாரதி, மணிரத்னம், ஸ்ரீராம் ஆகியோர் கிரிக்கெட் விளையாடிப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தோம். 

அந்த சமயம், சிவாஜியின் தம்பி வி.சி. சண்முகம் ஒரு நாள் என்னை வரச் சொன்னார். அவரைத்தான் என்னுடைய காட்ஃபாதராக நினைக்கிறேன். போனதும் 'என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாய்?' என்றார். 'படங்கள் இல்லை... பொழுதுபோக்க கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறேன்' என்றேன். 

‘ஏன் இந்த நிலைமை என்று யோசித்தாயா?’ என்றார். பதிலுக்கு நான் “பன்னீர் புஷ்பங்கள்' படம் நன்றாக ஒடியது, பத்திரிகைகள் பாராட்டின..." என்றதும், 'அது போதுமா?’ என்றார். 

ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தேன். 'பத்திரிகைகளின் பாராட்டு அவசியம்தான்... ஆனா, அது மட்டும் போதுமா? உனக்கு ஒரு உண்மையைச் சொல்லட்டா... ‘பன்னீர் புஷ்பங்கள்' சிட்டியைத் தவிர வேறெங்கும் சரியாப் போகலை, தெரியுமா?' என்றார். 

நான் அவரையே பார்த்தேன். ‘தம்பி, இயக்குநர்ங்கறது சைக்கிள்ல போறா மாதிரி. பத்திரிகைங்க பின் டயர்லே இருக்கற காத்து.... அது மட்டும் இருந்தா ஈஸியா போயிட முடியாது. 

கலெக்ஷன்ங்கற காத்து உள்பக்கமா வீசணும்... எதிர்காத்தா ஆயிடக்கூடாது. வாசுங்கற உன் பேரு முதல்ல சிட்டியில் தெரியறதைவிட, கும்பிடிப்பூண்டியில் இருக்கறவனுக்குத் தெரியணும்’னாரு. முதல்ல பணம் போடறவனோட பொட்டி ரொம்பனும்.... அப்பத்தான் நீ நிக்கமுடியும் நின்னுட்டன்னு வெச்சுக்க! உன் வித்தியாச முயற்சியை அப்பவெச்சுக்கலாம்னாரு. சட்டுன்னு எனக்குள்ளே பொறி தட்டினது போல ஒரு ஃபீலிங்... யோசிச்சேன். உடனடியா செல்யபட ஆரம்பிச்சேன். முதல் வேலையா. எந்தவிதமான மனஸ்தாபமுமில்லாம நானும் சந்தானபாரதியும் தனித்தனியா டைரக்ட் பண்றதுங்கற முடிவுக்கு வந்தோம். நான் கன்னடத்துல போய்ப் படம் பண்ணேன். திரும்பவும் ‘என் தங்கச்சி படிச்சவ’ படம் மூலம் தமிழுக்கு வந்தேன். மாற்றம் ஏற்பட்டிருக்கிறது உண்மை....

P.Vasu
P.Vasu

உங்கள் பிஸி ஷெட்யூலுக்கு வீட்டு ரியாக்ஷன் எப்படி?

வீட்டுக்காக நேரம் ஒதுக்க முடியாதது உண்மைதான். அங்கேயும் ஏதாவதுச் சொல்லி ஏமாற்றிக் கொண்டுதான் இருக்க வேண்டும். ஆனால், என் மனைவியும் மகன் பிரசாந்தும் அதைப் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். என் மனைவி, சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால் அதிகம் பிரச்னையில்லை!

மற்றபடி, போன வாரம் கோல்டன் பீச்சில் ஷூட்டிங் நடந்தது. ஃபேமிலியை அங்கே வரச் சொன்னேன். ஷூட்டிங் முடிந்து பேக்கப் ஆனதும், அவர்களோடு நீங்கள் சொல்லும் நல்ல கணவராய், தந்தையாய் நடந்து கொண்டேன். என்ன செய்வது.. அவர்களைவிட சினிமாவை நான் அதிகமாய் நேசிக்கிறேனே!

கடைசியாக ஒரு கேள்வி.... ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் தெரிந்து கலைஞன் வாசு இனி இல்லை.... வசூலை மட்டுமே குறியாய்க் கொண்டு இயங்கும் வியாபாரி வாசுதான் இன்று இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

(ஒரு நிமிடம் யோசிக்கிறார்...) உண்மைதான்! நான் வியாபாரிதான்.... ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ‘பன்னீர் பூஷ்பங்கள்’ படத்தில் தெரிந்த வித்தியாசமான சிந்தனை கொண்ட வாசு இனி வரமாட்டான் என்றீர்களே, அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஃபீல்ட் அவுட்டாக இருந்தபோது, பலர் ‘இனி நான் வரவே முடியாது’ என்றார்கள். வந்து காட்டினேன். அதேபோல், வெகுசீக்கிரம் ‘பன்னீர் புஷ்பங்கள்’ வாசு வெளியே வருவான்... வந்தே தீருவான்... அதில் எந்தவொரு மாற்றமுமில்லை!

- ந.சண்முகம் 

படம் - மேப்ஸ்

(“குடும்பத்தைவிட சினிமாவைதான் அதிகமாய் நேசிக்கிறேன்! என்ற தலைப்பில் 04.08.1991 தேதியில் ஆனந்த விகடன் இதழிலிருந்து...)