
“மனசை இளமையா வெச்சிருந்தா போதும் , கடைசிவரை பரபரப்பா உழைச்சுக்கிட்டே இருக்கலாம்”
ஏ . ஸி . தியேட்டர்களிலிருந்து டெண்ட் கொட்டகைகள் வரை தனக்கென விசிலடிக்கும் ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சம்பாதித்து வைத்திருக்கும் நடிகர் விஜயகாந்த் . மதுரை தாண்டி அழகர்கோவிலில் ' பேயாழ்வார் ' அறைக்குள் ஒரு சின்னக் கட்டிலில் இரண்டாய் மடிந்து படுத்துக் கிடந்தார் ! ' கள்ளழகர் ' படத்துக்காக இரவுபகலாக இடைவிடாத ஷூட்டிங் . . . தூக்கத்தை மறந்த கண்கள் , வழக்கத்தைவிட சிவப்பாகக் கிடக்கிறது . பேச்சில் அப்பட்டமான மதுரைத் தமிழ் !

“ சின்னகவுண்டருக்குப் பிறகு . . . என்று உங்களைப் பற்றி யோசித்தால் வருத்தமாக இருக்கிறது . தொடர்ந்து தோல்விகள் ! என்ன காரணம் . . ? கதைத் தேர்வில் கவனம் செலுத்துவதில்லையா . . . ? "
" சின்னகவுண்டருக்குப் பிறகு வந்த ' என் ஆசை மச்சான் ' வெற்றிப்படம்தான் . ' அலெக்ஸாண்டர் ' , ' தர்மா ' கூட ஐம்பது நாள் படங்கள்தான் . சார் . . . ஒவ்வொரு படம் எடுக்கும் போதும் ' இந்தப் படம் நல்லா வரும் 'ங்கிற நம்பிக்கை யிலதான் வேலைபண்றோம் . கதை பேசறப்போ உட்கார்றதிலேர்ந்து மொத்த ஷூட்டிங்கும் முடிஞ்சு பேசறப்போகூட , படம் நல்லாஇருக்கிறதாத்தான் நமக்குத் தோணுது . அதையும் மீறி படம் ஓடாதது நம்ம கையில் இல்லை"
" திடீர்னு சம்பந்தமேயில்லாமல் சங்கீதா , ப்ரீதா விஜயகுமார் மாதிரி ரொம்ப சின்னப் பொண்ணுங்களோட டூயட் பாடி ஆடுறது சங்கடமாக இல்லையா . . . ? "
" நாம வயசானவன்னு நினைச்சாத்தானேங்க சங்கடம் வரும் . நாம ரொம்ப இளமையான ஆளுன்னு நினைச்சுக்கிட்டு ஜாலியா நடிச்சுடலாம் . மனசை இளமையா வெச்சிருந்தா போதும் , கடைசிவரை பரபரப்பா உழைச்சுக்கிட்டே இருக்கலாம் . . . "
" விஜய் , அஜீத் என்று ஒரு டஜன் இளைஞர்கள் புதிதாக வந்துவிட்டார்கள் . சீனியர் ஆர்டிஸ்ட் என்ற முறையில் . . . "
( கேள்வியை முடிக்குமுன் பலமாக ஆமோதித்துத் தலையாட்டிக்கொண்டே " வரட்டும் சார் . . . இது ரொம்ப நல்ல விஷயம்ங்க . ஆரம்பத்துல நாங்களும் புதுசா வந்த ஆளுங்க தானே . . . எம் . ஜி . ஆர் , சிவாஜி இருந்த காலகட்டத்துல ரவிச்சந்திரன் , ஜெய்சங்கர்னு வந்தாங்க . அப்புறம் ரஜினி , கமல் காலத்துல நான் , கார்த்திக் , பிரபு இன்னும் சில பேர் வந்தோம் . அதே மாதிரி தான் இதுவும் . அவங்களுக்குத் தோதான கதைகளில் அவங்க நடிப்பாங்க . எனக்கு ஏற்ற கதைகளில் நான் வருவேன் . இப்ப அஜீத்குமார் . . . ஒரு கமாண்டிங் ஆபீஸராக நடிக்க முடியாது . அதே மாதிரி , நான் காலேஜ் பையனாக ஒரு புத்தகத் தைத் தூக்கிக்கிட்டு வந்தா , நீங்க சிரிக்கமாட் டீங்களா . .? அதனால அவங்கவங்க திரி , நானகாகங்க . நீங்க சிரி ஸ்டைலில் தனியா போய்க்கிட்டே இருப்போம் . . . "

"'வேற்றுமொழிப் படங்களில் நடிக்க மாட்டேன் . டி . வி -யில் முகம் காட்டமாட்டேன் ' னு சில சீரியஸான கொள்கைகள் வெச்சிருக்கீங்களே..?"
"உண்மையைச் சொல்லணும்னா , எனக்குத் தமிழைத் தவிர வேற மொழி தெரியாது . படிப்பறிவு இல்லை . நான் இன்னொரு மொழியைக் கத்துக்கிட்டு . . . . புரிஞ்சு நடிச்சு முடிக்கறதுக்குள்ளே எல்லாரையும் படுத்தணும் . அதுனாலயே நடிக்கறதில்லை , டி . வி . விஷயத்தைப் பொறுத்தவரை , அதிலே நான் எதுக்கு வாணும் ? இன்னும் அரைமணி நேரத்துக்கு விஜய்காந்த் முகத்தைத் தமிழ்நாட்டு மக்கள் பார்க்கப் போறாங்களேன்னு சந்தோஷப்படுறதுக்கா ? அதோட ஒரு நடிகரோட போட்டி டி . வி - - ல வருதுன்னா , அன்னிக்கு தியேட்டர்ல கூட்டம் குறைஞ்சுடுது . சினிமாவுக்கு எதிரியான ஒண்ணுல நாம ஏன் முகம் காட்டனும்..."
"இதுபோன்ற வேறு எதுவும் அதிரடி கொள்கைகள் இருக்கா.."
“விசிடி - ல ( விடியோ காம்பாக்ட் டிஸ்க் எல்லாப் புதுப்படத்தையும் பார்க் கலாம் . ஆனா , நான் பார்க்கமாட்டேன் . இதைச் சொன்னா யாரும் நம்பமாட்ட டாங்க . விசிடி - யை ஒழிக்கணும்னு நாம போராட்டம் பண்ணிட்டு , நாமளே விசிடி பார்த்தா அது முறையா..? அதனால , எப்பவாவது டி . வி - யில பாட்டுப் பார்க்கிறதோட சரி . . . ஒரு பாட்டு பார்த்தேன் . அருண்குமார் , ரொம்ப நல்லா பண்ணியிருந்தாரு . . . "
"கலைஞர்மேல் பற்று , மூப்பனாரோடு நட்பு . . . எப்போது அரசியலில் குதிக்கப் போகிறீர்கள்..?"
"அரசியலா . . . ? ( சிரிக்கிறார் ) நான் அரசியலுக்குப் போவதாக இருந்தால் எப்போதோ போயிருப்பேன் . எனக்கு எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள் . திருநாவுக்கரசு , மூப்பனார் , கலைஞர் என்று அத்தனை பேருக்கும் நான் நெருக்கம். நான் என் வாழ்க்கையில் எதையும் பிளான் பண்ணி செய்வதே இல்லை . எது வருதோ , அதை ஏத்துக்கிட்டு யதார்த்தமா போயிடுவேன் . அதனால என்ன நடக்கும்னு எனக்குத் தெரியாது . . . " ( சிரிக்கிறார் )
"சரி ! உங்க பலம் எது . . . பலவீனம் எது. . ? ”
" ரெண்டுமே நான்தான் . ஒருத்தரை ( முழு நம்பிடுவேன் . அதுக்கப்புறம் அவர் ஏமாத்தினா வருத்தப்படுவேன் . ஆனா , இது எதையும் மனசுல வெச்சுக்காம நாமபாட்டுக்கு வேலையைப் பார்ப்போம்ங்கிற இயல்பு என்னுடைய மிகப் பெரிய பலம் . . . ”
"காலால் உதைத்துப் பந்தாட என்ன உடற்பயிற்சிகள் , உணவு பழக் கங்கள் . . இதுபற்றிச் சொல்லுங்களேன் . "
"ஊரில் இருந்தா கிரவுண்ட் எக்ஸர்சைஸ் பண்ணிடுவேன் . நடுவுல கொஞ்சம் திம்முனு தெரியணுங்கறதுக்காக , நன்றாகச் சாப்பிட்டு உடம்பு வளர்த்தேன் . அதற்கப்புறம் அடுத்த படத்துக்காக அசைவமே தொடாமல் மெலிந்தேன் . இன்னொண்ணு , எனக்கு ரெகுலரான சாப்பாட்டுப் பழக்கம் கிடையாது . ஒரு நாளைக்குத் திடீர்னு அஞ்சுவேளை சாப்பிடுவேன் . அப்புறம் மூணுவேளையா குறைப்பேன் . அவுட் டோரில் ஃபைட் ஸீன் இருந்தா , நோ எக்ஸர்சைஸ் ! ஏன்னா , அந்தச் சண்டை ஸீனில் நடிச்சதே ஒரு மாசத்துக்குப் போதும் . . . "
"பிடிச்ச டிரஸ்..?"
"கதர் சட்டை , வேட்டிதான்ங்க . . . ஒரு தடவை சிங்கப்பூர் போய்ச் சுத்திப் பார்த்துட்டிருக்கறப்ப , பழக்கதோஷத்துல வேட்டியை மடிச்சுக் கட்டிக்கிட்டு நடந்தேன் . சுத்தியிருக்கிறவங்க பதறிப் போய் வேட்டியை இறக்கிவிட்டுட்டாங்க . என்னன்னு கேட்டா , வேட்டியை ஏத்திக் கட்டினா செக்ஸியா தெரியும்னு அதைக் குற்றமா வெச்சிருக்காங்களாம் . இது எதுக்கு வம்புனு அதுக்கப்புறம் வெளிநாடு போனா மட்டும் பாண்ட் , சட்டை போடுவேன் . . . ' "
"உங்களது குடும்பத்தைப் பற்றி . . . ?"
"அன்பான , அமைதியான குடும்பம் . மனைவி பிரேமலதா , விஜயபிரபாகரன் ,சண்முகபாண்டியன் என்று இரண்டு மகன்கள் . என்னுடைய தொழில் பற்றித் தெரிந்ததால் சங்கடப்படாத , எதிர்பார்க்காத மனைவி . பசங்க மட்டும் அப்பா கூட இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க . அவங்களுக்காக மெனக்கெட்டு ஞாயிற் றுக்கிழமை அவங்களோட இருக்கப் போயிடுவேன் . ஆனா , அவங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஊர் சுத்துற நாள் . அதனால் எங்கியாவது போயிடுவாங்க . ஆனாலும் அவங்களைப் பொறுத்த வரைக்கும் அன்னிக்கு அப்பா வீட்டுல இருக்கார்னு ஒரு திருப்தி . . .
"முக்கியமான கேள்வி . . . உங்களுக்கும் உங்களது நண்பர் இப்ராகிம் ராவுத்தருக்கும் ஏதோ பிரச்னை என்று செய்திகள் வருகிறதே . . . ? "
"அதெல்லாம் சும்மா ஹம்பக் ! ஒரு வாரப் பத்திரிகையில் என்னை யாரோ தீவிரவாதிகள் கடத்திட்டுப் போனதாகவும் என் கையில் இருந்த 786 மோதிரத் தைப் பார்த்து என்னை விட்டுட்டதாகவும் எழுதியிருந்தாங்க . ஏன் இப்படிக் கதை கட்டுறாங்கனு எனக்குத் தெரியலை . இதே மாதிரிதான் எனக்கும் ராவுத்தருக்கும் பிரச்னைனு எழுதுறாங்க சொல்ற வங்களும் எழுதுறவங்களும் என்ன வேணும்னா எழுதட்டும் . . . . . எங்க நட்பைப் பத்தி எங்களுக்குத்தானே தெரியும் . . ? "

"தேர்தலுக்கு முன்னால் கடற்கரையில் கலையுலகத்தைத் திரட்டிக் கலைஞருக்குப் பவளவிழா எடுத்தவர் நீங்கள் . இப்போது அவர் முதல்வர் . மறுபடியும் அவருக்கு விழா நடக்கிறது . ஆனால் , வேறு யார்யாரோ முன்னால் நிற்கிறார்கள் . வருத்தமாக இல்லையா?"
"இல்லீங்க.. நீங்களே சொன்ன மாதிரி , நாங்க அவர் பதவிக்கு வர்றதுக்கு முன்னால் விழா நடத்தினோம் . அதுதான் அன்புத் தம்பிகள் செய்யற காரியம் . இப்போ இந்த விழா ஒரு முதலமைச்சருக்கு நன்றி சொல்ல நடத்தறாங்க . இது யார் வேணும்னாலும் நடத்தலாம் . இதுல ஒரு நடிகனா நான் கலந்துக்குவேன் . . . '
"நாம் கறுப்பாக இருக்கிறோமே என்று என்றாவது வருத்தப்பட்டிருக்க கிறீர்களா . . . ? "
" தலைவா . . . இது திராவிட நிறம் வைரத்துலகூடக் கறுப்பு வைரம்தான் உயர்ந்ததுனு சொல்லுவாங்க . என் நிறத்துக்காக , நான் கவலைப்பட்டதே கிடையாது . உள்ளங்கால் சிவப்புதான் ஆனா , அது தரையில் மிதிபடுது . தலை முடி கறுப்பு . ஆனா , அதுதான் உச்சியில் இருக்குனு எம் ஆர் ராதா அண்ணன் அடிக்கடி சொல்லுவாராம் . அது நமக்கும் பொருத்தம் !"
- பாலா
படங்கள் - கே.கார்த்திக்கேயன்
(27.09.1998 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)