அத்தியாயம் 1
Published:Updated:

யார் அந்த வில்லன்னே எனக்குப் புரியல...விஜயகாந்த் பேட்டி

Vijayakanth
பிரீமியம் ஸ்டோரி
News
Vijayakanth

1999ல் 'வானத்தை போல ' படப்பிடிப்பினிடையே விஜயகாந்தை நேரில் சந்தித்தபோது....

'சரத்குமாருடன் 'ஈகோ' யுத்தம் நடத்துகிறார்.... அ.தி.மு.க - வில் சேரப் போகிறார்... மதுரையில் நடந்த கார்கில் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் தப்பும் தவறுமாகத் தமிழில் பேசியதற்காக முதல்வர் கலைஞரிடம் டோஸ் வாங்கினார்... த.மா.கா - விலிருக்கும் உயிர் நண்பர் இப்ராஹிம் ராவுத்தரிடமிருந்து ஒரேயடியாகப் பிரிந்து விட்டார்... ' இந்த மாதிரியான செய்திகள், நடிகர் விஜயகாந்தைச் சுற்றிலும் மேகமூட்டமாகப் படர்ந்திருக்க.... நாம் அவரை நேரில் சந்தித்து முழு விவரங்கள் பெற முடிவு செய்தோம்.

பொள்ளாச்சியில் விக்ரமன் இயக்கும் 'வானத்தை போல ' படப்பிடிப்பினிடையே விஜயகாந்தை நேரில் சந்தித்தபோது....

"இது எனக்கொண்ணும் புதுசில்ல... திடீர்னு என்னைப் பத்தி தப்பா எழுதறதுன்னு ஒரு சீஸன் கிளம்பும்.... அப்புறம் தானா அடங்கிடும்.... பொதுவா இந்த மாதிரி சமயங்கள்ல நான் யார்கிட்டயுமே வாயத் தொறக்கற தில்லே... ஆனா, இந்த முறை வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வெச்சிடலாம்னு நினைக்கிறேன்... என்ன கேக்கணுமோ கேளுங்க! " என்றார்.

Vijayakanth
Vijayakanth

“மதுரை கலை நிகழ்ச்சியில்... உங்க பேச்சு ஏன் அப்படி தப்பும் தவறுமா அமைஞ்சது...? "

" இந்த கார்கில் கலை விழாவை முன்நின்று நடத்திய வங்க, நடிகர் சரத்குமாரும் நடிகை ராதிகாவும்தான்! மதுரை என்னோட சொந்த மண் என்பதால், நான் முன் கூட்டியே வந்து விழா நிகழ்ச்சிகளைத் திட்டமிட உதவியா இருக்கணும்னு ஸ்பெஷலா கூப்பிட்டாங்க. ' கண்ணுபட போகுதய்யா ' பட ஷூட்டிங் மதுரை நிகழ்ச்சியோட க்ளாஷ் ஆச்சு. ரொம்ப முன்கூட்டி கிளம்ப முடியல... நிகழ்ச்சிக்கு முந்தின நாள்தான் என்னால அங்கே போக முடிஞ்சுது. விழாவுல கலந்துக்க வந்திருந்த நடிக நடிகையருக்குச் சாப்பாடு ஏற்பாடு செய்யறது, நிதி வசூல் வேட்டை மாதிரி பல விஷ யங்களுக்காக நாங்க ஓடிக்கிட்டிருந்தோம். இப்படி ஏக பிஸியா நான் நடமாடிக்கிட்டு இருந்தப்போ அங்கே என்னைப் பார்க்கணும்னு அடம்பிடிச்சது, எனது ரசிகர் கூட்டம்! நான் தலையை மட்டும் காட்டிட்டா போதும்னாங்க... ரசிகர்களை ஏமாத்தக்கூடாதேன்னு அவங்களைச் சந்திக்கறதுக்காக பக்கத்துல ' ராணி தியேட்டர்'ங்கற ஒரு இடத்துக்குப் போய்க்கிட்டிருந்தேன். பாதி வழியில் எனக்கு செல்போன் அழைப்பு! ' அவசரமா மேடைக்கு வாங்க... குத்து விளக்கு ஏத்தணும்... அமைச்சர்கள் காத்திருக்காங்க'ன்னு. எனக்குண்ணும் புரியல... இப்படியொரு நிகழ்ச்சியில் நானும் இருக்கேன்னு எனக்குத் தெரியாததால தடால் புடால்னு ரஷ் பண்ண வேண்டியதாயிடுச்சு! நீங்க டி.வி - யில்கூட பார்த்திருந்தீங்கன்னா குத்து விளக்கு ஏத்தற இடத்துக்கு ராதிகா என் கையப் பிடிச்சு இழுப்பாங்க... நான் திடீர்னு மேடைக்குக் கூப்பிட்ட குழப்பத்தோடவே நடப்பேன்.

இதுதான் இப்படின்னா, அடுத்தாப்போல பேச்சு விஷய மும் நான் எதிர்பாராம நடந்தது. நான் பேசறதா 'சடார்'னு அறிவிச்சுட்டு என்கிட்டே ஒரு பேப்பரை நீட்டினாங்க... ' நீங்க இந்த உரையை நாலு நிமிஷத்துக்குள்ள படிச்சு முடிச்சாகணும். ஏன்னா, சன் டி.வி - யில் அப்படித்தான் டைம் செட் பண்ணி வெச்சிருக்கோம்! ' னு வேற அவங்க சொல்ல எனக்கும் வேற வழியில்லே... அவங்க குடுத்த பேப்பரை எந்தவிதமான தயாரிப்பும் இல்லாம அப்படியே படிச்சதுல என்னையும் மீறி சில வார்த்தைகளோட உச்சரிப் புல தப்பு வந்துடுச்சு. சொந்தமா பேசச் சொல்லியிருந் தாங்கன்னாகூட நான் நல்லாவே பேசியிருப்பேன். ஆனால், யாரோ எழுதிக்குடுத்ததைத் திடீர்னு பேசணும்னு வந்தப்போதான் குளறுபடி. அதுக்கப்புறம் இந்த என் பேச்சு தொடர்பா எழுந்த சர்ச்சை என்னை ரொம்பவே வேதனைப் படுத்தற அளவுக்குப் போயிடுச்சு! ”

"தடுமாறிய உங்கள் உரைக்காகக் கலைஞர் டோஸ் விட்டதாக வந்த செய்திகள்? ”

" அது தப்பு! முதல்வர் கலைஞரை அறிஞ்சவங்க யாரும் இந்தச் செய்தியில் எள்ளளவும் உண்மை இல்லைனு புரிஞ்சுக்குவாங்க. விஜயகாந்த்னு இல்லே... என்னைவிட சின்ன நடிகர் யாராவது இப்படி பேச்சுல தவறு செய்திருந் தாலும்கூட அவர் டோஸ் விடமாட்டார். காரணம், திட்டுறது அவர் இயல்பேயில்ல.... இதுல எங்கேயோ ஒரு பரபரப் புல என்னை அறியாம நான் சின்னதா வழுக்கிட்டேன்ங் கறதை அவர் கட்டாயம் சீரியஸா எடுத்துக்கவே மாட்டார். "

" அப்ப நீங்க ஏன் சென்னையில் நடந்த கிரிக்கெட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை?! ”

"கார்கில் நிதி விழா பத்தி சரத் என்கிட்டே பேசினப்பவே ' என்னால ஒரு விழாவுல நடிகர்கள் மட்டும் தான் கலந்துக்க முடியும்'னு நான் தெளிவா சொல்லிட்டேன். சென்னை விழா நடந்தப்போ எனக்கு ஷூட்டிங்.

சென்னை நிகழ்ச்சியை நடத்தறது சம்பந்தமா என் தலைமையில ஆலோசனைக் கூட்டம் நடக்கிறதா இருந்தது. அது 16 - ம் தேதி நடக்கறதா இருந்துச்சு. என்னைக் கேக்காமலே ' தலைமை'னு போட்டுட்டாங்க. ஆனால், அன்னிக்குன்னு பார்த்து நான் இன்டர்நெட்ல என்னோட வெப்சைட் துவங்கற நிகழ்ச்சிய வெச்சிருந்தேன். அதுக்கு ஸ்டாலின்லாம் வந்தாரு... நான் திடீர்னு அதை நட்டாத்துல விட்டுட்டு எப்படி போக முடியும், சொல்லுங்க...? அதனால ஆலோசனைக் கூட்டம் பத்தித் தகவல் வந்ததுமே நான் சரத்தை கூப்பிட்டு 'ஸாரி.. நான் வர முடியாது!'னு விளக்கிட்டு அவங்களையே நடத்தச் சொல்லிட்டேன். ஒருவேளை, இந்தச் சம்பவம்தான் எல்லா வதந்திகளும் கிளம்ப காரணமாயிடுச்சோ என்னவோ? "

“அப்ப உங்களைப் பத்தி இந்தத் தவறான செய்தியைப் பரப்புறது யார்...?"

“அதான் எனக்கே தெரியல...! ஒவ்வொருத்தர் ஒவ்வொரு பேர் சொல்றாங்க. யார் அந்த வில்லன்னே எனக்குப் புரியல. அந்த வில்லன் எங்க துறையைச் சேர்ந்தவரானுகூட சொல்ல முடியலே! "

Vijayakanth
Vijayakanth

“உங்க அளவுக்கு பிரபலமான ஒரு நடிகருக்கும் உங்களுக்கும் ஏதோ முன்பகையிருக்கற தாவும் அவர்தான் இப்படி பத்திரிகைக்காரங்களுக்கு நியூஸ் தர்றார்னும் ஒரு பேச்சிருக்கே! ”

"எனக்கு எங்கேயும் எதிரிகள் கிடையாது. நான் அந்த வதந்திகளை நம்பறதில்லே.. ஒரு பிரபல நடிகர் நான் எனக்கெதிரா செயல்படுவதாகச் சொல்வதெல்லாம் வெறும் புரளி. அதனாலே அவர்பேரே இங்கே வேண்டாமே."

"அப்புறம் நீங்க அ.தி.மு.க - வுல சேரப் போறதா வர்ற நியூஸ் பத்தி...”

“நல்ல தமாஷான செய்தி! கேள்விப் பட்டப்போ எனக்குச் சிரிப்புதான் வந்தது. அ.தி.மு.க-வுல எனக்கு ரெண்டே பேரைத்தான் நல்ல அறிமுகம். ஒண்ணு, முன்னாள் அமைச்சர் காளிமுத்து. இன்னொருத்தர், ஜெ.ஜெ. டி.வி. பாஸ்கரன். வேற யாரையும் எந்த ரூபத்துலயும் எனக்கு அ.தி.மு.க-வுல தெரியாது."

“அப்ப நீங்க எப்பவும் - மு.க. அனுதாபிதானா? "

“ ஒரு சின்ன கரெக்ஷன்! நான் கலைஞரோட அபிமானியே தவிர, தி.மு.க - காரனல்ல. அவரோட தமிழுக்கு நான் அடிமை. என் அப்பா ஸ்தானத்துல அவரை நான் வெச்சிருக்கேன்னு சொன்னா அது மிகையில்லே.... இதனாலெல்லாம் நான் அவர் கட்சியிலே இருக்கேன்னு நினைச்சால் அது உங்க கற்பனையே தவிர நிஜமல்ல.

ஒரு சினிமாக்காரன்கிற விஷயம் மட்டும்தான் உண்மை! மத்தபடி, எந்தக் கட்சிக்கு வோட்டு போடறேன்ங்கறது என் ஆள்காட்டி விரல் மட்டுமே அறிந்த ரகசியம்!

"உங்க நண்பர் ராவுத்தரோடு ஏதாவது மன ஸ்தாபமா..? புதுசா 'கேப்டன் சினி கிரியேஷன்ஸ்'னு சொந்த கம்பெனி துவங்கிட்டீங்களே?"

“கேப்டன் சினி கிரியேஷன்ஸ் என் மச்சினனுடையது. என்னுடையதில்லே. அப்புறம், ராவுத்தருக்கும் எனக்கும் எந்தவித மனஸ்தாபமும் இல்லே.... எங்க நட்புல தம்மாத்தூண்டு விரிசல்கூட இல்லே... நாங்க எப்பவும் போலதான் இருக்கோம். ஆனா, அவனுக்கு அரசியல் ஆர்வம் உண்டு. இந்த முறை அநேகமா அவன் த.மா.கா - வுல ஸீட் வாங்கி தேர்தல்லயே நிப்பான் போலிருக்கு! அப்போ அவனுக்காக பிரசாரத்துக்குப் போவேனான்னு கேட்டீங்கன்னா, மாட்டேன்! அவனும் அதை எதிர்பார்க்கமாட்டான்.

ஒண்ணு சொல்லட்டுமா..? கல்யாணத்துக்குப் பிறகு நானும் ராவுத்தரும் சொத்துக்களைப் பிரிச்சுக்கிட்டது மட்டும்தான் உண்மை. அதுகூட அவனே வலுக்கட்டாயமா செஞ்சது! "

“நேரடி அரசியல்ல குதிக்கற ஐடியா எதுவும் இருக்கா? "

"இப்போதைக்கு இல்லை. ஆனால், நாளைக்கு என்ன நடக்கும்னு யாரால சொல்ல முடியும்?... காலத்தின் கட்டாயம் அதுவானால் கண்டிப்பா நடக்கும்."

- சுபா வெங்கட்

படம் - வை.கதிரவன்

(04.08.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)