அத்தியாயம் 1
Published:Updated:

புது அரசியல்! - வியூகம் காட்டுகிறார் விஜயகாந்த்!

vijayakanth
பிரீமியம் ஸ்டோரி
News
vijayakanth

“கட்சி தொடங்கிப் பார், மாநாடு நடத்திப் பார். எல்லா சவாலையும் நிச்சயமா சந்திப்பேன்!” 2005ல் விஜயகாந்தின் Exclusive Interview...

வ்வொரு அடியும் உஷாரா இருக்கணும். எதையும் சமாளிக்கத் தேவையான தெம்போட இருக்கேன்! ” எச்சரிக்கை உணர்வோடு பேசுகிறார் விஜயகாந்த்.

“ செப்டம்பர் 14 - ம் தேதிக்கு குறிப்பா அப்படி என்ன முக்கியத்துவம்? ”

" அது ஒரு நல்ல நாள் என்பதைத் தவிர, அந்தத் தேதியைத் தேர்ந்தெடுக்க வேற காரணங்கள் இல்லை. ஆனால், இனிமேல் அந்த நாள் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான நாளா மாறிடும்! "

“ ரொம்ப நம்பிக்கையா இருக்கீங்க போலிருக்கே? ”

" நம்பிக்கைதானேங்க வாழ்க்கை! மாநாடு நடத்த என் முதல் சாய்ஸ் திருச்சியாதான் இருந்தது. ஆனால், என்னுடன் இருக்கிற எல்லோரும் மதுரையைத்தான் விரும்பினாங்க. சென்டிமென்ட்கூட காரணமா இருக்கலாம். இதுவரைக்கும் தமிழ்நாட்டு அரசியலின் பல முக்கியத் திருப்பங்கள் மதுரை யில்தான் ஆரம்பிச்சிருக்கு. என் அரசியல் பிரவேசமும் முக்கியத் திருப்பமா அமையும்னு எதிர்பார்ப்பு இருக்கு. எல்லாத்துக்கும் மேல மதுரை என் ஊரு. அதுவே தனி தெம்புதானே!”

vijayakanth
vijayakanth

விஜயகாந்த் ஒரு நடிகரா ஓ.கே! ஆனால், அரசியலுக்குள் இறங்க அவருக்கு என்ன தகுதி இருக்குன்னு ஒரு விமர்சனம் இருக்கே? ”

“ நம்ம இந்தியாவில் ஒருத்தர் அரசியலுக்கு வரணும்னா அவர் இந்தியக் குடிமகனா இருந்தாலே போதும். அதுவும் நான் பதினஞ்சு வயசுல இருந்து திராவிடக் கட்சிகளுக்கு தெருத் தெருவா போஸ்டர் ஒட்டினவன். சாதாரண ரைஸ்மில் விஜயராஜாவா இருந்தபோதே அடிமட்டத்துத் தொண்டனா ரோடு ரோடா திரிஞ்ச சமயம் விஜயகாந்த்தா மாறினதுக்கப்புறம் தமிழ்நாட்டின் அரசியலைத் தீர்மானிச்ச அத்தனை பெரிய தலைவர்களோடவும் சமமா உட்கார்ந்தும் பேசியிருக்கேன். எனக்கு அரசியல் தெரியாதுன்னு சொல்றவங்களைப் பார்த்து சிரிப்புதான் வருது. எனக்குப் படிப்பறிவு இல்லேன் னும் சொல்றாங்க. படிப்புதான் அறிவுன்னு எவன் சொன்னான்? காமராஜரைத் தாண்டி ஒரு நல்ல அரசியல்வாதியை தமிழ்நாட்டில் மட்டுமில்லை, இந்தியாவிலேயே காட்ட முடியாது பசிக்கு தாப்பா? ' னு கேட்க படிப்பு தேவையில்ல, மனசு இருந்தா போதும்! அதுவும் நானெல்லாம் சினிமாவில் மட்டுமே ஆக்ஷன் ஹீரோ இல்லை. நிஜத்திலும் ஏதாவது ஒரு வேலைன்னா, வேட்டியை மடிச்சுக் கட்டிட்டு களத்தில் இறங்கிடற டைப்! ”

“உங்கள் கட்சியின் கொள்கைகள் என்ன... உங்களின் திட்டங்கள் என்ன? ஊழலை ஒழிக்கப் போறதா சொல்றீங்களே, அதை எப்படிச் சாதிப்பீங்க?

" செப்டம்பர் 14 - ம் தேதி எல்லா கேள்விகளுக்கும் பதில் தர்றேன். அதை இப்போ சுருக்கமா சொல்லணும்னா, மக்களுக்கு நல்லது பண்ணணும் என்பதுதான் என் கட்சியின் கொள்கை. எல்லா கட்சிகளையும் எல்லா தலைவர்களையும் நம்பி ஏமாந்து, மக்கள் சலிச்சுட்டாங்க. அவங்க எதிர்பார்ப்பைப் புரிஞ்சுக்கிட்டு, அவங்க தேவைகளைப் பூர்த்தி செய்துதர்றதுதான் என் திட்டம். நேர்மையான நிர்வாகம், ஊழலற்ற அரசு இயந்திரத்தைக் கொண்டு வரணும்னா அதுக்கு எதையெதை சுத்தம் செய்யணும்னு என் மனசில் சில ஐடியாக்கள் இருக்கு.

அதைச் செயல்படுத்துவது பற்றி நல்ல அதிகாரிகள், அறிஞர்களிடம் பேசி இருக்கேன். அது பெரிய விஷயம். ஆனால், அதிகாரம் வந்தால்தான் அதைச் செயல்படுத்த முடியும். இவ்வளவு காலம் சினிமாவில் ஊழலுக்கு எதிரா பேசிட்டு இருந்தேன். இப்போ நிஜத்திலும் அதைச் சாதிக்க ஆசைப்படறேன்?

“ அரசியல் தலைவர்கள் தங்கள் குடும்ப நலனைத்தான் முக்கியமா பார்க்கிறாங்கனு காரசாரமா பேசினவர் நீங்க. ஆனால், இப்போ உங்களின் எல்லா மேடைகளிலும் உங்க மனைவிக்கும் மைத்துனருக்கும் பிரதான இடம் தர்றீங்களே? ”

“ என் சுகம், துக்கம் எல்லாத்திலயும் பங்கெடுத்துக்கிறவங்க என் மனைவி. அவங்க வசதியா சந்தோஷமா, ஒரு சினிமா நடிகனோட பொண்டாட்டியா மட்டுமே இருக்க ஆசைப் பட்டிருந்தா, என்னை அரசியலுக்கு வரவே அனுமதிச்சிருக்கமாட்டாங்க. வீட்டில் ஒத்துழைப்பு இல்லைன்னா யாராலேயும் எதையும் சாதிக்க முடியாது. அதுவும், அரசியல் மாதிரி பொதுவாழ்க்கையில் இருக்கிற பிரச்னைகளை அவங்களும் நேரடியா உணரணும்னுதான் எல்லா இடங்களுக்கும் அழைச்சிட்டுப் போறேன். பெண் சுதந்திரத்தை நான் வீட்டிலிருந்தே தொடங்குகிறேன். என் வாழ்க்கை முழுக்க வரப்போறவங்க ஒரு மேடைக்கு எப்படி வராம இருப்பாங்க? சார், நான் பெண்டாட்டிகூட போகாம மத்தவங்ககூட போனாத்தான் அது தப்பு. நான் மதுரக்காரன். மீனாட்சி இல்லாம எங்களுக்கு ஒரு வேலையும் நடக்காது!

Vijayakanth
Vijayakanth

“உங்களின் இந்த அரசியல் முயற்சியைத் தடுக்க நிறைய மிரட்டல வருதுன்னு சொன்னீங்க. உங்களை அப்படி மிரட்டுவது யார்? என்ன மாதிரியான மிரட்டல் அது? ”

" சும்மா சாதாரண கவுன்சிலர் தேர்தலுக்கே வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுவாங்க. இவ்வளவு பிரமாண்டமா ஒரு கட்சி ஆரம்பிக்கிறேன். எனக்கு மிரட்டல் வராமல் இருக்குமா?

ஆனா, மிரட்டல்னா அது ஏதோ போன்ல பேசி மிரட்டறது, திட்டி கன்னா பின்னானு லெட்டர் எழுதறது, அருவா ளோட வந்து வீட்டுக்கு முன்னால நிக்கிறதுன்னு கிடையாது. அந்தத் தைரி யம் யாருக்கும் கிடையாது. வித விதமான வகையில் மிரட்டுவாங்க. பணம் புழங்குகிற, ' பவர் ' புழங்குகிற இடத்தில் இது தவிர்க்க முடியாதது. அதை எல்லாம் சமாளிச்சுடலாம். அட, என் பிரச்னையையே என்னால தீர்த்துக்க முடியலைன்னா, அப்புறம் மக்கள் பிரச்னையை எப்படித் தீர்ப்பேன்? என்னை யார், என்ன சொல்லி மிரட்டினாங்கன்னு இதுக்கு மேல விவரமா சொல்ல விரும்பலை. ஆனால், அதுக்கு ஒரு நாள் அவங்க வருத்தப்படுவாங்க! ”

“ உங்க கல்யாண மண்டபத்தைக் காப்பாத்திக்கவே கலைஞரைப் போய்ப் பார்த்தீங்கன்னு இப்பவே உங்க மேல விமர்சனம் தொடங்கிருச்சே? ”

"அது சரி, முதல்வரை பார்த்தப்போ, காலேஜைக் காப்பாத்திக்கப் போனேன்னு சொன்னாங்க. தமிழ்நாட்டின் எல்லா முக்கியத் தலைவர் களோடவும் நேரடியா எனக்குப் பழக்கம் இருக்கு. மரியாதை நிமித்தமா எப்பவும் பார்க்கிறதுதான். அவரை இதுக்கு முன்னால எத்தனையோ முறை நான் பார்த்திருக்கேன். ஆனால், இப்பேர அரசியல்னதும் சின்னச் சின்ன விஷயங்களையும் பெரிசுபடுத்துறாங்க.

இதோ, சமீபத்தில் ஒரு நாள் ஏர்போர்ட்டில் திடீர்னு ரஜினி வந்தார். அவர் ஒரு ஊர் போறார். நான் ஒரு ஊர் போறேன். ரெண்டு நடிகர்கள் சந்திச்சா பேசிக்குவோம் தானே? உடனே அதை ' ரகசிய ஆலோசனை ' னு எழுதி பரபரப்பு பண்ணலாம். ஆனா, அதில் உண்மை இல்லையே! அப்படியே ரெண்டு பேரும் பார்த்து எதுவும் பேசாமல் போயிருந்தாலும், அதையும் வேற மாதிரி நியூஸ் ஆக்கியிருப்பாங்க. இதெல்லாம் பொது வாழ்க்கைக்குக் கொடுக்கிற விலை! ”

" கட்சி, மாநாடுன்னு அரசியல் பண்ண ணும்னா நிறைய பணம் செலவாகுமே? ”

" பணம் மட்டுமில்லை, உழைப்பு அதைவிட ரெண்டு மடங்கு செலவாகும். நிறைய பேர் நன்கொடை, உதவின்னு பணம் தர முன் வந்தாங்க. நான் யார் கிட்டேயும் வாங்கலை. வாங்கக் கூடாதுங்கிறதில் உறுதியா இருக்கேன். என்னவாயிருக்கும்னு தெரியாதே?

உண்மையா சொல்லணும்னா, என்னோட ஒரு சொத்தை வித்துதான் இந்த மாநாட்டையே நடத்துறேன். கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப் பார்னு சொல்லுவாங்க. கட்சி தொடங்கிப் பார், மாநாடு நடத்திப் பார்ங்கிறதையும் அதோடு சேர்த்துக்கலாம்னு தோணுது. எல்லா சவாலையும் நிச்சயமா சந்திப்பேன்! ”

Vijayakanth
Vijayakanth

‘ சினிமாவில் சேர்த்த பணத்தையெல்லாம் விஜயகாந்த் அரசியல்ல வாரி இறைக்கிறார். அரசியல் என்ற மாய சக்தி, எப்பேர்ப்பட்ட பிரபலங்களையும் நடுத்தெரு க்குக் கொண்டுவந்து விட்டுடும்னு சொல்றாங்களே? ”

”நான் தெருவுக்கு வர்றதைப் பத்தி எனக்கே கவலை கிடையாது. ஏற்கெனவே நடுரோட்டில் நின்னவன்தான். பணம், பேர், புகழ் எல்லாத்தையும் நான் ரொம்பப் பின்னாலதான் பார்த்தேன். நீங்க சொல்றீங்களே, அப்படி யாரோ சிலர் ஆசைப்படற மாதிரி, ஒருவேளை நான் நடுத்தெருவுக்கே வந்துட்டாலும், மக்கள் தந்த பணத்தை மக்களுக்கே திருப்பி தந்துட்டதா நினைச்சுக்குவேன். நமக்கு நம்ம ரைஸ்மில் இன்னும் இருக்குங்க. உழைக்கிறதுக்கு உடம்புல தெம்பும் இருக்கு.

தவிர, தோல்விக் கதைகள் எல்லா விஷயத்திலும் ஆயிரம் இருக்கு. நாமெல்லாம் ஜெயிக்கப் பொறந்தவங்க! ”

“ தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகள் தான் இருக்கு. ஜெயலலிதா, கருணாநிதி இருவரில் உங்கள் எதிரி யார்? ”

" நல்லா இருக்குங்க இந்தக் கேள்வி. எதிரி இருந்தால்தான் அரசியல் பண்ண முடியுமா என்ன? எனக்கு எந்தத் தனிப்பட்ட ஆட்கள் மேலேயும் பகை கிடையாது. எல்லாக் கட்சிகள்லேயும் எனக்கு நண்பர்கள் இருக்காங்க.

மத்தவங்க சரியா பண்ணலைனு குறை சொல்லிட்டே இருக்கிறது பழைய ஃபேஷன். அதை நாம சரியா பண்ணிக் காட்டிடணும். அதான் என் ஸ்டைல்!

யாரையும் எதிர்க்கப் போவதும் இல்லை. யார் பின்னாலும் போய் நின்று கொடி பிடிக்கப் போவதும் இல்லை. தனியாகத்தான் நான் தேர்தலில் நிற்கப் போகிறேன். உழைக்கத் தயாராக வருகிறேன். மக்களிடம் அதற்கான வாய்ப்பு கேட்டு வருகிறேன். என் அரசியல் பாணி, இதுவரை தமிழ்நாடு பார்த்திராத ஒரு புது வகை பாணி! நான் தலைவனாக அல்ல, ஒரு தொண்டனாக வருகிறேன். நான் எப்போதும் மக்கள் பக்கம்! ”

- மை.பா.நாராயணன்

த.செ. ஞானவேல்

படங்கள்- என் விவேக்

(21.08.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)