அத்தியாயம் 1
Published:Updated:

‘தேர்தல் ஹீரோ’ விஜயகாந்த் பேட்டி!

Vijayakanth
பிரீமியம் ஸ்டோரி
News
Vijayakanth ( Ananda vikatan )

“இரண்டு கட்சிகளுக்கும் மாற்று சக்தியா எங்களை மக்கள் வளர்த்துட்டு இருக்காங்க”

மிக முக்கிய இரண்டு கழகங்களின் ஒரே இலக்காக இருக்கிறார் விஜயகாந்த்!ஒரு பக்கம் ‘பாராட்டத்தக்க முன்னேற்றம்’ என்று பாராட்டுகிறார் கருணாநிதி. இன்னொரு பக்கம் மிகக் கடுமையான வார்த்தைகளால் தாக்குகிறார் ஜெயலலிதா. புதுக்கட்சி ஆரம்பித்த வேகத்தில், மூன்று தேர்தல்களைச் சந்தித்து நிமிர்ந்திருக்கிற உற்சாகம் தெரிகிறது தே.மு.தி.க. தலைவரிடம். 

Vijayakanth
Vijayakanth
Ananda vikatan

 உள்ளாட்சித் தேர்தலில் வென்ற வேட்பாளர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். ‘‘நமக்கு ஒரு பயிற்சி முகாம் இருக்கு. என்ன செய்யணும், எப்படிப் பழகணும், எப்படி நடந்துக் கணும்னு முதல்ல தெளிவாத் தெரிஞ்சுக்கிட்டு பொறுப்பை ஏத்துக்கணும்ப்பா!’’ என மனைவி பிரேமலதா சகிதம் நின்று வாழ்த்தி அனுப்புகிறார்.

அப்போதுதான் வெளியான ஜெயலலிதாவின் அனல் அறிக்கையின் நகல் தரப்பட, அதன் மேல் கண்களை ஓட்டுகிறவர், ‘‘ஒரு விஷயம் செய்ய மனசுல தெளிவு வேணும், தெம்பு வேணும், உண்மை வேணும்னு சொல்வாங்க. கூடவே, பொறுமையும் நிறைய வேணும் போல!’’ என்கிறார் சின்னப் புன்னகையுடன்.

‘‘நான் ஆரோக்கியமான அரசியல் செய்ய ஆசைப்படுறேன். அதுக்கு மக்கள் தர்ற வரவேற்புதான், இந்த ஆரம்ப வெற்றிகள்.விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ-வானது எங்களுக்கு முதல் விசிட்டிங் கார்டு. இப்போ உள்ளாட்சித் தேர்தலிலும் சொல்லிக்கிற மாதிரி வெற்றிகள்... நான் என் பாதையில் தெளிவா இருக்கேன்.கலைஞர் திடீர்னு இப்போ என்னைப் பாராட்டுறார்.

ஒரு விஷயத்தைப் பல அர்த்தங்களில் சொல்றவர் அவர். முதலில், விஜயகாந்த் தலைவரே இல்லைன்னு சொன்னார்; அடுத்து என் கட்சியைப் பொருட்படுத்தவே இல்லைன்னார்; நான் திராவிடனே இல்லைன்னு சொன்னார். அவரே இப்போ ‘பாராட்டத்தக்க முன்னேற்றம்’னு சொல்றார். அவர் சொல்லலை, நாடு சொல்லவைக்குது. நான் அ.தி.மு.க. பக்கம் போயிடக் கூடாதுன்னு சொன்னாரான்னு தெரியலை. நான் இதெல்லாம் பெரிசா எடுத்துக்கிறதில்லை!’’

“இடைத் தேர்தலைப் பார்க்கும் போது ஜெயலலிதாவின் வீழ்ச்சி... உங்களின் வளர்ச்சி... இரண்டும் கருணாநிதியின் மகிழ்ச்சியாகத் தெரிகிறதே? தி.மு.க-வையே நீங்கள் குறிவைத்துத் தாக்குவதால், அந்தக் கட்சிக்கான எதிர்ப்பு வாக்குகள் பிரிகின்றன. அது ஆளுங்கட்சிக்கே ஆதாயமாக அமைகிறதுன்னு ஒரு கணக்கு சொல்றாங்களே...?”

‘‘எந்தக் கணக்கும் வேணாம் சார்! தி.மு.க - அ.தி.மு.க. இது ரெண்டு மேலேயும் மக்களுக்குச் சலிப்பா இருக்கு. மக்களுக்கு மட்டுமில்லை, அந்த கட்சிக்காரங்களுக்கே சலிப்பு வந்திருக்கு என்பதுதான் உண்மை.நான் தனிக் கட்சி. அதனால், அவங்க குறைஞ்சுட்டாங்க, இவங்க கூடிட்டாங்கன்னு அதுக்குள்ளே போக விரும்பலை. இரண்டு கட்சிகளும் பிடிக்காமல்தானே நானே வந்தேன். பண்ருட்டி யார் சொன்னது மாதிரி, தே.மு.தி.க-தான் இந்தத் தேர்தலில் முதலிடம். ஏன்னா, நாங்க மட்டும்தான் தனி ஆள். மீதி எல்லாம் கூட்டணி பலம்!என்னவோ கதை சொல்வாங்களே, ‘புலிக்குப் பயந்தவனெல்லாம் வந்து என்மேலே படுத்துக்க!’ன்னு... அப்படி பதவி, படை பலம் இருந்தும் பயம் போகாம, டிஸைன் டிஸைனா கூட்டணி வெச்சு, அடாவடி பண்ணி, அதிகார துஷ்பிரயோகம் பண்ணி ஜெயிக்கிறதெல்லாம் ஒரு வெற்றியா?எங்க ஓட்டுக்களைப் பாருங்க. இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்று சக்தியா எங்களை மக்கள் வளர்த்துட்டு இருக்காங்க!’’

Vijayakanth
Vijayakanth
Ananda vikatan

‘‘எடுத்த எடுப்பிலேயே மக்களின் வரவேற்பைச் சம்பாதித்த நீங்களே, ஓட்டு போடப் போகவில்லை. அந்த அளவுக்கு உங்களைக் கோபத்தில் தள்ளிய விஷயம் என்ன?”

இப்போ நடந்ததுக்குப் பேர் தேர்தலா சார்?! எப்பவுமே ஆளுங்கட்சிக்காரங்க கலாட்டா பண்ணுவாங்க, கள்ள ஓட்டு போடுவாங்கன்னு தெரியும். ஆனா, இப்படிக் காலையில ஏழு, ஏழரை மணிக்கே பூத்களைக் கைப்பற்றி மற்ற கட்சி ஏஜென்ட்டுகளை அடிச்சு உதைச்சு, பூத் அதிகாரிகளைப் பயமுறுத்தி, ஓட்டுப்போட வந்த மக்களையும் துரத்தியடிச்சு, அவங்களே எல்லா ஓட்டுக்களையும் போட்டுட்டு, போலிங் முடிஞ்சாச்சுன்னு இழுத்துப் பூட்டிட்டுப் போறாங்கன்னா, இதுக்குப் பேர் தேர்தலே இல்லை. அப்படியென்ன வெறி? அப்புற மென்ன ஜனநாயகம்?‘

தேர்தல் பாதை திருடர் பாதை!’ன்னு சிலர் சொல்வாங்களே, அப்படி ஒண்ணைக் கண் முன்னால் நிகழ்த்திக் காட்டிடுச்சு தி.மு.க. இதுவா அரசியல்?காலையில் நான் வீட்டை விட்டுக் கிளம்பும்போதே, ரத்தம் சொட்டச் சொட்ட என் வீட் டுக்குத் தொண்டர் கள் ஓடி வர்றாங்க. துணிமணியெல்லாம் ரத்தம். எனக்குத் துடிக்குது சார். என்ன நம்பிக்கையில் இனி நல்ல வங்க அரசியலுக்கு வருவாங்க?

இவ்வளவு களேபரத்தில் நான் ஓட்டுப் போட வேண்டிய பூத்தை மட்டும் எந்தப் பிரச்னையும் இல்லாம வெச்சிருந்தாங்க. ஏன்னா, நான் ஓட்டு போடப் போகும்போது மொத்த மீடியாவும் என் பின்னால் வரும்ல... அங்கே ஏதாவது அசம்பாவிதம்னா, அது தமிழ்நாட்டுக்கே தெரிஞ்சுபோயிடும்ல. இதுவா ராஜ தந்திரம்? இது மகா கேவலம்!முதல்ல கொஞ்சம் ஓட்டு மட்டும் மக்கள் போடுவாங்க... அப்புறம் அவங்களே எல்லா ஓட்டுக்களையும் போட்ருவாங்கன்னா, அப்புறம் ஓட்டுக்கு என்ன மதிப்பு? நான் ஓட்டுப் போட எந்நேரமும் வரலாம்னு என் பூத் மட்டும் பாதுகாப்பா இருந்ததே, அது என்னால் முடிஞ்ச ஒரு நல்ல காரியம்!’’

“ஆளுங்கட்சி மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் எழுவது வாடிக்கையான விஷயம்தான்னு சொல்றாங்களே...”

‘‘அன்னிக்கு நடந்தது அத்தனையும் அநியாயம்! மனசாட்சின்னு ஒண்ணு இருந்தால், மறு தேர்தல் நடந்திருக்கணும். அப்படி, வரலாறு பார்க்காத வன்முறையோட நடந்த தேர்தல் இது.எம்.ஜி.ஆர். முதல்வரா இருந்தப்போ, தி.மு.க. ஜெயிச்சிருக்கு. காமராஜர் ஆட்சியிலும் தி.மு.க. ஜெயிச்சிருக்கு. அது ஜனநாயகம்.

அது நிஜமான தேர்தல்!தி.மு.க. தனியா இருந்தா பயப்படலாம். ஏழு கட்சிக் கூட்டணி இருந்தும் ஏன் இவ்வளவு பயம்? கறுப்பு பேன்ட் - வெள்ளைச் சட்டைன்னு அடியாள் கோஷ்டி போல யூனி ஃபார்ம் போட்டு அராஜகம் பண்ணி இருக்காங்களே! இப்போ உள்ளாட்சித் துறை அமைச்சரா இருக்கிற மு.க.ஸ்டாலின் இதுக்கு முன்னாடி எப்பவும் யூனிஃபார்ம் போல போட்டுட்டு இருந்த கலர் அது!’’ என்பவர், மீண்டும் கொந்தளிக்கிறார்.‘‘காலம் எல்லாத்தையும் புரட்டிப்போடும். கலைஞர் வயசாலும் அனுபவத்தாலும் பெரிய அரசியல்வாதி. அவரெல்லாம் பொறுப்புக்கு வந்த பிறகாச்சும் மக்களுக்கு நல்லது பண்ண இறங்கி வந்திருக்கணும். இப்படியெல்லாம் அந்தக் கட்சி கீழ்த்தரமாப் போய்த் தான் ஜெயிக்கணுமா?

வெற்றியோ தோல்வியோ, அது மக்கள் தர்ற தீர்ப்பு. அதுக்கு இங்கே முதலில் ஜனநாயகம் வேணும். முதலமைச்சர்னா, முதல் வேலைக்காரன்! முதல் பணக்காரன்னு அர்த்தம் கிடையாது. என்னங்க இது... தமிழ்நாட்டில் வேற யாரும் அரசியல் பண்ணக் கூடாது, தொழில் பண்ணக் கூடாது, வியாபாரம் நடத்தக் கூடாது, கருத்து சொல்லக் கூடாதுன்னு இப்படியே ஒவ்வொரு பக்கமும் இறுக்கிக்கிட்டே, முறுக்கிக்கிட்டே போனாங்கன்னா எப்படி? எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா அனுபவிக்கப்போறாங்க... பாவம்!’’

Vijayakanth
Vijayakanth
Ananda vikatan

“ஏன் எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்து போராடவில்லை?”

‘‘நான் கேட்டுட்டே இருக்கேன். அ.தி.மு.க -வும் கேட்கிறாங்க. ஆனா, அவங்க இவங்களைப் பற்றிப் புகார் சொல்றதையே முழு நேர வேலையா வெச்சிருக்கிறதால், அது எடு படலை.மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணின்னு கும்மியடிக்குதே!காங்கிரஸ் நமக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சின்னு பேர். இப்போ அதோட நிலைமை என்ன? பதவிகளைப் பங்கு பிரிக்கிற தில் மட்டும்தான் குறியா இருக்காங்க. கூச்சம் இல்லாம குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறாங்க.கம்யூனிஸ்ட்டுகள் மேல மரியாதை இருந்தது. அவங்களே போராட மாட்டேங்கி றாங்களே... அநியாயம்னு அறிக்கை விட்டுட்டு அறிவாலயத்தில் டீ குடிச்சுட்டு சமாதானமாகிடுறாங்களே... அவ்ளோதானா அவங்க புரட்சி, நேர்மை, நியாயமெல்லாம்?வீதி வீதியா, வீடு வீடா போய், ‘ஓட்டு போட வாங்க’ன்னு கெஞ்சிக் கூப்பிட்டுட்டு, ஓட்டு போட வர்ற மக்கள் கழுத்தில் கத்தியை வெச்சாங்கள்ல... அதுக்கு எழுதுவாங்க பாருங்க ஒரு தீர்ப்பு!அப்படி என்ன பதவி வெறி? இன்னும் என்ன வேணும்?மத்திய அரசில் மந்திரிப் பதவிகள் வேணும், மாநில ஆட்சி முழுசா வேணும், மாநகராட்சிகளையும் தர மாட்டோம், கவுன்சிலர் போஸ்ட் வரைக்கும் வேற எவனும் வந்துடக் கூடாதா? இதனால, இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் மொத்தமா இழந்துட்டீங்க. வரலாறு உங்களை எப்படி எழுதப்போகுது பாருங்க!‘தேர்தலில் நிக்கிறியா... பாடையில் ஏறிப் படுக்கணும்னு அவ்வளவு ஆசையா?’னு போலீஸ் அதிகாரிகளே கேட்டாங்களாம். இதுவாங்க அமைதிப் பூங்கா?‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’னு சொல்வாங்க. ஜனநாயகத்தை மொத்தமாக் கொன்னுட்டாங்க. ஆழமாக் குழி தோண்டிப் புதைச்சுட்டாங்க. இனி பாருங்க, தெய்வம் நின்னு கொல்லும். மக்கள்தான் என் தெய்வம்!’’

“உங்க கட்சிக்காரங்க அடிவாங்குறாங்க, பாதிக்கப்படுறாங்க என்றால், அவர்களுக்கு நீங்கள் கொடுக்கிற தைரியம் என்ன?”

‘‘என் ரசிகர்கள், கட்சிக்காரர்கள்னு மட்டும் இல்லே... எல்லோருக்கும் நான் சொல்லிக்க விரும்புற ஒரே விஷயம் இதுதான்... தி.மு.க- அ.தி.மு.க. அதோட கூட்டணிக் கட்சிகள்னு எல்லோரும் மாறி மாறிப் பண்ற அட்டூழியங்களுக்கு முடிவுகட்டியே ஆகணும்.ஒரு வேலைக்காரனா நான் ரெடியா இருக்கேன். என் சொத்து அழிஞ்சாலும் நான் நிப்பேன். காலேஜ், கல்யாண மண்டபம் இதை ரெண்டையும் சொல்லிச் சொல்லி பூச்சாண்டி காட்டிப் பார்த்துட்டாங்க. காசுக்கு ஆசைப்பட்டால்தான் கவலை வரும். என் வீட்ல நாங்க நாலு பேரு சாப்பிட எவ்வளவு ஆகும், அது போதும்!’’

“உங்களால் ‘முரசு’ சின்னத்தை உள்ளாட்சிக்கு வாங்க முடியலியே?”

‘‘கேட்டோமே! அதைப் பற்றி பேசினாலே, கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடருவாங்களாம், பயமுறுத்துறாங்க!இந்த சந்திரசேகர் யாரு? மந்திரி யோட சகலை. எல்லாத்திலும் அரசியல் பின்னணி! ஏங்க, சுப்ரீம் கோர்ட்டே சொல்லியும் முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்த முடியலியே... அந்த அரசு மேலே இவங்க கோர்ட் அவமதிப்பு வழக்கு போட வேண்டியதுதானே?நாளைய தலைமுறைன்னு சொல்வோமே, அந்த இளைஞர் கூட்டம் இந்த அரசியல் பற்றி என்ன நினைப்பாங்க? அவங்களுக்கு ஜன நாயகம் மேல நம்பிக்கை போச்சுன்னா, அப்புறம் இந்த நாட்டை யாராலேயும் காப்பாத்த முடியாது. நான் என் தொண்டர்களை அசராமல் தட்டிக் கொடுத்துட்டே இருக்கேன். ஒரு அடி கூட பின்வாங்க மாட்டேன். இந்தத் தடவைதான் என் கோபம் உச்சத்துக்குப் போய், ‘யாருக்கு வேண்டும்னாலும் ஓட்டுப் போடுங்க. தி.மு.க-வுக்கு மட்டும் போட்டுடாதீங்க!’ன்னு சொன்னேன்.இவ்வளவு வன்முறை நடக்குதுன்னு குற்றம் சொன்னா, 'யார் யாரு அந்த ரவுடிகள்? லிஸ்ட்டைக் கொடு'ன்னு கேட்கிறாங்க. ஆட்சி, அதிகாரம், போலீஸ்னு எல்லாத்தையும் வெச்சுட்டு இருக்கிறவங்க பேசுற பேச்சா இது? அ.தி.மு.க. அளவுக்கு வன்முறை இல் லைன்னு சமாளிப்பு வேற. அப்போ வன்முறை நடந்ததுன்னு ஒப்புக்கிறாங்க! அப்புறம் எதுக்கு இந்த அரசாங்கம்? மக்களை முட்டாள்கள்னு முடிவே பண்ணிட்டாங்க!’’

Vijayakanth
Vijayakanth
Ananda vikatan

“போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போய் புகார் கொடுத்தீங்களே?”

‘‘ஆமா, போனேன்! ‘பார்க்கிறோம், கவனிக்கிறோம்னு சும்மா சொல்லாதீங்க. போலீஸ் மேல மக்கள் நம்பிக்கை இழந்தாச் சு’ன்னு சொல்லிட்டு வந்தேன். போலீஸ், வாத்தியார் இந்த ரெண்டு வர்க்கம் மேலேயும் நம்பிக்கை போச்சுன்னா, அந்தத் தேசமே குட்டிச் சுவராப் போயிடும்னு சொல்வாங்க.தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கேவலமா சண்டை போட்டுக்கிறாங்க. எப்போ பார்த்தாலும் போன ஆட்சி, இந்த ஆட்சி, கையெழுத்திடாத கோப்புகள்னு இதே பேச்சு. இது என்ன அரசாங்கமா, இல்லேன்னா ஒண்ணாங் கிளாஸ் பிள்ளைங்க நடத்துற தகராறா? அதான் போன ஆட்சியின் குறைகளைத் தெரிஞ்சுக்கிட்டு, அவங்களை வீட்டுக்கு அனுப்பி உங்களை உட்காரவெச்சாச்சே. இன்னும் ஏன் அதையே பேசிக்கிட்டு? இந்த முறை நீங்க ஆடுற ஆட்டத்துக்கு இன்னும் செமத்தியான தண்டனை தருவாங்க!1972-ல் எம்.ஜி.ஆர். பிரியும்போது பார்த்த அதே கோபமான தி.மு.க-வை இப்போதான் நான் மறுபடி பார்க்கிறேன். எம்.ஜி.ஆர். ரசிகன்னு எவன் சிக்கினாலும் வெளுத்துக் கட்டினாங்க. மலையாளின்னு யார் கிடைச்சாலும் புகுந்து அடிச்சாங்க அப்போ! இதோ இப்போ விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததும் அதே ஆட்டம் ஆரம்பிச்சுட்டாங்க! ஆளுங்கட்சிங்கிற பலத்தை வெச்சு பயத்தை மறைச்சுக்கப் பார்க்கிறாங்க. இவங்களோட வழியெல்லாம் வன்முறை இருக்குங்க!’’

“எல்லாம் சரி, இப்போ இன்னும் மோசமா, ஜெயலலிதா உங்களைத் தாக்கி இருக்காங்களே. குடிகாரன் பேச்சு, சட்டசபைக்கே குடிபோதையுடன் வருபவர் அப்படின்னெல்லாம்...”

‘‘மக்களே, பார்த்துக்குங்க..!இவங்களை நம்பி இரண்டு தடவை ஆட்சியில் உட்கார வெச்சீங்க. எவ்வளவு நாகரிகமான பேச்சுன்னு பாருங்க. ஏங்க, நானா குளுகுளு ரூம்ல குடிச்சுட்டு இருக்கிறது? ஏதோ பக்கத்தில் உட்கார்ந்து ஊத்திக் கொடுத்த மாதிரி இருக்கே, இந்தப் பேச்சு!அது என்னன்னா... பயமும் பதற்றமும் வர்றப்போ, நிதானம் போயிடும்னு சொல்வாங்க. அதில் தி.மு.க - அ.தி.மு.க. இரண்டுமே விதி விலக்கில்லை!’’ என்கிறார் விஜயகாந்த் மிக அழுத்தமாக!

- ரா.கண்ணன், நா.கதிர்வேலன்

படங்கள் - என்.விவேக்

(01.11.2006 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)