அத்தியாயம் 1
Published:Updated:

‘‘கடந்த ஆட்சியின் கதிதான் இந்த ஆட்சிக்கும் ஏற்படும்!’’ - விஜயகாந்த்

விஜயகாந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜயகாந்த் ( ஆனந்த விகடன் )

“ஒரு திட்டத்தை அறிவிக்க வேண்டியது.. எதிர்த்தா வாபல் வாங்க வேண்டியது”

மிழக அரசியலின் கூட்டணி யுத்தத்துக்கு நடுவே, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது விஜயகாந்த்தின் நம்பிக்கை வேட்டை!டைட்டானியம் தொடங்கி கேபிள் டி.வி. வரை, அதிருகிற டிரம்ஸ்களுக்கு நடுவே ஒற்றை உறுமியாய் முழங்கும் தே.மு.தி.க. தலைவரின் குரலுக்கு ஆர்வமுடன் காது கொடுக்கிறது தமிழகம். 

விஜயகாந்த்
விஜயகாந்த்
ஆனந்த விகடன்

 திடீர் பயணமாக குடும்பத்துடன் குவைத் போய் வந்திருக்கிறார் விஜயகாந்த்!‘‘கட்சி வேலைகள், கல்யாண மண்டப இடிப்பு, காலேஜ் பிரச்னை, புதுப் பட வேலை கள்னு டென்ஷனா இருந்தது. அதான், ஒரு வார ஓய்வுக்காக குடும்பத்தோடு குவைத் போயிருந்தேன். அவ்வளவு பெரிய பாலைவனத்தைச் சொர்க்கம் மாதிரி வெச்சிருக்காங்க. ஆனா, அங்கேயும் எங்கே பார்த்தாலும் தமிழ் மக்கள். வெறும் நாலாயிரம் ரூபா சம்பளத்துக்கு ஹெவி வெயிட் லாரி ஓட்டுறாங்க. தினம் 15 மணி நேர உழைப்பு. அவங்களோட பாஸ்போர்ட், விசா எல்லாத்தையும் வாங்கிவெச்சுக் கிட்டு, ரத்தத்தையும் வியர்வையையும் உறிஞ்சுட்டிருக்காங்க. ‘கபூஸ்’னு ஒரு ரொட்டியை, ‘லபான்’னு தயிரைத் தொட்டுச் சாப்பிட்டுட்டு சிரமப்படுறாங்க. நம்ம நாட்டுல மண்வெட்டியைப் பிடிக்க வெட்கப்பட்டு இங்கே வந்து மாட்டிக்கிட்டோம்னு சொல்றாங்க. துபாய்ல ஒட்டகம் மேய்க்கிறது நம்ம தமிழன்தான். கண்ணுல ஏக்கத்தையும், மனசுல ஊரு, உறவுன்னு பாசத்தையும் வெச்சிட்டிருக்கிறவன் அவன் தான்.இராக் எல்லை வரைக்கும் போயிருந்தேன். ரோடு தவிர, எங்கேயும் நடக்கவிட மாட்டேங்கிறாங்க. கண்ணி வெடி அபாயம்தான் காரணம். மிலிட்டரியில் ஆண், பெண் வித்தியாசம் பார்க்காம உழைக்கிறாங்க. நான் ஒரு நடிகன்னு தெரிஞ்சதும் ராணுவ வீரர்கள் வந்து சூழ்ந்துக்கிட்டாங்க. கலகலப்பான அரட்டை!

இந்தப் பயணத்துல, என் மனசைக் கஷ்டப்படுத்தின விஷயம் ஒண்ணு தான்... ஏன் நம்ம தமிழன் மட்டும் எங்கே இருந்தாலும் இப்படிக் கஷ்டப் படறான்?

தெரியாமதான் கேக்கறேன்... வெளியுறவுத் துறைன்னு நம்ம மத்திய அரசுகிட்டே ஒண்ணு இருக்கில்லையா, அதுக்கு என்னதாங்க வேலை?’’ - என்றவரிடம் அரசியல் கேள்விகளை முன்வைத்தோம்.

“மறைமுக பஸ் கட்டண உயர்வை நீங்க கண்டிச்சதுக்கு, அமைச்சர் நேரு காட்டமான அறிக்கை கொடுத்திருக்காரே! உங்கள் ஆதங்கள் தான் என்ன?”

‘‘சாதாரண பஸ்களில் கட்டணத்தை உயர்த்தியிருந்தா, வெளிப்படையா தெரியும். அதற்குப் பதிலா கலர்கலரான பஸ்களை விட்டு, அரசு கூடுதலாக கட்டணங்களை உயர்த்தியதைச் சுட்டிக்காட்டினேன். புதுமைங்கிற பேரால பயணிகளின் பாக்கெட்டைக் காலி செஞ்சா, அது மக்களுக்குப் புரியாதா? கடந்த ஆட்சியில் நடந்ததுதான் இப்போதும் நடக்கும்னா, கடந்த ஆட்சியின் கதியேதான் இந்த ஆட்சிக்கும் ஏற்படும்னு அமைச்சருக்குத் தெரியாதா?போக்குவரத்து நெரிசலில் பெண்கள் படும் அவதி கொஞ்ச நஞ்சமல்ல. ஆனா, இப்பெல்லாம் பாருங்க, ‘மகளிர் மட்டும்’ ஸ்பெஷல் பஸ்கள் கண்லயே படுறதில்லை. இதைச் சுட்டிக்காட்டினா, அவங்களுக்குக் கோபம் வருது. மக்கள் என்ன நினைக்கிறாங்களோ, அதைத்தான் ஆட்சியாளர்களுக்குத் தெரிவிக்கிறேன். அது எனது ஜனநாயகக் கடமை. அந்தக் குறைகளைத் தீர்க்க வேண்டியது அரசின் கடமை. அப்படித் தீர்த்துவைக்காவிட்டால் அரசை நாற்காலியை விட்டுக் கீழே இறக்கவேண்டியது மக்களின் கடமை. ஒரு காலத்தில் 183 இடங்களில் வென்ற தி.மு.க., இன்னிக்கு வெறும் 96 இடங்களோடு தள்ளாடிக்கிட்டிருக்கே, இதிலிருந்தே தெரியலையா இவங்க ஆட்சி நடத்துற அழகு?’’

விஜயகாந்த்
விஜயகாந்த்
ஆனந்த விகடன்

“அரசே கேபிள் டி.வி. நிறுவனம் நடத்த முற்படுவது பற்றி உங்கள் கருத்தென்ன?”

‘‘கலர் பஸ் விடுற மாதிரி இதுவும் ஒரு சாமர்த்தியமான வேலை. ‘கலைஞர் டி.வி’-யைப் பைசா செலவில்லாம மூலை முடுக்கெல்லாம் கொண்டு போகவைப்பதற்கான உத்தி. ‘கலைஞர் டி.வி’-யைச் சுலபமா வளர்க்க அரசாங்க செலவில் கேபிள் போடப்போறாங்க. சொந்தபந்தத்துக்குள் சண்டைன்னு வந்த பிறகுதானே இந்த ஐடியாவே அரசுக்கு வருது?

பார்த்துட்டேயிருங்க, எத்தனை சேனல்கள் தெரியாமல் போகப் போவுதுன்னு! வாய்மொழி உத்தரவில் சொன்னாலே போதுமே, காரியம் நடக்காதா என்ன?’’

மக்கள் வரிப் பணத்தை வாரிசுச் சண்டைக்கு செலவு பண்ணா, வட்டியும் முதலுமா திரும்பக் கிடைக்கும் வர்ற தேர்தலில்!’’

“டைட்டானியம் தொழிற்சாலை தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்கப் போனீங்களே... என்ன ஆச்சு?”

‘‘இந்த வைகுண்டராஜனை முதல்ல தி.மு.க-தான் வளர்த்தது. அடுத்து, அ.தி.மு.க-வும் வளர்த்தது. போன தடவை எலெக்ஷனில் நிச்சயமா அ.தி.மு.க. ஜெயிச்சுடும்கிற நம்பிக்கையில் அவர் அதை ஆதரிக்க, இப்போ பிரச்னை ஆரம்பிச்சுது. அவருக்குக் கடல் ஓரத்தில் இருக்கிற மண்ணைத்தான் தோண்ட அனுமதியாம். ஆனா,மெள்ள மெள்ளக் கரையைத் தாண்டிட்டார் மனிதர். அங்கே ‘தோரியம்’கிற கனிமப் பொருள் நிறையக் கிடைக்குதுங்கிறாங்க. திடீர்னு பார்த்தா, ராதிகா செல்வி 100 கார்களோடு போய், டாடா கம்பெனிக்கு நிலத்தைக் கொடுங்கன்னு கேட்கிறாங்க. பாவம் மக்கள்... அவங்களுக்கு என்ன நடக்குதுன்னு புரியலை. எந்த உண்மையான நிலவரமும் தெரியலை. நம்மோட மண்ணுக்கு என்னதான் விலைன்னு அவங்களாலேயே தீர்மானிக்க முடியலை. அரசு கொடுக்க நினைக்கிறவிலை மிக சொற்பம். அவங்க அவசரமும் சந்தேகத்தைத் தூண்டுது. மக்களைத் திட்டமிட்டுக் குழப்புவதில் அரசு முன்னிலை வகிக்கிறது. இதை, அந்த மக்களிடம் கருத்து கேட்கப் போனப்போ, என்னால நல்லாவே புரிஞ்சுக்க முடிஞ்சுது.’’

“தமிழ்நாட்டு கூட்டணியில் ராமதாஸ், கலைஞர்னு பிளவு வந்திடும் போலிருக்கே?”

‘‘யாராவது எதிர்த்துக் கேள்வி கேட்டால், கலைஞருக்கு உடனே கூட்டணி தர்மம் ஞாபகத்துக்கு வந்துடும். இவங்க எல்லோருமே மக்களைப் பத்தி மறந்துட்டாங்க. ரவுடியிசம் தலை தூக்கிருச்சு. கோலிக்குண்டு மாதிரி வெடிகுண்டு நடமாட்டம்.தென் காசியில் பட்டப் பகலில் நடந்தகொலைகள், உளவுத் துறைக்கும் காவல் துறைக்கும் அப்பட்டமான தோல்வி. கலைஞர் அரசு என்னதான் செய்யுது?ஒரு திட்டத்தை அறிவிக்க வேண்டியது, யாராவது அதை எதிர்த்தா, உடனே பயந்து வாபஸ் வாங்க வேண்டியதுன்னே இருந்தா, எங்கே நடக்குது தப்பு?‘செய்வன திருந்தச் செய்னு’ சொல்வாங்க... அது முடியலேன்னாலும் இவங்க திருந்தினாலே போதும்!’’

- நா.கதிர்வேலன்

(29.08.2007 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)