சினிமா
தொடர்கள்
Published:Updated:

“ரஜினி கட்சி ஆரம்பித்தால் என்ன பதவி?”

தனுஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
தனுஷ்

‘வேள்பாரி’யை ஒரு படமாப் பண்ணினா நல்லாருக்கும்னு தோணுது.

னுஷ் தமிழ் சினிமாவின் நம்பிக்கை முகம். மொழிகளைக் கடந்து நடிப்பால் தனது இருப்பை ஆழமாகப் பதிவு செய்த கலைஞன். இந்த ஆண்டு ‘மாணவப் பத்திரிகையாளர் திட்ட முகாமின்’ சிறப்பு விருந்தினர். விகடன் மாணவ நிருபர்களின் கேள்விக்கணைகளுக்கு அவரிடமிருந்து வந்த பட்டாசு பதில்கள் இவை.

“செல்வராகவனின் புதுப்பேட்டை, என்.ஜி.கே இரண்டுமே அரசியல் பேசிய படங்கள். வெவ்வேறு காலகட்டத்தில் வெளியானவை. இந்த இரண்டு படங்களையும் நீங்க எப்படிப் பார்க்கிறீங்க?”

“இரண்டுமே ஒரு மிகப்பெரிய இயக்குநரின் மிகப்பெரிய படைப்புகள். புதுப்பேட்டையைவிட என்.ஜி.கே படத்தில் மெசேஜ் நிறைய இருந்ததா ஃபீல் பண்றேன். ஒப்பிடத் தேவையில்லை. இரண்டுமே முக்கியமான நல்ல படங்கள்தான்.”

“ ‘புதுப்பேட்டை 2’ வர வாய்ப்பிருக்கா?”

“ ‘புதுப்பேட்டை- 2’ பண்றதுல நிறைய சிக்கல் இருக்கு. ‘கொக்கி’ குமார் கேரக்டர் கல்ட் ஃபிகர். இதை ஜஸ்டிஃபை பண்ற மாதிரி ஸ்கிரிப்ட் பண்ணணும். அது அவ்ளோ எளிதான வேலை இல்லை. ஆனா, நடக்காதுன்னு சொல்ல முடியாது.”

“நீங்க படித்த புத்தகங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது? எந்தப் புத்தகத்தைப் படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுறீங்க?”

“நிறைய புத்தகங்கள் இருக்கு. குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. வில்பர் ஸ்மித்தின் ரிவர் காட் (River God), ஜெஃப்ரி ஆர்ச்சரின் கேன் அண்டு ஏபெல் ( Kane And Able) ), தமிழில் பாலகுமாரன் நாவல்கள் என்று நிறைய சொல்லலாம். இப்போ ‘வேள்பாரி’ படிச்சிட்டிருக்கேன். ‘வேள்பாரி’யை ஒரு படமாப் பண்ணினா நல்லாருக்கும்னு தோணுது.”

“வேள்பாரியைப் படமாப் பண்ணினா எந்த கேரக்டரா நடிப்பீங்க?”

“கண்டிப்பா பாரியாதான் பண்ணுவேன்.”

“ஒருவேளை ரஜினி பாரியா நடிச்சா நீங்க என்னவா நடிப்பீங்க?”

“அவர் பாரியா நடிச்சா, நான் என்னவா வேணாலும் நடிக்கத் தயார்!”

“உங்களைப் பற்றிய அவதூறுகளுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவீங்க?”

“நான் ரியாக்டே பண்ண மாட்டேன்.”

“ரஜினி கட்சி ஆரம்பித்தால் என்ன பதவி?”

“அசுரன், ‘வெக்கை’ நாவலைத் தழுவிப் படமாக்கப்படுது. உங்கள் கேரக்டரை எப்படி உள்வாங்கி நடிக்கிறீங்க? மதுரை, சென்னை, திருநெல்வேலி வட்டார மொழி பேச எப்படி உங்களைத் தயார்படுத்திக்கிறீங்க?’’

“நாவலைப் படமாக்கும்போது கண்டிப்பா நாவல் படிக்கமாட்டேன். திரைக்கதையைத்தான் படிப்பேன். ஸ்லாங்குக்கு ரொம்ப மெனக்கெட வேண்டி இருக்கு. ‘அசுரன்’ ரொம்ப முக்கியமான ஒரு படமாக, பதிவாக இருக்கும். வெற்றிமாறன் சொல்லவே வேண்டாம், மாஸ்டர் மேக்கர். நானே ரொம்ப ஆர்வமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன் அசுரனுக்காக.”

“நீங்க நிறைய கேரக்டர்ல நடிச்சிருக்கீங்க. நிஜ வாழ்க்கையிலும் இந்த கேரக்டரா இருந்திருக்கலாம்னு நினைச்ச கேரக்டர் எதாவது இருக்கா... இல்ல, பாதிச்ச கேரக்டர் இருக்கா?”

“இல்லை. வாழ்க்கை எப்படி இருக்கோ அதுக்குக் கடவுளுக்கு நன்றி சொல்லி வாழ்றவன் நான். எனக்கு எப்பவுமே நானா இருக்கத்தான் ஆசை. ‘3’ படத்து ராம், ‘மயக்கம் என்ன’ கார்த்திக் இரண்டுமே ரொம்ப பாதிச்ச கேரக்டர்கள். படம் முடிச்சு ஆறு மாதம் அதிலிருந்து மீண்டு வர கஷ்டமா இருந்தது.”

“பிரெஞ்சுப் படத்தில் நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது. இனி ஹாலிவுட்ல நடிப்பீங்களா?’’

“புது அனுபவமாக இருந்தது. புதுசா நிறைய கத்துக்க முடிஞ்சுது. நிறைய நாட்டு நடிகர்கள் நடிச்சிருந்தாங்க. அவங்க எப்படி அப்ரோச் பண்றாங்க, நடிக்கிறாங்கன்னு பார்க்க ஆர்வமா இருந்துச்சு.”

“உங்களுடைய வளர்ச்சியில் மீடியாவின் பங்கு. முக்கியமாக விகடனுக்கும் உங்களுக்கும் உள்ள உறவு பற்றிச் சொல்லுங்க?”

“எந்தத் துறையைச் சேர்ந்தாலும் மீடியாவின் பங்கு முக்கியமானது. நல்ல விஷயங்கள் பண்ணும்போது பாராட்டியிருக்காங்க. கெட்ட விஷயங்கள் பண்ணும்போது கண்டிச்சிருக்காங்க. விகடனுடன் தொடர்ந்து பயணிப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இரண்டு முறை விகடன் விருது வாங்கியிருக்கேன். அதைப் பெருமைக்குரிய விஷயமாக நினைக்கிறேன்.”

“நீங்க இவருகூட வொர்க் பண்ணணும்னு ஆசைப்பட்டு முடியாமப்போன இயக்குநர்கள் யாராவது இருக்காங்களா?”

“கே. விஸ்வநாத் சார் படத்துல நடிக்கணும்னு ரொம்ப ஆசை இருந்துச்சு. சின்ன வயசுலயே ‘சலங்கை ஒலி’, ‘சிப்பிக்குள் முத்து’ பார்த்து பிரமிச்சிருக்கேன். அவர்கிட்ட இருந்து நிறைய கத்துக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனால், ‘யாரடி நீ மோகினி’ படத்துல அவர்கூட நடிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைச்சது.”

“அடுத்த படம் எப்போ இயக்கப் போறீங்க?”

“ஒன்றரை வருஷத்துக்குப் பண்ண முடியாது. பிஸி ஷெட்யூல் இருக்கு. ‘பவர் பாண்டி’ சீக்குவல் பண்ணணும்னு ஆசை இருக்கு. எவ்ளோ சாத்தியம்னு தெரியல.”

“ரஜினி கட்சி ஆரம்பித்தால் என்ன பதவி?”

“சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தளபதி, அல்டிமேட் ஸ்டார் மாதிரி உங்களுக்குப் பட்டம் எதுவும் இல்லை. ‘நடிப்பு அசுரன்’னு வைக்கலாமா?’’

“இல்லை, வேணாம். சில சமயங்களில் அடைமொழி வந்துச்சு. வேணாம்னு தோணுச்சு. எனக்கு எந்த அடைமொழியும் தேவையில்லைன்னு நினைக்கிறேன். அதுக்கான நேரம் இல்லைன்னு நினைக்கிறேன். தனுஷே நல்லா இருக்கு.”

“நடிகர் தனுஷுக்கு இல்லாத அடைமொழி, பாடலாசிரியராக இருக்கும்போது வந்துச்சு. அதை எப்படிப் பார்க்கிறீங்க?”

“இவன்லாம் ‘லிரிக்’ எழுதியிருக்கானேன்னு யாராவது கலாய்க்கிறதுக்கு முன்னாடி நாமளே கலாய்ச்சிப்போம்னு நான்தான் ‘பொயட்டு’ன்னு போடுங்கன்னு சொன்னேன். ‘எதிர் நீச்சல்’ல துரை.செந்தில்குமார் அதையே கன்டினியூ பண்ணினார். உட்கார்ந்திருச்சு.”

“ `வடசென்னை 2’ தொடர்பாக சமீபத்தில் வந்த செய்திகள் உண்மையா?”

“இயக்குநர் சொல்லணும், இல்லைனா நான் சொல்லணும். எதுக்குமே சோர்ஸ் கிடையாது. நாங்க தெளிவா இருக்கோம். கண்டிப்பாக ‘வடசென்னை 2’ வரும்.”

“படப்பிடிப்பு இல்லாத நாள்கள் எப்படி இருக்கும்?”

“கிரிக்கெட், பேட்மின்டன், டேபிள் டென்னிஸ் விளையாடுவேன்.”

“அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் போராட்டங்கள் அதிகரிச்சிருக்கிறதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?’’

“அடிப்படைத் தேவைகளுக்காகப் போராட வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்படக் கூடாது.’’

“நடிகர்/நடிகையா இருந்து அரசியலுக்கு வந்தவங்கள்ல உங்களுக்குப் பிடிச்சவங்க யார்?’’

“எனக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்கும்.”

“உங்க நடிப்புக்கு ஈடு கொடுத்து நடிக்கிற நடிகை யார்?”

“நிறைய பேர் நல்லா பண்றாங்க. சமீபத்துல ஐஸ்வர்யா ராஜேஷ் ரொம்ப நல்லா பண்றாங்க. ‘காக்கா முட்டை’யின்போதே சொன்னேன், அவங்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இன்னும் சரியா கிடைக்கல. இப்பவும் அதான் சொல்றேன்.”

“சிவகார்த்திகேயன், தனுஷ் இருவரும் இணைவதை நாங்கள் எப்போது எதிர்பார்க்கலாம்?”

“எப்போ வேணாலும் நடக்கலாம். இருவரும் சேர்ந்து நடிக்கலாம் அல்லது நான் அவர் நடிக்கும் படத்தைத் தயாரிக்கலாம் அல்லது அவர் என் படத்தைத் தயாரிக்கலாம். வாய்ப்புகள் இருக்கு.”

“ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை உறுதி செய்திருக்கிறார். அவர் கட்சி தொடங்கினால் உங்களுக்கு என்ன பதவி?”

“அதை அப்போ பார்த்துக்கலாம்.”

“நீங்களும் ரஜினி சாரும் சேர்ந்து நடிப்பீங்களா?”

“எனக்கும் ரொம்ப ஆசைதான். நடக்குமா நடக்காதான்னு இப்போ தெரியல. நடந்தா நல்லா இருக்கும்னு தோணும்.”