சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

“வீடு என்பது அவரவர் ரசனையைப் பொறுத்தது!” - நடிகர் நாசர்

ஆர்கானிக் உணவகத்தின் முகப்பில் நடிகர் நாசர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்கானிக் உணவகத்தின் முகப்பில் நடிகர் நாசர்

கலை

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் தனித்துவமான நடிப்பால் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருப்பவர், நடிகர் நாசர். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடித்துவரும் நாசர் எழுத்து, நாடகம், இயக்கம், ஓவியம் எனப் பன்முக ஆளுமைகொண்டவர். நாம் அறியாத இன்னொரு முகமும் இவருக்கு உண்டு. அது கட்டடக்கலை சார்ந்த அவரின் அதீத ஆர்வம். `மரபு சார்ந்த, மண் சார்ந்த, இயற்கைச்சூழல் சார்ந்த வீடுகளை வடிவமைப்பதில் விற்பன்னர் இந்தக் கலைஞர்’ என்றே சொல்லலாம். பிரபல கட்டடக்கலை வல்லுநர் லாரி பேக்கர் பாணியில் இவரும் வீடுகளை வடிவமைக்கிறார். புதிதாக வீடுகட்ட விரும்பும் நண்பர்களுக்கு ஆர்வத்தோடு ஆலோசனை வழங்குகிறார். இது குறித்து அவரிடம் பேசினோம்.

“லாரி பேக்கர் முறையில்தான் உங்கள் வீட்டையும் கட்டியிருக்கிறீர்களா?”

“ஆமாம். 25 ஆண்டுகளுக்கு முன்னர், வீடுகட்ட முயன்றபோது, என் நண்பரும் பொறியாளருமான வைத்தியநாதன்தான் லாரி பேக்கர் பற்றிச் சொன்னார். அவருடைய கட்டட முறையைப் பற்றித் தேடியபோதுதான் `லாரி பேக்கர் பாணி’ என்பது ஒரு கட்டுமானம் அல்ல; அதற்குள் ஒரு சித்தாந்தம் இருப்பதை உணர்ந்தேன். அந்த பாணி கட்டடக்கலை இந்தியாவுக்கு மிக அவசியம். ஏனென்றால், உலகிலேயே நடுத்தர, கீழ் நடுத்தர வகுப்புகளைச் சேர்ந்த மக்களை அதிகம்கொண்டது இந்தியா. இந்த வகுப்பு மக்களுக்கு வீடு என்பது ஒரு முக்கியமான விஷயம். அதைக் குறைந்த செலவில் கட்டுவதற்கு வழிகாட்டுவதுதான் லாரி பேக்கர் பாணி.’’

செங்கல்பட்டில் உள்ள வீட்டின் உட்புறம்
செங்கல்பட்டில் உள்ள வீட்டின் உட்புறம்

“லாரி பேக்கரைப் பற்றிச் சொல்லுங்களேன்...”

“இங்கிலாந்தைச் சேர்ந்த லாரி பேக்கர் கட்டடக்கலை படித்தவர். அங்கே படித்துவிட்டு சந்தர்ப்பவசத்தால் இந்தியா வந்தபோது, இந்தியாவிலிருந்த வீடுகளின் ஆழத்தையும் அதன் தனித் தன்மையையும் கற்றறிந்தார். காந்தியின் மீது பெரும் ஈடுபாடுகொண்ட லாரி பேக்கர், ஒருமுறை காந்தியைச் சந்தித்தார். அப்போது காந்தி, ‘எங்கள் நாட்டில் பலர் இருப்பதற்கு வீடில்லாமல் இருக்கிறார்கள். அந்த மக்கள் பயன்படும்படி வீடுகளை அமைக்க வேண்டும். அதிலும் கிராமங்களிலுள்ள எளிய மக்களுக்குத்தான் நீங்கள் அதிகம் தேவைப்படுகிறீர்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அதன் பிறகு இங்கிலாந்து சென்று இந்தியா திரும்பிய லாரி பேக்கர், அறுபதுகளில் கேரளாவுக்கு வந்தார். கேரளாவின் இயற்கைச் சூழலும், மண்ணின் தன்மையும் அவரை வெகுவாக ஈர்த்துவிட, அங்கேயே தங்கிப் பல கட்டடங்களைக் கட்டிக் கொடுத்தார்.”

செங்கல்பட்டில் உள்ள வீட்டின் வெளிப்புறம்
செங்கல்பட்டில் உள்ள வீட்டின் வெளிப்புறம்

“இந்த பாணியில் வீடு கட்டுவதால் என்ன லாபம்?”

“வீட்டைப் பொறுத்தவரை அதில் போடும் முதலீடு திரும்பக் கிடைப்பதில்லை. அதில் ஏன் நாம் பணத்தை விரயமாக்க வேண்டும் என்று எண்ணி, `அரை கிலோமீட்டர் சுற்றளவில் கிடைக்கும் பொருள்களைக்கொண்டே வீட்டைக் கட்டிக்கொள்ள வேண்டும்’ என்பது அவரது கொள்கை. இன்னொன்று, வீடு என்பது அவரவர் ரசனை, தேவையைப் பொறுத்தது. ஒருவருக்கு வீடுகட்ட வேண்டுமென்றால், அவர்களோடு மூன்று மாதங்களாவது செலவிடுவார். பிறகு வீட்டிலுள்ள அனைவரின் பழக்க வழக்கங்கள் அடிப்படையில் பொதுத் தன்மையற்று வீட்டைக் கட்டுவார். அப்படிக் கட்டிக் கொடுத்ததுதான் மலையாளத் திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனின் வீடு. இந்தியன் காபி ஹவுஸ் (திருவனந்தபுரம்), அரசு மருத்துவமனைகள், தேவாலயங்கள் எனப் பல கட்டடங்களைக் கேரளாவில் கட்டியிருக்கிறார். இன்றைக்கு இருக்கும் சூழலில் நகரமோ, கிராமமோ லாரிபேக்கர் பாணியில் வீட்டைக் கட்டும்போது வழக்கமாகக் கட்ட ஆகும் செலவைவிட 25 சதவிகிதத்துக்குமேல் மிச்சப்படுத்த முடியும்.”

உரல், அம்மி உள்ளிட்ட பழைய பொருள்களுடன்
உரல், அம்மி உள்ளிட்ட பழைய பொருள்களுடன்

“அந்த பாணியைப் பற்றி விளக்க முடியுமா?”

“எளிமையான, அதேசமயம் காற்றோட்டமான வீடுகளைக் கட்டுவதற்கு அவர் பயன்படுத்தியது இரண்டு முறைகள்தான். ராட் ட்ராப் பாண்டு (Rat Trap Bond), பில்லர் ஸ்லாப் (Filler Slab). ராட் ட்ராப் பாண்டு என்பது எழுப்பப்படும் சுவரைக் குறிக்கும். ஒரு சதுர அடி சுவருக்கு 12 செங்கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. லாரி பேக்கர் பாணியில் ஒன்பது செங்கற்களே போதுமானவை. ஒரு கல், இடைவெளி, ஒரு கல் என்ற முறையில் சுவர் எழுப்பப்படுகிறது. பில்லர் ஸ்லாப் என்பது மேற்கூரை அமைப்பதைக் குறிக்கும். இந்த மேற்கூரைக்கான தளங்களுக்குத்தான் கம்பி, சிமென்ட் என்று பெருந்தொகை தற்போது செலவிடப்படுகிறது. இதை ஓடுகள், செங்கற்களைக்கொண்டே அமைத்துவிடலாம். செங்கல்பட்டை அடுத்த வல்லத்தில் என் ஓய்வு இல்லத்தை முழுக்க முழுக்க லாரி பேக்கர் முறையில்தான் கட்டியிருக்கிறேன். இந்த வீட்டின் மேற்கூரையை ஓடுகளும் செங்கற்களும்தான் தாங்கி நிற்கின்றன. அதே போன்று வளசரவாக்கத்திலுள்ள என் அலுவலகத்தில் ஓடுகளையும் குறைந்தளவு கம்பிகளையும் பயன்படுத்தி தளத்தை அமைத்திருக்கிறோம்.’’

லாரி பேக்கர் பாணியில் சுவர் எழுப்படுகிறது
லாரி பேக்கர் பாணியில் சுவர் எழுப்படுகிறது

“இந்த பாணியின் சிறப்பம்சமே வெளிப்பூச்சு இல்லாத செங்கற்சுவர்கள்தான் இல்லையா?”

“லாரி பேக்கர், `வெளிப்பூச்சுக்கு எதுவும் செய்ய வேண்டியதில்லை’ என்கிறார். மண் சுவர்களுக்கு வேண்டுமென்றால் சுண்ணாம்புப் பூச்சு செய்யலாம். செங்கல்பட்டிலுள்ள என் இல்லத்தில் சுண்ணாம்புப் பூச்சுதான் செய்திருக்கிறேன். எந்தச் சிராய்ப்பும் கீறலும் இதுவரை விழவில்லை. சிமென்டைவிட வலிமையாக இருக்கிறது. வளசரவாக்கத்திலுள்ள என் அலுவலகம் லாரி பேக்கர் முறையில் சுதீர் என்பவரால் கட்டப்பட்டது. லாரி பேக்கரின் அடையாளம், பூச்சு இல்லாத செங்கற்களாலான சுவர்கள். என் கட்டடமும் அப்படித்தான் இருந்தது. அண்மையில்தான் அதை மாற்றினேன். ஆனால், இன்று கட்டப்படும் வீடுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறையோ, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையோ பெயின்ட் அடிக்க வேண்டிய தேவை இருக்கிறது.”

“லாரி பேக்கரைத் தவிர வேறு யாரை உங்களுக்கு மிகவும் பிடிக்கும்?”

‘ஆன்டோனியோ காடி’ (Antonio Gaudi) என்கிற ஸ்பானிய கட்டடக்கலை வல்லுநரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் கட்டட அமைப்பில் நேர்க்கோடுகளை உடைத்தெறிந்தார். இயற்கையாகவே வலுவாக உள்ள பொருள்களை மிகவும் ஆழ்ந்து ஆராய்ந்தார். மரம், எலும்பு, பூக்கள், காளான்கள் போன்றவற்றின் வடிவமைப்பை, தான் உருவாக்கும் கட்டடங்களில் பயன்படுத்தினார். அவரின் கட்டடங்கள் இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கின்றன.

லா சாக்ராடா ஃபெமிலியா சர்ச்
லா சாக்ராடா ஃபெமிலியா சர்ச்

ஒரு தெலுங்குப் படத்தின் ஷூட்டிங்குக்காக ‘பார்சிலோனா’ நகருக்குப் போயிருந்தேன். ஆன்டோனியோ காடியின் புகழ்பெற்ற கட்டடங்கள் அந்த நகரத்தில்தான் இருந்தன. ஒரே ஒருநாள்தான் ஷூட்டிங். எவ்வளவோ முயன்றும் ஷூட்டிங் நாள்களை நீட்டிக்க முடியவில்லை. நான் இயக்குநரிடம், இரண்டு மணி நேரம் தரும்படி காலில் விழாத குறையாகக் கெஞ்சினேன். எப்படியாவது காடியின் ‘லா சாக்ராடா ஃபெமிலியா சர்ச்’சை

(La Sagrada Familia Basilica) பார்த்துவிடலாம் என்றுதான். ஆனால், அது படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த இடத்திலிருந்து வெகுதூரம் என்பதை அறிந்தேன். பிறகு அருகிலிருந்த ‘காஸா பாட்லோ’ (Casa Batllo) என்ற கட்டடத்துக்குச் சென்றேன். ஏற்கெனவே அங்கே 200 பேர் வரிசையில் காத்துக்கிடந்தனர். ஒரு வழியாக உள்ளே நுழைந்தேன். யுனெஸ்கோ பராமரிப்பிலிருந்த அந்தக் கட்டடத்தின் ஒவ்வொரு சதுர அங்குலமும் தனித் தன்மையான கலை வண்ணத்தோடிருந்தது. அவருடைய ஒவ்வொரு கட்டடமும் ஒன்றுபோல் இருந்ததில்லை. மனதார இரண்டு மணி நேரத்தை அங்கே கழித்தேன். கிளம்பும்போது அங்கிருந்த இரும்புக் கதவின்மீது அழுத்தமாக ஒரு முத்தம் வைத்துவிட்டு வந்தேன்.”

ஆர்கானிக் உணவகத்தின் முகப்பில் 
நடிகர் நாசர்
ஆர்கானிக் உணவகத்தின் முகப்பில் நடிகர் நாசர்
 ‘காஸா பாட்லோ’, ஆன்டோனியோ காடி
‘காஸா பாட்லோ’, ஆன்டோனியோ காடி

“உங்கள் வீட்டின் முன் நிறைய பழைய பொருள்கள் கிடக்கின்றனவே...”

“சில வருடங்களுக்கு முன்னர் யதேச்சையாக ஒரு குப்பைத்தொட்டியைக் கடந்தபோது, அதில் ஓர் அம்மிக்குழவி தட்டுப்பட்டது. அதை வீட்டுக்குக் கொண்டுவந்தேன். அதுதான் பழைய பொருள்கள்மீதான ஒரு வெளிச்சத்தை எனக்குள் ஏற்படுத்தியது. அப்போதிருந்து குப்பைமேடுகளில் கிடக்கும் பொருள்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். என்னைப் பார்த்து என் நண்பர்கள் சிலரும் ஒன்றுசேர்ந்தார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த வேலை நடந்தது. அதிகாலை நேரத்தில் ஏற்கெனவே பார்த்துவைத்திருக்கும் குப்பைப் பொருள்களைச் சேகரிப்போம். எங்கள் குழுவுக்கு, `பொறுக்கீஸ்’ என்ற பெயரும் உண்டு. அவரவர் செல்லும் இடங்களில் கிடைக்கும் பழைய பொருள்களைப் பகிர்ந்துகொள்வோம். அண்ணா நகரில் பழைய பொருள்களைக்கொண்டு நானும், நண்பர் ஓவியர் க்ராஃபோர்ட்டும் ஓர் ஆர்கானிக் உணவகத்தை வடிவமைத்திருக்கிறோம். அந்த உணவகத்தின் முகப்பைப் பார்த்தால், பழைய பொருள்களைக்கொண்டு இப்படிக்கூட உருவாக்க முடியுமா என்று அதிசயித்துப் போவீர்கள். தற்போது வீடுகளுக்கு அலங்காரம் செய்ய நிறைய மெனக்கெடுவதோடு செலவும் அதிகம் செய்கிறார்கள். நம் பாரம்பர்யப் பொருள்களான உரல், அம்மி, உலக்கை, மண்வெட்டி, கலப்பை, காய்ந்த மரங்களின் வேர், கட்டை என அனைத்துப் பொருள்களையும் அலங்காரப் பொருள்களாகப் பயன்படுத்தலாம். இதைப் படிக்கட்டுகள், தாழ்வாரங்கள், வீட்டு முகப்பு எனப் பல இடங்களில் பயன்படுத்தினால், வீட்டுக்கான அழகும் கூடும். இதற்காகச் செலவிடும் தொகையும் மிச்சமாகும்.”

லாரி பேக்கர்
லாரி பேக்கர்

“ஓர் உறுதியான வீடு எப்படியிருக்க வேண்டும்?”

``இன்று உலகமே பழைய ‘மண்’ கட்டுமானத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், நம்மிடையே `குடிசையில் வாழ்வது அவலம்’ என்கிற மனப்பான்மை நிலவுகிறது. நடுத்தர, கீழ் நடுத்தர மக்கள் சொந்த வீடு ஒன்றைக் கட்டிக்கொள்வதற்காகவே அதிகம் உழைக்கிறார்கள். ஆனால், அந்த வீட்டை உருவாக்க தேவைக்கதிகமான பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஐந்து பேர் புழங்குவதற்கு ஒரு வீடு எவ்வளவு வலிமையாக இருக்க வேண்டுமோ, அவ்வளவுதான் இருக்க வேண்டும். ஆனால், வியர்வையைச் சிந்தி சம்பாதிக்கும் பணம், `உறுதி’ என்ற பெயரில் கம்பிக்காக அதிகம் செலவிடப்பட்டு வீணாகத்தான் போகிறது. இன்றைக்குக் கம்பிகள், சிமென்ட் போன்றவை கட்டடம் கட்டுவதில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. லாரி பேக்கர் பாணியில் மண், செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றைப் பயன்படுத்தியே வீட்டைக் கட்டிவிடலாம். ஒரு வீடு 7-10 பேர் புழங்கக்கூடிய இடம். `அது 30 ஆண்டுகளுக்குப் பயன்பட்டால் போதும்’ என்று நினைத்துக் கட்டிய வீடுகளே, இன்று 60, 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நின்றுகொண்டிருக்கின்றன.

அடூர் கோபாலகிருஷ்ணனின் வீடு
அடூர் கோபாலகிருஷ்ணனின் வீடு

“இந்தியக் கட்டடவியலில் உங்களுக்குப் பிடித்தது?”

“எனக்குப் பழங்கட்டடங்கள் மிகவும் பிடிக்கும். அதிலும் பழங்கோயில்களுக்குத்தான் முன்னுரிமை. ஒவ்வொரு பழங்கட்டடமும் பழங்கோயிலும் கலைக்களஞ்சியம். நமக்கென்று ஒரு கட்டுமான மரபு, விஞ்ஞானம் இருந்திருக்கிறது. பெரும்பாலும் வாய்வழியாகவே அவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டிருப்பதால், அவை குறித்த பதிவுகள் இல்லை. அதனால்தான் இன்றும் கல்லூரிகளில் மேற்கத்திய கட்டடக் கோட்பாடுகளும் முறைகளும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

லாரி பேக்கரின் கட்டுமான பாணி கற்றுத்தருவது எளிமையான வாழ்க்கை முறை. `நவீனக் கட்டடவியலில் சூழலியல் பிரக்ஞையுடன், இயற்கையின் நீட்சியாக, சிக்கனமாக மனிதர்களின் வசிப்பிடங்களை உருவாக்க முடியும்’ என உணர்த்தியதுதான் லாரி பேக்கரின் மாபெரும் பங்களிப்பு. அந்த வசிப்பிடங்கள் நம் மண்ணின் தன்மையைக் கொண்டிருப்பதுதான் இந்தியர்களுக்கு அவர் அளித்திருக்கும் மகத்தான மரியாதை.”