
நடிக்கமட்டுமல்ல, தமிழ் வெர்ஷனுக்கு நீங்கதான் வசனம்னு கேள்விப்பட்டோம்?
“வெளியே இருந்து பார்க்குறவங்களுக்கு நான் முரடனா தெரியுறேன். படத்துக்கு என்னை கமிட் பண்ண வர்றவங்ககூட பயந்து, பயந்துதான் வர்றாங்க. `ராஜ்கிரண் சார் ரொம்ப கோபக்காரர்; கதை பிடிக்கலைன்னா வெளியே போடான்னு சொல்லிடுவார், அடிச்சுடுவார்’னு வதந்திகளை வேற பரப்புறாங்க. ஆனால், உண்மையில் எனக்கு மேனேஜர்கூடக் கிடையாது. எனக்குள்ளேயும் வடிவேலு, சூரி, சந்தானம் எல்லாரும் இருக்காங்க” என கம்பீரப் புன்னகை சிந்துகிறார் ராஜ்கிரண்.
மம்மூட்டியுடன் இணைந்து மலையாள சினிமாவில் நடிக்கிறீர்களே?
“தமிழ் சினிமா தவிர்த்து மற்ற மொழிப் படங்கள்ல இதுவரை நான் நடிச்சதில்லை. `குபேரன்’ படம்தான் முதன்முறை மலையாளத்தில், `ஷைலாக்’ன்ற பெயரில் வெளியாகுது. அந்தப் படத்தில் நான் நடிக்க முழுமுதற் காரணம் மம்மூட்டி சார்.

`ராஜ்கிரண் இந்தப் படத்துல நடிச்சாதான், நான் நடிப்பேன். அவர் தவிர வேறு யாருக்கும் அடிபணிஞ்சு நடிக்கறது நல்லாருக்காது’ன்னும் சொல்லியிருக்கார். அதான் என்கிட்டே கதை சொன்னாங்க. எனக்கும் பிடிச்சுருந்தது, அய்யனார்ங்கிற கதாபாத்திரத்துல நடிச்சி ருக்கேன். அந்த அய்யனார்தான் `குபேரன்.’ மலையாள சினிமாவுலகில் மம்மூட்டி சார் பண்ணாத சாதனைகள் கிடையாது. இந்தப் படத்திலும் காமெடியில் கலக்கியிருக்கார். படத்தில் எனக்குதான் ஜோடி இருக்கு. அவருக்கு அதுவும் கிடையாது. அவர் என் தம்பி மாதிரிதான் நடந்துகிட்டார். குழந்தை மனசுக்காரர் அவர். கொஞ்சமும் தலைக்கனம் இல்லாத ஒப்பற்ற கலைஞன்.”
நடிக்கமட்டுமல்ல, தமிழ் வெர்ஷனுக்கு நீங்கதான் வசனம்னு கேள்விப்பட்டோம்?
“ஆமாம். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு வசனம் எழுதியிருக்கேன். முதன்முறையா, பாடல்களும் எழுதியிருக்கேன். கவிஞர் விவேகாதான் பாடல்கள் எழுதுறதா இருந்தது. ஆனால், அவர் கொஞ்சம் பிஸி ஆகிட்டதால், என்னையே பாட்டு எழுதச்சொல்லி இயக்குநர் அஜய் கேட்டார். என்னால் மறுக்கமுடியலை, எழுதிக்கொடுத்துட்டேன்.”
28 வருடங்கள் கழித்து மீனாவுடன் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?
``என் ராசாவின் மனசிலே’ பட சமயத்தில் என் தோற்றத்தைப் பார்த்து மீனா பயப்படுவாங்க. ‘குபேரன்’ படம் பண்றப்போ அவங்களுக்கு அந்த பயம் இல்லை. என் மனைவி கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க. இத்தனை வருஷம் கழிச்சு, அவங்ககூட சேர்ந்து நடிச்சிருந்தாலும் எங்களுடைய பழைய நினைவுகளைப் பேசுறதுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் கொஞ்சம்கூட நேரம் கிடைக்காமல் போனது வருத்தம்தான்.”
சீனியர் தயாரிப்பாளரா இன்றைய தமிழ் சினிமாச் சூழலை எப்படிப் பார்க்குறீங்க?
“அந்தக் காலத்தில் தயாரிப்பாளரும் கதை பற்றிய ஞானத்துடன் இருப்பார். ஓரளவுக்குக் கையிலும் பணம் வெச்சிருப்பார். கதை எழுதவும் ஒரு கூட்டம் இருக்கும். அவங்க கிட்ட கதை கேட்டு, பிடிச்சுப்போனால் கதைக்கு யாரெல்லாம் நடிச்சா நல்லாருக்கும்னு யோசிப்பார். மத்தவங்க கிட்டேயும் கலந்து யோசிச்சுட்டு நடிக்குறவங்களுக்கு ஒரு தொகையை அட்வான்ஸா கொடுத்துட்டு வருவார். ஆனால் இன்னைக்கு எல்லாமே தலைகீழா மாறிப்போச்சு. சினிமா உலகம் ரொம்ப வேகமா போயிட்டிருக்கு. தயாரிப்பாளர்கள் யாரும் இப்போ கதை கேட்குறது கிடையாது. அதனால், கதை ஆசிரியர்கள்ங்கிற இனமே இப்போ இல்லை.

பெரிய ஹீரோக்களை வெச்சி பண்ணினா பெருசா லாபம் எடுக்கலாம்னு நினைச்சிட்டு, பெரிய ஹீரோக்களின் சம்பளம் எவ்வளவுன்னு கேட்டு கமிட் பண்ணிடுறாங்க. தயாரிப்பாளர் கிட்ட செல்வாக்கு தவிர வேற எதுவும் இருக்காது. பைனான்சியர்தான் மொத்தப் பணமும் கொடுக்கிறார். தயாரிப்பாளருக்குக் கடனைத் திருப்பிக் கொடுக்கணும்ங்கிற பொறுப்பைத் தாண்டி வேறு எந்தப் பொறுப்பும் இல்லை. இதுதான் இன்னைக்கு நிலைமை. இதனால்தான், அந்தக் காலத்தில் பெரிய நிறுவனமா இருந்த ஏவிஎம், சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் இப்போ படம் தயாரிக்க முன்வர்றது இல்லை.”
வெப் சீரிஸ் போன்ற ஆன்லைன் தளத்துல உங்களை எதிர்பார்க்கலாமா?
“எனக்கு வெப் சீரிஸ் பத்தியெல்லாம் தெரியாது. ஆனால், எனக்கான சம்பளம் கொடுத்தால் கண்டிப்பா நடிப்பேன். பிழைப்புக்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன். என் கொள்கைக்கு மாற்றம் ஏற்படுத்தாத கதாபாத்திரங்கள் வந்தால் கண்டிப்பா பண்ணுவேன். `நெகட்டிவ் கதாபாத்திரங்கள் பண்ணக்கூடாங்கிறது என் கொள்கை. `சிவாஜி’ படத்தில் ரஜினி சாருக்கு வில்லனா நடிக்க வந்த வாய்ப்பையே மறுத்தவன் நான்.”
குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன?
“ஒவ்வொரு நாட்டுக்கும் குடியுரிமைச் சட்டம் மிக அவசியம். நம் இந்திய தேசத்துக்கும் தேவை. ஆனால், சட்டத் திருத்தம்னு வர்றப்போ அதைப் பரிசீலனை பண்ணணும். இப்போ நம்ம பிரதமர் மோடி ஐயா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஐயா இரண்டு பேரும், ‘இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினால் இந்திய முஸ்லிம்களுக்கும் வேறு சமூகத்தினருக்கும் எந்தப் பிரச்னையும் வராது’ன்னு உறுதியா சொல்றாங்க. நம்மளை நம்பவும் சொல்றாங்க. `அவங்க சொன்னதெல்லாம் செஞ்சிட்டாங்களா? இதை மட்டும் நாம எப்படி நம்புறது?’ன்னு அடுத்த கேள்வி எழும். அதனால், மோடி மற்றும் அமித்ஷா இருவரும், `சட்டத்திருத்தம்ங்கிறது இதுதான். இந்த விஷயங்களை, இந்த வழியில்தான் திருத்தம் செய்யப்போறோம்’னு மக்களிடம் தெளிவுபடுத்தணும். போராட்டங்கள் பற்றிக் கவலைகொள்கிற மோடி அரசு, அதை எளிமைப் படுத்தி மக்கள்கிட்ட எடுத்துச்சொன்னால் எல்லோருடைய பிரச்னையும் தீரும்.”
சினிமாக் கலைஞர்கள் அரசியலுக்குள் வந்தால் சிலர் எதிர்க்குறாங்களே?
“இது ரொம்பப் பாமரத்தனமான பேச்சு. அரசியல்வயப்படாதவன் உலகத்தில் யாருமே இல்லை. ஏன்னா, அரசியல் எடுக்கிற ஒவ்வொரு முடிவும் உங்களையும், என்னையும்தான் பாதிக்குது. அரசியலில் இல்லாத ஆள்னு இங்கு ஒருத்தரும் இல்லை. அப்படியிருக்க, சினிமாக்காரர்கள் மட்டும் வரக் கூடாதுங்கிறது சின்னப்புள்ளத்தனமா இருக்கு. இந்திய தேசத்தில் ஓட்டுரிமை இருக்குற யார் வேணும்னாலும் அரசியலுக்கு வரலாம். யார் கட்சி ஆரம்பித்தாலும் அவங்களுடைய கொள்கையைச் சொல்லப் போறாங்க. எதுவா இருந்தாலும் மக்கள்தான் முடிவுபண்ணப்போறாங்க.”