
எந்த அளவுக்கு இந்த க்வாரன்டீன்ல என்னை பிஸியா வெச்சுக்க முடியுமோ வெச்சுக்கிறேன்.
சரத்குமாரிடம் முப்பதாண்டுகால அரசியல் பயணமும் அரசியல் அனுபவங்களும் இருக்கின்றன.

‘`வழக்கமான கேள்வியில் இருந்தே ஆரம்பிப்போம். லாக்டெளன் நாள்களில் நீங்க என்ன பண்றீங்க?’’
“வீட்ல ஒரு மினி ஜிம் வெச்சிருக்கேன். அதுல தினமும் ரெண்டு மணி நேரம் வொர்க் அவுட். என் மனைவி நல்லா சமைப்பாங்க. இப்போ நானும் சமையல் கத்துக்கிட்டேன். பத்துக்கு ரெண்டு மார்க் வாங்கிட்டு இருந்த நான், இப்போ எட்டு மார்க் வாங்குற அளவுக்கு சமைக்கிறேன். பிரியாணில எக்ஸ்பர்ட் ஆகிட்டேன். வீட்டுக்கு வெளியே வரை வாசனை வருதுன்னு சொல்றாங்கன்னா பார்த்துக்கோங்களேன். நெப்போலியன் பத்தி, அரசியலமைப்பு பத்திப் படிச்சிட்டிருக்கேன். தினமும் மாலை 6 - 7.30 என் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளை வீடியோ கால் மூலமா சந்திக்கிறேன். எந்த அளவுக்கு இந்த க்வாரன்டீன்ல என்னை பிஸியா வெச்சுக்க முடியுமோ வெச்சுக்கிறேன்.”

‘`நீங்க சமீபத்துல சிரஞ்சீவி பத்திப் பேசினது பயங்கர வைரல் ஆகிடுச்சே?’’
`` `ராதிகா சிரஞ்சீவிகூட 28 படங்கள் நடிச்சிருக்காங்க, நீங்களும் சிரஞ்சீவிகூட நடிச்சிருக்கீங்களே’ன்னு அவங்க கேட்டதுக்கு நான் சொன்ன பதில் அது. அவர் எனக்குப் பண்ணின உதவியை நான் சொல்றதுக்கு எந்த இடமும் வாய்ப்பும் கிடைக்கலை. அந்தப் பேட்டியில அவங்க கேட்ட கேள்வி, எனக்கு அவர் பண்ணின உதவியை வெளியே சொல்ல ஒரு வாய்ப்பா இருந்தது. நான் ஹீரோ ஆகுறதுக்கு முன்னாடி எனக்குப் பெரிய பொருளாதாரச் சிக்கல் இருந்தது. எனக்கு நெருங்கிய ஒரு தயாரிப்பாளர்கிட்ட என்ன பண்ணலாம்னு கேட்டப்போ, ‘நீங்கதான் சிரஞ்சீவிகூட நடிச்சிருக்கீங்களே. அவர் கால்ஷீட் வாங்கிக்கொடுங்க. லாபத்துல உங்களுக்கு ஷேர் தருகிறேன்’னு சொன்னார். அதுக்காக அவர்கிட்ட போன்ல பேசிட்டு ஹைதராபாத் போய் அவரை அன்னபூர்ணா ஸ்டூடியோஸ்ல சந்திச்சேன். அவர் என் சூழலைப் புரிஞ்சிக்கிட்டு, மதியம் ஷூட்டிங்குக்கு வரமாட்டேன்னு அவங்க டீம்கிட்ட சொல்லிட்டு என்னை அவரோட வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய்ட்டார். முதல்ல என்னை அவர் வீட்ல சாப்பிட வெச்சார். என் மன அழுத்தத்தைக் குறைச்சு என் பிரச்னை என்ன, ஏதுன்னு விசாரிச்சார். ‘எத்தனை நாள் கால்ஷீட் வேணும்?’ன்னு கேட்டு உடனே அதைக் கொடுத்துட்டார். அப்பவே எனக்கு பாரமெல்லாம் குறைஞ்ச மாதிரி ஆகிடுச்சு. சம்பளம் பத்தின பேச்சு வரும்போது, ‘எனக்கு வர்ற சம்பளத்தைப் படத்தோட லாபத்துல சேர்த்துக்கோ. அந்தத் தயாரிப்பாளர் உனக்கு லாபத்துல ஷேர் தர்றேன்னு சொல்றார்ல. அப்போ உனக்கு இங்கேயே லாபமாகிடும்’னு சொன்னார். என் வாழ்க்கைக்கும் நான் அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன். நமக்குத் துன்பம் வர்ற சூழல்ல ‘நான் கூட இருக்கேன்’னு ஒருத்தர் சொல்றதே பெரிய சக்தி. ஆனா, அவர் அதையும் மீறி எனக்காக யோசிச்சது ரொம்பப் பெரிய விஷயம். அதனாலதான் அந்த நிகழ்வைப் பத்திப் பேசும்போது கண்கலங்கிட்டேன்.”

‘`கோலிவுட்டின் மோஸ்ட் ஹிட் காம்போக்களில் ஒன்று கே.எஸ்.ரவிக்குமார் - சரத்குமார் காம்போ. அதுல அப்படி என்னதான் ஸ்பெஷல்?’’
“ஆமா. ஒருமுறை கழுத்துல அடிபட்டு மருத்துவமனைல சிகிச்சை எடுத்துட்டிருந்தேன். ஆறு மாதத்துக்குப் பேசமுடியாது, இனிமே என்னால நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ‘மறுபடியும் எப்படி சினிமாவுல நடிக்கமுடியும், ஸ்டன்ட் பண்ணமுடியும், அவ்ளோதான்’னு எல்லோரும் சொன்னப்போ, ரவிக்குமார் மருத்துவமனைக்கு வந்து, ‘நீங்க சரியாக எத்தனை மாசம் ஆனாலும் பரவாயில்லை. நீங்கதான் நடிக்கிறீங்க’ன்னு என்மேல பெரிய நம்பிக்கை வெச்சார். அதுதான் ரவிக்குமாருக்கு முதல் படம் (புரியாத புதிர்). ஆர்.பி.செளத்ரி சார்தான் தயாரிப்பாளர். நினைச்சிருந்தா வேற ஹீரோக்களை வெச்சு எடுத்திருக்கலாம். உடம்பு இளைச்சு, கழுத்தைக்கூடத் திருப்ப முடியாம இருந்த என்னை, காலரைத் தூக்கிவிட்டு, கண்ணாடி போடச் சொல்லி ஸ்டைலிஷான டிடெக்டிவா படத்துல காட்டினார். என் வாழ்க்கைல கே.எஸ்.ரவிக்குமார் முதன்மையானவர். எங்களுக்குள்ள இருந்த அந்தப்புரிதல்தான் ‘நாட்டாமை’, ‘நட்புக்காக’, ‘பாட்டாளி’ன்னு எல்லாப் படங்களிலும் வொர்க் அவுட்டாச்சு. என் கரியர், வாழ்க்கை இரண்டிலும் ரவிக்குமார் ஸ்பெஷல் மனிதர்.”
‘`ஏகப்பட்ட படங்கள் நடிச்சிட்டீங்க. ஆனா, உங்க 100-வது படமான ‘தலைமகன்’ நீங்களே முதல்முறையா இயக்கி நடிச்சது. இயக்குநர் சரத் எப்படி?’’
“ முதல்ல அந்தப் படத்துக்கு பாலாஜிங்கிறவர்தான் இயக்குநரா இருந்தார். இடையில, அவருக்கு ஏதோ பிரஷர். அது என்னன்னு எனக்கு அப்போ புரியலை. ஆனா, இப்போ இருக்கிற சூழல்ல அப்போ பாலாஜி சரியாதான் சொல்லியிருக்கார்னு புரிஞ்சிக்கிறேன். அவர் பண்ணலைன்னு முடிவு பண்ணினவுடன் அந்த சவாலை நான் எடுத்துக்கிட்டு இயக்கி முடிச்சேன். நான் பத்திரிகையாளரா இருந்ததனால அது தொடர்பான படம்தான் என்னுடைய 100வது படமா இருக்கணும்னு ஆரம்பத்துலயே முடிவு பண்ணிட்டேன். நிறைய நடிகர்களுக்கு அவங்களுடைய 50-வது, 100-வது படங்கள் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்காமல் இருந்திருக்கு. எனக்கும் ‘தலைமகன்’ பட ரிசல்ட்ல திருப்தியில்லை. இன்னும் நல்ல படமா இருந்திருக்கலாம்னு எனக்கு அப்பவே தோணுச்சு. ஆனா, அதுக்கு நான் வேற யாரையும் குறை சொல்ல முடியாது.”

‘`80’ஸ் ரீயூனியன்ல நீங்க எப்பவும் மிஸ் ஆகுறதில்லையே?’’
“ஒவ்வொரு வருஷமும் நடக்குற 80’ஸ் ரீயூனியன் மீட்டிங் செம ஜாலியா இருக்கும். அதுல யாரும் சினிமாவோ அரசியலோ பேசமாட்டோம். அப்படிப் போனால்தானே குழப்பம் வரும்? அதனால பாட்டு, டான்ஸ் பண்ணிக் கிட்டு, 80கள் பத்தின ஃப்ளாஷ் பேக்னு நேரம் ஓடும். அதே மாதிரி அன்னைக்கு இருந்தவங்க இன்னைக்கு இல்லையேன்னு சோகங்கள் இருக்கும். சமீபமா கன்னட நடிகர் அம்பரிஷ் இல்லையேன்னு ரொம்ப வருத்தப்படுறோம்..”
‘`அடுத்தடுத்த படங்கள்?’’
“ ‘பாம்பன்’ படம் ஆரம்பிச்சு எதிர்பாராத விதமா கொஞ்சம் தேங்கி நிக்குது. ‘பிறந்தாள் பராசக்தி’யும் அப்படித்தான். அதுலதான் நான், ராதிகா, வரலட்சுமி மூணு பேரும் சேர்ந்து நடிக்கிறோம். ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காகக் காத்திருக்கேன். மணிரத்னம் சார் ‘இந்தப் படத்துக்கு நல்ல ஃபிட்டான உடம்பு வேணும், அதிக முடி, தாடி இருக்கணும். அதை மெயின்டெய்ன் பண்ணிக்கோங்க’ன்னு சொல்லிட்டார். நானும் தயாரா இருக்கேன். அடுத்ததா, ஓடிடி தளத்துலயும் களமிறங்கப் போறேன். அதுக்கான அறிவிப்பு சீக்கிரமாவே வரும். தொடர்ந்து ஐந்து சீசன் வரப்போகிற ஒரு வெப் சீரிஸ் அது.”

‘`கொரோனா பிரச்னையால சினிமா உலகம் ரொம்ப பாதிச்சிருக்கே?’’
“லாக்டெளனுக்குப் பிறகு, கலை உலகம் எப்படியிருக்கும்னு தெரியலை. சமூக இடைவெளியைக் கடைப் பிடிச்சுப் படம் எடுக்கிற தெல்லாம் பெரிய கஷ்டம். எல்லாத் தொழிலுக்கும் பாதிப்புதான். கலைத் தொழிலுக்கு மிகப்பெரிய பாதிப்புன்னு நினைக்கிறேன். கொரோனா சரியானாலும் கலை உலகம் இயல்பு நிலைக்கு வர இன்னும் ஆறு மாசமாகும். பொருளதார ரீதியா ரெண்டு வருஷம் பின்னாடி போயிட் டோம். மன உறுதியோடும் உடல் உறுதியோடும் சிந்தனையைச் சிதறடிக்காமல் ஒற்றுமையோடு செயல் பட்டால் வெற்றி கிடைக்கும்னு நம்புறேன்.”