Published:Updated:

பாடகர்களிடம் அந்த மாதிரி கேட்காதீங்க ப்ளீஸ்!

விஜய் யேசுதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய் யேசுதாஸ்

தாத்தா நாடக நடிகர், அப்பா பாடகர். அதுதான் காரணமான்னு தெரியாது. எப்படியோ இரண்டுமே பண்ண ஆரம்பிச்சிட்டேன்.

பிறக்கும்போதே ஒப்பீடுகளுடன் பிறப்பவர்கள் திரை வாரிசுகள். ‘`என்ன இருந்தாலும் அப்பாவைப்போல இல்லைல்ல’’ என ஒப்பிட்டுக்கொண்டேயிருப்பார்கள். இந்த சவாலைச் சமாளித்துத் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டவர் விஜய் யேசுதாஸ். நடிகராகவும் தன்னை நிரூபிக்கும் முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டிருப்பவருடன் உரையாடினேன்.

‘`பாடகர், நடிகர்... சினிமாப் பயணம் எப்படியிருக்கு?’’

‘`தாத்தா நாடக நடிகர், அப்பா பாடகர். அதுதான் காரணமான்னு தெரியாது. எப்படியோ இரண்டுமே பண்ண ஆரம்பிச்சிட்டேன். எஸ்.பி.பி சரண், வெங்கட் பிரபுன்னு இவங்க எல்லாருமே எனக்குச் சின்ன வயசு ஃபிரெண்ட்ஸ். அவங்க படங்கள் பண்ண ஆரம்பிக்கும்போதே என்னையும் நடிக்கச் சொல்லிக் கேட்டாங்க. மலையாளத்துல ஃபாசில் சார்கூட ஒரு படத்துல நடிக்கக் கேட்டார். அப்பாகிட்ட கேட்கும்போது, ‘ஒரு விஷயத்துல நாம ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும். ஒரு பாடகரா நீ ஜெயிச்சிட்ட பிறகு நடிப்பைப் பார்த்துக்கலாம்’னு சொன்னார். அவர் சொன்னது சரிதான். ஆனா, அதே விஷயம் எனக்கு மைனஸாவும் அமைஞ்சிடுச்சு. இப்போ எனக்கு வயசு 41. சில வருஷங்களுக்கு முன்னாடிதான் நடிக்கத் தொடங்கியிருக்கேன். அதனால இருபது வருஷத்துக்கு முன்னாடி நடிக்கணும்னு நினைச்ச நிறைய கேரக்டரை இப்போ முயற்சிபண்ணிப் பார்க்கமுடியல. இனிமே என் வயசுக்குத் தகுந்தமாதிரியான படங்கள்தான் பண்ணமுடியும்.”

விஜய் யேசுதாஸ்
விஜய் யேசுதாஸ்

‘`நடிகர் விஜய் யேசுதாஸைப் பற்றி நண்பர்களின் கமென்ட் என்ன?’’

“தனுஷ் சாருக்கு ‘படைவீரன்’ ப்ரிவ்யூ போட்டுக் காமிச்சேன். படம் பார்த்தவுடன், ‘பரவாயில்லையே, நல்லா நடிச்சிருக்கியே... இந்த மாதிரி ‘மாரி’யில நடிச்சிருக்க லாமே’ன்னு சொன்னார். மலையாள இன்டஸ்ட்ரியிலயும் நிறைய பேர் பாராட்டினாங்க.”

‘`இப்போ ஒரு 3டி படம் பண்ணிட்டிருக்கீங்கன்னு கேள்விப்பட்டோமே?’’

“ஆமா. ஹாரர் த்ரில்லர் ஜானர் ‘சால்மன்’னு ஒரு படம். இயக்குநர் பெயர் சலீல். இன்னும் சில படங்களையும் கமிட் பண்ணியிருந்தேன். ஆனா, ‘சால்மன்’ டீம் உடனே ஷூட்டிங் போக ரெடியா இருந்தாங்க. அதனால ஆரம்பிச்சிட்டோம். துபாய்ல இருக்கிற வீடு மாதிரி கொச்சின்ல செட் போட்டு ஷூட் பண்ணினோம். பாதி ஷூட்டிங் முடிஞ்சுடுச்சு. 3டி படம்ங்கிறதனால டெக்னிக்கலா சில விஷயங்களைப் பண்ண வேண்டியிருந்தது. இப்போ இருக்கிற சூழல் சரியானவுடன் நேரா ‘சால்மன்’ செட்டுக்குத்தான் போகணும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி, பஞ்சாபின்னு நிறைய மொழிகளில் படம் வெளியாகவிருக்கு. படத்துடைய அவுட்புட் பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கேன். காரணம் 3டி. சினிமாவுல எல்லோருடைய கனவுகளும் பெருசு. அப்படித்தான் நான் இந்தப் படத்தைப் பார்க்கறேன். இது என் கனவுப் படம்.”

விஜய் யேசுதாஸ்
விஜய் யேசுதாஸ்

‘`நீங்க பாடின எல்லாப் பாடல்களும் கவனிக்கப்படுகின்றன. கொஞ்சம் வித்தியாசமா வேற வேற ஜானர்ல பாடலாமேன்னு உங்களுக்குத் தோன்றியிருக்கா?’’

‘`என் குரலுக்கு மெலடிதான் பொருந்துதுன்னு அந்த மாதிரிப் பாடல்களா வந்தது. நீங்க சொல்ற மாதிரி நாமா கேட்கற விஷயமில்ல இது. அவங்களா கொடுக்கிறதுதான். அவங்க நம்மளை நம்பிக் கொடுக்கறாங்க. அதை எவ்ளோ சூப்பரா பண்ணிக்கொடுக்கணுமோ அப்படிக் கொடுக்கணும்தான் நினைப்பேன். யுவன் ஷங்கர் ராஜா எனக்குப் பல வெரைட்டி பாடல்கள் கொடுத்திருக்கார். ‘சண்டக்கோழி’ல ‘தாவணிபோட்ட தீபாவளி’, ‘பில்லா’ படத்துல ‘சேவற்கொடி பறக்குதடா’, ‘தீபாவளி’ படத்துல ‘காதல் வைத்து காதல் வைத்து’னு அவர் இசையில கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ணியிருக்கேன்.”

‘`ஒரு பாடகரா, நடிகரா உங்களுக்குப் பிடிக்காத விஷயம் என்ன?’’

‘`ஒரு பாடகர்கிட்ட பேச ஆரம்பிச்சதுமே ‘ரெண்டு வரி பாடிக் காட்டுங்களேன்’னு சொல்லும்போது கொஞ்சம் கடுப்பா இருக்கும். ஆனா, அந்தக் கடுப்பையெல்லாம் இப்போ தாண்டி வந்தாச்சு. பாடிக்காட்டுங்கன்னு கேட்கிற யாரும் நடிகர்களைப் பார்த்தா நடிச்சுக்காட்டுங்களேன்னு கேட்க மாட்டீங்க.”

‘`ஒரு பாடகருடைய உச்சபட்ச லட்சியம் என்னவா இருக்கும்?’’

“எல்லோருடைய மனசுலயும் இருக்கணும்ங்கிறது தான். ஆனா, ட்விட்டர், இன்ஸ்டாகிராம்ல நாம லைவ் போனா எத்தனை பேர் பார்க்குறாங்கன்னு தெரிஞ்சுக்கணும்னு ஒரு ப்ரஷர் இப்ப உருவாகுது. சில நேரங்களில் ‘அவங்க ஏன் உன் லைவைப் பார்க்கணும்?’னு எனக்குள்ளேயே கேள்வி கேட்டுக்குவேன். ஒரு நிகழ்ச்சிக்குப் போனால் அங்க 500 பேர் இருந்தாலும் 10,000 பேர் இருந்தாலும் நம்ம மனசாட்சிக்கு உண்மையா நல்லாப் பாடணும் அவ்ளோதான். நாம பாடுறது பிடிச்சுப்போய் ஐம்பது பேர் கேட்டாலே சந்தோஷம்தான். இப்படி பாசிட்டிவா யோசிக்க ஆரம்பிச்சுப் போயிட்டிருக்கேன்.”