கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“பயங்கர விஜய் ரசிகை ஆயிட்டேன்!”

ஆண்ட்ரியா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்ட்ரியா

நிறைய பேர் என்கிட்ட வந்து, ‘விஜய் சார் எப்போ படம் பண்ணுவீங்க?’ன்னு கேட்டுட்டே இருப்பாங்க.

ஆண்ட்ரியா... திறமையான நடிகை, தேன்குரல் பாடகி. லாக்டெளனில் இசையும் இன்ஸ்டாக்களுமாக இருந்தவரிடம் பேசினேன்.
ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

‘`இந்தக் கேள்வி கேட்காம நாங்க இப்ப பேட்டியே தொடங்குறதில்ல... இப் லாக்டெளன் நாள்கள் எப்படிப் போயிட்டிருக்கு?’’

``முன்ன காபி மட்டும்தான் எனக்குப் போடத் தெரியும். ஆனா, இப்போ மாஸ்டர் செஃப் ஆயாச்சு. வீட்டு வேலைகள், கடைக்குப் போய் பொருள்கள் வாங்கறதுன்னு நிறைய விஷயங்கள் புதுசா பண்ணிட்டிருக்கேன். லாக்டெளன் இன்னும் எவ்ளோ நாள் நீடிக்கும்னு தெரியாததால மளிகைப் பொருள்கள் வாங்க லிஸ்ட் ரெடி பண்ணியாச்சு. ஷூட்டிங் மிஸ் பண்றது ஒரு பக்கம் இருந்தாலும், ஆன்லைன் கான்செர்ட், தனிப்படங்கள் இதெல்லாம் வீட்டுக்குள்ள இருந்தே பண்ணிட்டிருக்கேன். இருந்தாலும், ஸ்டேஜ்ல ஆடியன்ஸ் முன்னாடி பாடுறதை ரொம்பவே மிஸ் பண்ணறேன். சீக்கிரமே இந்த நிலைமை சரியாகி எல்லோரும் பழையபடி வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணணும்கிறதுதான் என்னோட ஆசை.”

‘`சினிமாவுக்கு நடிக்க வந்து 13 வருஷங்கள் ஆகின்றன... எப்படி இருக்கு இந்தப் பயணம்?’’

‘`13 வருஷம் ஆகிடுச்சா? நீங்க சொல்லித்தான் தெரியுது. பழசையெல்லாம் நான் திரும்பிப் பார்க்கிறதே இல்லை. எப்பவும் முன்னோக்கித்தான் போய்ட்டிருக்கணும்னு நினைப்பேன். அப்படியே திரும்பிப் பார்த்தாலும் நான் பண்ணுன தப்புகளையெல்லாம் திரும்பச் செய்யக்கூடாது, அவற்றிலிருந்து என்ன நான் கத்துக்கிட்டேன்னுதான் பார்ப்பேன். சில நேரத்துல இதையெல்லாம் விட்டுட்டு எங்கேயாவது காட்டுக்குள்ள போய் வாழ்ந்திடலாம்னுகூட நினைச்சிருக்கேன். ஆனாலும், சினிமாப் பயணம் நல்லாவே இருக்கு. நான் பண்ணுற ஒவ்வொரு படமுமே என்னை நிறைய மாத்தியிருக்கு.”

‘`என்ன மாதிரியான மாற்றங்கள்?’’

``மாற்றங்கள்னு சொல்றதைவிட, எனக்குள்ள இருக்கிற நிறைய விஷயங்களை என்னுடைய எல்லாப் படங்களும் உணர வெச்சிருக்கு. குறிப்பிட்டுச் சொல்லணும்னா, ‘அன்னையும் ரசூலும்’, ‘தரமணி’, ‘வடசென்னை’ படங்களைச் சொல்லுவேன். அதுவும் ‘வடசென்னை’ சந்திரா எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நிஜத்துல ஆண்ட்ரியா, சந்திரா மாதிரி கிடையாது. ஆனா, சந்திரா கதாபாத்திரம் நடிக்கும்போது நான் தமிழ்ப்பொண்ணுங்கற உணர்வு எனக்குள்ள பயங்கரமா வந்தது. இந்த மாதிரி ஒவ்வொரு படமுமே எனக்குள்ள ஏதோவொரு தாக்கத்தை ஏற்படுத்திட்டுதான் இருக்கு.”

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

‘`லாக்டெளன் சூழல்ல பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகள் அதிகமாகிறதாகச் செய்திகள் வருகின்றன. பெண்கள் இவற்றை எப்படி எதிர்கொள்ளணும்?’’

``இதே கேள்வியை ‘தரமணி’ ஆல்தியாகிட்ட கேட்டிருந்தா கண்டிப்பா அவ செருப்பக் கழற்றி அடிங்கன்னு சொல்லியிருப்பா. ஆண்ட்ரியாவுக்கு அவ்வளவு தைரியம் கிடையாது. இந்தக் கொரோனா வைரஸ் தந்த பயத்தைவிட, லாக்டெளன் சூழலால மக்கள் எதிர்கொள்கிற பிரச்னைகளைக் கேள்விப்படும் போதுதான் பயமா இருக்கு. அதுலயும் வீட்டுக்குள்ள பெண்கள், குழந்தைகள் எதிர்கொள்கிற உடல், மனரீதியான பிரச்னைகள் அதிகமாகியிருக்குங்கற செய்தி நிஜமாவே வருத்தமா இருக்கு. நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு. உணர்வுபூர்வமான இந்தப் போராட்டத்தைப் பெண்கள் தைரியமா எதிர்கொள்ளணும். இதைப்பத்தித் தயங்காம வெளிய சொல்லணும்.”

‘`கமல்ஹாசன், கெளதம், செல்வராகவன், வெற்றிமாறன்னு தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களோடு வேலை செஞ்சிருக்கீங்க... அதைப் பத்தி?’’

``நீங்க சொன்ன இயக்குநர்களுடைய படங்கள் எல்லாமே, நான் நடிப்பு கத்துக்க அடுத்தடுத்து கிடைச்ச மிகப்பெரிய வாய்ப்புகள். ராஜீவ் ரவி சார், வெற்றி சார், ராம் சார் மாதிரி ஒரு சில இயக்குநர்களுக்கு நடிகர்களுக்குள்ள இருக்கும் பெஸ்ட்டை எப்படி வெளிய கொண்டு வரணும்னு தெரியும். இவங்க மூணு பேரைத் தவிர எனக்குப் பிடிச்ச இன்னொரு இயக்குநர்னா சுந்தர்.சி சார்தான். வேலை மேல அவருக்கு இருக்கும் பற்று... சான்ஸே இல்லை. அது நம்மையும் இன்னும் நல்லா வேலை பார்க்க வைக்கும்.”

‘` ‘தரமணி’, ‘வடசென்னை’ மாதிரியான கனமான கதாபாத்திரங்கள் பண்ணுறீங்க. அதேசமயம் ‘அரண்மனை’, ‘என்றென்றும் புன்னகை’ மாதிரியான கமர்ஷியல் படங்களும் பண்ணறீங்களே?’’

‘` ‘அரண்மணை’ பி & சி ஆடியன்ஸுக்கு பிடிக்கிற மாதிரியான கமர்ஷியல் படம். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. இப்போ ‘அரண்மனை-3’லயும் இருக்கேன். இந்த மாதிரி கமர்ஷியல் படங்களும் பண்ண எனக்குப் பிடிக்கும். சுந்தர்.சி சார் செட்ல ரொம்ப ஜாலியா இருப்பார். எந்த டென்ஷனும் இருக்காது. தெளிவா வேலை பார்ப்பார். அவர் கூட வேலை பார்க்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். ‘தரமணி’ மாதிரியான படங்கள் ஒரு ஆர்ட்டிஸ்ட்டா ரசிச்சுப் பண்ணினேன். ‘அரண்மனை’ மாதிரியான படங்கள் ஆடியன்ஸுக்காக.”

‘` ‘மாஸ்டர்’? ’’

நிறைய பேர் என்கிட்ட வந்து, ‘விஜய் சார் எப்போ படம் பண்ணுவீங்க?’ன்னு கேட்டுட்டே இருப்பாங்க. அவங்க நான் ‘மாஸ்டர்’ல இருந்தா சந்தோஷப்படுவாங்கல்ல? அதுக்காகத்தான். ‘மாஸ்டர்’ என்னுடைய ரசிகர்களுக்காக நான் நடிக்கிற படம். ஷூட்டிங் ஸ்பாட்ல பயங்கர விஜய் ரசிகை ஆகிட்டேன். படத்துல ஒரு கார் சேஸிங் சீன். அது பார்க்கும்போது உங்களுக்கே தெரியும், எந்த அளவுக்கு எனக்கு மறக்க முடியாத அனுபவமா அது இருந்திருக்கும்னு.

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா

ஹூட்டிங் ஸ்பாட்ல விஜய் சார் ‘வெறித்தனம்’ பாட்டு பத்திப் பேசிட்டிருந்தார். அதுக்கு முன்னாடி ‘பிகில்’ நான் பார்க்கலை. அவர் பேசினதுக்குப் பிறகுதான் கூகுள் பண்ணிப் பார்த்தேன். அடுத்த நாள் ‘அந்தப் பாட்டு நல்லாப் பாடியிருக்கீங்க’ன்னு நான் சொல்ல, அவர், ‘எந்தப் பாட்டுமா?’ன்னு கேட்க, நான் ‘வெறித்தனம் பாட்டு’ன்னு சொல்ல, அவருக்கு செம ஷாக். ‘ஏம்மா, இப்பதான் அந்தப் பாட்டைக் கேட்கறீங்களா... நீங்க தமிழ்நாட்டுலதான இருக்கீங்க? நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பாட்டு பாடினமே, அதுவாச்சும் கேட்டீங்களா’ன்னு என்னைக் கலாய்ச்சுட்டார். அந்தப் பாட்டு `கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன்’ ”

‘`உங்களைப் பற்றிய கிசுகிசுக்கள், சர்ச்சைகளை எப்படி எடுத்துப்பீங்க?’’

``ஆரம்பத்துல பயங்கரமா கோபப்படுவேன். ஆனா, இப்பெல்லாம் நோ ரியாக்‌ஷன். மனசு கஷ்டப்படும்தான், ஆனா அப்படியே விட்டுருவேன். ஏன்னா, நூறு பேர் நூறு விதமா பேசுவாங்க. ஆனா, எனக்குத்தான் என் வாழ்க்கையில என்ன நடந்தது, என்னச் சுத்தி என்ன நடக்குதுன்னு உண்மை தெரியும். உங்க வாழ்க்கைல உங்களைப் பத்தி யாருக்குத் தெரியுமோ அவங்க உங்களைப் புரிஞ்சுக்கிட்டா போதும். ஒவ்வொருத்தருக்கும் உங்களை விளக்கியே ஆகணும்னு எந்த அவசியமும் கிடையாது.”

“பயங்கர விஜய் ரசிகை ஆயிட்டேன்!”

இந்தப் பதிலில் தரமணி ஆல்தியா லேசா எட்டிப் பார்க்கிறாங்க மேடம்!