Published:Updated:

"மைனஸ் 10 டிகிரி குளிரில் நடிச்சேன்!"

அன்னா பென்
பிரீமியம் ஸ்டோரி
News
அன்னா பென்

என் அப்பா பென்னி திரைக்கதை எழுத்தாளர். நான் ஃபேஷன் டிசைனிங் படிச்சிட்டு பெங்களூருல ஒரு வருஷம் வேலை பார்த்தேன்.

விடிவி ஜெஸ்ஸி பழைய கதை. இன்று ‘கப்பேலா’ ஜெஸ்ஸிக்காகச் சில்லறைகளைச் சிதறவிடுகிறது சோஷியல் மீடியா. ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஹெலன்’ படங்களைத் தொடர்ந்து ‘கப்பேலா’வும் ஹாட்ரிக் ஹிட். ஓடிடி புண்ணி யத்தில் தமிழ் ரசிகர்களும் இந்த மலையாளப் படங்களைப் பார்த்துவிட, அன்னா பென் புகழ் கேரள எல்லை தாண்டித் தமிழ் நாட்டிலும் பரவ ஆரம்பித்து விட்டது. யார் இந்த அன்னா பென்?

"மைனஸ் 10 டிகிரி குளிரில் நடிச்சேன்!"

‘`சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?’’

‘`என் அப்பா பென்னி திரைக்கதை எழுத்தாளர். நான் ஃபேஷன் டிசைனிங் படிச்சிட்டு பெங்களூருல ஒரு வருஷம் வேலை பார்த்தேன். லீவுக்குக் கேரளா வந்தப்போ, ’கும்பளாங்கி நைட்ஸ்’ படத்துக்கு ஆடிஷன் இருக்குன்னு கேள்விப்பட்டு சும்மா ஒரு ஆசைக்காக போட்டோஸ் அனுப்பினேன். காலேஜ் டைம்லயே இப்படி அனுப்பி செலக்ட் ஆகாமப் போனது வேற கதை. ஆனா இவங்க என்னை ஆடிஷனுக்கு வரச் சொன்னாங்க. மூணு, நாலு முறை ஆடிஷன் வெச்சு, ஃபைனலா என்னை செலக்ட் பண்ணினாங்க. ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி நாள் வரைக்கும் கடைசி நேரத்தில் ஆளை மாத்திடுவாங்களோன்னு நினைச்சிட்டே இருந்தேன். ஆனா மாத்தலை. நடிச்சிட்டேன்.’’

"மைனஸ் 10 டிகிரி குளிரில் நடிச்சேன்!"

‘` ‘கும்பளாங்கி நைட்ஸ்’ படத்துக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது?’’

`இந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் வரும்னு நினைச்சே பார்க்கல. அதுக்கு முழுக் காரணம் அந்த டீம்தான். மலையாள சினிமாவிற்குள் இருக்கிற பல பெஸ்ட் டீமில் இந்த டீமும் ஒண்ணு. பெரிய நடிகர்கள், நல்ல டெக்னீஷியன்ஸ் இருந்தாங்க. அதெல்லாம் சேர்ந்துதான் நல்ல அவுட்புட் கொடுத்துச்சு. அவங்க சப்போர்ட்தான் என்னை நடிக்கவும் வெச்சது. புதுசா நடிக்க வந்த பொண்ணுன்னு ஒரு இடத்துலகூட ஃபீல் பண்ண வைக்கலை. ரொம்ப வசதியாவே இருந்தேன்.’’

‘` ‘ஹெலன்’ மாதிரி வித்தியாசமான கதை எப்படிக் கிடைச்சது?’’

‘`லால் அங்கிள் மூலமா கிடைச்ச வாய்ப்பு அது. அப்பாவும் லால் அங்கிளும் ஃபிரெண்ட்ஸ்ன்றதால சின்ன வயசுல இருந்தே அவருக்கு என்னைத் தெரியும். `ஹெலன்’ ஸ்கிரிப்ட்டைக் கேட்டுட்டு, பொண்ணு கேரக்டருக்கு நான் சரியா இருப்பேன்னு சொல்லியிருக்கார். இந்தப் படத்துக்கு ரொம்ப ரிஸ்க் எடுத்து உழைச்சோம்னு சொல்லலாம். குறிப்பா, ஹெலன் கேரக்டர் ஃப்ரீசர்ல (freezer) மாட்டிக்கிட்டதுக்கு அப்புறம் எடுக்கப்பட்ட காட்சிகள் ரியலா இருக்கணும்கிறதனால, அந்த ரூமை மைனஸ் 10 டிகிரி டெம்பரேச்சரில் வெச்சுத்தான் எடுத்தோம். கேமராவுக்குப் பின்னாடி இருந்து வேலை பார்த்த எல்லாரும் குளிருக்கு ஏற்ற டிரஸ் போட்டுக்கிட்டாங்க. எனக்கு அப்படியில்லை. கொஞ்ச நேரத்துக்கு மேல அந்த ரூமில் இருக்க முடியாது. அப்பப்போ பிரேக் எடுத்துட்டு வெளியில போய் சுடுதண்ணி குடிச்சுட்டு வருவேன். புது முயற்சின்றதால, ட்ரையல் & எரர் மாதிரி நிறைய பண்ணினோம். ஆரம்பத்தில் ஏழு நாள்களில் ஃப்ரீசர் காட்சிகளை முடிக்கலாம்னு ப்ளான் பண்ணினோம். ஆனால், 20 நாள்கள் ஆச்சு. அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்ததுக்கான பலனும் கிடைச்சது. ’ஹெலன்’ படத்துக்காக மற்ற மொழி ஆடியன்ஸ்கிட்ட இருந்து நிறைய பாராட்டுகள் வந்துச்சு. இப்போ அந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகிட்டு இருக்கு.’’

"மைனஸ் 10 டிகிரி குளிரில் நடிச்சேன்!"

‘`சமீபத்தில் வெளியான ‘கப்பேலா’ படமும் உங்களுக்குப் பெரிய பெயரை வாங்கிக்கொடுத்திருக்கே?’’

‘` ‘ஹெலன்’ படத்துக்கு அப்புறம் நிறைய ஸ்கிரிப்ட் கேட்டேன்; படிச்சேன். `கப்பேலா’ ஸ்கிரிப்ட்தான் ப்ராமிஸ்ஸிங்கா இருந்துச்சு. நான் எந்தக் கேரக்டர் பண்ணினாலும் அது நேச்சுரலா இருக்கணும்கிறது என்னோட எண்ணம். அந்தவகையில், ‘கப்பேலா’ எனக்கு ரொம்பவே மனநிறைவைக் கொடுத்துச்சு.’’

‘` ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்துல ஃபஹத் ஃபாசில்; ‘ஹெலன்’ படத்துல லால்னு சீனியர் நடிகர்களோடு நடித்த அனுபவம் எப்படி இருந்தது?’’

``சீனியர் நடிகர்களோடு நடிக்கப் போறோம்னு எனக்கு எந்த பயமும் இல்லை; அவங்க எப்படி நடிக்கிறாங்கன்னு நேர்ல பார்க்கிறதுக்கு ஆர்வமா இருந்தேன். ஃபஹத் சாரும் நானும் ஒவ்வொரு சீன் பண்றதுக்கு முன்னாடியும் பேசிப்போம். அது யூஸ்ஃபுல்லா இருந்துச்சு. லால் அங்கிள் ஃபேமிலி ஃபிரெண்டுன்றதால நடிக்கும்போது ஒரு கனெக்ட் இருந்துச்சு. உண்மையான அப்பா, பொண்ணு மாதிரியே படத்தில் தெரியும். அதுக்கு அந்த பாண்டிங்தான் காரணம்.’’

"மைனஸ் 10 டிகிரி குளிரில் நடிச்சேன்!"

‘`உங்க நடிப்பு மாதிரி, உங்க ஸ்க்ரிப்ட் செலக்‌ஷனும் பேசப்படுது. கதைகளை எப்படித் தேர்ந்தெடுக்குறீங்க’’

``ஆடியன்ஸ் மாதிரிதான் கதை கேட்பேன். ஸ்கிரிப்ட் ஃபுல்லா படிப்பேன். என்னை இம்ப்ரஸ் பண்ணுனா, அந்தக் கேரக்டரைப் பற்றி டைரக்டர்கிட்ட அதிகமா கேட்டுத் தெரிஞ்சுப்பேன். இந்த ப்ராசஸ்தான் மூணு படங்களிலும் நடந்துச்சு. மூணு இயக்குநர்களும் கதையைச் சொல்லும்போதே இம்ப்ரஸ் ஆகிட்டேன். குறிப்பா, `கும்பளங்கி நைட்ஸ்’ல ’பேபி’, என் நிஜ கேரக்டரோடு மேட்ச் ஆகிப்போகும். அந்த கேரக்டர்தான் என் ஃபேவரைட்.’’

``உங்க படங்கள் மலையாளத்தையும் தாண்டி எல்லா மொழி மக்கள்கிட்டயும் ரீச்சாகியிருக்கு... குறிப்பா தமிழ்நாட்டில்...’’

``சந்தோஷமான விஷயம். டிஜிட்டல் தளங்கள் ஒரு படத்தை உலகம் முழுக்கக் கொண்டுபோய்ச் சேர்க்குது. `கும்பளங்கி நைட்ஸ்’, `ஹெலன்’, `கப்பேலா’ படங்கள் எல்லாமே ஓடிடி தளங்களில் ரிலீஸானதுக்கு அப்புறம்தான் பெரிய அளவில் ரீச் ஆச்சு. சோஷியல் மீடியாக்களில் படத்தைப் பத்திப் பேசப் பேச அடுத்தடுத்த படங்களுக்கான ஓப்பனிங் பெருசாச்சு. இது என் கரியரோட ஆரம்பக்காலகட்டம்கிறதனால புது முயற்சிகள் பண்றது, நடிக்கிறதுக்கு சவாலான கேரக்டர்கள்னு ஸ்கிரிப்ட்டை செலக்ட்டிவா பண்ணணும்னு நினைக்கிறேன். ஒவ்வொரு கேரக்டருக்கும் வித்தியாசங்கள் இருக்கிறது ரொம்ப முக்கியம்.’’

"மைனஸ் 10 டிகிரி குளிரில் நடிச்சேன்!"

‘`தமிழ் சினிமாவை ஃபாலோ பண்ணுறீங்களா, யார் படத்தில் நடிக்கணும்னு ஆசைப்படுறீங்க?’’

``அப்பா நிறைய தமிழ்ப்படங்கள் பார்ப்பார். அவரோடு சேர்ந்து நானும் பார்ப்பேன். இந்த இயக்குநர், இந்த நடிகர்னு இல்லாமல் நல்ல டீமோடு வொர்க் பண்ணணும்னு ஆசை இருக்கு. தமிழ்ப் படங்களில் நடிக்கிறதுக்காக சில பேர் கேட்டாங்க. ஆனால், எதுவும் உறுதியாகலை. சீக்கிரமே என்னோட தமிழ் என்ட்ரி இருக்கும்.’’

சீக்கிரமே வரணும் சேச்சி! மனசிலாயி?