கட்டுரைகள்
Published:Updated:

“எங்களை ஏன் ஆண் நடிகர்களுடன் ஒப்பிடுகிறீர்கள்?”

டாப்ஸி
பிரீமியம் ஸ்டோரி
News
டாப்ஸி

இங்கு யாரும் பெண்களின் பிரச்னைகளுக்காக வர மாட்டார்கள்.

டாப்ஸி... வெறுமனே ‘வெள்ளாவி வெச்சு வெளுத்த அழகுப்பதுமை’ அல்லர்; துணிச்சலான சினிமாக்கள், வெளிப்படையான அரசியல் கருத்துகள் எனத் தன் ஆளுமையை அகலப்படுத்திக்கொண்டவர். அவருடன் ஒரு க்வாரன்டீன் நாள் மாலையில் பல கதைகள் கதைக்கும் வாய்ப்பு.

‘`ஹேப்பி க்வாரன்டீன் மாலை. இந்த நாள்கள் எப்படிப் போயிட்டிருக்கு?’’

‘`மும்பை வீட்ல தங்கச்சியோடு இருக்கேன். பார்க்காமல் விட்டுப்போன படங்களைப் பார்த்துட்டு இருக்கேன். ‘Succession’, ‘killing eve’ இந்த இரண்டு தொடர்களையும் ஃபாலோ பண்றேன். அதுபோக சமையல், க்ளீனிங், வாஷிங்னு வீட்டு வேலைகளுக்கே நேரம் சரியா இருக்கு’’

டாப்ஸி
டாப்ஸி

‘`சமீபத்தில் நீங்கள் நடித்து வெளியான ‘தப்பட்’ படம் குடும்ப வன்முறைக்கு எதிரானது. நீங்கள் நடித்த அம்ரிதா கதாபாத்திரம் குடும்ப வன்முறைக்காக எடுக்கும் விவாகரத்து முடிவு நிஜத்தில் இந்தியப் பெண்களிடம் சாத்தியமா?’’

‘`அம்ரிதாவின் வாழ்க்கைமுறையும் வாய்ப்புகளும் எல்லோருக்குமானது அல்ல. படத்திலேயே அம்ரிதாவின் வீட்டில் வேலை பார்க்கும் பெண், வேறு முடிவைத்தான் எடுக்கிறாள். தினமும் கணவரால் சித்ரவதைக்குள்ளாகும் அந்தப் பெண், இனி நான் வேலைக்குச் செல்ல மாட்டேன் என்கிறாள். உனக்குத் தேவையென்றால் நீ போய் உழைத்துக்கொள் என்கிறாள். ‘இதுவும் கடந்துபோகும்’ எனப் பெண்கள் இருப்பது தவறு. அதிலிருந்து ஓடி ஒளிவதில் எந்தப் பயனுமில்லை.அவர்களை அவர்கள்தான் தற்காத்துக்கொள்ள வேண்டும். இங்கு யாரும் பெண்களின் பிரச்னைகளுக்காக வர மாட்டார்கள்.’’

‘`உங்கள் கரியரில் மிக முக்கியமான படம் ‘பிங்க்.’ இந்தப் படம் தமிழில் கடந்த ஆண்டு ‘நேர்கொண்ட பார்வை’யாக வெளியானது. தெலுங்கிலும் ரீமேக் ஆனது. ஆனால், இந்தியில் இருந்த கதைக்கருவின் தீவிரம் தமிழ், தெலுங்கில் இல்லையே?’’

‘`2016-ம் ஆண்டு ‘பிங்க்’ படம் வெளியானபோதே ரீமேக் பேச்சுவார்த்தைகள் எழுந்தன. ஆனால், பாலிவுட்டிலேயே இந்தப் படத்தை அப்போது தயாரிக்க யாரும் முன்வரவில்லை. இதுபோன்ற படங்களுக்கு மக்களின் ஆதரவும் 100 சதவிகிதம் இருக்காது. பொதுப்புத்திக்கு எதிரான படத்தை எல்லோரும் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?

டாப்ஸி
டாப்ஸி

இப்படியான படங்களுக்கு ரசிகர்கள் இல்லை என்பதுதான் பலரது வாதம். தமிழ், தெலுங்கிலும் இதே சூழல்தான். . பணம் போடும் தயாரிப்பாளர், அந்தப் பணத்தை மீண்டும் எடுக்க யோசிக்கத்தான் செய்வார். மக்களைத் திரையரங்கத்துக்குள் அழைத்து வர ஓர் ஆண் சூப்பர்ஸ்டார் தேவைப்படுகிறார். படத்தின் கருவையும் தாண்டி அந்த சூப்பர்ஸ்டாருக்குப் பாடல்களும், ஃபிளாஷ்பேக் காட்சிகளும், சண்டைகளும் தேவைப்படுகின்றன. நல்ல கருத்தை எடுத்துச் சொல்லவும் கஷ்டப்பட வேண்டியதிருக்கிறது.’’

‘`ஆனால், பெண்களை மையப்படுத்தும் படங்கள் இந்திய சினிமாவில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறதே?’’

‘`சினிமா முற்றிலுமாக மாறவில்லை. என்னைப் போன்று சில நடிகைகள் மாறியதால், சினிமாவில் எங்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. பன்னெடுங்காலமாக இருக்கும் ஆணாதிக்கம் ஒரு சில ஆண்டுகளில் மாறிவிடாது.’’

‘`சினிமாக்கள் தாண்டி வெளியே உங்கள் பேச்சுகள் சர்ச்சைக்குரியதாகி விவாதங்களைக் கிளப்புகிறதே?’’

‘`கோவா திரைப்பட விழாவில், நீங்கள் அனைத்து பதில்களையும் இந்தியில்தான் சொல்ல வேண்டும் என ஒரு நிருபர் கட்டளையிட்டபோது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் இந்தியில் மட்டும் படங்கள் நடிப்பது இல்லையே. எல்லோருக்கும் புரியும் மொழியில் பேச விரும்புகிறேன். அதனால்தான் தமிழில் பேசவா எனக் கேட்டேன்.

டாப்ஸி
டாப்ஸி

‘ஆயுஷ்மான் குரானா போலவே டாப்ஸியும் நல்ல படங்கள் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்’ என சமீபமாக என்னைப்பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். நான் ‘பேபி’, ‘பிங்க்’ போன்ற படங்கள் நடிக்க ஆரம்பித்தபோது ஆயுஷ்மான் குரானா இப்படியாக எந்தப் படமும் நடிக்கவில்லை. ஏன் யாரும், ஆயுஷ்மானை லேடி டாப்ஸி எனச் சொல்வதில்லை. அது ஏன், எப்போதும் ஒரு பெண்ணை மட்டும் வெற்றிபெற்ற நடிகரின் பெயரோடு ஒப்பிடுகிறீர்கள். லேடி ஆயுஷ்மான், லேடி அமிதாப், லேடி அக்‌ஷய்... இவற்றுக்கெல்லாம் எப்போது முடிவுகட்டப்போகிறோம். லேடி ஆயுஷ்மான் என என்னை அழைத்தது என் அடுத்த படத்தின் தயாரிப்பாளர்தான். இதனால், அடுத்து எனக்குப் பட வாய்ப்புகள் வருமா, வராதா என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை. எது எனக்கு சரியெனத் தோன்றுகிறதோ அதைப் பேசுகிறேன்.’’

டாப்ஸி
டாப்ஸி

‘`டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட போது, மாணவர்களுக்கு ஆதரவாகப் பேசியிருந்தீர்களே?’’

‘`குடியுரிமைச் சட்டத்தின் ஆரம்ப நாள்களில் எனக்கு அதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. ஆனால், மாணவர்கள் தாக்கப்பட்ட வீடியோக்கள் பார்த்தபோது மனம் வெதும்பிப்போனேன். மாணவர்களுக்குள் கட்டாயம் அரசியல் இருக்கும். ஆனால், வெளியே இருந்து ஆட்கள் வந்து மாணவர்களைத் தாக்குவது; குற்றம் சாட்டப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது என இதையெல்லாம் பார்த்து என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. தான் படிக்கும் கல்லூரியில் ஒரு மாணவர் பாதுகாப்பாக இல்லையென்றால், எங்கே அவருக்கான பாதுகாப்பு கிடைக்கப்போகிறது. மாணவர்களின் மீதான வன்முறைக்கு நான் என்றுமே எதிரானவள். ஒவ்வொரு முறையும் இளைஞர்களுக்கான படம் எனச் சொல்லித்தான் எங்கள் படங்களை விற்கிறோம். இளைஞர்கள்தான் இந்தப் படத்தைப் பார்ப்பார்கள், ஆதரிப்பார்கள் என்றெல்லாம் பேசுகிறோம். ஆனால் அவர்கள் பாதிக்கப்படும் போது ஒதுங்கிநின்று வேடிக்கை பார்ப்பது அறம் அல்ல.’’

‘`இனி டாப்ஸியை வழக்கமான மசாலாப் படங்களில் பார்க்க முடியாதா?’’

‘`நான் தெலுங்கு சினிமாவில்தான் அதிகமான கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். தமிழில் எனக்கான வாய்ப்புகள் குறைவு. தமிழைப் பொறுத்தவரை, ‘ஆடுகளம்’ படத்திலிருந்து ‘கேம் ஓவர்’ வரை, நான் நடிப்புக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன்.

டாப்ஸி
டாப்ஸி

என் சினிமாக்களை மீண்டும் ஒருமுறை பார்த்தாலே அதில் நான் எவ்வளவு தவறுகள் செய்திருக்கிறேன் என்பது தெரியும். ‘ஆடுகளம்’ ஐரீன் கதாபாத்திரத்தில் நடித்தபோது, எனக்கு சினிமா என்றால் என்னவென்றே தெரியாது. இப்போது கொஞ்சம் நடிக்க வருகிறது என்று உறுதியாகச் சொல்லமுடியும். வெற்றிமாறன் சாரிடம், ‘உங்கள் கதாநாயகர்களைப் போலவே, கதாநாயகிகளுக்கும் பெரிய கதாபாத்திரம் அமைத்து எனக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும்’ எனக் கேட்டிருக்கிறேன். ஒரு படத்தில் நான் 30 நிமிடங்கள் வந்தாலும் சரி, சிறப்பான கதாபாத்திரம் எனில் நடிக்கத் தயார்.’’

‘`அடுத்த தமிழ்ப்படம்?’’

‘`தமிழில் அடுத்து அஹமத் சார் இயக்கும் படத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கிறேன். ஸ்பை த்ரில்லர் படம் என்பதால் எனக்குக் கொஞ்சம் சண்டைக் காட்சிகளும் உண்டு.’’