
‘காப்பான்’ ரகசியம்
``ஒளிப்பதிவாளரா இருக்கும்போது வாழ்க்கை கொஞ்சம் நிதானமா இருந்தது. படப்பிடிப்பு முடிச்சிட்டு, நாளைக்கு என்ன பண்ணப்போறோம்னு பேசிட்டு, நல்லா தூங்கலாம். ஆனால், இயக்குநரா இருக்கும்போது தூக்கத்தில்கூட எதை எதையோ யோசிக்க வேண்டி இருக்கு. இங்க இருக்கிற இயக்குநர்கள் யாருக்கும் சரியா தூக்கம் வராது. நாளைக்கு என்ன நடக்கப்போகுதுன்னு தொடங்கி காட்சிகள் சரியா வரணும்ங்கிற வரைக்கும் ஒரு விதமான பதற்றநிலை, படம் ரிலீஸ் ஆகுற வரை இருக்கும்.’’
- தினசரி வாழ்வை விளக்குகிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த். சூர்யா நடிக்கும் `காப்பான்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பரபரப்பாக இருந்தவரைச் சந்தித்தோம்.

`` `கெட்ட விஷயங்களைப் பண்றவன் கெட்டவனும் இல்லை; எறும்புக்குக்கூடத் தீங்கு நினைக்காமல் இருப்பவன் நல்லவனும் இல்லை...’ `காப்பான்’ பேசப்போற விஷயம் இதுதான். சூர்யாவை நீங்க நல்லவர்னு நினைச்சா ஒரு சீன்ல வில்லனா தெரிவார். வில்லன்னு நினைச்சா அப்படியும் இருக்கமாட்டார். அதே மாதிரிதான் படத்துல நடிச்சிருக்கிற மோகன்லால், ஆர்யா, சாயிஷான்னு எல்லா கேரக்டர்களுக்கும் இரட்டை முகம்!’’
`` `என்.ஜி.கே’ படத்திற்குக் கிடைத்த ரிசல்ட் ‘காப்பான்’ படத்தின் பொறுப்பை அதிகப்படுத்தியிருக்கா?”
`` ‘என்.ஜி.கே’ எனக்குப் பிடிச்சிருந்தது. ஒரு படத்தோட வெற்றியோ தோல்வியோ இன்னொரு படத்தை பாதிக்காது. அதுமில்லாம நாங்க மூணு வருஷத்துக்கு முன்னாடியே இந்தப் படத்தை ஆரம்பிச்சுட்டோம்.’’
``முதல் முறையா உங்க படத்துல மோகன்லால்?”
`` ‘காப்பான்’ல மிக முக்கியமான கதாபாத்திரமே பிரதமர் கேரக்டர்தான். முதலில் இந்தக் கதாபாத்திரத்துக்கு அமிதாப் சார்கிட்ட கேட்டோம். அவரோட கால்ஷீட் கிடைக்காததால் மோகன்லால் சார்கிட்ட கேட்டோம். ஒளிப்பதிவாளரா என்னோட முதல் ரெண்டு படங்கள் மோகன்லால் சார்கூடதான் பண்ணினேன். அதனால இந்தப் படத்துக்காக அவர் கரெக்டா இருப்பார்னு தோணுச்சு. ரொம்ப கம்பீரமான ஒரு கேரக்டரை அவ்வளவு ஈசியா பண்ணிட்டார். தனக்கு முன்னாடி கேமரா இருக்கிறதை மறந்து நடிக்கிற நடிகர்.’’

``பொம்மன் இரானியை எப்படித் தமிழுக்குக் கொண்டு வந்தீங்க?’’
``பொம்மன் இரானி சார்கிட்ட, அவரோட கேரக்டர் பத்தி சொன்னதுமே, உடனே ஓகே சொல்லிட்டார். அவர் ஒரு சீனுக்குத் தயார் ஆகுறதப் பார்க்கவே செம ரகளையா இருக்கும். தமிழ்ல எழுதி வச்சிருக்கிற வசனத்தை இங்கிலீஷ்ல எழுதி வாங்கிப்பார். அதை இந்தியில பேசிப்பார்த்து முகபாவனைகள் சரிபார்த்துக்குவார். கேமராவுக்குப் பின்னாடி அந்தப் பேப்பரைக் காட்டினா, அதில் இருக்கும் வசனத்தை, அவர் சரிபார்த்து வெச்ச முகபாவனைகளோடு பேசுவார். நேர்த்தியான நடிகர்!”
``சூர்யா ஒரு பாசிட்டிவ் இமேஜ் கொண்ட நபர். அவருடைய கதாபாத்திரம் வில்லன் மாதிரி இருக்கும்னு அவர்கிட்ட சொன்னதும் என்ன சொன்னார்?’’
``சூர்யாவுக்குன்னு ஒரு நியாய தர்மம் வச்சிருக்கார். அதுக்கு உட்பட்டு இருக்கணும்னு அவர் நினைப்பார். அந்த விஷயங்களையெல்லாம் கதை சொல்லும்போதே சரி செய்திடுவார். குறிப்பா, பெண்களை இழிவுப்படுத்துற மாதிரி காட்சிகள், வசனங்கள் இருந்தாலும், நெருக்கமான காட்சிகள் இருந்தாலும் அதையெல்லாம் வேண்டாம்னு சொல்லிடுவார். அவருக்கு இருக்கிற சந்தேகங்களைக் கேட்பார். முழுசா நம்பிய பிறகுதான் நடிக்க சம்மதம் சொல்லுவார். அப்படி ஓகே சொல்லி ஒரு படத்துல கமிட்டாகிட்டா முழு உழைப்பையும் அதில் போடுவார். ‘அயன்’, `மாற்றான்’ படங்களுக்கு உழைச்சதைவிட அதிகமாக இந்தப் படத்துக்கு உழைச்சிருக்கார். `காப்பான்’ல ஒரு கஷ்டமான, ஸ்டன்ட் காட்சி, ஏழாவது டேக்லதான் ஓகே பண்ணினோம். சூர்யா மானிட்டர் பார்த்துட்டு, ‘சார், அந்த ஜம்ப் சரியா வரலை பாருங்க. நான் இன்னொரு முறை சரியா பண்றேன்னு சொல்லி அடுத்த டேக்ல பக்காவா பண்ணினார். `நேருக்கு நேர்’ படத்துல நான் ஒளிப்பதிவாளரா இருந்தப்போ சூர்யாவுக்கு அது முதல் படம். கேமராமேனாக சில இடங்களில் அவரை மனசுக்குள்ளேயே திட்டியிருக்கேன். இப்போ அன்னிக்குப் பார்த்த சூர்யாவா இதுன்னு பல முறை என்னை ஆச்சர்யப்படுத்துகிறார்.’’

``புது மாப்பிள்ளை ஆர்யாவுக்கு என்ன மாதிரியான ரோல்?’’
``ஆர்யா கதாபாத்திரத்துக்கு முதலில் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ்தான் கமிட்டாகியிருந்தார். லண்டன்ல ஷூட்டிங். கடைசி நேரத்துல விசா பிரச்னை. அப்போ வேறு சில நடிகர்களுக்கு போன் அடிச்சு கதை சொன்னேன். எல்லாரும் ஹீரோயிசம் இல்லைன்னு சொன்னாங்க. அந்தமாதிரி சொன்ன யாருக்கும் அப்போ படமே இல்ல; வீட்டுல சும்மாதான் இருந்தாங்க. இதிலேயே ஒரு நாள் ஓடிப்போச்சு. அப்போ ஒருத்தர், ஆர்யாகிட்ட அஞ்சு வருஷத்துக்கு லண்டன் விசா இருக்குன்னு சொன்னார். உடனே நான் ஆர்யாவுக்கு போன் பண்ணி, கதை சொல்ல ஆரம்பிச்சேன். அதுக்கு அவர், `சார் நான் பண்ணுனா சரியா இருக்கும்ல, உங்களுக்கு ஓகேதானே?’ன்னு கேட்டார். ஓகே சொன்னதும் அடுத்த நாலு மணி நேரத்துல ஃப்ளைட் ஏறி வந்துட்டார்.’’
`` `காப்பான்’ ஷூட்டிங் ஸ்பாட்ல ஆர்யா - சாயிஷாவோட காதலை நோட் பண்ணுனீங்களா?’’
``இல்ல. ஏன்னா, ஆர்யா செட்ல இருந்த எல்லாப் பெண்கள்கிட்டேயும் லவ் பண்ற மாதிரிதான் பேசுவார். அதனாலகூட எங்களுக்கு சந்தேகம் வராம இருந்திருக்கலாம். அவங்க லவ் பண்றாங்கன்னு ஆர்யா ட்விட்டர்ல அறிவிச்சதும்தான், ‘இது எப்படா நடந்துச்சு’ன்னு இருந்தது. இந்த இடத்தில் நான் சாயிஷா பற்றிச் சொல்லணும். ஒரு முக்கியமான ஹீரோயினா தமிழ் சினிமாவுல வலம் வரக்கூடிய ஆள். அவங்களுக்கு டான்ஸ் மட்டுமே நல்லா வரும்னு ஒரு பிம்பம் இருக்கு; ஆனா, எல்லா ரியாக்ஷன்களையும் நேர்த்தியா கொடுக்குற ஒரு நல்ல ஹீரோயின்.’’

``கதாசிரியர்கள் உங்க படத்துல ஒரு முக்கியமான அங்கமா இருக்காங்க; தொடர்ந்து கதாசிரியர்களோடு வேலை பார்ப்பது எப்படி இருக்கு?’’
``எப்போதும் எனக்கு ஒரு குழுவா உக்காந்து கதை விவாதம் பண்றது பிடிக்காது. நானும் என்னோட எழுத்தாளர்கள் மட்டும் பேசி, கதையை முடிவு பண்ணுவோம். என்னோட படத்துல கதாசிரியருக்கு உண்டான மரியாதையைச் சரியா தரணும்னு நினைப்பேன். கதையை அவங்ககிட்ட காசு கொடுத்து வாங்கிட்டு, அதில் என் பெயரைப் போட்டுக்க மாட்டேன்.’’
``சமீபமா பெரிய பெரிய படங்களுக்கே கதைத்திருட்டுப் பிரச்னை வந்துச்சு; அதற்கு உங்களோட பதில் என்ன?’’
`` `என்கிட்ட ஒரு கதை இருக்கு; அதைக் கேட்டு உங்களோட கருத்துகளைச் சொல்லுங்க’ன்னு யாராச்சும் வந்தா, நான் கதையைக் கேட்கவே மாட்டேன். அவங்க சொல்ற கதையில இருக்கிற சீன், என்கிட்ட இருக்கிற கதையில இருந்தா அதை நான் தூக்கவேண்டியிருக்கும். இல்லைன்னா, என்கிட்ட கேட்டுத்தான் அவரோட படத்துல வெச்சுக்கிட்டார்னு சொல்லிடுவாங்க. அதனாலேயே இதையெல்லாம் நான் தவிர்த்திடுவேன்.’’
``ஹாரிஸ் ஜெயராஜோடு மீண்டும் இணைச்சிருக்கீங்க...’’
``ஹாரிஸ் ஜெயராஜோடு வொர்க் பண்றது எப்போதுமே ஸ்பெஷல்தான். எங்களோட முந்தைய பட ஆல்பங்கள் மாதிரி, இந்தப் படத்திலும் வழக்கம்போல எல்லா விதமான பாட்டும் இருக்கு. ரொம்ப நல்லாவும் வந்திருக்கு.’’
``உங்க படங்கள் ஒரு டெம்ப்ளேட் வட்டத்துக்குள்ள சிக்கிக்கிட்டு இருக்குங்கிற விமர்சனங்களை நீங்களே உங்க படங்களில் கேலி பண்றீங்களே?’’
``என்னோட படங்களின் டைட்டில் ‘ன்’ எழுத்துல முடியுறது ஒரே மாதிரி இருக்குன்னு சொல்றாங்க. ‘யாராவது செத்தா, உடனே பாட்டா?’ன்னு கேட்கிறாங்க. இப்படி என் படங்களில் தொடர்ந்து வர வழக்கமான விஷயங்களை நான் தவிர்க்கத்தான் பாக்குறேன். அதே மாதிரி பாடல்களுக்கு ஃபாரின் போறதும் சலிப்புத் தட்டும் விஷயமா இருக்கு. ஒரு பாட்டு வைக்கிறோம், அதை செட்டுலையே எடுக்குறது எனக்குப் பிடிக்காது. இந்தக் காலத்து வாட்ஸ் அப் இளைஞனுக்கு சலிப்பு ஏற்படாம இருக்க ஃபாரின் போக வேண்டி இருக்கு. எனக்கு, பாடல்களே இல்லாம படம் பண்றதுக்கும் ஓகேதான். ஆனா இங்கே இருக்கிற வணிக விஷயங்கள் பாடல்களைக் கேக்குது.’’

``டைரக்டரானதுக்குப் பிறகு ஒளிப்பதிவுக்குன்னு உங்களை யாரும் அணுகவில்லையா?’’
``ஷங்கர் சார், தன்னோட எல்லாப் படத்துக்கும் என்னை ஒளிப்பதிவு செய்யச் சொல்வார். `அனேகன்’ முடிச் சிட்ட பிறகு `2.0’ படத்துக்காகக் கேட்டார். `3டி படம், நீங்க பண்ணுனா நல்லா இருக்கும்’னு கூப்பிட்டார். `8 மாசத்துல முடிஞ்சிடுமா’ன்னு கேட்டேன். ‘இல்ல, ஒன்றரை வருஷ மாகும்’னு சொன்னார். அதனால் பண்ண முடியாமப் போச்சு. நானும் அப்பப்போ ஒளிப்பதிவு பண்ணணும்னு நினைப்பேன். ஆனா அது நடக்காது.’’
``ஒவ்வொரு படத்துக்கும் வெவ்வேறு மார்க்கெட் வேல்யூ உள்ள ஹீரோக்கள், வெவ்வேறான பட்ஜெட்; இந்த ஏற்ற இறக்கத்துக்கு என்ன காரணம்.?’’
``என்னுடைய கதைகள் ஹீரோக்களுக்காக எழுதப் படுறது கிடையாது. நான் கதை ரெடி பண்ணிட்டு அது யாருக்கு செட்டாகுமோ அவங் களுக்குப் படம் பண்ணுவேன். சூர்யாவோடு ‘அயன்’ பண்ணிட்டு யாருமே ‘கோ’ படத்தை ஜீவாவை வெச்சுப் பண்ணமாட்டாங்க. `கவண்’ படக்கதைக்கு நான் ஹீரோ தேடும்போது, `விஜய்கிட்ட கால்ஷீட் இருக்கு. நீங்க கதை சொல்லுங்க’ன்னு சொன் னாங்க, `என்கிட்ட விஜய் படத் துக்கான கதை இல்லை’ன்னு சொல்லிட்டேன். `அனேகன்’ படத்துக்கு வாங்கின சம்பளத்தைவிடக் குறைவாகத் தான் `கவண்’ படத்துக்கு வாங்கினேன். என்னைப் பொறுத்தவரைக்கும் நாம் எந்த விஷயத்தைத் தவிர்க்கிறோமோ அதுதான் நம்ம யாருன்னு தீர்மானிக்குது.’’

``அடுத்த படம்?’’
``எப்பவும் ஒரு படம் பண்ணும்போதே அடுத்த படத்துக்கான வேலைகள் பண்ண மாட்டேன். ‘காப்பான்’ பண்ணிட்டிருக்கும் போதே லைகா நிறுவனம் இன்னொரு படம் பண்ணலாம்னு கேட்டாங்க. `என்கிட்ட கதை இல்ல’ன்னு சொல்லிட்டேன். இந்தப் படம் முடிச்சதுக்குப் பிறகுதான் யோசிக்கணும்.
என்னோட ஒவ்வொரு பட ரிலீஸுக்குப் பிறகும் என்கிட்ட இருக்கிற கொஞ்ச நிலத்துல விவசாயம் பண்ணப் போயிடுவேன். ஒரு நல்ல லைன் தோணுச்சுன்னாதான் திரும்பப் படம் பண்ண வருவேன். அதுவரை விவசாயம்தான்!’’