Published:Updated:

“விஷாலை ரொம்ப மிஸ் பண்றேன்!”

 மிஷ்கின்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஷ்கின்

விஷால் பண்ணுன நல்ல விஷயங்களை மட்டுமே நான் யோசிக்க ஆசைப்படுறேன். விஷால் நல்ல நடிகனும்கூட.

‘துப்பறிவாளன் -2’ல் இருந்து வெளியேற்றம், விஷாலுடன் மோதல், அருண் விஜய்யுடன் அஞ்சாதே-2, சிம்புவுடன் ஒரு படம் என சினிமா ரிப்போர்ட்டர்களுக்கு எப்போதும் பரபர செய்திகளைப் பஞ்சமில்லாமல் தருபவர் இயக்குநர் மிஷ்கின்.
 மிஷ்கின்
மிஷ்கின்

‘`லாக்டெளன் காலம் எப்படியிருக்கு?’’

“இந்த மூணு மாசத்துல நிறைய படிச்சேன், எழுதினேன், சிந்திச்சேன். சில நண்பர்கள்கூட சினிமா, வாழ்க்கையைப் பற்றிப் பேசினேன். நிறைய விஷயங்களை விசாரணை பண்ணினோம். இந்த நாள்கள்ல மதங்கள், ஜோசியம்லாம் இல்லாமப் போயிருச்சு. இயற்கை எல்லாத்தையும் வாரிச் சுருட்டி எறிஞ்சிட்டுப் போகுது. பணக்காரன், ஏழைன்னு எல்லாருமே ஒண்ணுன்னு சொல்லியிருக்கு.’’

‘` ‘அஞ்சாதே -2’ அருண்விஜய்கூட பண்றீங்களாமே?’’

‘`அருண்விஜய்க்கு போலீஸ் கதை பண்றேன். அதனால, அதை ‘அஞ்சாதே 2’ன்னு நினைச்சுட்டாங்க. நான் ‘அஞ்சாதே 2’ எடுக்க மாட்டேன். அதுல எனக்கு நம்பிக்கை இல்ல. முதல்ல ‘அஞ்சாதே’ எடுத்தப்போ ஓடுமான்னு தெரியாமலேயே எடுத்துட்டேன். ஓடிருச்சு. அந்தப் படம் ஹிட் ஆனதால பார்ட் 2 எடுக்கணும்னு அவசியம் இல்ல. வியாபாரத்துக்காக இப்படிச் சொல்லிட்டு இருக்காங்க. இதுல எனக்கு உடன்பாடில்ல. என்னோட புதுப்படத்துக்கு நல்ல டைட்டில் வெச்சிட்டேன். சீக்கிரம் சொல்லுவேன். நல்லா நடிக்கக்கூடிய பையன் அருண்விஜய். இப்போ நல்ல ஸ்க்ரிப்ட் அமைஞ்சிருக்கு.’’

 மிஷ்கின்
மிஷ்கின்

‘`அப்ப சிம்பு புரொஜெக்ட் என்னாச்சு?’’

‘`எட்டு வருஷமா ரெண்டு பேரும் படம் பண்ணணும்னு பேசிட்டே இருக்கோம். லாக்டெளன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி கதை சொன்னேன். ஆக்‌ஷன் ஸ்டோரி. சிம்புக்கு ஏத்த கதை. தம்பிக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. அவர் ‘மாநாடு’ ஷூட்டிங் முடிச்சிட்டு வர்றதுக்கு ஒரு வருஷம் ஆகும். அதுக்குள்ள, அருண்விஜய் புராஜெக்ட். தவிர ‘காவு’ன்னு ஒரு பேய்ப் படம் பண்ணலாம்னு முடிவு பண்ணி வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கேன்.’’

‘`உங்க கேரக்டருக்கும், சிம்புவுக்கும் ஷூட்டிங் ஸ்பாட்ல செட்டாகும்னு நினைக்கிறீங்களா?’’

‘`ஏன் அப்படி யோசிக்கணும்? சிம்புவோ, நானோ யாரா இருந்தாலும் கதைக்குக் கீழதான். கதைதானே முக்கியம். சின்ன வயசுல இருந்து சினிமாவைப் பார்த்து வளர்ந்த பையன் சிம்பு. ரொம்ப புரொஃபஷனல். என்னை ரொம்ப மதிக்குற பையன். நாளைக்கு ஏதாவது பிரச்னை வருமான்னு எனக்கு எந்த பயமும் இல்ல. என்னால யார்கூடவும் வொர்க் பண்ண முடியும். சிம்புவைப் பல வருஷமா நல்லாத் தெரியும். நிறைய டைம் தம்பி ஆபிஸுக்கு வந்திருக்கு. பெரிய ஹீரோன்னு எந்த பந்தாவும் இல்லாமப் பழகக்கூடிய தம்பி . அதனால, ரொம்ப ஸ்மூத்தா எங்க புரொஜெக்ட் போகும்னு நம்பிக்கை இருக்கு.’’

‘`அன்பும் மன்னிப்பும்தான் பெரிய விஷயம்னு படத்தில சொல்றீங்க. ஆனால் மேடையில் ஏன் விஷாலைத் திட்டுறீங்க? விஷால் மன்னிப்பு கேட்டா ஏத்துக்குவீங்களா?’’

“விஷால் பக்கம் மட்டும் தப்பில்ல. அதனால அவர் மன்னிப்பெல்லாம் கேட்கணும்னு அவசியமில்ல. எங்களுக்குள்ள பிரச்னை ஒண்ணு நடந்துச்சு. அந்தப் பிரச்னையால அவன் கோபப்பட்டான். அந்தப் பிரச்னையை எதிர்த்து என்னோட விளக்கத்தை நானும் கொடுத்தேன். அவ்வளவுதான். இதுக்கு மன்னிப்பெல்லாம் தேவையில்ல. விஷால் மேல எனக்குப் பரிசுத்தமான அன்பு இருக்கு. ஏன்னா, என்னோட தம்பி அவன்.

 மிஷ்கின்
மிஷ்கின்

இப்போ அவனை ரொம்ப மிஸ் பண்றேன். வாரத்துக்கு ரெண்டு முறை ஆபீஸ் வருவான். பயங்கரமா கத்துவான். காது பிடிச்சுத் திருகுவான். முத்தம் கொடுப்பான். ஆறடி உயரத்துல இருந்துட்டு இப்படியெல்லாம் ஒருத்தன் பண்ணுவான். இதையெல்லாம் மிஸ் பண்றேன். மத்தபடி எங்க சண்டை அப்படியேதான் இருக்கு. அவனும் விட்டுக்கொடுக்க மாட்டான். நானும் விட்டுக்கொடுக்க மாட்டேன். விஷால் பண்ணுன நல்ல விஷயங்களை மட்டுமே நான் யோசிக்க ஆசைப்படுறேன். விஷால் நல்ல நடிகனும்கூட. ஸ்பாட்ல, ‘அஞ்சாவது மாடில இருந்து குதிடா’ன்னு சொன்னா ‘எப்படிக் குதிக்க... திரும்பிக் குதிக்கட்டுமா, இல்ல தலைகீழா குதிக்கட்டுமா’ன்னு கேட்பான். ஒருநாள்கூட என்கிட்ட வந்து, ‘ஏன் இப்படிப் பண்ற’ன்னு கேட்டதேயில்ல. நெருப்பு மாதிரிப் பண்ணுவான்.’’

‘`உங்களைப் பற்றி சோஷியல் மீடியாவில் வரும் கமென்ட்ஸ் எல்லாம் படிப்பீங்களா?’’

‘`என்னோட அசிஸ்டென்ட் டைரக்டர் காட்டுவான். பார்த்துட்டு சிரிப்பேன். ஒரு விஷயத்தை ஆயிரம் முறை பார்ப்பேன்னு சொல்லியிருப்பேன். அதைக் கிண்டல் பண்ணியிருப்பாங்க. பேச்சுல, அப்படித்தானே சொல்லுவோம். ஒவ்வொரு முறையும் படம் பார்க்குறப்போ, புத்தகம் படிக்குறப்போ எண்ணிக்கிட்டே இருக்க முடியுமா..? எல்லாத்தையும் மிகைப்படுத்தித்தானே பேசுவோம். ஒரு பொண்ணை வர்ணிக்குறப்போ பேரழகின்னுதானே சொல்லுவோம். பாதியழகின்னு சொல்ல முடியுமா. இப்படி கமென்ட் பண்ற பையன் வாழ்க்கையில எதையும் படிக்கவே இல்லைன்னுதான் தெரியும்.’’