சினிமா
கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

சினிமா விகடன்: ரஜினியிடம் அரசியல் பேசினேன்! விஜய்க்குக் கதை சொன்னேன்!

பா.இரஞ்சித்,ஆர்யா
பிரீமியம் ஸ்டோரி
News
பா.இரஞ்சித்,ஆர்யா

பா.இரஞ்சித் சொல்லும் ரகசியங்கள்

மிழ் சினிமாவில் சென்னையின் அசல் முகத்தையும் அரசியல் வாழ்க்கையையும் அறிமுகப்படுத்திய பா.இரஞ்சித் மீண்டும் சென்னையைக் களமாகக் கொண்டு ‘சார்பட்டா’ படத்தை இயக்கிவருகிறார். இரண்டு புயல்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் அவரைச் சந்தித்துப் பேசினேன்.

``2018 ஜூன் மாதம் ‘காலா’ ரிலீஸ். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டன. ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?’’

“இந்த இரண்டரை ஆண்டுகளில்தான் ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என இரண்டு படங்களைத் தயாரித்து வெளியிட்டேன். இந்தியில் ‘பிர்ஸா முண்டா’ படத்தை இயக்குவதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஆறேழு மாதங்கள் பிஸியாக இருந்தேன். இந்தியில் ஒரு படத்தைத் தொடங்குவதற்கான செயல்முறை பெரிது. அதன் காரணமாக ‘பிர்ஸா முண்டா’ வேலைகள் தாமதமானதால், தமிழில் ஒரு படம் இயக்கிவிடலாம் என முடிவெடுத்தேன். அது மட்டுமல்லாமல் ‘காலா’வுக்கு அடுத்து உடனே ஒரு படம் தமிழில் செய்ய வேண்டாம், கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளலாம் என முன்னரே முடிவெடுத்திருந்தேன்.’’

சினிமா விகடன்: ரஜினியிடம் அரசியல் பேசினேன்! விஜய்க்குக் கதை சொன்னேன்!

‘` ‘கபாலி’, ‘காலா’ கதைக்களங்கள் மலேசியா, தாராவி என்று இருந்தன. இப்போது திரும்பவும் மெட்ராஸுக்குள் வந்திருக்கிறீர்கள். அதுவும் பழைய மெட்ராஸுக்குள்... படத்தில் என்ன ஸ்பெஷல்?’’

‘`முன்பு சென்னையில் வழக்கத்தில் இருந்த ஆங்கிலக் குத்துச்சண்டை பற்றித்தான் படம். இரண்டு பரம்பரை களுக்குள் நடக்கிற சண்டையில் யார் ஜெயிப்பார்கள், யார் தோற்பார்கள் என்கிற மோதல் தான் கதை. சென்ட்ரலுக்குப் பின்னால் இருக்கும் பகுதிதான் கதைக்களம். படத்தில் ஹீரோ வசிக்கும் பகுதியை ‘ரேவ்’ எனச் சொல்வார்கள். படத்தின் பெயர் ‘சார்பட்டா.’ இது, நான்கு கத்திகள் கொண்டு சண்டை செய்வதைக் குறிக்கும் என்கிறார்கள். உருதுமொழி வார்த்தை என்கிறார்கள். ‘சர்’ பட்டம் பெற்றவர் முதலில் சண்டை செய்தார் என்பதால் சார்பட்டா என வந்தது என்றார்கள். இப்படி ஏராளமான தகவல்களைக் கேள்விப்பட்டோம். இந்த வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்னவெனத் தெரியவில்லை.

சினிமா விகடன்: ரஜினியிடம் அரசியல் பேசினேன்! விஜய்க்குக் கதை சொன்னேன்!

வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன்பே இங்கே தமிழ்க் குத்துச்சண்டை வழக்கத்தில் இருந்திருக்கிறது. அதில் முகத்தில் மட்டும் குத்துவார்கள். ஆங்கிலேயர்கள் வந்தபிறகு அது ஆங்கிலக் குத்துச்சண்டையாக மாறிவிட்டது.

1995 வரை வடசென்னையில் இந்த விளையாட்டு மிகத்தீவிரமாக விளையாடப் பட்டு வந்திருக் கிறது. இது ஒரு பெரிய கலாசாரம். அதை முழுமையாக இந்தப்படத்தில் சொல்லிவிடமுடியாது. இரண்டரை மணி நேரத்துக்குள், என்னால் சொல்ல முடிந்த அளவுக்குச் சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். இதன் அடுத்தடுத்த பாகங்களை இயக்கவேண்டும் என்கிற ஆர்வமும் இருக்கிறது. ஏனென்றால், இதில் சொல்லப்படவேண்டிய கதைகள் இன்னும் நிறைய இருக்கின்றன.’’

‘`ஆர்யா இந்தக் கதைக்குள் எப்படி வந்தார்?’’

‘` ‘மெட்ராஸ்’ படம் வந்தபோதே ஆர்யா சார் ‘நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’ எனச்சொன்னார். அதற்கான சரியான நேரம் இப்போதுதான் அமைந்தது. இந்தக் கதைக்கு பாக்ஸருக்கான உடலமைப்பு கொண்ட நடிகர் தேவைப் பட்டார். அதற்கு ஆர்யா பொருத்தமாக இருந்தார். படத்தில் ஹீரோவின் பெயர் கபிலன். இந்தப்படத்துக்கான ஆர்யாவின் உழைப்பு அசாத்தியமானது. உடலை வடிவமைத்தது, பாக்ஸிங் கற்றுக்கொண்டது, இந்த கேரெக்டருக்கான உடல் மொழியை உருவாக்கிக் கொண்டது என பல முயற்சிகளை மேற் கொண்டார்.’’

சினிமா விகடன்: ரஜினியிடம் அரசியல் பேசினேன்! விஜய்க்குக் கதை சொன்னேன்!

‘`ஹீரோயின் புதுமுகமா?’’

‘`ஆமாம், மாரியம்மாவாக துஷாரா. நாம் கிராமங்களில் பார்க்கும் தைரியமான, துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பு நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்.’’

‘`படத்தில் நட்சத்திரப் பெருங்கூட்டமே இருக்கிறதே?’’

‘`பிரபலமான நடிகர்கள், பிரபலமாகப்போகும் நடிகர்கள் என நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். பசுபதி சார் ரங்கன் வாத்தியார் என்கிற முக்கியமான கேரெக்டரில் நடித்திருக்கிறார். கலையரசன், ஜான் விஜய், சந்தோஷ், அனுபமா என நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். என்னுடைய டெக்னீஷியன்ஸ் ஒளிப்பதிவாளர் முரளி சார், ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம், ‘மெட்ராஸ்’ படத்தின்போது துணை எடிட்டராக இருந்து இப்போது ‘பரியேறும் பெருமாள்’, ‘மூக்குத்தி அம்மன்’ எனப் பல படங்களில் பணியாற்றிய செல்வா எடிட்டிங் என நல்ல டீம். சண்டைக்காட்சிகள் அன்பறிவ்.’’

சினிமா விகடன்: ரஜினியிடம் அரசியல் பேசினேன்! விஜய்க்குக் கதை சொன்னேன்!

‘`உங்கள் படங்களில் காதல் காட்சிகள், பாடல்கள், வசனங்கள் தனிக்கவனம் பெறுமே... இந்தப்படத்தில் எப்படி?’’

‘`திருமணத்துக்குப் பிறகான காதல்தான் இதில் இருக்கும். திருமணத்துக்கு முந்தைய காதலைவிட திருமணத்துக்குப் பிறகான காதல் மிகவும் முக்கியம் என நினைப்பவன் நான். திருமண உறவுக்குள் இருக்கும் அந்நியோன்யத்தைக் காட்ட முயன்றிருக்கிறேன்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. பாடல்களை கபிலன், மெட்ராஸ் மீரான், அறிவு ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். பழைய இசைக்கருவிகளின் சத்தங்களை எல்லாம் கொண்டு வர சந்தோஷ் முயற்சிகள் எடுத்திருக்கிறார். படத்தில் நிறைய கானாப் பாடல்களும் இருக்கும்.

படத்துக்கான திரைக்கதை, வசனங்களை என்னோடு சேர்ந்து தமிழ்ப்பிரபா எழுதியிருக்கிறார். வசனங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நாங்கள் எழுதவில்லை. நாம் பேச்சுவழக்கில் என்ன இயல்பாகப் பேசுகிறோமோ அதுதான் படத்தில் இருக்கும். 70-களின் சென்னைத் தமிழுக்கும், இப்போதைய சென்னைத்தமிழுக்குமே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.’’

சினிமா விகடன்: ரஜினியிடம் அரசியல் பேசினேன்! விஜய்க்குக் கதை சொன்னேன்!

‘` ‘சார்பட்டா’வுக்குப் பிறகு...?’’

‘` ‘பிர்ஸா முண்டா’ படம் முடிக்க வேண்டும். மேஜிக்கல் ரியலிசம்மேல் ஒரு ஆர்வம் இருக்கிறது. அந்த ஜானரில் ஒரு படம் இயக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏற்கெனவே ஒரு கதை எழுதித் தயாராக வைத்திருக்கிறேன். அதற்கு முன்பு ஒரு லவ் ஸ்டோரி பண்ணலாம் என்கிற திட்டமும் இருக்கிறது. இந்த லாக்டெளனில் எழுதிய கதை இது. இப்போதைய லைப்ஸ்டைல் பற்றிய படம்.’’

சினிமா விகடன்: ரஜினியிடம் அரசியல் பேசினேன்! விஜய்க்குக் கதை சொன்னேன்!

‘`ஓடிடி-க்கான ஆந்தாலஜி படங்களும் இயக்கியிருக்கிறீர்களே?’’

‘`வெங்கட் பிரபு சார், சிம்புதேவன் சார், ராஜேஷ், நான் எல்லோரும் சேர்ந்து ஒரு ஆந்தாலஜி படம் இயக்கி யிருக்கிறோம். த்ரில்லர் கான்செப்ட். என் கதையில் குருசோமசுந்தரம், கலையரசன், ஹரி, லிஸி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். எந்த பிளாட்பாரம் என்பது இன்னும் முடிவாகவில்லை. விரைவில் ரிலீஸாகும்.

இதுதவிர சில்க் ஸ்மிதா பற்றிய ஒரு வெப்சீரிஸ் எடுப்பதற்கான பேச்சு வார்த்தைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.’’

சினிமா விகடன்: ரஜினியிடம் அரசியல் பேசினேன்! விஜய்க்குக் கதை சொன்னேன்!

‘`உங்கள் தயாரிப்பில் இருக்கும் படங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?’’

‘`பெருமாள் முருகனின் கதையை அடிப்படையாக வைத்து ‘சேத்துமான்’ என ஒரு படம் எடுத்திருக்கிறோம். தமிழ் என்பவர் இயக்கியிருக்கிறார். இதை டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யலாம் எனத் திட்டம். கலையரசன் நடிப்பில் ‘குதிரைவால்’ என ஒரு மேஜிக்கல் ரியலிசப் படமும் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. யாழி புரொடக்‌ஷ னோடு சேர்ந்து செய்தி ருக்கிறோம். இந்தப்படத்தின் டீசருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான முயற்சியாக இது இருக்கும். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும். அது ஸ்போர்ட்ஸ் படம். முக்கியமான நடிகர்தான் நடிக்கிறார். ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ இயக்குநர் லெனின் பாரதி இயக்கும் படத்தின் வேலைகளும் ஆரம்பமாகவிருக்கின்றன. ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கிறார். ப்ராங்க்ளின் இயக்கும் படத்தில் சமுத்திரக்கனி சார் நடிக்கிறார். எல்லாப் படத்தின் வேலைகளும் அடுத்தடுத்து தொடங்கும்.’’

‘‘ `திரைப்படத்தைத் தாண்டியும் ‘நீலம்’ இதழ், ‘நீலம் பண்பாட்டு மையம்’, ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ எனப் பல முயற்சிகளில் ஈடுபடுகிறீர்கள். ஓர் இயக்குநரின் செயற்பாடு கலையைத் தாண்டியும் இருக்கவேண்டியது அவசியம் என்று கருதுகிறீர்களா?’’

“களத்தையும் கலையையும் ஒன்றுசேர்ப்பதுதான் என் நோக்கம். கலைச் செயல்பாடு என்பது களத்தில் உண்டாக்கும் மாற்றத்தை ஒட்டித்தான் இருக்கிறது. அதனால் இரண்டுமே அவசியம் என்றுதான் நான் பார்க்கிறேன்.’’

‘`உங்களுடைய நீலம் பண்பாட்டு மையம் அரசியல் முயற்சியா... நேரடி அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இருக்கிறதா?’’

‘`இப்போதைக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. சமூகப்பண்பாட்டு தளங்களில் இயங்குவது மட்டும்தான் என்னுடைய திட்டம்.’’

‘`சாதியற்ற சமூகம்தான் தேவை என்று சொல்லும் ஒடுக்கப்பட்டவர்களே சாதியாக ஒன்றுதிரள்வது தொடர்ந்து நடைபெறுகிறதே?’’

‘`அரசியல் சூழல், சாதியாக எல்லோரையும் ஒன்று சேர்ப்பதில்தான் ஆர்வம் காட்டுகிறது. இந்த அரசியல் இப்போதல்ல, காந்தி காலத்திலிருந்தே இருக்கிறது. காந்தி வெறுமனே தீண்டாமை ஒழிப்பு பற்றி மட்டும் பேசினார். அம்பேத்கரோ தீண்டாமை ஒழிப்புக்கு அடிப்படையான சாதி ஒழிப்புப் பற்றிப் பேசினார். தீண்டாமை, அதற்குக் காரணமான சாதி இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டும். ஆனால் ஒவ்வொரு சாதியும் ஒரு ஆண்ட வரலாற்றைத் தேடுகிறார்கள். இது ஒடுக்கப்பட்ட சாதி முதல் எல்லா சாதிகளிலும் நடப்பது துயரமான விஷயம்.’’

``ரஜினியை வைத்து இரண்டு படங்கள் இயக்கிவிட்டீர்கள். விஜய்யை இயக்கவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறதா?’’

‘`எல்லோருடனும் படம் செய்யவேண்டும் என்கிற ஆசை எனக்குண்டு. ‘காலா’ முடித்ததுமே விஜய் சாரை நேரில் சந்தித்துக் கதை சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. சூப்பர் ஹீரோ கதைதான். பார்க்கலாம்.’’

“ரஜினியுடன் நெருங்கிப்பேசும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அவரின் அரசியல் நிலைப்பாட்டை, அரசியல் எதிர்காலத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“ரஜினி சாருடன் அரசியல் குறித்து அதிகம் உரையாடியிருக்கிறேன். அவருக்கு அரசியலில் ஈடுபட வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. அதே சமயம், மக்களை நல்வழிப்படுத்த ஆன்மிகம் உதவும் என்றும் அவர் நம்புகிறார். இந்த இரண்டு விருப்பங்களிலிருந்தும் தனது அரசியல் நிலைப்பாட்டை உருவாக்க நினைக்கிறார்.’’