சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

பிகிலில் அரசியல் இருக்காது!

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்

“சொந்த ஊர் திருச்செந்தூர். சென்னைத் திரைப்படக் கல்லூரியில் டைரக்ஷன் கோர்ஸ் முடிச்சேன். அதைத்தொடர்ந்து விஜய் சார் நடிப்பில் அழகம்பெருமாள் சார் இயக்கின ‘உதயா’ படத்தில் உதவி இயக்குநர்.

பிறகு விஜய் டிவியில் சீரியல்களுக்கான நிகழ்ச்சிப் பொறுப்பாளர். அந்தக் காலகட்டத்துலதான் ‘கனா காணும் காலங்கள்’ போன்ற சீரியல்களுக்கு வசனம் எழுதினேன். 2015-ல விஜய் டிவியில் சினிமாவுக்கான பொறுப்பாளரா இருந்த மகேந்திரன் சார் மூலமா அட்லீயைச் சந்திச்சேன். அட்லீ அப்போ, விஜய் சாருக்கு ‘தெறி’ கதை பண்ணிட்டிருந்தார். அதில் நானும் பங்கேற்றேன். அதிலிருந்து இணைந்து பணியாற்றி வர்றோம்.” முன்கதையை ரத்தினச் சுருக்கமாகச் சொல்கிறார் ரமணகிரிவாசன்.

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து `பிகில்’ படத்தில் மீண்டும் விஜய்-அட்லீ காம்போவுடன் இணைந்துள்ளார். அட்லீயோடு இணைந்து திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

“விஜய்க்கு தொடர்ந்து மூன்று படங்களில் வசனம் எழுதியுள்ளீர்கள். அவருக்கு எழுதும்போது ஸ்பெஷலாக ஏதும் மெனக்கெடுவீர்களா?”

“நிச்சயமா... விஜய் சார் மாதிரியான ஒரு மாஸ் ஹீரோவுக்கு வசனம் எழுதும்போது, நாம எழுதுற கருத்துள்ள வசனங்கள் அவரோட கரிஷ்மாவால வேறொரு கட்டத்துக்குப் போயிடும். அவரோட மாடுலேஷனை மனசுல வெச்சுதான் வசனங்களை எழுதுவோம். எப்போதுமே அவருக்கு ஒரு நாள் முன்னாடியே சீன் பேப்பரைக் கொடுத்துடணும். வீட்டுக்குப் போய் அதிலுள்ள வசனங்களை, தன் ரசிகர்களை மனசுல வெச்சு பேசிப் பயிற்சி எடுத்துட்டு வருவார். ஸ்பாட்ல வந்து ஒருநாளும் அவர் சீன் பேப்பரைப் பார்த்தது கிடையாது. அவரோட வெற்றிக்கான காரணங்கள்ல இதுவும் ஒண்ணு.”

ரமணகிரிவாசன்
ரமணகிரிவாசன்

“‘மெர்சல்’ பட வசனங்கள் அரசியல் ரீதியில் சர்ச்சையானபோது எப்படி உணர்ந்தீங்க?”

“ ‘மெர்சல்’ ரிலீஸ் ஆனதும் நம்மைப் பேட்டியெடுக்க வருவாங்களா’ன்னு எதிர்பார்த்துட்டிருந்தேன். ஆனா படம் வந்து, நாடே அதைப் பற்றிப் பேச ஆரம்பிச்சதும் மொத்த மீடியாவும் ரைட்டரைத்தான் தேடிட்டிருந்தது. தலைமறைவு ஆகாத குறையா, மொபைலை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு சிவனேன்னு இருந்துட்டேன்.”

“சீமான் தன் உரையில் பேசின சில விஷயங்களை ‘மெர்சல்’ல பயன்படுத்தியிருந்தீங்கன்னு ஒரு குற்றச்சாட்டு வெச்சிருந்தாரே?”

“சீமான் அண்ணனின் பேச்சால் ஈர்க்கப்படாதவங்களை விரல்விட்டு எண்ணிடலாம். அந்தளவுக்கு அவரின் பேச்சு பலருக்கும் பிடிக்கும். அப்படி எனக்கும் அவரோட பேச்சும் சிந்தனையும் பிடிக்கும். அந்தத் தாக்கத்துல, அதுக்கான களம் வந்தப்போ சில விஷயங்களைப் பயன்படுத்திக்கிற மாதிரி ஆச்சு, அவ்வளவுதான்.”

பிகிலில் அரசியல் இருக்காது!

“அட்லீ மீது வைக்கப்படும் தொடர் கதைத்திருட்டுக் குற்றச்சாட்டுகளை எப்படிப் பார்க்கிறீங்க?”

“ஒரு சிம்பிள் ஒன் லைனை எடுத்துக்கிட்டு அதை அழகான திரைக்கதையில் மிரட்டுறதுதான் அட்லீயின் வொர்க்கிங் ஸ்டைல். போலீஸ் – வில்லன் கான்செப்ட்ல தமிழ் சினிமாவுல எத்தனையோ படங்கள் வந்திருக்கு. அப்பாவைக் கொன்னவங்களைப் பசங்க பழி வாங்குறதும் எம்.ஜி.ஆர் காலத்துல இருந்தே இருக்கிற கதை. இதையெல்லாம் வெச்சு, அவர் அதுலேர்ந்து எடுத்தார், இதுலேர்ந்து எடுத்தார்னு சொல்றதுல எனக்கு உடன்பாடு கிடையாது.”

“ஆனா, ‘பிகில்’ படக் கதை குறித்தும் ஓர் உதவி இயக்குநர் வழக்கு தொடுத்திருக்காரே?”

“ ‘பிகில்’ படக் கதை உருவாக்கத்தின் ஆரம்பப்புள்ளியில் இருந்து பங்கேற்றவன் என்ற உரிமையில் சொல்றேன், இது எதிலிருந்தும் இன்ஸ்பையர் ஆகி பண்ணப்படலை. அந்த உதவி இயக்குநர் சொல்ற குற்றச்சாட்டை நான் முற்றிலும் அடியோடு மறுக்கிறேன்.’’

“ ஓ.கே, ‘பிகில்’ படம் எப்படி வந்திருக்கு?”

“ ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களைவிட பெருசா இருக்கணும்னு நினைச்சு இந்தக் கதையை உருவாக்கியிருக்கோம். இந்தப் படத்தை, ‘பிகில்’ என்கிற டைட்டிலிருந்துதான் கதை விவாதத்தையே தொடங்கினோம். அது ஏன்னு படம் பார்க்கும்போது தெரியும். இதுல விஜய் அப்பா-மகன்னு இரண்டு ரோல்கள் பண்ணியிருக்கார். அப்பா கேரக்டரை முதல்ல விஜய் சாரே பண்றதா இல்லை. சத்யராஜ் மாதிரியான சீனியர் நடிகர்களைத்தான் அந்த ரோலுக்குப் பயன்படுத்துறதா இருந்தோம். ஆனா அந்தக் கேரக்டரையும் விஜய் சாரே பண்ணுனா நல்லாருக்கும்னு தாமதமாகத்தான் முடிவு பண்ணினோம். இதுவரை பார்க்காத விஜய்யை இந்த இரண்டு கேரக்டர்கள்ல பார்க்கலாம். நயன்தாரா கேரக்டரிலும் கிளாமர், காமெடி மட்டுமல்லாம கதையிலேயும் அவங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்.”

“ ‘பிகில்’ல வேறென்ன ஸ்பெஷல்?”

“ஒரு ரைட்டரா ஒரு விஷயம் சொல்லலாம். ‘பிகில்’ படத்துல அரசியலும் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்களும் கிடையாது. அதேசமயம் இந்தக் கதைக்கு என்ன தேவையோ அதை நியாயமா பண்ணியிருக்கோம். படத்துல ஸ்போர்ட்ஸும் இருக்கு. ஆனா, இது வெறும் ஸ்போர்ட்ஸ் படம் மட்டும் கிடையாது. ‘மெர்சல்’ படத்துல வடிவேலு இருந்தும் காமெடி குறைவா இருந்த ஒரு குறை இருந்தது. அதை மனசுல வெச்சு ‘பிகில்’ல படம் முழுக்க காமெடி பிணைஞ்சிருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டோம். விவேக், யோகிபாபுகூட சேர்ந்து விஜய் சார் செம்ம காமெடி பண்ணியிருக்கார். ஆகஸ்ட் மாதத்தோடு மொத்த ஷூட்டிங்கும் முடிஞ்சுடும். விஜய் ரசிகர்களுக்கு செம தீபாவளி ட்ரீட் காத்திருக்கு.”