சினிமா
தொடர்கள்
Published:Updated:

"நாங்க மணி சார் உலகத்திலேயே இருந்துட்டோம்!”

தனா
பிரீமியம் ஸ்டோரி
News
தனா

“புதுசா ஒரு கதை எழுதணும்னா நானும், மணி சாரும் கொடைக்கானல் போவோம்.

‘ஓகே கண்மணி’ படத்துக்காக அப்படிப் போயிருக்கும்போது, ‘கொடைக்கானலுக்குக் கீழே இருக்கிற தேனி என் சொந்த ஊர். இங்கேதான் நான் வளர்ந்தேன்’னு சொல்லி, அப்படியே என் வாழ்க்கையில் சந்திச்ச சில கேரக்டர்கள் பற்றிச் சொன்னேன். ‘ஓ.. சுவாரஸ்யமா இருக்கே!’ன்னு குஷியான மணி சார், நான் சொன்ன கேரக்டர்களை வெச்சுக் கதை எழுதிட்டார். ஆனா, அந்தக் கதையை அப்போதைக்கு அப்படியே வெச்சுட்டோம். பிறகு, அவர் ‘ஓகே கண்மணி’, ‘காற்று வெளியிடை’, ‘செக்கச்சிவந்த வானம்’ பண்ணினார். நான், ‘படைவீரன்’ படத்தை முடிச்சேன். திரும்பவும் வேறொரு கதைக்காகக் கொடைக்கானலுக்குப் போயிருந்தப்போதான், ஏற்கெனவே எழுதிவெச்ச அந்தக் கதை அவருக்கு ஞாபகம் வந்தது. ‘உனக்கு நல்லா அறிமுகமான மனிதர்கள் அவங்க. அதனால, இந்தப் படத்தை நீயே டைரக்ட் பண்ணு; நான் தயாரிக்கிறேன்’னு சொன்னார். அதுதான், ‘வானம் கொட்டட்டும்’ படமா உருவாகிட்டிருக்கு.” கதைக்கு ஒரு பெரிய கதை சொல்கிறார், இயக்குநர் தனா.

“கதைக்கு ‘டூ பிரதர்ஸ்’, ‘சிஸ்டர் பிரதர்’னுதான் வெச்சிருந்தோம். மணி சார்தான், ‘வானம் கொட்டடும்’னு சொன்னார். இந்தப் பெயரை ‘ஓகே கண்மணி’, ‘காற்று வெளியிடை’க்கு வைக்கலாம்னு இருந்து, பிறகு மாத்தினோம். கதை ரொம்பப் பாசிட்டிவ் எனர்ஜியில இருக்கும். டைட்டிலும் பாசிட்டிவா இருக்கேன்னு வெச்சுட்டோம்.”

“ஹீரோ, ஹீரோயினைத் தேர்ந்தெடுத்தது நீங்களா, மணிரத்னமா?”

“ஹீரோ, ஹீரோயின் மட்டுமல்ல, டெக்னீஷியன்கள்கூட மணி சார் சாய்ஸ்தான். விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன் ஹீரோ ஹீரோயினா நடிக்கிறாங்க. ராதிகா, சரத்குமார் ரெண்டு பேரும் அம்மா அப்பாவா நடிக்கிறாங்க. ஐஸ்வர்யா ராஜேஷ் விக்ரம் பிரபுவுக்குத் தங்கச்சியா நடிக்கிறாங்க. தவிர, இயக்குநர் பாலாஜி சக்திவேல் முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறார்.”

  "நாங்க மணி சார் உலகத்திலேயே இருந்துட்டோம்!”

“பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராமை இசையமைப்பாளரா அறிமுகப்படுத்துற ஐடியா எப்படி வந்தது?”

“கோவிந்த் வசந்தாதான் முதல்ல கமிட் ஆகியிருந்தார், அருமையான ரெண்டு டியூனும் கொடுத்தார். ஆனா, நினைச்ச நேரத்துல ஷூட்டிங் தொடங்க முடியாமப்போகவே, அவர் யு.எஸ் போகவேண்டிய சூழல் வந்தது. என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டிருந்தப்போ, யு.எஸ்-ல இருந்து சித் ஸ்ரீராமை இசையமைப்பாளரா இறக்கிட்டோம். அவர் நல்ல பாடகர்னு எனக்குத் தெரியும். மியூசிக்கும் பண்ணுவார்னு மணி சாருக்குத் தெரிஞ்சிருக்கு. மணி சார் தயாரிப்பில் இசையமைப்பாளரா அறிமுகமாகிறது சித் ஸ்ரீராமுக்கும் சந்தோஷம்.”

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு மணிரத்னம் தயாரிப்பாளரா வந்தப்போ, உங்களுக்கு என்ன மாதிரியான ஃபீல் இருந்தது?”

“ரொம்ப பயந்துட்டேன்; அதுதான் உண்மை. அவர் வந்தப்போ, உதவி இயக்குநரா ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர் நின்னா, எனக்குக் கைகால் உதற ஆரம்பிச்சிடும்னு அவருக்குத் தெரியும். அதனால, ஒரு ஷாட் எடுத்து முடிச்சதும் கிளம்பிட்டார்.”

“மணிரத்னத்துடனான உங்க அனுபவம் பற்றி?”

“ ‘ராவணன்’ முடிஞ்ச சமயத்துல ‘பொன்னியின் செல்வன்’ கதையைப் படமாக்குற ஐடியாவுல இருந்தார், மணி சார். அப்போ, எழுத்தாளர் ஜெயமோகன் சார் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வெச்சார்.

  "நாங்க மணி சார் உலகத்திலேயே இருந்துட்டோம்!”

அப்போ இருந்து இப்போ வரை அவர்கூட இருக்கேன். என்னை ஒரு கதாசிரியரா, இயக்குநரா உருவாக்குனது அவர்தான்.”

“ ‘பொன்னியின் செல்வன்’ படத்துல உங்க பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கும்?”

“இந்தப் படத்தோட டிஷ்கஷன்ல மணி சார்கூட நானும் இருந்தேன். ‘வானம் கொட்டட்டும்’ படத்தை முடிச்சுட்டு, கண்டிப்பா ‘பொன்னியின் செல்வன்’ படத்துல உதவி இயக்குநரா வேலை பார்ப்பேன். ஏன்னா, இந்தமாதிரி படத்துல வேலை பார்க்கிற அனுபவத்தைத் தவறவிடக் கூடாது.”

“ ‘படைவீரன்’ல தனுஷ் ஒரு பாட்டு பாடியிருப்பார். அவருடனான நட்பு பற்றி?”

“விஜய் யேசுதாஸ் சொல்லி, தனுஷ் ‘படைவீரன்’ படத்தைப் பார்த்தார். அவருக்குப் பிடிச்சிருந்தது. ‘படம் நல்லா இருக்கு. ஒரு இடத்துல பாட்டு வந்தா நல்லா இருக்கும்’னு சொன்னார். ‘பாட்டு வைக்கிறதுக்கு என்கிட்ட பட்ஜெட் இல்லை சார்’னு சொன்னேன். ‘நான் தரேன், வைங்க’ன்னு சொன்னார், ‘இல்ல சார்... அது நல்லா இருக்காது. ஆனா, நீங்க சொல்ற விஷயத்தை மதிக்கிறேன், பாட்டு வைக்கிறேன்’னு சொன்னேன். ‘ஓகே, அந்தப் பாட்டை நான் பாடுறேன்’னு சொல்லிட்டு, ‘லோக்கல் சரக்கு’ பாடிக்கொடுத்தார். நல்ல மனிதர் அவர்.”

“ ‘படைவீரன்’ சாதியை வேறொரு கோணத்தில் காட்டிய படம். அது வரவேற்பைப் பெறாமப்போனதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?”

“ஒரு படம் ஜெயிக்க மூணு விஷயம் கண்டிப்பா இருக்கணும். மக்களுக்குத் தெரிஞ்ச ஹீரோ, தெரிஞ்ச தயாரிப்பு நிறுவனம், விளம்பரம்... இந்த மூணு விஷயத்துல ஏதாவது ஒண்ணு இல்லைன்னா, அந்தப் படம் ஜெயிக்கிறது ரொம்பக் கஷ்டம். இதுவரை ஜெயிச்ச சிறுபட்ஜெட் படங்களையெல்லாம் எடுத்துப் பார்த்தா, இந்த மூணுல ஒண்ணு கண்டிப்பா இருக்கும். ‘படைவீர’னுக்கு அது மிஸ்ஸிங்!”

  "நாங்க மணி சார் உலகத்திலேயே இருந்துட்டோம்!”

“இதையெல்லாம் தெரிஞ்சுதான், ‘படைவீரன்’ படத்தை எடுத்தீங்களா?”

“இல்லை, தெரியாமப் பண்ணிட்டேன். கதை நல்லா வந்தது. படத்தை முடிச்சுப் பார்க்கும்போது, நல்லா இருந்தது; மக்களுக்குப் பிடிக்கும், ஓடவெச்சுடுவாங்கன்னு நினைச்சேன். ஆனா, அதுக்குப் படம் முதல்ல மக்கள்கிட்ட போய்ச் சேரணும்னு அப்புறம்தான் தெரிஞ்சது. இந்தப் படத்துக்குப் பிறகுதான் பட்ஜெட், ரிலீஸ், பிசினஸ் எல்லாம் தெரிஞ்சுகிட்டேன். படம் பண்றதைவிட, இதுதான் இங்கே பெரிய விஷயம்.”

“மணிரத்னம் கூட இருந்தும் இதெல்லாம் உங்களுக்குத் தெரியலையா?”

“தெரியலங்கிறதுதான் உண்மை. ஏன்னா, மணி சார் எங்க எல்லோரையும் ரொம்ப வசதியா வெச்சிருந்தார். அவர்கிட்ட உதவி இயக்குநரா இருந்தா, எல்லாமே கிடைக்கும். கஷ்டம் தெரியாம நம்மளைப் பார்த்துக்குவார். நாங்க மணி சார் உலகத்திலேயே இருந்துட்டோம்.”